குத்துச்சண்டையில் 6-வது தங்கம் வென்று உலக சாதனைப் படைத்த மேரி கோம்!

0

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் வீர மங்கை மேரி கோம். இதுவரை எந்த பெண் வீரர்களும் எட்டாத சாதனையை எட்டி குத்துச்சண்டையில் முதல் முறையாக 6 தங்கப்பதக்கங்களை வென்று சாம்பியன் ஆகியுள்ளார்.

டெல்லியில் நடைப்பெற்ற இந்த குத்துச்சண்டை போட்டியில் 72 நாடுகளைச் சேர்ந்த 300 வீராங்கனைகள் கலந்துக்கொண்டனர். அதில் மேரி கோம் மற்றும் உக்ரேனை சேர்ந்த ஹன்னா ஒக்ஹாடோ 48 கிலோ பிரிவில் இறுதி சுற்றுக்கு நுழைந்தனர். சர்வதேச அளவில் 5 தங்கப்பதக்கங்கள் வென்ற மேரி கோம் 5-0 என்ற கணக்கில் போட்டியாளரை வீழ்த்தி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளார்.

வெற்றிக்குப் பிறகு ஊடகத்துடன் பேசிய மேரி கோம்,

“இந்த வெற்றியை எனது நாட்டிற்கு சமர்ப்பிக்கிறேன். சொந்த நாட்டில் போட்டிப்போட்டதால் அரங்கம் முழுவதும் என் பெயர் ஒலித்தது அவர்களின் ஆதரவே உத்வேகத்தை கொடுத்தது,” என்றார்.

மணிப்பூரை சேர்ந்த இவரே குத்துச்சண்டையில் 6 தங்கப்பதங்களை பெற்ற முதல் பெண், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பெண் மற்றும் ஆசிய விளையாட்டுகளில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமைக்குரியவர்.

ஒலிம்பிக் போட்டியில் 48 கிலோ பிரிவு இல்லாததால் கடந்த ரியோ ஒலிம்பிக்கில் இவரால் கலந்துக்கொள்ள முடியவில்லை. அதனால் மக்களின் இந்த ஆதரவோடு 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 51 இடை பிரிவில் கலந்துக்கொள்ளப் போவதாக தெரவித்தார் மேரி.

“51 கிலோ எடை பிரிவில் பதக்கம் வெல்வது கடினம், உயரமான வீரர்கள் பலர் அதில் களம் இறங்குவர் இருப்பினும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தோடு முயற்சி செய்வேன்,” என்றார்.

மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் கடந்த 2001ல் தனது முதல் பயணத்தை வெள்ளிப் பதக்கத்துடன் தொடங்கினார். அதனை தொடர்ந்து 2002, 2005, 2006, 2008 and 2010ல் நடந்த சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து தங்கம் வென்றார். 5 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கத்துடன் அயர்லாந்தை சேர்ந்த கேத் டேயலருடன் சமமாக இருந்தார் தற்பொழுது 6 வது தங்கம் வென்று 7 பதக்கங்களுடன் புதிய சாதனைப் படுத்துள்ளார்.

தகவல் உதவி: டைம்ஸ் ஆப் இந்தியா | கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்

Related Stories

Stories by YS TEAM TAMIL