மருத்துவர் டூ ஐஏஎஸ்: இலவச ஐஏஎஸ் பயிற்சியாளர் ஆன சூப்பர்மேன் ரோமன் சைனி!

இளம் வயதிலேயே மருத்துவர் மற்றும் ஐஏஎஸ் முடித்த வெற்றியாளரான ஜெயப்பூரை சேர்ந்த ரோமன் சைனி இரண்டையும் வேண்டாம் என புறக்கணித்து ஏழை மாணவர்களுக்கு இலவசமாக ஐஏஎஸ் பயிற்சி தரும் கல்வியாளராக மாறிய கதை.

0

18 வயதில் மருத்துவர்... 22 வயதில் ஐ.ஏ.எஸ்... ஆனால் இந்த இரண்டு பணிகளும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, இளைஞர் ஒருவர் சமுதாயத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என கல்வியாளராக வலம்வருகிறார். நாடுமுழுவதும் பிரபலமாகிவரும் அசாத்திய திறமைபடைத்த டாக்டர் ரோமன் சைனியின் வாழ்க்கை பலருக்கும் உந்து சக்தியாக விளங்கிவருகிறது.

படஉதவி : நன்றி இந்தியா டுடே
படஉதவி : நன்றி இந்தியா டுடே

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்து வளர்ந்த ரோமன் சைனி, இன்று நாடு முழுவதும் பிரபலம். 16 வயதில் டிவி, சினிமா, கடைசியாக பொதுத்தேர்வுக்கு விழுந்து விழுந்து படிப்பது என்ற அழகான டீன்ஏஜ் பருவம். ஆனால் மற்ற டீனேஜ் பசங்களை விட ரோமன் சைனி வித்தியாசமானவர். 

16 வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துக்கல்லூரியின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிபெற்று மருத்துவப்படிப்பில் இணைந்தார். 18 வயதில் சர்வதேச மெடிக்கல் ஜெர்னலில் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். மருத்துவப்பணியின் போது கிராமத்தில் நடந்த மருத்துவ முகாமில் சைனி பங்கேற்றார். அப்போதுதான் மின்னும் நகரங்களைத்தாண்டி உள்ள கிராமங்களின் உண்மை நிலையை அவர் அறிந்துகொண்டார். அதற்குப்பிறகு சைனியின் வாழ்க்கையில் பல மற்றங்கள் நடக்க இந்த சம்பவம் காரணமானது.

மருத்துவர் வேலையை உதறிய சைனி, மிகக் கடினமான தேர்வு என்று கருதப்படும் இந்திய குடியுரிமைப்பணிகள் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று இந்தியாவின் மிக இளையவயது ஐ.ஏ.எஸ் அதிகாரியானார். 

22வயதில் ஐஏஎஸ் அதிகாரியான சைனி மத்தியபிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்றார். ஆனால், இந்த பணியிலும் அவர் திருப்தியடையவில்லை.

கல்வியறிவும், மக்களுக்கு சேவை செய்யும் அதிகாரிப் பணியும் அடுத்தடுத்த தேடல்களுக்கு விதை போட்டது. 

நாமெல்லாம் டாக்டர் அல்லது கலெக்டர் என ஏதாவது ஒரு இலக்கை நோக்கி நம் பிள்ளைகளை நினைத்து கனவு காண, இந்த இரண்டையும் இளம்வயதிலேயே படித்து முடித்த சைனியோ இதில் எல்லாம் திருப்தி ஆகாமல் இவை இரண்டிற்கும் முழுக்குப் போட்டுவிட்டு ஏழை மாணவர்களுக்கு இலவசமாக ஐஏஎஸ் பயிற்சி அளிக்கும் தனது சொந்த தொழில்முனைவில் குதித்து விட்டார்.

’அன்அக்கடெமி’ (Unacademy) என்ற பெயரில் சைனி தொடங்கிய இணையதளம் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை உருவாக்கும் பணிகளை தீவிரமாக செய்துவருகிறது. நண்பரின் உதவியுடன் சமூக வலைதளங்கள் மூலம் தேர்வுக்கு தயராவது எப்படி? தன்னம்பிக்கை பேச்சு ஆகிவற்றை வழங்கிவருகிறார். பணம் கட்டி படிக்கமுடியாத மாணவர்களுக்கு சைனியின் உதவி அத்யாவசியமானது. இவரது யூடீயூப் பக்கத்தை இப்போது சுமார் 10 லட்சம் பேர் பின் தொடர்ந்துவருகிறார்கள்.

“பிறக்கும்போதே யாரும் புத்திசாலியாக பிறப்பதில்லை. வாழ்வில் தேவையை அடைய தேவையான அறிவு, திறமை எல்லோரிடமும் உள்ளது. பெற்றோர் அல்லது சமுதாயத்தின் விருப்பங்களுக்கு எதிராக அச்சமின்றி செல்லவேண்டும். அப்போதுதான் எல்லைதாண்டி வெற்றியை சுவைக்க முடியும்,” என்கிறார் சைனி.

வெற்றிகளுக்கு அடைப்படை என்பது கற்பது எப்படி என்பதை அறிந்து கொள்வதில்தான் இருக்கிறது என்கிறார் சைனி. பலரும் சைனியிடம் கேட்ட கேள்வி – மருத்துவரானாய், ஐ.ஏ.எஸ் பதவியும் கிடைத்தது ஆனால், ஏன் லைப்பில் செட்டில் ஆகவில்லை? என்பதுதான். ஆனால், சைனி சிரித்துக்கொண்டே நம்மைச் சுற்றியுள்ளவர்கள் வாழ்க்கையில் நல்ல முறையில் செட்டில் ஆக எதாவது செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

நமது நாட்டில் பொருளாதாரம்தான் கல்வி கற்றலுக்கு தடையாக இருந்துவருகிறது. ஆனால் பல ஆண்டுகளாக இதற்கு தீர்வு எட்டப்படவில்லை என்று சொல்லும் 25 வயது சைனி, தற்போது இப்பிரச்னைக்காக தீர்வை கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஒருவர் தன்னுடைய நிலையில் இருந்து உயரவும், வாழ்வில் சிறந்த நிலையை அடையவும் சில முக்கிய அம்சங்களை அவர் பட்டியலிடுகிறார் :

1. ரிஸ்க் எடுக்க தயாராக இருங்கள் : ஒருவர் எப்போதுமே பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதை தவிர்க்கவேண்டும். பாதுகாப்பு என்ற போதை தான் ரிஸ்க் எடுப்பதை விட அபாயமானது. ஆனால் அதுவே நீங்கள் ரிஸ்க் எடுத்துப் பாருங்கள் வாழ்க்கை நீங்கள் நினைத்தபடி அமையும். ஒருவர் தன்னுடைய திறமைகளுக்கு ஏற்ப ரிஸ்க் எடுக்கலாம்.

2. அதிர்ஷ்டம் : நீங்கள் இந்த பூமியில் பிறந்திருப்பதே ஒரு அதிர்ஷ்டம் தான். இங்கே நீங்கள் பல முறைகளில் அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். கணிணியில் ஒரே ஒரு கிளிக் செய்தால் போதும் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும். எனவே நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

3. நிறுத்துங்கள் : மற்றவர்கள் பற்றி புகார் சொல்வது மற்றும் வாக்குவாதம் செய்வதை நிறுத்துங்கள் குறிப்பாக பகுத்தறியத் தெரியாதவர்களிடம் வாக்குவாதம் செய்யவே கூடாது ஏனெனில் உங்களை அவர்கள் நிலைக்கு கீழே கொண்டு சென்று அவர்களுடைய அனுபவத்தால் உங்களை அடிப்பார்கள்.

4. தீர்மானமாக இருங்கள் : நீங்களே சுயமாக முடிவெடுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவில் எப்போதுமே பல தடைகள் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். குழப்பமான சூழலிலும் நீங்கள் எடுக்கும் முடிவில் தீர்மானமாக இருக்க வேண்டும்.

சைனி டாக்டராகவோ, கலெக்டராகவோ இருந்திருந்தால் ஒரு சிலர் மட்டுமே பயனடைந்திருப்பார்கள் ஆனால் இன்று கல்வியாளராக மாறியதால் பல வெற்றியாளர்களை உருவாக்கியுள்ளார். சொந்த வாழ்க்கையை விட்டு, வறுமையில் வாடும் மாணவர்களுக்காக இயங்கிவரும் சைனியின் முயற்சிகள் பாராட்டுக்குறியவை.

கட்டுரையாளர் : பிரியதர்ஷினி