கைபேசிகளில் உள்ளூர் மொழிகளின் அறிமுகம் வெற்றிக்கு வித்திடும்!

0

ராஜூ பிறந்தது தமிழ்நாட்டில்தான். அவரது சொந்த ஊர் சென்னை. குஜராத்தில் உள்ள சூரத்தில் வேலை பார்க்கிறார். சொந்த ஊரில் உள்ள தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் மூலம்தான் அவரால் தொடர்பில் இருக்க முடியும். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. சமீபத்தில் இன்டெக்ஸ் ஸ்மார்ட் போன் ஒன்றை அவர் வாங்கினார். அதில் மாக்ஸ் கீ பேட் (MOX keypad) இருந்தது. அந்த கீ பேட் மூலம் இந்தியாவில் உள்ள 21 மொழிகளில் டைப் செய்ய முடியும். ராஜூவுக்கு தமிழில் டைப் செய்ய அது உதவியது. இந்த மாக்ஸ் கீ போர்டை வடிவமைத்தது புராசஸ் நைன் டெக்னாலஜிஸ்(Process Nine Technologies) எனும் டெல்லியில் உள்ள உள்ளூர்மய சேவையை வழங்கும் நிறுவனம்.

இந்தியாவைப் போன்ற நாட்டில் உள்ள பல்வேறு மொழிகளே ஒரு பெரும் வர்த்தக வாய்ப்பு என்கிறார் புராசஸ் நைன் டெக்னாலஜிஸ் இயக்குனர் விதுஷி கபூர். “சர்வதேச அளவில் உள்ளூர் மொழிகளை வழங்கும் சேவைத் துறையின் வர்த்தகப் பங்கு 38 பில்லியன் டாலர். கிட்டத்தட்ட 95 கோடி மொபைல் போன்கள் உள்ளன. 40 கோடி இணைய தள இணைப்புகள் உள்ளன. இதில் ஆங்கிலம் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 15 சதவீதத்திற்கும் குறைவு தான். எனவே தொலைத் தொடர்பை உள்ளூர் மொழிமயப்படுத்துவது அருமையான வர்த்தக வாய்ப்பாக உள்ளது” என்கிறார் அவர்.

பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு

2011ல்தான் புராசஸ் நைன் நிறுவப்பட்டது. மொபைல் போனில் ஒன்பது இந்திய மொழிகளில் டைப் செய்வதற்குரிய கீ பேட்-ஐ 2013ல் அறிமுகப்படுத்தியது. இந்த கீ பேட் பல்வேறு மொழிகளின் எழுத்துருக்களை உள்ளடக்கியது. இரண்டே வருடத்தில் 40 லட்சம் மொபைல் போன்களுக்கும் மேல் இந்த கீ பேட் வந்து விட்டது. ஆரம்பத்தில் 9 மொழிகளில் ஆரம்பித்தது தற்போது 22 இந்திய மொழிகள் என வளர்ந்திருக்கிறது.

இந்த கீ பேடுக்குரிய வரவேற்பு குறித்து அறிய புராசஸ் நைன் சர்வே ஒன்றை நடத்தியது. அந்த சர்வேயில், “இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே போனில் உள்ள அத்தனை இயக்கத்தையும் தெரிந்து வைத்திருக்கின்றனர். அதற்குக் காரணம் அது அவர்களது சொந்த மொழியில் இல்லாததுதான். உண்மையில் இந்தியர்களை டிஜிட்டல் மயப்படுத்த வேண்டும் என்றால், செல்போன் என்ற சாதனத்தை அவர்கள் மொழியில் புரிந்து கொள்ளவும், இயக்கவும் வசதி செய்ய வேண்டும்” எனத் தெரியவந்தது.

சாம்சங், ஜியோனி, லாவா, இண்டெக்ஸ் போன்ற செல்போன்களில் ஏற்கனவே பன்மொழித் தொழில் நுட்பம் வந்து விட்டது. இப்படி உள்ளூர் மயப்படுத்துவது வெறுமனே செல்போன் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் தேவையான விஷயம் அல்ல. இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கில் உள்ள நகரங்களைக் குறிவைத்து இயங்கும் இணையம் மற்றும் செயலி அடிப்படையிலான வர்த்தகத்திற்கும் உள்ளூர் மயமாக்கல் தேவை. ஆன்லைன் ஷாப்பிங், கேப் (cab) மற்றும் ஆட்டோ புக்கிங், பலசரக்கு விநியோகம், ஹவுஸ் கீப்பிங் போன்ற சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு இது பெரிதும் பயன்படுகிறது. பன்மொழி வசதி மூலம் அவர்களால் கடைகோடியில் இருக்கும் நுகர்வோரையும் அணுக முடிகிறது.

ஜஹாங்கீரை எடுத்துக் கொள்ளுங்கள். இவர் ஒரு பெங்காலி. பன்மொழி வசதி கொண்ட கீ பேட் மூலம் ஆங்கிலம் தவிர பிற மொழிகளிலும் டைப் செய்யும் மொபைல் ஒன்று இவருக்குப் பெரிதும் பயன்படுகிறது. இவருடைய குடும்பத்தில் மொத்தம் ஐந்து மொபைல் போன்கள் இருக்கின்றன. இவர்கள் அனைவரது செல்போனிலும் அந்த பன்மொழி கீ பேட் உள்ளது. அதில்தான் குடும்பத்தினர் அனைவரும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஜோக்குகள், வாழ்த்துக்கள், செய்திகள் என அனைத்தையும் தங்களது பெங்காலி மொழியிலேயே பகிர்ந்து கொள்கின்றனர்.

ஒரே சொடுக்கில் மொழி மாற்றும் வசதி உள்ளதால், ஆன்லைன் ஷாப்பிங் சுலபமாக இருப்பதாகக் கூறுகிறார் ஜஹாங்கீர்.

“என் நண்பர்கள் வட்டாரத்தில் என் போனைப் பார்க்கும் ஒவ்வொருவரும் இந்த கீ பேட் தங்களது மொபைலிலும் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதற்கு நம் உணர்வோடு ஒட்டும் நம் மொழியைத் துல்லியமாய்ப் பயன்படுத்த முடிவதுதான் காரணம்” என்கிறார் அவர்.

டெல்லியைச் சேர்ந்த மற்றொரு வாடிக்கையாளர். இந்திக்காரர். இவரிடம் கருத்துக் கேட்ட போது, 

“என்னிடம் இன்டர்நெட் இருக்கிறது. ஆனால் ஷாப்பிங் இணையதளங்களை பயன்படுத்துவதில்லை” என்கிறார். “இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டால் நீங்கள் அந்தத் தளங்களைப் பயன்படுத்துவீர்களா?” என்று கேட்டால், “அப்படி மாற்றப்பட்டால் இணைய வணிகத்தைப் பயன்படுத்த ஆரம்பிப்பேன்” என்று பதில் சொல்கிறார்.

இதை மனதில் வைத்துத்தான் புராசசஸ் நைன் குழு இயங்குகிறது. மிகவும் குறிப்பான, சூழலுக்கேற்ற, உணர்வுப் பூர்வமான சேவையை வழங்குகிறார்கள். இதற்காக புராசஸ் நைன் கேரளா, மகாராஷ்ட்டிரா, தமிழ்நாடு, வங்கம், பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து மொழியறிஞர்களை பணிக்கு அமர்த்தியிருக்கிறது. வெறுமனே எந்திரத்தனமான மொழிபெயர்ப்பல்ல, உயிர்ப்புள்ள மொழி பெயர்ப்பை தருவதற்கு அவர்கள் உதவுகின்றனர்.

விரிவாகும் வர்த்தகம்

இணைய வணிகத்தை உள்ளூர் மயப்படுத்த மாக்ஸ் கேட்வே (MOX-Gateway) மற்றும் மாக்ஸ் வேவ்(MOX Wave) போன்ற தயாரிப்புகள் வர இருக்கின்றன. புராசஸ் நைன் குழுவினர் தற்போது இந்திய மொழிகளைக் குறிவைத்திருக்கின்றனர். அடுத்து பிற நாட்டு மொழிகளையும் அவர்களது பட்டியலில் இணைக்க இருக்கின்றனர்.

“தற்போது நாங்கள் செயற்கை இன்டெலிஜன்ஸ் டொமைனில் உள்ள பல்வேறு பாகங்களைக் கொண்ட ஒரு தொழில் நுட்பமான என்எல்பி தொழில்நுட்பத்தில் இருக்கிறோம். இந்த தொழில் நுட்பத்தை மேம்படுத்த பல பிஎச்டி பட்டதாரிகளைப் பணியில் அமர்த்தியிருக்கிறோம். ஐஐடி மற்றும் அது போன்ற கல்வி நிறுவனங்களுடன் தொழில்நுட்ப கூட்டணியிலும் நுழைந்திருக்கிறோம். சொந்த மொழிகளை நேசிக்கும் இளைஞர்களையும் முதியவர்களையும் உள்ளடக்கிய குழு எங்களுடையது. இதுவரையில் செய்யப்படாத ஒரு சாதனையைச் செய்வதற்கு அளவு கடந்து உழைக்கிறோம். நாங்கள் இதைச் சாத்தியப்படுத்தி விட்டால், அதன்பிறகு மக்களுக்கு வர்த்தகம் எளிதாகும். அறிவு பெறுவார்கள். தகவல் பெறுவார்கள். மருத்துவம், கல்வி மற்றும் இன்னபிற சேவைகள் அனைத்தையும் அவர்கள் தங்களின் சொந்த மொழியில் பெறுவார்கள். பொருளாதாரம் மற்றும் சமூக அடிப்படையில் மக்கள் மத்தியில் உள்ள இடைவெளியைப் போக்கும் பாலமாக இது அமையும்” என்கிறார் விதுஷி கபூர்.

ஆக்கம் : யுவர் ஸ்டோரி குழு | தமிழில் : சிவா தமிழ்ச்செல்வா