மெரீனா கடற்கரையில் குதிரைகள் மீது வலம் வரும் காவல் தேவதைகள்!

0

சென்னையில் உள்ள மெரீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையாகும். அது மட்டும் அல்ல அதன் கரைகள் சில அசாதாரண காவலர்களுக்கும் பெயர் போனது.

சுகன்யா, ஜாஸ்மின், சுமதி மூவருமே முப்பது வயதுக்குட்பட்டவர்கள். காலை சூரியன் உதித்ததும் இவர்கள் சில்லென்ற கடற்கரை காற்றை ரசித்தவாறே குதிரையின் மீது வலம் வருவதைப் பார்க்கலாம்.

தற்போது சென்னை காவல் துறையின் 67 பேர் அடங்கிய குதிரைப்படைப் பிரிவில் இவர்கள் மூவர் மட்டுமே பெண்கள். ஆண் காவலர்களுக்கு இணையாக தங்களாலும் செயல்பட முடியும் என்று இந்தப் பெண்கள் நிரூபிக்கின்றனர். மக்கள் அதிக அளவில் கூடும் மெரீனா  கடற்கரையில் குற்றங்களைத் தடுக்க கம்பீரமாக குதிரையில் சவாரி செய்தவாறே கண்காணித்து வருகின்றனர்.

”குதிரையின் மீது உயரத்தில் அமர்ந்திருப்பதால் துறையின் மற்றவர்களைக் காட்டிலும் இவர்களால் கூட்டத்தில் குற்றவாளிகளை எளிதாக கண்டுபிடிக்கமுடியும்,”

என்றார் குதிரைப்படை பிரிவின் துணை ஆணையாளர் எம் டி ரவிசந்திரன்.  

கடற்கரைக்கு வருவோரை கண்காணிப்பதே இவர்கள் மூவரின் முக்கிய பணியாகும். “மக்கள் கடலுக்குள் ஆழமாக செல்வதை இவர்கள் தடுக்கவேண்டும். குறிப்பாக மெரினாவில் வங்காள விரிகுடா அலைகள் ஆக்ரோஷமாக இருக்கும் என்பதால் மக்களை கட்டுப்படுத்தவேண்டும்,” என விவரித்தார் ரவிச்சந்திரன்.

இந்தப் பிரிவில் சேர சம்மதம் தெரிவிக்கும் நபர் யாராக இருந்தாலும் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். “எங்களுக்கு விலங்குகள் என்றால் பிடிக்கும். எங்களுக்கு இது முதல் நியமனம் என்பதால் இங்கு சேர தீர்மானித்தோம்,” என்றனர் சுகன்யா, ஜாஸ்மின் மற்றும் சுமதி.

பெரும்பாலான குதிரைகளுக்கு தகுந்த பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவைகளுக்கு சாதாரணமான நடை, பெருநடை, பாய்ச்சல் போன்றவை கற்றுத்தரப்படுகிறது. கட்டளைகளுக்கு கீழ்படியவும் பயிற்சியளிக்கப்படும். 

“குதிரைகளைக் கையாள எங்களுக்கும் தீவிர பயிற்சி வழங்கப்படும். ஆரம்பத்தில் நடைபயிற்சி, குதிரையேற்றம், தடவிக் கொடுத்தல் உள்ளிட்ட சிறு சிறு பயிற்சிகளை மேற்கொள்வோம். ஒரு மாதத்தில் குதிரையின் மீது சேணத்தை பூட்டவும், குதிரையேறவும் எளிதாக அதைக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்து சவாரி செய்யவும் கற்றுக்கொள்வோம். மெல்ல மெல்ல குதிரையுடன் பழகிவிடுவதால் அவை நட்புடன் இருக்கும் என்பதையும் நமது கட்டளைகளுக்கு கீழ்படியும் என்பதையும் உணர்ந்தோம்,” என விவரித்தனர்.

குதிரைகள் உத்திரப்பிரதேசத்தின் சஹாரன்பூர் பகுதியில் இருந்து வாங்கி வரப்பட்டு இங்குள்ள பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிகளுக்கும் சுற்றியுள்ள சூழலுக்கும் பழக்கப்பட்ட பிறகு நடைபயிற்சி, பெருநடை, ஓட்டம் ஆகியவை பயிற்றுவிக்கப்படும்.

நொறுக்கப்பட்ட ஓட்ஸ், கோதுமை தவிடு, கொள்ளு, கொண்டைக் கடலை, ஆளிவிதை உள்ளிட்டவை குதிரைகளுக்கு உணவாக வழங்கப்படும். குதிரைகள் மூன்று கிலோ அளவிற்கு வைக்கோல் கொண்டு தயாரிக்கப்பட்ட படுக்கையில் படுத்து உறங்கும். கால்நடை மருத்துவர் அவ்வப்போது குதிரைகளை பரிசோதனை செய்வார்.

மூன்று பெண்களும் ஒரே மாதத்தில் தங்களது குதிரைகளுடன் நன்றாக பழகிவிட்டனர். அதன் பிறகு மெரீனா கடற்கரையில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் நியமிக்கப்பட்டனர்.

”இளம் பெண்கள் அவர்களது பிரச்சனைகளை பகிர்ந்துகொள்ள எளிதாக எங்களை அணுகுகின்றனர். பெண்களை கிண்டல் செய்வது, செயின் பறிப்பு போன்ற புகார்களை கையாள்கிறோம்,” என்றார் சுகன்யா.

குதிரையில் உலா வரும் இந்தப் பெண்கள் காணாமல் போன பல்வேறு குழந்தைகளை கண்டுபிடிக்க உதவியுள்ளனர். காணும் பொங்கல், கிரிக்கெட் போட்டி போன்ற மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் சமயங்களில் ஆண் காவலர்களுக்கு உதவியாக கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் இவர்களது பணி எளிதானதல்ல. இவர்கள் தங்களது குதிரைகளை நட்புடன் அணுகுவதுடன் அவை கூட்டத்தைக் கண்டால் மிரளும் என்பதால் தொடர்ந்து அவற்றுடன் உரையாடிக் கொண்டிருக்கவேண்டும். குதிரைகளுக்கு பயம் அதிகரித்தால் அவை அதன் மேல் அமர்ந்திருப்பவரை தள்ளிவிடவும் வாய்ப்புள்ளது.

சுகன்யா 2013-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார். “நள்ளிரவு நேரம். இளம் வயதினர் பலர் கடற்கரையில் கூடினர். கூட்டம் என் குதிரையை (ராஜாத்தி) நெருக்கிக் கொண்டிருந்தது. இருட்டாக இருந்த காரணத்தினாலும் நெரிசல் காரணமாகவும் திடீரென்று காலை உயர்த்தி ஓட ஆரம்பித்தது. அது பயந்துவிட்டது என்பதை நான் உணர்ந்தேன். நான் தொடர்ந்து என் குதிரையுடன் பேசிகொண்டே இருந்தேன். 10 நிமிட ஓட்டத்திற்குப் பிறகே அது நின்றது. நான் கீழே இறங்கினேன். அதன் கழுத்தை தடவிக்கொண்டே மெதுவாக அதன் தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றேன்,” என்றார் சுகன்யா.

ஆனால் ஜாஸ்மீனுக்கு முற்றிலும் மாறுபட்ட கடினமான அனுபவம் ஏற்பட்டது. அவர் 2015-ம் ஆண்டு தீபாவளி சமயத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார். அவரது குதிரை தண்ணீருக்கு அருகில் இருந்தது. திடீரென்று கட்டுப்பாடின்றி பாயந்து செல்லத் துவங்கியது. ஜாஸ்மீனை சில மீட்டர் தூரம் வரை இழுத்துக்கொண்டே சென்றது. அவரது மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை அவரால் கடிவாளத்தை பிடிக்கக்கூட முடியாமல் போனது.

”இந்த பணியில் பல ஆபத்துகள் இருந்தாலும் அவற்றை எதிர்கொண்டு சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்,” 

என்றார் சுமதி. இவர் 2017-ம் ஆண்டு இந்தப் பிரிவில் இணைந்துள்ளார். இவ்வளவு ஆபத்தான பணியை ஏன் இந்தப் பெண்கள் தேர்ந்தெடுத்தார்கள் என வியப்பாக உள்ளது அல்லவா? 

பணியில் சில ஆபத்துகள் இருப்பதை இவர்கள் மூவரும் ஒப்புக்கொண்டாலும் குதிரைகளுடன் இணக்கமாக பழகிவிட்டால் அவை காட்டும் அன்பு அவர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக தெரிவிக்கின்றனர். அத்துடன் அவர்களுக்கு பணியுடன் அதிகாரமளிக்கப்படும் உணர்வு கிடைக்கிறது. இதை இவர்கள் இழக்க விரும்பவில்லை.

ஆங்கில கட்டுரையாளர் : லலிதாசாய் | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL