'ஃபார்ச்சூன் 50' சிறந்த தலைவர்கள் 2018 பட்டியலில் இடம்பெற்ற மூன்று இந்தியர்கள்!

0

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, மனித உரிமை வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், கட்டிடக் கலைஞர் பால்கிருஷ்ணா தோஷி ஆகியோர் சமீபத்தில் ஃபார்ச்சூன் 50 சிறந்த தலைவர்கள் 2018-ல் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய சவால்களை சிறப்பாக சந்திக்க உதவும் சிந்தனையாளர்கள், பேச்சாளர்கள், செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்படும் ஃபார்ச்சூன் பத்திரிக்கையின் ’50 சிறந்த தலைவர்கள்’ பட்டியலில் மூன்று இந்தியர்கள் இடம்பெற்று இந்தியாவைப் பெருமைப்படுத்தி உள்ளனர். 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, மனித உரிமை வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், பிரபல கட்டிடக் கலைஞர் பால்கிருஷ்ணா தோஷி ஆகியோர் ஆப்பிள் தலைமை நிர்வாகி டிம் குக், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் ஆகியோருடன் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர்.

61 வயதான அம்பானி ஜியோவை அறிமுகப்படுத்திய இரண்டாண்டுகளுக்குள்ளாகவே 24வது இடத்தைப் பெற்றுள்ளார். உலகிலேயே முழுமையாக ஐபி சார்ந்த முதல் மொபைல் நெட்வொர்க்கான ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் இணைய பயன்பாட்டை மாற்றியமைத்தது.

அதிரடி விலையில் டேட்டாவும் இலவச அழைப்புகளும் வழங்கப்பட்டதே இதன் ரகசியமாகும். இதனால் இந்தியாவில் அதிக விலையில் டேட்டாக்களை வழங்கி வந்த நிறுவனங்கள விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியாவில் மாதாந்திர டேட்டா பயன்பாட்டில் 1,100 சதவீத உயர்வு காணப்பட்டதாக அதிகாரப்பூர்வமான அறிக்கை தெரிவிக்கிறது.

இந்திரா ஜெய்சிங் இந்தியாவைச் சேர்ந்த வழக்கறிஞர். ’லாயர்ஸ் கலெக்டிவ்’ நிறுவனர். இவர் இந்தப் பட்டியலில் 20-வது இடத்தைப் பிடித்துள்ளார். 1984ம் ஆண்டில் நடந்த போபால் விஷ வாயு கசிவு சம்பவத்தை அடுத்து இந்திரா ஜெய்சிங் பிரபலமானார். சிரியன் கிறிஸ்துவ பெண்கள் வழக்கு உள்ளிட்டவை அவர் கையாண்ட குறிப்பிடத்தக்க வழக்குகளாகும். இந்தியாவின் முதல் குடும்ப வன்முறைச் சட்ட வரைவில் முக்கியப் பங்கு வகித்தார். சமீபத்தில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் படுகொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைக்காக ஐக்கிய நாடுகளால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் ஏழைமக்களின் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் ஜெய்சிங். இவர் அநீதியை எதிர்த்து போராட தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்று ஃபார்ச்சூன் குறிப்பிட்டுள்ளது.

மிகவும் பிரபலமான கட்டிடக் கலைஞரில் ஒருவரான பால்கிருஷ்ண தோஷி இந்தப் பட்டியலில் 43-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் பிரிட்ஸ்கர் விருது பெற்றவர். கட்டிடக்கலைத் துறையில் 70 ஆண்டு அனுபவம் பெற்ற இவர் ஏழைகளுக்கான கட்டிடக்கலைஞர் என்றே அழைக்கப்படுகிறார்.

பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ், டென்னிஸ் விளையாட்டில் பிரபலமான செரீனா வில்லியம்ஸ், ஜெனரல் மோட்டார்ஸ் சிஆர்ஓ மேரி பரா, டென்செண்ட் சிஇஓ ஹௌடெங் போனி மா, ஹாலிவுட் நட்சத்திரம் ரீஸ் விதர்ஸ்பூன் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

கட்டுரை : THINK CHANGE INDIA