சமூக மாற்றம் ஏற்படுத்தும் தொழில்முனைவு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வில்க்ரோ!

1

சமூகத்தில் நிலவி வரும் பல பிரச்சனைகளுக்கு மாற்றத்தை அல்லது தீர்வைக் ஏற்படுத்தும் வகையில் தாக்கத்துடன் இயங்கக் கூடிய தொழில்முனை நிறுவனங்களை உருவாக்கும் இளம் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் சிறந்ததொரு நிறுவனமாக விளங்குகிறது "வில்க்ரோ" (Villgro). 2001 ஆண்டு RIN என்று அழைக்கப்பட்டு இயங்கிவந்த ஊரக புத்தாக்க அமைப்பை, பால் பேசில் என்ற இளைஞர் வில்க்ரோ எனப் பெயரிட்டு, அந்நிறுவனத்தில் பல புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். வில்க்ரோ, ஒரு பெரிய ஆலமரமாக உருமாறி சமூக எண்ணங்களுடன் தொடக்கப்படும் பல தொழில்முனை நிறுவனங்களுக்குத் தகுந்த ஆலோசனை, எண்ணத்தை மெருகேற்றுதல், தேவையான முதலீட்டு உதவி மற்றும் அந்நிறுவனத்தை சாத்தியபடுத்தும் உதவிகள் புரிந்து இயங்கிவருகிறது.

'வில்க்ரோ' தொடங்கிய கதை

கேரளாவில் பிறந்து வளர்ந்த பால் பேசில், பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, வனவியல் மேலாண்மை பயிலும் போது சமூக வளர்ச்சி மீது ஈடுபாடு ஏற்பட்டதை பகிர்கிறார். மேலும், அவர்...

"தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூக சேவை போன்றதொரு பணியை மட்டுமே செய்து வந்தது, அதே சமயம் கார்ப்பரேட் நிறுவனங்கள் முழுவதும் வருவாயை நோக்கிச் செயல்படும் வர்த்தகம் நிறைந்ததாகவே இருந்தது. இவை இரண்டுமல்லாத ஒரு இடைப்பட்ட நிறுவனம் இருக்கிறதா என ஆராய்ந்து அதிலுள்ள வெற்றிடத்தை நிரப்பும் எண்ணத்தில் உருவானதே வில்க்ரோ," என்கிறார்.

வில்க்ரோ தொடங்கி சுமார் 15 ஆண்டுகள் கடந்த நிலையில், தனது வில்க்ரோ இன்கூபேஷன் மையம் மூலம் பல சமூக நிறுவனங்களுக்கு வித்திட்டுள்ளார் பால். உற்சாகம் நிறைந்ததாக அமைந்த இந்த பயணத்தில், வில்க்ரோ ஒரு அடைக்காக்கும் நிறுவனமாக இயங்கி பல சமூக நிறுவனங்களுக்கு மதிப்பு கூட்டலை அளித்து, அதன் மூலம் சமூக மாற்றத்திற்கு, குறிப்பாக, ஊரக வளர்ச்சிக்கு மறைமுகமாக உதவி மேம்படுத்தி வருகிறது என்றே சொல்லவேண்டும்.

தனது பதினைந்து வருட பயணத்தை நம்மிடம் பகிர்ந்தார் பால். 2004 ஆம் ஆண்டு பல புதிய கதவுகளைத் திறந்ததாக கூறும் பால், கார்ப்பரேட் நிறுவனங்களின் பெருக்கத்தினால், பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளிலும் பணிபுரிய அவர்கள் முடிவெடுத்தனர் என்கிறார். நுண்கடன் (micro-finance) உதவித் திட்டம், பெரும் புரட்சியை செய்து கொண்டிருந்த அதேசமயம் ஏழைகளின் பிரச்சனைகளை தீர்க்கும் லாபகரமான சேவை வழங்கும் முயற்சியில் இறங்கத் தொடங்கினர் கார்ப்பரேட் நிறுவனங்கள்.  இதுவே மாற்றத்தை உருவாக்கி, வளர்ச்சி பெருகக் காரணமாக இருந்ததாகக் கூறுகிறார். கடந்த சில ஆண்டுகளாய் இந்த முயற்சி வலுவடைந்துள்ளதாக குறிப்பிடும் பால் பேசில், கடந்த ஐந்து வருடங்களில் சமூக நோக்குடன் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமானது மட்டுமல்லாமல் அதனுடைய தரமும் உயர்ந்துள்ளது என்ற மகிழ்ச்சித் தகவலை பகிர்கிறார்.

அதற்கான காரணிகள் என்று பால் பேசில் பட்டியலிடுவது :-

  • இந்திய பெரு நிறுவனங்களின் அபார வளர்ச்சியின் காரணமாக பொருளாதார ரீதியில் உயர்ந்தோர் எண்ணிக்கை பெருகியது. அதன் விளைவாக சிலர் ஏஞ்சல் முதலீட்டாளராக மாறினர் பலர் தொழில்முனைவோராக உருவெடுத்தனர்.

  • அதிக ஏஞ்சல் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன் வந்ததால் தொழில்முனை ஆர்வம் மிகுந்தவர்கள் தையிரியமாக களம் இறங்கினர்.
  • கல்லூரிகளும் தொழில்முனையும் ஆர்வத்தை மாணவர்களிடையே விதைத்தது. சுதந்திரமாக செயல்படக் கூடிய எண்ணத்தை கொண்டவர்களாகவே இவர்களை மாற்றியது.
"நுண்கடன் திட்டம் மற்றும் நிறுவனங்களின் அபார வளர்ச்சி, அடித்தட்டு மக்களுக்குச் சேவை செய்யும் அதே சமயம் வெற்றிகரமான தொழிலை முனைய முடியும் என்ற நம்பிக்கையைத் தூண்டியது. சமூகத் துறையில் உள்ள வாய்ப்புகளை வெளிச்சம் போட்டு காட்டியதாகவே இவை அமைந்தது."

அரசு அறிவித்த CSR கோட்பாடும் பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பை அதிகரித்துள்ளதாக கூறுகிறார் பால்.

சவால்கள்

வில்க்ரோவை தொடங்கிய புதிதில், தரமான சமூக நோக்குடைய நிறுவனங்களை தெரிந்தெடுப்பது சவாலாக இருந்தது எனக் கூறும் பால், பல சவால்கள் இருந்ததாகவும் அடுக்குகிறார்.

  • அப்போது சமூக நிறுவனங்களையும், அவர்கள் பணியாற்றும் காலத்தையும் அறிந்து அதன் தொழில்முனைவர்களை வழி நடத்திச் செல்ல போதிய வழிகாட்டிகள் இல்லை. 
  • தொழில்முனைவர்களும் சமூக நோக்குள்ள நிறுவனத்தை தொடங்க தயக்கம் காட்டினர். 
  • அப்போதிருந்த முதலீட்டாளர்கள் இது போன்ற லாபம் குறைவாக ஈட்டக்கூடிய தொழில்முனைவில் முதலீடு செய்ய தயக்கம் காட்டினர். 
  • கல்லூரிகளும், பல்கலைகழகங்களும் சமூக தொழில்முனைவு பற்றி மாணவர்களுக்கு, சரியான புரிதலோ, கற்றலோ அளிப்பதில்லை.

"சமூக தொழில்முனைவுத் துறையில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கினால் நிறைய திறமைகள் மற்றும் தொழில்முனைவர்களை உருவாக்க முடியும்" என்று நம்பிக்கை கொள்கிறார் பால்.

'அன்கன்வன்ஷன்' Unconvention பற்றி

2009 ஆம் ஆண்டு வருடாந்திர நிகழ்வாக 'அன்கன்வன்ஷன்' நடத்த ஆரம்பித்தோம். தொழில்முனை நிறுவனங்கள் மற்றும் தொழில்முனையும் விருப்பமுள்ளவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த ஆண்டு மாநாட்டை நடத்தத்தொடங்கினோம். பலரும் பயனடையும் வகையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டது தான் அன்கன்வன்ஷன். 

இதில் உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் பல வெற்றி தொழில்முனைவர்கள், சமூக தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்துரையாடுவது இம்மாநாட்டின் சிறப்பு. இந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி நடைபெறவுள்ள இம்மாநாட்டில் எழுச்சிமிகு பேச்சாளர்கள் பங்கு பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத் திட்டம்

பல எதிர்காலத் திட்டங்கள் தீட்டியுள்ளதாக கூறும் பால், மூன்று விதமான வகையில் தங்களது விரிவாக்கச் செயலை  பட்டியலிட்டார்.

1. பரந்த அளவில்: எங்களின் சேவையை இந்தியாவில் உள்ள மற்ற சிறு நகரங்களுக்கும் வளர்ந்து வரும் நாடான கென்யா, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்ய முனைப்புள்ளது.

2. அகன்ற அளவில்: இன்கூபேஷன் வடிவிலிருந்து சீரீஸ் ஏ நிதி திரட்டல் வரை எல்லா நிலையிலும் எங்களின் சேவையை விரிவுபடுத்தும் எண்ணம் உள்ளது.

3. ஆழாமாக செயலாற்றுதல்: இன்கூபேஷன் அளவிலேயே அந்தந்த துறையில் இன்னும் ஆழமாகச் சென்று செயலாற்ற வேண்டும். இதில் முதல் கட்டமாக இந்த ஆண்டு சுகாதாரத்துறை மற்றும் கல்வித் துறையில் கவனம் செலுத்தப்படும்.

ஒவ்வொரு வருடமும் அடைக்காக்கும் வாய்ப்புக் கருதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெரும் வில்க்ரோ அமைப்பு அதிலிருந்து 15-20 நிறுவனங்களை தேர்ந்தெடுக்கிறது. புதுமை, சமூகத்தின் பிரச்சனையை குறைந்த செலவில் போக்கக் கூடிய தன்மை இவையே தீர்மானிக்கும் காரணிகளாக பார்க்கப்படுகிறது.

மேம்பட்ட திறன், அணுகுமுறை மற்றும் மனப்பான்மையில் மாற்றம் தேவை என்று கூறும் பால் பேசில் மிக விரைவில் சமூக நிறுவனங்கள் குறிப்பிடதக்க மாற்றத்தை உண்டு பண்ணும் என்ற நம்பிக்கையுடன் நம்மிடம் விடை பெறுகிறார்.

மேலும் விவரங்களுக்கு: அன்கன்வன்ஷன் | எல்

கட்டுரைக்கு கூடுதல் தகவல்கள் உதவி: சந்தியா ராஜு