2022-ல் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயர்த்த செயல்படும் மொபைல் தளம்!

0

பிரதமர் நரேந்திர மோடி 2022-ம் ஆண்டில் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என்றார். இந்த உறுதிமொழியால் உந்துதலளிக்கப்பட்ட எட்வின் வர்கீஸ் இடம் சார்ந்த வர்த்தகத்தை ஊக்குவித்து சேவையளிக்கும் மண்டி ட்ரேட்ஸ் (Mandi Trades) அமைத்தார். பல மொழிகளைக் கொண்ட மொபைல் சார்ந்த இந்தச் செயலி மற்றும் வலைதள போர்டல் தொகுப்பானது விவசாயிகள் மற்றும் மொத்தமாக கொள்முதல் செய்வோரை (சில்லறை வணிகத்தினர், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள், ஹோட்டல்கள், சமையல் பணியில் இருப்போர் உள்ளிட்டோர்) பி2பி மாதிரி வாயிலாக இலக்காகக் கொண்டுள்ளது.

பொருட்களை வாங்குவோர் விளைச்சல் சார்ந்தோ அல்லது குறிப்பிட்ட வகை சார்ந்தோ விவசாயிகளைத் தேடலாம். குறிப்பிட்ட புவிப்பரப்பு, இடம், விலை, பொருளின் இருப்பு, விளைச்சல் போன்ற தகவல்களை இந்தச் செயலி வாயிலாகப் பெறலாம். பொருட்களை வாங்குவோர் கொள்முதலை திட்டமிட்டுக் கொள்ள உதவும் வகையில் அறுவடை குறித்த தகவல்கள் முன்கூட்டியே வழங்கப்படும்.

ஒழுங்குப்படுத்தப்படாத விவசாய சமூகம் சிறப்பான விலையை அடைய முடியும். சராசரி தேவை, அதிகமான அல்லது குறைவான தேவை இருக்கும் பருவம், பருவ காலத்திலும் பருவ காலமில்லாத நேரத்திலும் எழும் தேவை போன்றவற்றை செயலியில் உள்ள தரவுகள் வாயிலாக விவசாயிகள் மதிப்பிடலாம். இது அவர்களது விவசாய நடவடிக்கைகளைச் சிறப்பாக திட்டமிட்டுக்கொள்ள உதவும்,” 

என விவரித்தார் மண்டி ட்ரேட்ஸ் இணை நிறுவனர் எட்வின் வர்கீஸ்.

மண்டி ட்ரேட்ஸ் வணிக மாதிரி

இந்தத் தளம் விவசாய சமூகத்தினர் தங்களது விளைச்சலை விற்பனை செய்யவும் வாங்குவோரைக் கண்டறியவும் உதவும். அதே போல இதன் மொபைல் செயலி வானிலை அறிவிப்புகள், பயிர் விலைகள், விவசாய செய்திகள் போன்ற தகவல்களைப் பயனருக்கு வழங்கும். பயனர் தனக்கு அருகிலிருக்கும் விவசாயிகளைக் கண்டறிந்து இணைந்து கொள்ளலாம். மண்டி ட்ரேட்ஸ் தளத்தை ’இந்தியாவில் உள்ள விவசாயிகளின் ஃபேஸ்புக்’காக மாற்றவேண்டும் என்பதே எட்வினின் நோக்கம்.

இந்த மொபைல் தளம் இடைத்தரகர்களையும் உள்ளூர் வர்த்தகர்களையும் நீக்கி நேரடியாக தொடர்பை ஏற்படுத்துகிறது என்று விவரித்தார் எட்வின். அவர் கூறுகையில்,

இந்தத் தளம் விவசாய மதிப்பு சங்கிலியினுள் இருக்கும் விவசாயிகள் மற்றும் நுகர்வோரை இணைக்கிறது. சந்தை குறித்த தரவுகளின் பரிமாற்றத்தை எளிதாக்குகிறது. விவசாயிகள் விவசாயம் தொடர்பான செயல்முறைகளை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கலாம். இதில் பூச்சிக்கொல்லிகள், விதைகள், உரங்கள், இயந்திரங்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் டீலர்களின் விவரங்கள் உள்ளிட்டவையும் அடங்கும். தேவையானோருக்கு முறையாக அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி ஏஜென்சிக்களிடமிருந்து கடன் பெறவும் ஆதரவு வழங்கப்படும்.

மேலும் பயனர் இடம் சார்ந்த நுண்ணறிவைப் பயன்படுத்தி அருகாமையில் இருப்பவர்கள் விவரங்களைப் பெறுவதுடன் வாங்குபவர் மற்றும் விற்பவர் குறித்த தகவல்களை வரைபடம் சார்ந்து பார்க்கமுடியும்.

துவக்கம்

எட்வின் முதல் தலைமுறை தொழில்முனைவர். அவரது அப்பா கேரளாவின் குன்னம்குளம் பகுதியில் வங்கி மேலாளராக பணியாற்றினார். அவரது அம்மா ஆசிரியராக இருந்தார்.

எட்வின் குழந்தைப்பருவம் முதலே நிலத்தில் சிறு சிறு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார். அவரது அப்பா நெற்பயிர் விளையும் நிலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு கூலி கொடுக்க சைக்கிளில் அனுப்பி வைப்பார். பெங்களூருவில் ஆர் வி பொறியியல் கல்லூரியில் கணிணி அறிவியல் முடித்துள்ளார்.

2011-ம் ஆண்டு வரை சன் மைக்ரோசிஸ்டம்ஸ், ஆரக்கிள், ஐபிஎம் போன்ற வெவ்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். அவரது 43-வது வயதில் விவசாயிகள் விநியோக சங்கிலியில் காணப்படும் தொழில்நுட்ப இடைவெளியை சரிசெய்யும் நோக்கத்துடன் மண்டி ட்ரேட்ஸ் துவங்க திட்டமிட்டார்.

கேழ்வரகு சாகுபடி மற்றும் பிற விவசாய உற்பத்திகளில் நானே நேரடியாக ஈடுபட்டேன். தொழில்நுட்பத் தகவல்கள் இல்லை. சந்தையை அணுவதற்கான வாய்ப்பு இல்லை. அமைப்பில் காணப்படும் மந்தநிலை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைப்பை எவ்வாறு சீரமைக்கலாம் என்பதற்கான வழிமுறைகள் குறித்து நான் சிந்திக்கத் துவங்கினேன்,” என எட்வின் நினைவுகூர்ந்தார்.

கிராமங்களில் கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப்கள் இல்லாமலேயே ஸ்மார்ட்ஃபோன் தொழில்நுட்பம் சிறு நகரங்களிலும் இந்தியாவின் குடிசைப்பகுதிகளிலும் ஊடுருவியுள்ளது. 

இன்று இந்த தளத்தில் 80,000-க்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 20 சதவீதம் என்கிற விகிதத்தில் நிறுவனம் வளர்ச்சியடைந்து வருகிறது. மண்டி ட்ரேட்ஸ், வளர்ச்சிக்காக மொபைல் சார்ந்த புதுமைகளை அங்கீகரித்து கௌரவிக்கும் mBillionth விருதினை விவசாயப் பிரிவில் 2017-ம் ஆண்டு வென்றுள்ளது.

டிஜிட்டல் மாற்றம்

மக்கள் பரவலாக வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்ந்து வந்த காலகட்டத்தில் மண்டி ட்ரேட்ஸ் போன்ற டிஜிட்டல் தளங்கள் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறது.

விவசாய சமூகத்தினர் தற்போது சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து எட்வின் நன்கறிவார். உதாரணத்திற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் சந்தையில் பல்வேறு இடைத்தரகர்கள் இருப்பதால் இவர்கள் அதிக லாபம் ஈட்டி வந்தத்தை அறிந்திருந்தார்.  

உற்பத்தியாளர்கள் புதிய கலாச்சார நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பின்பற்றி விளைச்சலை அதிகரிக்கச் செய்து விவசாய முறையில் மதிப்பு கூட்டல் பலன்களை இணைக்கவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டு மண்டி ட்ரேட்ஸ் மாறியது.

மொபிலிட்டி, க்ளௌட், அனாலிடிக்ஸ், பிக்டேட்டா போன்ற சமீபத்திய தொழில்நுட்ப போக்குகளைப் பயன்படுத்தி இந்த மொபைலி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப இடைமுகம் விளைச்சலின் தரத்தை மதிப்பிடவும் அதே சமயம் தங்களது பயிர் உற்பத்தியை ஊக்குவிக்க உதவும் தரவுகளைப் பெறவும் உதவுகிறது.

கிராமப்புற விவசாயிகளுக்கு வங்கிக் கடன் வழங்கப்பட ஆக்ஸிஸ் வங்கி போன்ற வங்கிகளை அணுக இந்த ஸ்டார்ட் அப் உதவுகிறது. மேலும் உற்பத்தியை தரப்படுத்துவதற்கான வாய்ப்பில்லாத தற்போதைய சிக்கலை தீர்க்கும் வகையில் விவசாயிகளை ஒன்றிணைத்து ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை அமைப்பை அணுக வாய்ப்பளிக்கிறது.

பெங்களூருவைச் சேர்ந்த மண்டி ட்ரேட்ஸ் இந்திய அரசாங்கம் ஆன்லைனில் வழங்கும் சந்தை விலை நிலவரங்களிலிருந்து தரவுகளை சேகரிக்கிறது. இந்தத் தரவுகள் மொபைல் செயலியில் குறிப்புப் புள்ளியாக பயன்படுத்தப்படும். விவசாயிகள் புதிய சந்தைகளைக் கண்டறிய உதவுகிறது. வர்த்தகர் மற்றும் சந்தை செயல்படுத்துபவர் இடையே இருக்கும் இணைப்பை தகர்த்து விவசாய உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோருக்கு மாற்று சந்தையை வழங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.

விவசாயிகளின் நம்பிக்கைப் பெறுவதும் இவர்களது தொழில்நுட்பம் விவசாயிகளின் லாபத்தை அதிகரிக்கும் என்பதும் விவரிப்பதும் இந்தக் குழுவினர் சந்தித்த முக்கிய சவாலாக இருந்தது.

”அரசு கொள்கைகள் மாற்றப்படவேண்டும். பெரும்பாலான மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் விவசாய உற்பத்தி சந்தைக் குழு (APMC) சட்டத்தால் எந்த நன்மையும் இல்லை. விவசாயிகள் தங்களது உற்பத்தியை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்கிற சுதந்திரம் இருக்கவேண்டும். விவசாயிகளுக்கு உரிமை வழங்கப்படவேண்டும். அதாவது உற்பத்தி செய்வதற்கான உரிமையும் யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என்கிற உரிமையும் வழங்கப்படவேண்டும்,” என்று விவரித்தார் எட்வின்.

மொபைல் தொழில்நுட்பம் இந்த திசையை நோக்கிய ஒரு முயற்சி என அவர் நம்புகிறார். அதாவது விவசாய சமூகத்தினர் நிதி சேவைகளையும் அணுக முடிவதால் நிதி நிறுவனங்களின் நிர்வாக செலவு குறைவதுடன் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப செலுத்தவும் சேமிக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. 

எட்வினின் குழு ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூப் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அவர்களது தளம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். கிராமங்களில் அரசு சாரா நிறுவனங்களின் உதவியுடன் அடிக்கடி ஆஃப்லைன் நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்கின்றனர். அத்துடன் பள்ளி மாணவர்களையும் கிராமப்புற சமூகத்துடன் இணைக்கின்றனர்.

வருங்கால திட்டங்கள்

தற்சமயம் மண்டி ட்ரேட்ஸ் அதன் மின் வணிக மொபைல் தளம் மற்றும் விளம்பரங்கள் வாயிலாக வருவாய் ஈட்டி வருகிறது.

தற்போது Farmily, RML Ag Tech, கிசான் நெட்வொர்க் உள்ளிட்ட மற்ற ஸ்டார்ட் அப்கள் இதே போன்ற விவசாயப் பிரிவில் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இத்தகைய போட்டி ஆரோக்கியமானது என்றே எட்வின் கருதுகிறார். 

“இந்த சந்தை அளவு மிகப்பெரிய அளவில் இருப்பதால் புதிதாக போட்டியாளர்கள் செயல்படுகையில் ப்ராடக்ட் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும்,” என்றார்.

இந்தத் தளத்தின் விவசாயிகள் தொகுப்பை ஐந்து மில்லியனாக அதிகரிக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார் எட்வின். உள்ளூர் அரசாங்கத்துடனும் உலக வங்கியுடனும் இணைந்துள்ளது. இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் தொழில்நுட்பம் சார்ந்த தளங்களைப் பயன்படுத்துவதற்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா