அரசாங்க ஆவணங்களை மக்கள் எளிதாக பெற உதவும் ஸ்டார்ட் அப்!

0

டெல்லியைச் சேர்ந்த ‘இட்ஸ்ஈஸி’ (ItzEazy) என்கிற ஸ்டார்ட் அப் ஹிமான்ஷு மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகிய நிறுவனர்களால் 2015-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அரசாங்க ஆவணங்கள் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே கூரையின்கீழ் வழங்கும் இந்நிறுவனம் சுயநிதியில் இயங்கி வருகிறது.

ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்கிற நோக்கத்துடன் நம்மில் எத்தனை பேர் ஒரு முயற்சியைத் துவங்கி அதில் சிக்கல்களைச் சந்தித்ததும் அந்த முயற்சியை கைவிட்டிருப்போம்? எத்தனை பேர் நாம் இழைக்கும் தவறுகளில் இருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொண்டு நாம் நிர்ணயித்த இலக்கினை எட்ட தொடர்ந்து பயணிப்போம்?

இட்ஸ்ஈஸி இணைநிறுவனரான ஹிமான்ஷு இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர். இட்ஸ்ஈஸி அரசாங்க ஆவணங்கள் தொடர்புடைய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்பாகும். அரசாங்க ஆவணங்களை எளிதாகவும், வெளிப்படையாகவும், சுலபமாக அணுகும் விதத்திலும் மாற்றுவதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும். ஹிமான்ஷூ கூறுகையில், 

“அரசாங்க ஆவணங்கள் பகுதியில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காண்கிறோம். முக்கிய அரசு ஆவணங்களைப் பெறுவதில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண விரும்புகிறோம். வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்கள் அரசு அலுவலகங்களிலிருந்து நேரடியாக அவர்கள் வீட்டைச் சென்றடைய ஆலோசனை வழங்கி ஆதரவளித்து வருகிறோம். வாடிக்கையாளர்கள் அதிக நேரம் செலவிட்டு பல இடங்களுக்குச் சென்று அலைய வேண்டிய செயல்முறைகளில் நாங்கள் பங்களித்து அவற்றை எளிதாக்கி உதவவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.”

ItzEazy எவ்வாறு அமைக்கப்பட்டது?

இந்த திட்டம் 2013-ம் ஆண்டு எம்பிஏ பட்டதாரிகள் மூவரால் உற்சாகத்துடன் துவங்கப்பட்டது. வெளியிலிருந்து நிதியுதவியோ வளங்களோ பெறாமல் இந்த முயற்சி துவங்கப்பட்டது. 

“இந்தத் துறையில் எந்தவித அனுபவமும் இல்லை. குறைவான வளங்களைக் கொண்டே செயல்பட்டோம். தொடர் சிக்கல்களைச் சந்தித்தோம். ஒரு கட்டத்தில் இந்த முயற்சியைக் கைவிட்டு வழக்கமான பணிக்குத் திரும்பலாம் என்று கூட எண்ணினோம். மனித வளம், வணிக பார்ட்னர்கள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் பிற மேலாண்மை அம்சங்களில் பிரச்சனைகளைச் சந்தித்தேன்,” என்றார் ஹிமான்ஷூ.

2014-ம் ஆண்டு இந்த முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இணை நிறுவனர்கள் நிறுவனத்திலிருந்து விலகினர். அதன் பிறகு 2015-ம் ஆண்டு மீண்டும் இட்ஸ்ஈஸி முயற்சிக்கு புத்துயிர் அளித்தார் ஹிமான்ஷு.

இவர் மற்ற ஸ்டார்ட் அப் செயல்பாடுகளில் இருந்து உந்துதல் பெற்றார். வழக்கமான தவறுகளைத் தவிர்த்தார். சில ஆண்டுகளில் நிலையான வணிக மாதிரியை உருவாக்கியதாலும் ஹிமான்ஷுவின் விடாமுயற்சியின் பலனாகவும் தடைகள் அனைத்தும் தகர்த்தெறியப்பட்டு இந்த சேவைக்கான தேவை இருக்கும் பகுதியில் இட்ஸ்ஈஸி செயல்படத் துவங்கியது.

நிறுவனர் ItzEasy
நிறுவனர் ItzEasy

எவ்வாறு செயல்படுகிறது?

ItzEazy பி2பி மற்றும் பி2சி சேவைகளின் ஒரு பகுதியாக பல்வேறு சேவைகளை வழங்குகிறது. பிறப்பு சான்றிதழ், திருமண பதிவுகள், பாஸ்போர்ட், பிரமாண பத்திரம், விசா உள்ளிட்ட ஆவணங்களை ஏற்பாடு செய்யும் சேவைகள் இதில் அடங்கும்.

அரசாங்க ஆவணம் பெற விரும்பும் பயனர் இட்ஸ்ஈஸி குழுவினரிடம் கோரிக்கை வைக்கலாம். இக்குழுவினர் பயனர் சார்பில் ஆவணங்களைப் பெற்றுத் தருகின்றனர். 

“பல்வேறு மாநில அரசாங்கங்களுடன் நேரடியாக பணிபுரிவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். ஆனால் இதுவரை முடிவிற்கு வரவில்லை. எங்களால் இயன்ற வரை செயல்முறைகளை எளிதாக்குகிறோம்,” என்றார்.

இந்நிறுவனம் அதன் பி2பி வணிகத்திற்காக க்விக்கர், ஒன் அசிஸ்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. பல்வேறு சேவைகளுக்கான கோரிக்கைகள் இட்ஸ்ஈஸி மூலமாக முன்வைக்கப்படுகிறது.

பயனர் வலைதளத்தில் லாக் இன் செய்து தேவையான சேவை தொடர்பான கோரிக்கையை முன்வைத்து ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். இட்ஸ்ஈஸி இது தொடர்பான மற்ற பணிகளில் ஈடுபட்டு குறிப்பிட்ட பணியை நிறைவு செய்து பயனருக்குக் கிடைக்க ஏற்பாடு செய்கிறது.

இந்நிறுவனம் வழங்கும் சேவைக்காக கமிஷன் வசூலிக்கப்படும். ஆனால் ஆலோசனைகள் இலவசமாகவே வழங்கப்படும். இது துவங்கப்பட்டு மூன்றாண்டுகளில் இந்தியாவின் 12 நகரங்களில் முழுவீச்சுடன் செயல்படுகிறது. மேலும் 150 நகரங்களில் பார்ட்னர் நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளது.

குழுவை உருவாக்குதல்

ஹிமான்ஷு எம்டிஐ குர்கானில் எம்பிஏ முடித்துள்ளார். பிஐடி சிண்ட்ரியில் பிடெக் பட்டம் பெற்றுள்ளார். இட்ஸ்ஈஸி துவங்குவதற்கு முன்பு பிஎஸ்என்எல், ஆர்சிஓஎம், டாடா சிஎம்சி ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

”நான் எப்போதும் மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினேன். மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த புதுமையான வழிமுறைகளை உருவாக்கவேண்டும் என்பதே என்னுடைய கனவு. இதை நனவாக்க தொழில்முனைவு மட்டுமே தீர்வு என்பதை அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் பணியாற்றிய பிறகு உணர்ந்தேன்,” என்றார் ஹிமான்ஷு.

இட்ஸ்ஈஸி நிறுவனத்தின் முதல் கட்டத்தில் கிடைத்த படிப்பினைகளுக்குப் பிறகு முக்கிய குழுவிற்குத் தேவையான திறன்களையும் அனுபவங்களையும் ஹிமான்ஷுவால் கண்டறிய முடிந்தது.

”தொழில்நுட்பம் மற்றும் மின்வணிகம் சார்ந்த வணிக மாதிரியில் செயல்படுவதால் முக்கியக் குழுவில் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர் இருப்பது அவசியம். ஒரு நிகழ்வில் அபிஷேக் ஷர்மாவை சந்தித்தேன். அவர் ஏற்கெனவே இண்டியாமோட்டோகார்ப் மற்றும் ஸ்க்ரால்கோட்ஸ் என்கிற இரண்டு ஸ்டார்ட் அப்பை நிறுவியவர். இவரும் தன்னுடைய செயல்பாடுகளுடன் தொடர்புடைய வணிகத்தில் யாரேனும் ஒருவருடன் இணைந்து செயல்படும் திட்டத்தில் இருந்தார்.

சில அமர்வுகளுக்குப் பிறகு அபிஷேக்கிற்கு இட்ஸ்ஈஸி திட்டம் பிடித்திருந்ததால் இணை நிறுவனராகவும் சிடிஓ-வாகவும் இணைந்துகொண்டார். தற்சமயம் விற்பனை, செயல்பாடுகள், வாடிக்கையாளர் சேவை என 17 நபர்கள் குழுவில் உள்ளனர்.

ItzEazy லாபமோ நஷ்டமோ இல்லாத நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கிறது. 20,000-க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையளித்துள்ளனர். இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் மீதான லாபம் (operational margin) 30 சதவீதம். 2017-18-ம் ஆண்டிற்கான வருவாய் சுமார் 2 கோடி ரூபாயாகும்.

”சந்தைப்படுத்தும் முயற்சிகள் ஏதுமின்றி வலைதளத்தை ஒவ்வொரு மாதமும் 50,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிடுகின்றனர். எங்களது இலவச ஆலோசனை 50,000 தனிநபர்களுக்கும் மேல் விரிவடைந்துள்ளது. எங்கள் வலைதளத்தை ஒரு மாதத்திற்கு 8,000 பேர் புதிதாக பார்வையிடுகின்றனர்,” என்றார் ஹிமான்ஷு.

வேறுபடுத்தும் காரணிகள்

வணிக நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாலும் அரசாங்கத்துடனான தொடர்புகள் அதிகரித்து வருவதாலும் சேவை சார்ந்த துறையில் செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது. முன்பு ஒழுங்குபடுத்தப்படாமல் இருந்த பகுதியில் தற்போது பலர் செயல்பட்டு வருகின்றனர். அத்துடன் துறையில் செயல்படுபவர்களுக்கு பேப்பர் சார்ந்த ஆவணங்கள் டிஜிட்டலாக மாற்றப்படும் நடவடிக்கையும் சந்தை வாய்ப்பை அதிகப்படுத்துகிறது.

உலகளவில் இட்ஸ்ஈஸி போன்ற சேவைகளை விஎஃப்எஸ் க்ளோபல் வழங்குகிறது. இட்ஸ்ஈஸி தனித்துவமான செயல்பாடு குறித்து ஹிமான்ஷூ கூறுகையில், 

“மெட்ரோக்கள் மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்த ஏஜெண்டுகளின் நெட்வொர்க்குடன் செயல்முறையில் தொழில்நுட்பத்தைப் புகுத்தி முறையான மாற்றத்தைக் கொண்டு வருகிறோம். நம்பிக்கையான வகையில் பல்வேறு சேவைகளை ஒரே கூரையின் கீழ் வழங்குகிறோம்.”

தற்சமயம் சுயநிதியில் இயங்கி வரும் இந்த நிறுவனம் விரைவில் நிதி உயர்த்த உள்ளது. அடுத்தடுத்த திட்டங்களும் தயார்நிலையில் உள்ளது.

”அனைத்து அரசாங்க ஆவண செயல்பாடுகளையும் எங்களது தளத்தில் தொகுக்கும் செயல்முறையில் ஈடுபட்டுள்ளோம். பல்வேறு மொழிகள் இதில் அடங்கும். இதன் மூலம் எங்களது சேவைகள் அதிகபட்ச பயனர்களை சென்றடையும்,” என்றார் ஹிமான்ஷு.

இந்நிறுவனம் க்ளௌட் சார்ந்த தளத்தையும் உலகளவில் உருவாக்கி வருகிறது. இட்ஸ்ஈஸி குடிமக்கள் சார்ந்த சேவைகள் மற்றும் விசா சேவைகளை தொகுத்து வழங்குவதற்காக வெவ்வேறு அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது.

வலைதளம்: ItzEazy 

ஆங்கில கட்டுரையாளர் : நேஹா ஜெயின் | தமிழில் : ஸ்ரீவித்யா