’காலா’ எடுத்துக்காட்டியுள்ள நகர்ப்புற வறுமை: நிழலும் நிஜமும்!

’நிலம் எங்களது உரிமை, அதை ஒரு நாளும் விட்டுக்கொடுக்க மாட்டோம்...’ என்று வெள்ளித்திரையில் உரக்கக் குரல் கொடுக்கிறார் நடிகரும், அரசியல்வாதி அவதாரமும் எடுத்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

1

ரஜினிகாந்த் பெயரே பல்வேறு உணர்ச்சிரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும். 70mm திரையைத் தாண்டி அவரது திரைப்படங்களும் ஆளுமையும் உயர்ந்தோங்கியிருக்கும். அவரது சமீபத்திய திரைப்படமான காலா தாராவியின் ஒடுக்கப்பட்டோருக்கும், பணமும் அதிகாரமும் படைத்தோருக்கும் இடையே நடக்கும் நிலப் போராட்டத்தை சாதி உணர்வுகளுடன் விவாதித்தபோது அது திரைப்படம் என்பதைத் தாண்டி நிஜ உலக விவாதப்பொருளாகி உள்ளது.

நிழலும் நிஜமும்

பா ரஞ்சித்தின் திரைப்படமான காலா அதிகார வர்க்கமான போலீஸ், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களிடையே இருக்கும் தொடர்பை சுட்டிக்காட்டுகிறது. மும்பையின் தாராவி பகுதியை மையமாகக் கொண்ட இந்த 185 நிமிட திரைப்படம் மாஃபியாக்கள், ’வளர்ச்சி’ மற்றும் டிஜிட்டல்மயமாதல்’ ஆகிய பெயரில் செயல்படும் அரசியல்வாதிகள் பிடியில் இருந்து தாராவி மக்கள் எவ்வாறு வியர்வையும் ரத்தமும் சிந்தி தங்களது நிலத்தை பாதுகாக்கிறார்கள் என்பதை மையமாகக் கொண்டதாகும்.

”சமூக பிரச்சனைகள் குறித்தும் சமூக நலனிற்கு ஆதரவாக இருப்பது குறித்தும் அலசப்படுவது தமிழ் திரைப்படங்களில் புதிதல்ல. ரஜினிகாந்தின் முந்தைய திரைப்படங்களில் மட்டுமல்லாது பல்வேறு திரைப்படங்களிலும் இப்படிப்பட்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலா திரைப்படம் மிகவும் பொருத்தமான ஒரு பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது,” என்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளரான டாக்டர் சுமந்த் ராமன்.

பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கிடையே நடக்கும் தொடர் போராட்டம், ஏழ்மை நிலையிலிருந்து செல்வந்தராகும் கதை, ஒடுக்கப்பட்டோர் தங்களது உரிமைக்காக போராடுதல், ஊழலை எதிர்த்து போராடுதல் போன்றவை திரைப்படங்களில் காணப்படுவது புதிதல்ல. எனினும் தற்போதைய அரசாங்க கொள்கைகள் மற்றும் குடிசைப்பகுதிகளில் அவை நடைமுறைப்படுத்துவது குறித்த இயக்குநரின் உணர்ச்சிப்பூர்வமான சித்தரிப்பின் காரணமாக இந்தத் திரைப்படம் முன்னிலை வகிக்கிறது.

”நிலம் என்பது ஒரு மனிதனின் முக்கியமான வளம். நிலமின்றி மக்களின் வாழ்க்கையே முடங்கிவிடும். ஒரு நிலத்தின் உரிமையானது சுயசார்புடன் இருப்பதற்கான நம்பிக்கையை அளிக்கிறது. ஒரு மனிதனுக்கும் அவரது நிலத்திற்கும் இருக்கும் தொடர்பை அறுத்தெறிவதே அவரை அடிமைப்படுத்துவதற்கான முதல் முயற்சியாகும். தலித் மக்கள் நிலமின்றி தவித்தபோது அதிகார சமூகத்தைச் சேர்ந்தவரின் நிலத்தில் பணிபுரியவேண்டியிருந்தது. இங்கே வர்க்கமும் சாதியும் ஒன்றிணைந்து நிலையை மேலும் மோசமாக்குகிறது,” என்று ரஞ்சித் ’தி ஹிந்து’ உடனான நேர்காணலில் குறிப்பிட்டார்.

இந்தியாவில் நில அபகரிப்பு என்பது 21-ம் நூற்றாண்டில் புதிதல்ல. பிரிட்டிஷ் காலனிய சமயத்திலிருந்தே காணப்படுகிறது. பல்வேறு திட்டங்களுக்காக அரசாங்கம் நிலத்தை இணைத்துக்கொண்டது. எனினும் மறுவாழ்வு வழங்குவதில் கவனம் செலுத்தப்படாததே விவாதத்திற்கு வழிவகுத்தது.

அரசாங்க விதிகளின்படி குடிசைப்பகுதிகளில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும்போது சம்பந்தப்பட்ட துறை அவர்களுக்கு மாற்று இடத்தை வழங்கி மறுவாழ்வு அளிக்கவேண்டும். அவர்களுக்கு 3 கிலோமீட்டருக்குள் வீடு வழங்கவேண்டும். ஆனால் சென்னையில் 30 கிலோமீட்டர் தொலைவிலேயே வழங்கப்படுகிறது. மற்ற நகரங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது,” 

என்கிறார் தேவை இயக்கம் இளங்கோவன். இவர் நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளில் மக்கள் நலனுக்காக பணிபுரியும் சென்னையைச் சேர்ந்த ஆர்வலர்.

நகர்ப்புற வறுமையை ஒழித்தல்

கடந்த நான்காண்டுகளில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் பெரும்பாலான திட்டங்கள் நகர்ப்புற கட்டமைப்பை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்துகிறது. தீனதயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம் (DAY-NULM) நகர்ப்புற வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. NULM, தூய்மை இந்தியா திட்டம் மட்டுமல்லாது நகர்ப்புற பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமும் நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடு மற்றும் கட்டமைப்பு வசதிகள் வழங்கப்படுவதை கட்டாயமாக்குகிறது.

நகர்ப்புற வறுமை ஒழிக்கப்படுவதையே பல்வேறு திட்டங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கையில் அடிப்படை கட்டமைப்பை வழங்குவதற்கும் டிஜிட்டல் வசதி ஏற்படுத்துவதற்கும் நிலம் கட்டாயமாகிறது. இது தொடர்பான சில கேள்விகள் முன்வைக்கப்படும். 

மக்கள் குடியேற்றம் தொடர்பான சட்ட அங்கீகாரம் என்ன? நிலம் யாருக்குச் சொந்தம்? சொத்து யாருடையது?

ஆவணங்களில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதோ, நில பயன்பாடு தொடர்பான திட்டமோ, வரைபடமோ பொருட்டாகவே கருதப்படுவதில்லை. அனைத்தும் அதிகாரம் சார்ந்ததாகும். செல்வந்தர் அடங்கிய பல்வேறு பகுதிகள் சட்ட விரோதமாகவே உள்ளது. ஆனால் அங்கு குடிசைப்பகுதிகளைப் போன்று மக்கள் நலத்திட்டங்கள் மறுக்கப்படுவதில்லை,”

என்றார் நகர்ப்புற திட்டமிடுபவர் மற்றும் கொள்கை ஆய்வாளரான கிருதி மிட்டல். இவர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில் பணியாற்றுகிறார்.

தாராவியின் வளர்ச்சி

உலகில் மிகப்பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றான தாராவி என்றதும் மிகவும் நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கும் குடிசைவீடுகளே நம் நினைவில் தோன்றும். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் தோன்றும் பல கதாநாயகர்கள் இப்பகுதியைச் சேர்ந்த ஏழை நபராக இருந்து வெற்றியடைந்ததாகவே சித்தரிக்கப்படும். ஆனால் 500 மில்லியன் டாலருக்கும் அதிகமாக மதிப்பிடப்படும் முறைசாரா பொருளாதாரம் குறித்து எங்கும் காட்சிப்படுத்தப்படுவதில்லை. இங்கு வசிப்பவர்கள் தோல், ஜவுளி, மண்பாண்டம் தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

”ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றான தாராவி சுமார் இருபதாண்டுகளாகவே போராட்ட பூமியாகவே காணப்படுகிறது. இங்குள்ள குடிசைப்பகுதிகளை ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. மலிவு விலையில் வீடுகள் வழங்குவதற்கான மத்திய அரசாங்கத்தின் இலக்கும் எட்டப்படும்,” என்றார் ANAROCK ப்ராபர்டி கன்சல்டண்ட்ஸ் தலைவரான அனுஜ் புரி.

பில்டர்களும் அரசாங்கமும் தொடர்ந்து இந்த குடிசைப்பகுதியில் கவனம் செலுத்தி வருவதால் தாராவி பகுதியின் மறுவளர்ச்சிக்கான திட்டங்கள் நிறைவடைந்ததும் இந்தப் பகுதி மீதான பார்வையே முற்றிலும் மாறிவிடும் என ரியல் எஸ்டேட் சமூகத்தினர் நம்புகின்றனர். அத்துடன் தாராவி பாந்திரா பகுதிக்கு அருகில் இருப்பதால் அது வீடு வாங்குவோர் மற்றும் பில்டர்களை அதிகம் கவர்ந்திழுக்கிறது.

எனினும் Sector V பகுதியில் மஹாராஷ்டிரா வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் கட்டிய சில கட்டிடங்களைத் தவிர்த்து திட்டமிட்டபடி எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. இன்றைய நிலையில் ஏற்கெனவே 13 தொகுதிகளாக இருந்த தாராவி பகுதி தற்போது ஐந்து செக்டார்களைக் கொண்டுள்ளது.

”மறுவளர்ச்சி செயல்முறை சிக்கலின்றி, திறம்பட, விரைவாக நடைபெற முதல் கட்டமாக ஒரு தொகுதியில் செயல்படுத்துவதே திட்டமாகும். மாநில அரசாங்கம் ஆரம்ப கட்டத்திலேயே இரண்டு டெண்டர்கள் வெளியிட்டது. ஆனால் யாரும் ஏலத்திற்கு முன்வரவில்லை. மேலும் இந்த ஆண்டு துவக்கத்தில் நிதி உயர்த்தி மறுவளர்ச்சி திட்டங்களை எளிதாக்க எஸ்பிவி அறிமுகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது,” என அனுஜ் விவரித்தார்.

தாராவி பகுதியில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதி நிலம் தனியாருக்குச் சொந்தமானதாகும். மறுவளர்ச்சிக் கொள்கையின்படி குடிசைவாசிகளில் குறைந்தபட்சம் 70 சதவீதம் பேரிடம் அனுமதி பெற்ற ஒருவர் அதற்கு மாற்றாக ஒவ்வொரு குடிசைவாசிக்கும் பல மாடி கட்டிடத்தில் குறைந்தது 270 சதுர அடியை இலவசமாக வழங்கவேண்டும். 

இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு ஜனவர் 1-ம் தேதிக்கு முன்பிருந்து அந்த குடிசைப்பகுதியில் வசித்து வருவதை நிரூபிப்பதற்கான ஆவணங்களைக் கொண்ட குடிசைவாசிகள் மட்டுமே இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்களாக கருதப்பட்டனர். ஆனால் தற்போதைய மாநில அரசாங்கம் இந்த தேதிக்குப் பிறகு வசிப்பவர்களையும் இணைத்துக்கொள்ள தீர்மானித்தது. 2017-ம் ஆண்டு இறுதியில் மஹாராஷ்டிர குடிசைப்பகுதி சட்டம், 1971-ல் வீட்டு வசதித் துறை மாற்றங்களை முன்மொழிந்தது.

எனினும் காலா திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டது போலவே தாராவி மக்கள் தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர்.

“தாராவியை அழிக்கவே அனைவரும் விரும்புகின்றனர். மக்கள் அடிக்கடி இங்கே ஆவணங்களுடன் வருகை தருகின்றனர். பில்டர்கள் வளர்ச்சி குறித்தும் வானளாவிய நவீன கட்டிடங்கள் குறித்தும் பேசுகின்றனர். எங்களுடைய தேவை குறித்து யாரும் பேசுவதில்லை. இங்கு சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகள் காணப்பட்டாலும் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். இப்படிப்பட்ட குழப்பமான சூழலையும் சமாளிக்க போராடி வருகிறோம். இதுதான் எங்களது அடையாளம். எங்களது அன்றாட பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள். ஆனால் எங்களது அடையாளத்தை அழித்துவிடாதீர்கள்,” 

என்கிறார் தாராவி பகுதியில் ஸ்கிராப் தொழிலில் ஈடுபட்டுள்ள ரவி கோபால். நில அபகரிப்பு என்பது திரைப்படங்களிலோ நிஜ உலகிலோ புதிதல்ல எனும் நிலையில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பொதுமக்களின் பாதுகாவலராகவே பார்க்கப்பட்டு உண்மையான வளர்ச்சி யாருக்கு என்பதையும் உண்மையில் பலனடையப்போவது யார் என்பதையும் மீண்டும் விவாதப் பொருளாக்கியுள்ளார்.

"என்னைப் பொருத்தவரை தாராவி ஒரு குடிசைப்பகுதி அல்ல. அது முக்கிய பகுதியில் அமைந்துள்ள காரணத்தால் சட்டப்பூர்வமான உரிமைகளும் மக்கள் நலத்திட்டங்களும் மறுக்கப்படும் நகர்ப்புற சமூகமாகும்,” என்றார் கிருதி.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL