1லட்சம் சதுரடி அளவு சரக்கு கிடங்கு வசதியை அளிக்கும் 'ஸ்டோர்மோர்'

0

எதையாவது குவித்து வைப்பது மற்றும் தேக்கி வைப்பதை புத்திசாலித்தமான ஒழுங்கு என்று யாரும் நினைப்பதில்லை. ஆனால் வர்த்தக உலகத்தில் அது எங்கும் காணப்படும் ஒரு வாய்ப்பு. ஆன்லைன் தொழில்நுட்ப பரப்பில் வளர்ந்து வரும் பல்வேறு விதமான வர்த்தகங்களில், பொருட்களை இருப்பு வைக்க சேமிப்பு கிடங்ககளை வாடகைக்கு விடும் வர்த்தகமும் ஒன்று. இதில் ஒருவர் தனது சரக்குகளை இருப்பு வைத்துக் கொள்ள தேவையான இடத்தை ஆன் லைன் மூலம் தேர்வு செய்து கொள்ளலாம். உங்கள் சரக்குகளை கிடங்கில் வைக்க, அதற்குரிய வாடகையை அவர்கள் வாங்கிக் கொள்வார்கள். நகர்மயம் மற்றும் நகரவாசிகளின் வாழ்க்கை முறைக்கு இது போன்ற குடோன்கள் வசதியாக இருக்கிறது.

புதிய போக்கு

தொழில்நுட்பத்துறையில் வந்த பெரும்பாலான புதிய மாற்றங்களைப் போலவே தேவைக்கு இருப்பு வைக்கும் கிடங்கு தொழிலும் அமெரிக்காவில் இருந்துதான் இங்கு வந்தது. அமெரிக்க சந்தையில் குடோன் தொழில், மிக அழுத்தமாகக் காலூன்றியுள்ளது. இந்தத் தொழிலில் 24பில்லியன் டாலர் வருமானம் வந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள 10ல் ஒருவர் சொந்தமாக ஒரு கிடங்கை வைத்திருக்கிறார். அமெரிக்காவில் உள்ள மேக்ஸ்பேஸ் (MakeSpace) நிறுவனம் 10 மில்லியன் டாலரும் பாக்ஸ்பீ (BoxBee) நிறுவனம் 7 மில்லியன் டாலரும் வருமானம் ஈட்டியிருக்கின்றன. ஹாங்காங்கில் உள்ள பாக்ஸ்ஃபுல் நிறுவனம் 8மில்லியன் டாலர் வரை வருமானம் ஈட்டியுள்ளது. மும்பையில் உள்ள பாகஸ்மைஸ்பேஸ் நிறுவனம் சமீபத்தில் இந்தத் தொழிலுக்கான விதையை ஊன்றியது. இங்கும் அந்தத் தொழில் அப்படித்தான் நுழைந்தது.

நிதின் தவான்
நிதின் தவான்

ஸ்டோர்மோர்

நிதின் தவானும், பூஜா கோத்தாரியும் இணைந்து "ஸ்டோர் மோர்" (StoreMore) எனும் சரக்கு கிடங்கை தொடங்கினர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அது இயங்கி வந்தது. இப்போது இணைய வழியில் சேவை செய்யும் தொழில்நுட்பமும் இதில் இணைந்துள்ளது. ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் மைன்ட் ஒர்க்ஸ் க்ளோபல் மீடியா எனும் ஊடக அவுட்சோர்சிங் நிறுவனத்தில்தான் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அங்கு பூஜா இணை ஆசிரியராக (Associate Editor) பணியாற்றிக் கொண்டிருந்தார். நிதின், நிதி மற்றும் கணக்கியல் பிரிவில் பணியாற்றினார்.

பூஜா கோத்தாரி
பூஜா கோத்தாரி

முதலில் இருவரும் சேர்ந்து 2010ல் ஸ்டார் ரெக்கார்ட்ஸ் எனும் ஆவணங்களை நிர்வகிக்கும் தொழிலைத் தொடங்கினர். இதில் பூஜா முதலீடு செய்ய நிதின் பணிகளைக் கவனித்துக் கொண்டார். ஸ்டார் ரெக்கார்ட்ஸ்-ன் ஒரு பகுதியாக 2013ல் ஸ்டோர் மோர் தொடங்கப்பட்டது. பிறகு 2014ல் அதுவே தனி நிறுவனமாக தொடங்கப்பட்டது.

“டெல்லியில் 10 இடங்களில் எங்களது சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. ஒரு லட்சம் சதுர அடி இடம் எங்களது நிர்வாகத்தின் கீழ் உள்ளது” என்கிறார் பூஜா. வாடிக்கையாளர்கள் தங்களது பொருட்களை இருப்பு வைக்க இந்தப் பத்து இடங்களில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். சுமார் 200ல் இருந்து 250 வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் உள்ளது. எந்த இடத்திலும் உரிய நேரத்தில் சரக்குகளை இருப்பு வைக்கலாம்.

வருமானம்

சரக்கு வைக்கும் இருப்பிடத்திற்கு மாத வாடகை வசூலித்துக் கொள்கிறது ஸ்டோர்மோர். வீட்டு வாடகையைப் போல வாடிக்கையாளர்கள் மாதா மாதம் வாடகை செலுத்துகின்றனர். பேக் செய்வது, சரக்குகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது போன்றவற்றிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது ஸ்டோர் மோர். கட்டண வசூலிப்பு குறித்து பேசும் போது, “ஸ்டோர்மோர் கட்டண வசூலில் வாடிக்கையாளர் வசதிக்கேற்ற முறையைக் கொண்டிருக்கிறது. செக்கியூரிட்டி டெபாசிஸ்ட் என்று எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. இருப்பு வைப்பதற்கு கால அவகாசம் எதுவும் கிடையாது. நீங்கள் பயன்படுத்தும் இடத்திற்கு தகுந்த வாடகையை மாதாமாதம் தர வேண்டும், அவ்வளவுதான்” என்கிறார் பூஜா.

தொழில்நுட்ப வசதிகள்

வாடிக்கையாளர் தனக்குத் தேவையான இடத்தை அவற்றின் படங்களைப் பார்த்து, அங்குள்ள அடிப்படை வசதிகளை அறிந்து தேர்வு செய்து கொள்ளலாம். நுகர்வோர், ஸ்டோர் மோர் இணைய தளத்திற்கு சென்று அதில் லாகின் செய்து, தனது சரக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள இடத்தை தெரிந்து கொள்ளலாம். அங்கிருந்து தமது சொந்த இருப்பிடம் அல்லது நண்பர்களின் இடத்திற்கு மறுபடியும் கொண்டு செல்ல வேண்டுமானால், அங்கிருந்து எடுத்துச் செல்லலாம். “சரக்கு கிடங்கு வசதியில் நாங்கள் ஒரு மேக் மை ட்ரிப். ஹோட்டல்களில் உங்களுக்கு வசதியான அறையைப் பார்த்து பதிவு செய்வீர்கள் அல்லவா.. அதைப் போல உங்கள் சரக்குகளை இருப்பு வைக்க எவ்வளவு இடம் தேவைப்படுமோ அந்த அளவுக்குப் பார்த்துப் பதிவு செய்து கொள்ளலாம். ஒரு முறை இடத்தை பதிவு செய்து விட்டு, பிறகு அதையே அதிகப்படுத்த வேண்டும் என்றாலும், அதையும் ஒருவர் தனது வீடு அல்லது அலுவலகத்தில் இருந்தே விரிவு படுத்திக் கொள்ளலாம்.” என்கிறார் பூஜா.

மானேசரில் உள்ள ஸ்டோர்மோர்
மானேசரில் உள்ள ஸ்டோர்மோர்

வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வர்த்தகத் துறையில் சரக்கு இருப்பு வசதிகளைச் செய்து தருவதில் இந்தியாவிலேயே மிகப்பெரும் நெட்வொர்க் வசதியுடன் முன்னணி நிறுவனமாக வளர விரும்புகிறது ஸ்டோர்மோர். “சரக்கு கிடங்கு தொழிலில் மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறோம். அதை ஜனநாயகப்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கும் இல்லங்களின் தேவைகளுக்கும் கூட அதை கொண்டு செல்ல விரும்புகிறோம்” என்கிறார் பூஜா. இந்தத் துறையில் இவர்களுக்குள்ள அனுபவம், இந்தியாவின் சிறந்த முன்னணி நிறுவனமாக இந்தத் துறையில் தவிர்க்க முடியாத போட்டியாளராக ஸ்டேர் மோரை உயர்த்தியுள்ளது.

இணையதள முகவரி: StoreMore