தொடக்க நிறுவனம் மற்றும் வணிகங்களுக்கு சட்டரீதியான இணக்கங்களை எளிதாக்க உதவும்  Lawyered

0

இந்திய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலில் பல்வேறு விமர்சன கருத்துக்கள் உள்ளன. இதில் சட்டப்பூர்வமான நாடகங்கள் குறித்தே பொதுவாக விவாதிக்கப்படுகிறது. OYO, Zo ரூம்ஸ், ஸ்டேசில்லா சந்தித்த போராட்டம், ஊபர் சந்தித்த பல்வேறு சட்ட ரீதியான போராட்டங்கள், சின்ன ஸ்டார்ட் அப்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் என சட்ட இணக்கங்கள் சார்ந்த பிரச்சனைகள் முன்னணியில் இருந்துவருகிறது.

எனவே ஸ்டார்ட் அப் அல்லது கார்ப்பரேட் என்ன செய்யவேண்டும்? டெல்லியைச் சேர்ந்த சுயநிதியில் இயங்கும் ஸ்டார்ட் அப்பான ’லாயர்ட்’ (Lawyered) ஸ்டார்ட் அப்கள் சட்ட இணக்கங்களை புரிந்துகொள்ள உதவுகிறது. சட்ட ஆலோசனை தளமான லாயர்ட்; ப்ரொஃபஷனல்கள், வணிகங்கள் மற்றும் கார்ப்பரேட்களுக்கு சட்ட உதவி வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

எவ்வாறு செயல்படுகிறது?

வணிகம், ஸ்டார்ட் அப், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள், கார்ப்பரேட் ஹவுஸ் எதுவாக இருப்பினும் சட்டப்பணிகள் என்பது அதன் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகும். ஆலோசனை பெற விரும்புபவர் லாயர்ட் மூலமாக கேள்விகள் கேட்கலாம், சட்ட மேற்கோள்களை கேட்கலாம் அல்லது ஒரு சட்ட நிபுணருடன் ஒரு இலவச அறிமுக சந்திப்பை பதிவு செய்து கொள்ளலாம்.

பெரும்பாலான வெற்றிபெற்ற வணிகங்கள் தங்களது மொத்த செலவுகளில் குறைந்தது 5 சதவீதத் தொகையை சட்டப்பிரிவில் செலவிடுகிறது என்கிறார் லாயர்ட் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஷஷாங்க் திவாரி.

சட்ட வரைவாக இருக்கலாம் (சட்ட ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்கள்), தாக்கல் செய்வதாக இருக்கலாம் (அறிவுசார்ந்த சொத்துக்கள், இணக்கம் போன்றவை) அல்லது சண்டையாக இருக்கலாம் (மோதல்கள், வழக்குகள் போன்றவை) சரியான நேரத்தில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முற்படாவிட்டால் சட்ட ரீதியான விஷயங்களுக்கான செலவுகள் ராக்கெட் வேகத்தில் உயரக்கூடும் என்பதை ஒரு ஸ்மார்டான வணிக உரிமையாளர் நன்கறிவார்கள்.

ஒரு வணிகத்தை நடத்தவும் வளர்ச்சியடையச் செய்யவும் அத்தியாவசியமாக இருக்கும் சட்ட ரீதியான தேவைகளில் வணிக உரிமையாளர்கள் எப்போதும் நிபுணர்களாக இருக்கமாட்டார்கள். இன்றளவும் ஒரு வழக்கறிஞரைக் கண்டறியும் நடவடிக்கை நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பரிந்துரைகள் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகிறது.

லாயர்ட் குழுவும் அதே போல பரிந்துரைகள் வாயிலாகவே வழக்கறிஞர்களை இணைத்துக்கொள்கின்றனர்.

அழைப்பை ஏற்று இணைந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் மட்டுமே லாயர்ட் நெட்வொர்க்கில் உள்ளனர். இவர்கள் துறையின் முன்னணி நிபுணர்களின் பரிந்துரைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட நெட்வொர்க்காகும்.

”முடிவெடுப்போர் வலுவான சட்ட ஆலோசனை வழங்கக்கூடிய சரிபார்க்கப்பட்ட சட்ட ஆலோசகர்களுடன் இணைய உதவுகிறோம். லாயர்ட் நெட்வொர்க்கில் உள்ளோர் நிறுவன சட்டத்தில் சராசரி எட்டாண்டு அனுபவமிக்கவர்கள். இதனால் எங்களது நெட்வொர்க்கில் உள்ள வழக்கறிஞர்கள் அனைத்து துறைகள் மற்றும் அனைத்து விதமான வணிகங்களின் வெவ்வேறு விதமான தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்று உறுதியளிக்கிறோம்,” என்றார் ஷஷாங்க்.

குறிப்பிடத்தக்க தருணம்

ப்ரீ-IPO ஸ்டார்ட் அப்களுக்கான பங்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வென்சரில் ஷஷாங்க் பணியாற்றியபோதுதான் லாயர்ட் உருவாக்கும் எண்ணம் அவருக்கு தோன்றியது. அவரது நிறுவனத்திற்குத் தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் இணக்கங்கள் குறித்து தெரிந்துகொள்வதற்காக SEBI கட்டுப்பாடுகள் குறித்து நன்கறிந்த வழக்கறிஞரை நண்பர்கள் மற்றும் உறவினர் வாயிலாக தேடிக்கொண்டிருந்தபோது அவரது பயணம் துவங்கியது.

ஒரு மாத தேடலுக்குப் பிறகும் கிட்டத்தட்ட 12 வழங்கறிஞர்களை சந்தித்த பிறகும் தற்போதைய SEBI கட்டுபாடுகள் காரணமாக தனது யோசனை சரிவரவில்லை என்பதை புரிந்துகொண்டார். அதைக் காட்டிலும் முக்கியமாக சரியான வழக்கறிஞரை கண்டறிவது கடினமான வேலை என்பதை புரிந்துகொண்டார்.

லாயர்ட் துவங்குவதற்கு முன்பு இரண்டு வென்சர்களுடன் பணிபுரிந்ததால் இந்திய ஸ்டார்ட் அப் சந்தையின் சாத்தியக்கூறுகளை ஏற்கெனவே அறிந்திருந்தேன். நிறுவன சட்டம், விதி அல்லது கட்டுப்பாடுகள் குறித்து எதுவும் தெரியாமல் தங்களது முதல் வென்சரை துவங்க முயற்சிக்கும் பல இளம் தொழில்முனைவோர் உள்ளனர்,” என்றார் ஷஷாங்க்.

சரியான குழுவை அமைத்தல்

கௌரி பெடேகர் இணை நிறுவனர் மற்றும் சிஓஓ-வாகவும், ராகவ் சேகர் இணை நிறுவனர் மற்றும் சிஎம்ஓ-வாகவும், லக்ஷயா கம்போஜ் இணை நிறுவனர் மற்றும் முதன்மை விற்பனை அதிகாரியாகவும் ஷஷாங்குடன் இணைந்தனர்.

”நாங்கள் நான்கு பேரும் ஒருவரை ஒருவர் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக அறிவோம். நானும் ராகவும் ஒரே கல்லூரியில் படித்தோம். பிறகு ஒன்றாகவே பணிபுரிந்தோம். கௌரி மற்றும் லக்ஷயாவையும் கல்லூரி நாட்களிலேயே சந்தித்தேன். கௌரி மற்றும் ராகவுடன் நானும் இணைந்துகொண்டு 2013-ம் ஆண்டு எங்களது முதல் வென்சரை முயற்சித்தோம். அதனால் என்னுடைய திட்டம் குறித்து முதலில் அவர்களுடன் கலந்துரையாடினேன். அவர்கள் திட்டத்தை வரவேற்றனர். முதலில் கௌரி இணைந்துகொண்டார். சீக்கிரமே ராகவும் ஒரு மாதத்திற்குப் பின்னர் லக்ஷயாவும் இணைந்துகொண்டனர்,” என்றார் ஷஷாங்க்.

சட்டப்பூர்வமான விஷயங்களை புரிந்துகொள்ளுதல்

சட்ட ரீதியான பின்னணி இல்லாததால் நான்கு இணை நிறுவனர்களும் சட்ட நிறுவன பார்ட்னர்களுடனும், நிறுவனத்தினுள் இருக்கும் சட்ட ஆலோசகர்களுடனும், தனிப்பட்ட சட்ட ஆலோசகர்கள் மற்றும் வணிக உரிமையாளர்களுடனும் பெரும்பாலான நேரத்தை செலவிட்டு தற்போதைய சூழலில் இந்தத் துறையும் சந்தையும் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுகிறது என்பதை தெரிந்துகொண்டனர்.

சட்டம் சார்ந்த விழிப்புணர்வு, வழக்கறிஞரை அணுகுதல், கட்டணம் மற்றும் செயல்முறையில் வெளிப்படைத்தன்மை ஆகியவை இல்லாததால் சட்டத் துறை அதிகளவில் பயன்படுத்தப்படாமல் உள்ளதை கவனித்ததாக தெரிவிக்கிறார் ஷஷாங்க்.

சட்டரீதியான கேள்விகளுக்கு பதிலளித்தும் வெளிப்படையான கட்டண மதிப்பீடுகளை வழங்கியும், தனிப்பட்ட சந்திப்புகளை ஏற்பாடு செய்தும் உதவி இது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வளிக்கும் சட்ட ஆலோசகராக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது லாயர்ட்.

”ஒரு வழக்கறிஞரை தேர்ந்தெடுப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்பதை விரைவில் தெரிந்துகொண்டோம். வழக்கறிஞர்கள் பாமர மக்களால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத வழிமுறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள். சட்டப் பயிற்சிகளில் பல்வேறு பிரிவுகள் இருப்பதைத் தாண்டி ஒரு வழக்கறிஞரின் நிபுணத்துவம் என்பது அவர் பணிபுரிந்த க்ளையண்ட் வகையைச் சார்ந்தே அமைகிறது. ஒவ்வொரு வழக்கறிஞரும் தனித்துவமானவர்கள். இதனால் ஒரு பணிக்கு மிகப்பொருத்தமான வழக்கறிஞரை கண்டறிவது கடினமாகும்.”

செயல்பாடுகள்

பயனர் தனது சட்டப்பிரச்சனையை கையாள ஒன்றிற்கும் மேற்பட்ட வழிகளை வழங்கி இந்த சவாலை சமாளிக்க உதவுகிறது இந்தத் தளம். சட்ட ஆலோசனை பெற விரும்புபவர் கேள்விகள் கேட்கலாம், அவர்களது சட்ட பணிகளுக்கான மதிப்பீடுகளை பெறலாம், தனிப்பட்ட சந்திப்புகளை ஏற்பாடு செய்துகொள்ளலாம், அழைப்பு மூலமாக ஆலோசனை பெறலாம்.

பயனர் சமர்ப்பிக்கும் கேள்விகள் குறித்து வழக்கறிஞர் கலந்துரையாடி பயனர் தனது சட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபட கட்டணமின்றி இலவசமாக உதவுவார்.

”பயனர்கள் தங்களது சட்டரீதியான தேவைகள் குறித்தும் பதிவிடலாம். தங்களது பகுதியில் உள்ள வழக்கறிஞரின் கட்டண மதிப்பீடுகள் குறித்தும் தெரிந்துகொள்ளலாம். இது எங்களது வலைதளத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட அம்சமாகும். ஏனெனில் பயனர்கள் வழக்கறிஞர்களுடன் பணியை துவங்குவதற்கு முன்பு வெளிப்படையாக கட்டணங்கள் குறித்து தெரிந்துகொள்ள எங்களது வலைதளம் உதவுகிறது,” என்றார்.

பயனர்கள் சட்ட பிரச்சனைகள் குறித்து வழக்கறிஞருடன் உரையாட அவரை நேரில் சந்திக்கலாம் அல்லது அவசரத் தேவைக்கு சட்ட ஆலோசனை பெற நிபுணர்களுடன் 30 நிமிட தொலைபேசி அழைப்பிற்கு கட்டணம் செலுத்தி ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.

சந்தைப் பகுதி

தற்போது பல்வேறு சட்டம் சார்ந்த ஸ்டார்ட் அப்கள் செயல்பட்டு வருகிறது.

அவற்றுள் சில LawRato என்கிற வழக்கறிஞர்களுக்கான பி2பி மொபைல் செயலி. 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது Legistify.com. இது ஒரு விரைவான ஆன்லைன் ஒப்பந்த தளம். இதில் பயனர்களிடம் கேட்கப்படும் கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு ஒப்பந்தம் தயாரிக்கப்படும்.

ட்ரேட்மார்க் பதிவு, சட்ட ஆவணங்கள் போன்ற பகுதிகளில் மலிவான கட்டணங்களில் சேவை அளிக்கிறது Vakilsearch. வணிக விரிவாக்கம், அறிவுசார்ந்த சொத்து பாதுகாப்பு, வரி சட்டத்தை கடைபிடித்தல் போன்ற பிற சேவைகளையும் வழங்குகிறது. கணக்கியல் சேவைகள் வழங்குவதற்காக Intuit உடன் பார்ட்னர்ஷிப்பில் இணைந்துள்ளது. MeetUrPro, LegalRaasta, bCompliance, VenturEasy போன்றவை சட்டம் சார்ந்த பிற ஸ்டார்ட் அப்களாகும்.

2014-ம் ஆண்டு 254 மில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்து அமெரிக்கா இந்தப் பகுதியில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது.

வேறுபடுத்திக் காட்டுதல்

எனினும் லாயர்ட் வேறுபட்டது என்கிறார் ஷஷாங்க். 

”அனுமதியுடன் மட்டுமே நெட்வொர்க்கில் இணைந்துகொள்ளும் விதத்தில் நாங்கள் செயல்படுகிறோம். இதுதான் எங்களது போட்டியாளர்களிடமிருந்து எங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.”

”எங்களுடன் செயல்படும் ஒவ்வொரு வழக்கறிஞரும் சரிபார்க்கப்பட்டு ஆய்வுசெய்யப்பட்ட பின்னரே தளத்தில் இணைத்துகொள்ளப்படுகிறார்கள்.” என்றார். மேலும் தற்போது இந்தியாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான வழக்கறிஞர்கள் உள்ளனர். அத்துடன் ஒவ்வொரு வருடமும் 1.5 லட்சத்திற்கும் அதிகமான சட்ட மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்.

”ஒவ்வொரு வழக்கறிஞரின் பயிற்சி குறித்த நுண்ணறிவைப் பெறுவது மிகவும் கடினமான செயலாகும். இதனால் தளத்தின் தரத்தை பராமரிப்பது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத விஷயமாகும். ஒரு தனிநபர் ஒரு வழக்கறிஞரை நியமிப்பதற்கு முன்பு அந்த வழக்கறிஞர் மீது நம்பிக்கை ஏற்படுவதுதான் முக்கிய காரணியாகும். லாயர்ட் தளத்தில் ஒவ்வொரு வழக்கறிஞரும் லாயர்ட்டால் பரிந்துரை செய்யப்படுவதால் பயனர்கள் நம்பிக்கை குறித்து கவலைகொள்ள வேண்டியதில்லை,” என்றார் ஷஷாங்க்.

சட்ட ரீதியான ஆலோசனை கேட்க விரும்புவோர் தற்போது டெல்லி-NCR, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற பகுதி முழுவதும் சட்ட ஆலோசகர்களை கண்டறியலாம்.

வழக்கறிஞருக்கான சந்தா மாதிரியுடன் செயல்படுகிறது லாயர்ட். வருடத்திற்கு இருமுறை அல்லது வருடாந்திர தொகை செலுத்தி அவர்களது சேவை அதிகம் பேரை சென்றடையும் விதத்தில் அப்பாயிண்ட்மெண்ட் சார்ந்த புக்கிங்கை பெற்றுக்கொள்ளலாம்.

2016-ம் ஆண்டு மே மாதம் இந்தத் தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களது லாயர்ட்ப்ளஸ் ப்ராடக்ட்டிற்கு 200க்கும் அதிகமான வழக்கறிஞர்கள் சந்தாதாரர்களாக உள்ளனர். ஒவ்வொரு மாதமும் 40 சதவீத வளர்ச்சியடைந்து வருவதாகவும் 50க்கும் அதிகமான வணிக உரிமையாளர்கள் தினமும் சட்ட நிபுணர்களிடம் சட்ட ஆலோசனை பெற உதவுவதாகவும் இக்குழுவினர் தெரிவித்தனர்.

கார்ப்பரேட் வழக்கறிஞர்களை சந்தாதாரர்களாக்குவதன் மூலம் 40 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கிறது இந்நிறுவனம். தக்கவைப்பு விகிதம் 90 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதால் வழக்கறிஞர்கள் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரச் சூழலில் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை ஏற்றுக்கொண்டது தெளிவாகிறது.

பொதுவான சட்டம் சார்ந்த சேவைகளை தரப்படுத்தி குறைந்த செலவில் ப்ரொஃபஷனல்கள், ஸ்டார்ட் அப்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள், கார்ப்பரேட்கள் போன்றவற்றிற்கு ஏற்றவாறான தனிப்பட்ட சட்ட தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது லாயர்ட்.

வருங்கால திட்டம் குறித்து ராகவ் தெரிவிக்கையில், “சட்ட பணிகளை கண்டறிவது மட்டுமல்லாமல் சேவைகளைப் பெறுவதிலும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலைக் கொண்டு நடந்துகொண்டிருக்கும் சட்ட செயல்முறைகளை தானியங்கியாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது லாயர்ட். தற்சமயம் சட்டத் துறை தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவதில்லை. தொழில்நுட்ப முன்னேற்றத்தை மேலும் அதிகப்படுத்தத் தேவையான நுண்ணறிவை பெறுவதற்கும் தரவுகளை டிஜிட்டைஸ் செய்வதுதான் முதல் முயற்சியாகும்.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப்