’உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும் தடைகளை தகர்த்து நீங்களே உங்களின் போட்டியாளராக மாறுங்கள்’ – சுதா மூர்த்தி

0

’சாதாரண மக்கள், அசாதாரண வாழ்க்கை’ என்று சுதா மூர்த்தி தனது சமீபத்திய கதைத் தொகுப்பான Three Thousand Stitches குறித்து விவரிக்கிறார்.

நீலம் மற்றும் சாம்பல் நிறம் கலந்த ஆடையில் அலுவலகத்தில் அமர்ந்திருந்த அவர் நம்மிடம் தனது புத்தகம் குறித்து குறிப்பாக Three Thousand Stitches கதையைப் பற்றி உரையாடினார். இவரது உதவியுடன் தேவதாசிகள் அடங்கிய குழு ஒரு வங்கியை துவங்கினர். அதன் மூன்றாமாண்டில் 3000 உறுப்பினர்கள் இணைந்து தங்களது நன்றியை தெரிவிக்கும் விதத்தில் அவர்கள் உருவாக்கிய படுக்கையை பரிசளித்தனர்.

மக்கள் குறித்த புத்தமாக இருந்தாலும் சுதா மூர்த்தியின் வாழ்க்கை மற்றும் ஆளுமையும் சுட்டிக்காட்டப்படுகிறது. கடந்த கால சம்பவங்களையும் அவரது வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களையும் உரையாடலின்போது பகிர்ந்துகொண்டார். 

1968-ம் ஆண்டு பொறியியல் படிக்கும்போது அவரது வகுப்பில் சுதா மட்டும்தான் தியேட்டர்களில் திரைப்படம் பார்க்க விரும்பும் நபராக இருந்தார். உற்சாகமான வாசகர். வாரனாசியில் இருந்த சமயம் அதிக நேரம் செலவிட்ட ஷாப்பிங் பழக்கத்தை கைவிட்டார். உணவு, தண்ணீர், பயணம், மருந்துகள், புத்தகம், இசை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்குவதாக சத்தியம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார் சுதா.

வாழ்க்கையிலிருந்து கதை, கதையில் வாழ்க்கை

ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் பல்வேறு சிறுகதைகளை எழுதியுள்ள சுதா ஒரு எளிமையான விதியை பின்பற்றுகிறார். 

”நான் ஒரு புத்தகத்தை எழுதும்போது புத்தகம் எப்படி இருக்கவேண்டும் என்றோ, எத்தனைப் பக்கங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்றோ எத்தனை ஆயிரம் வார்த்தைகளைக் கொண்டு எழுதவேண்டும் என்றோ எங்கு முடிக்கவேண்டும் என்றோ சிந்திக்கமாட்டேன். இவற்றைக் குறித்து கவலைப்படமாட்டேன். என்னைப் பொருத்தவரை எழுதுவது என்பது ஒரு வெளிப்பாடு. அதன்மூலமாக எனது மகிழ்ச்சி, துக்கம், நகைச்சுவை அனைத்தையும் நான் வெளிப்படுத்துவேன்.”

அவர் எழுதுவது அடுப்பின் மேல் பாத்திரத்தில் இருக்கும் பால் போன்றது என்றும் இது அதிகமாக பொங்கும்போது கீழே சிந்திவிடும் என்றும் விவரிக்கிறார். ”அது தினமும் நடக்காது என்பது உங்களுக்கு தெரியும். சில சமயம் நான் ஒரு வருடம் வரை எழுதுவதில்லை. ஆனால் என் மனதில் கதை தயாராக இருக்கும்போது அது சிந்தத் தொடங்கிவிடும். அப்போது நான் எழுதத் துவங்குவேன்.” பொதுவாக சுதா காலையில் எழுத்தத் துவங்கி அதில் முழுமையான கவனம் செலுத்துவார்.

அவர் கதை எழுதுகையில் குறிப்பாக The Three Thousand Stitches போன்ற கதைகளை எழுதுகையில் கண்கலங்குவார். 

“நான் அதை எழுதும்போது உண்மையிலேயே அழுதுவிட்டேன். ஏனென்றால் அவர்களது இயலாமையையும் அவர்கள் சந்தித்த துன்புறுத்தல்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஆமாம், நான் எனக்காகவே எழுதிக்கொள்வேன். இதற்கிடையில் எனது எழுத்துக்களை வெளியிடுவேன்.”

எனினும் கதை எழுதி முடித்ததும் அவரால் அதில் எதையும் சேர்க்கமுடியாது என்று தெரிவித்தார் சுதா. அவர் எழுதி முடித்ததும் அந்த பிரதியை தள்ளி வைத்துவிடுவார். சில வாரங்கள் கழித்தோ அல்லது ஒரு மாத இடைவெளிக்குப் பிறகோ அவரது உணர்ச்சிகள் சற்று சீரானதும் அதை மறுபடி பார்வையிடும்போது அதிக நடைமுறைக்குரிய விதத்தில் அவரால் பார்க்கமுடிகிறது. கையெழுத்துப் பிரதியை முதல் சுற்று சரிபார்த்து அதன்பின் வெளியீட்டாளர்களுக்கு அனுப்புவதற்கு முன் இறுதியாக ஒரு முறை சரிபார்ப்பார்.

முதிர்ச்சியற்ற தத்துவங்களுக்கு அப்பால்…

ஒரு கொடையாளியாக இருக்கிறார். இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷனின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். அவரது வாழ்க்கை எத்தகைய மாற்றங்களைக் கடந்து வந்துள்ளது என்பது குறித்து கேட்கையில்,

இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷனில் பணிபுரியத் துவங்கியது முதல் 20 ஆண்டுகளில் நான் என்னை மாற்றிக்கொண்டுள்ளேன். ஏனெனில் நிஜ வாழ்வு எப்படி இருக்கும் என்பதை அது எனக்குக் கற்றுக்கொடுத்தது. அது ஒரு கப் டீ அல்லது குளிர்பானத்துடன் இந்தியாவிற்கு என்ன தேவை, இந்தியா என்ன செய்யவேண்டும் என்றெல்லாம் விவாதிப்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.

வெறும் முதிர்ச்சியற்ற தத்துவங்களுக்கு அப்பால் நிறைய செயல்படுத்தவேண்டிய விஷயங்கள் இருக்கிறது என்கிறார் சுதா. ”நம் நாடு மேம்படவேண்டுமெனில் நிறைய மாற்றம் ஏற்படவேண்டும். மக்களைப் பார்த்து அவர்களுடன் உரையாடியது என்னுடைய கடமையை நான் உணர உதவியது. மக்களின் வாழ்க்கை முறையை அருகிலிருந்து பார்த்தேன். அவர்களது ஏழ்மை நிலை, இயலாமை, சந்தித்த சவால்கள் அனைத்தையும் கவனித்தேன். இது என்னை அதிக முதிர்ச்சியடையச் செய்தது. மக்கள் என்னை ஏமாற்றினாலும் நான் வருந்துவதில்லை. முன்பெல்லாம் நான் வருத்தப்படுவேன் ஆனால் இப்போது அவ்வாறு வருந்துவதில்லை. என்னுடைய கண்ணோட்டம் மாறிவிட்டது. உணர்ச்சி வசப்படாமல், நடைமுறைக்கேற்றவாறு, பாரபட்சமின்றி, இரக்கத்துடன் எனது கண்ணோட்டம் மாறியது.

போராட்டம் நிறைந்த கதைகள் அவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று புரிந்துகொள்ளக்கூடாது. மும்பை சிவப்பு விளக்கு பகுதியான காமதிபுராவிற்கு சென்ற அந்தத் தருணங்கள் எவ்வளவு கடினமாக இருந்தது என்றும் எவ்வளவு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் விவரித்தார். சில ஆண்டுகள் கழித்து அவற்றை எப்படி சமாளிப்பது என்பதை அறிந்தார். ”தற்போதைய நிலையை மாற்ற ஏதேனும் செய்துள்ளேனா அல்லது தீர்வு காண ஏதேனும் செய்துள்ளேனா என்கிற கேள்வியை என்னுள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பேன். தீர்வைக் கண்டறிவதற்கான ஒரு நடைமுறைக்கு உகந்த அணுகுமுறை நிலைமையை மேம்படுத்த உதவியது.

இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துதல்

இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷனில் பணிபுரிந்தது குறித்து சுதா பேசினார். 

“5 கோடியிலிருந்து 10 கோடி வரை துவங்கினோம். தற்போது 320 கோடி ரூபாய் செலவிடுகிறோம். பல்வேறு நகரங்களுக்கும் பகுதிகளுக்கும் விரிவடைந்தோம். இதனால் அதிக அனுபவமும் முதிர்ச்சியும் கிடைத்தது.”

ஃபவுண்டேஷன் பணிகளுக்காக வார இறுதி நாட்களில் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு பணிகளில் மும்முரமாக இருந்தார்.

ஃபவுண்டேஷனின் வளங்களை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள செயல்முறை உதவியது. ஒவ்வொரு இமெயிலிலும் கடைசி சில வரிகள் அனுப்புனரின் தேவைகளை வெளிப்படுத்தும். கவனம் செலுத்தப்படவேண்டிய விஷயங்களைத் தேர்ந்தெடுத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்தியா மாறி வருகிறது

இந்தியாவில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக நேர்மறை கருத்தை தெரிவித்தார் சுதா. “ஐம்பதாண்டுகளுக்கு முன்பு இருந்த கிராமப்புற இந்தியா வேறு மாதிரி இருந்தது. இன்று அது மாறியுள்ளது. பெண்களிடையே நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இன்று அவர்களது உரிமை என்ன என்பதை அவர்கள் அறிவார்கள். உறுதியாக உள்ளனர். பொருளாதார சுதந்திரத்துடன் வாழ விரும்புகின்றனர். குடும்பத்தின் சார்பாக திட்டமிட விரும்புகின்றனர். தங்களது குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வி வழங்கும் பள்ளிகளுக்கு அனுப்ப விரும்புகின்றனர்.”

மாற்றம் என்பது மெதுவாகவே நடைபெறும். அது அதிக நேரம் எடுக்கும் செயல்முறையாகும். குறிப்பாக பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட பெண்களிடம் மெதுவாகவே மாற்றம் ஏற்படும். 

“அனைத்து பிடிகளிலிருந்தும் திடமாக வெளிப்பட தைரியமும் நம்பிக்கையும் தேவைப்படும். கிராமப்புறங்களைப் போன்றே நகரங்களிலும் பல மாற்றங்கள் காணப்படுகிறது.”

மாற்றம் சம்பந்தப்பட்ட ஒரு அனுதாபமான கதையை இங்கு பகிர்ந்துகொண்டார் சுதா. தனது அடுத்த புத்தகத்தில் இதை இணைத்துக்கொள்வதற்காக மனதில் குறித்துவைத்தவாறே யுகந்தர்மாவின் கதையைக் கூறினார். இருபதாண்டுகளுக்கு முன்னர் தெலுங்கானாவின் ஒரு கிராமத்தில் யுகந்தர்மாவை சந்தித்தார் சுதா.

சுதா அவருக்கு கடனுதவி வழங்கினார். அதைக் கொண்டு அவர் எருமைமாடு வாங்கி பால் விற்பனை செய்தார். அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு மேலும் சில எருமை மாடுகளை வாங்கினார். பொருளாதார சுதந்திரத்தின் மூலம் கிடைத்த பலம் குடித்துவிட்டு கொடுமைப்படுத்திய அவரது கணவனை சமாளிக்க உதவியது. எருமைமாடுகளை சுத்தப்படுத்தும் பணியை தனது கணவரிடம் ஒப்படைத்து அதற்கு கூலி கொடுக்கத் தொடங்கினார். சிறிது காலத்தில் கடனை திருப்ப செலுத்தி உள்ளூர் பெண்கள் குழுவிற்கு தலைமை வகித்தார். சுதா நினைவுகூறுகையில், “நான் இப்போது முதலமைச்சரை சென்று சந்தித்து அவருடன் பேசுவேன் என்று அந்தப் பெண் என்னிடம் கூறினார்.”

பிணைக்கப்பட்ட சங்கிலி தடையாக இருக்க அனுமதிக்காதீர்கள்

தனது சாதனைகள் குறித்து அதிகம் பேசாத சுதா அதிக வற்புறுத்தலுக்குப் பிறகு ஒரு சுவாரஸ்யமான கதை வாயிலாக பெண்களுக்கான தனது கருத்தை பதிவுசெய்தார்.

”10-15 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு யானைக் குட்டியைப் பார்த்தேன். அதற்கு 10 மாதம் இருக்கும். அதன் பெயர் கணேசா. நான் அதை மெல்ல தட்டிக்கொடுக்கும்போது அது என்னை தும்பிக்கையால் தள்ளியது. 20 அடி தொலைவில் விழுந்தேன். கணேசாவின் அம்மாவான சந்திரிகாவைப் பார்த்தேன். அது மரத்தில் கட்டப்பட்டிருந்தது. யானைக்கு அதன் சக்தி தெரியவில்லை என்பதை உணர்ந்தேன். மரத்தில் கட்டப்பட்டு நிம்மதியாக புற்களை சாப்பிட்டுக்கொண்டிருந்தது. கால்களால் தள்ளி மரத்தையே சாய்த்துவிடக்கூடய திறமை இருப்பதை அது உணரவில்லை. கட்டப்பட்டிருப்பதால் அமைதியாகவே இருந்தது. பல நேரங்களில் நாம் கட்டப்பட்டிருப்பதாகவே உணர்கிறோம். ஆனால் பெண்கள் தங்களிடம் அதிக வலிமையும் திறமையும் இருப்பதை உணர்வதில்லை. நாம் கட்டப்பட்டிருப்பது குறித்து மட்டுமே சிந்திக்கிறோம். பிணைக்கப்பட்ட சங்கிலியிருந்து விடுபட மனதின் வலிமையை பயன்படுத்துவதில்லை.”

பெண்கள் ஆண்களுடன் போட்டியிடவேண்டிய அவசியமில்லை. தங்களுடனே போட்டியிட்டுக்கொள்ளலாம் என்கிறார் சுதா. அவர்கள் கடந்த வருடம் எப்படி இருந்தார்கள் என்பதைக் காட்டிலும் நீங்கள் முன்பைவிட எவ்வளவு சிறப்பாக இருக்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள் என்கிறார்.

பெண்ணாக இருப்பதில் நன்மை இருக்கிறது. வகுப்பில் நான் மட்டும்தான் பெண். அதனால் என் தேவைகளை நானே பூர்த்தி செய்துகொள்வேன். நான் வகுப்பில் முறையாக குறிப்புகளை எடுத்துக்கொள்வதை உறுதிசெய்வேன். சரியான நேரத்தில் வகுப்பில் இருப்பேன். என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் அனைத்திலும் முழு கவனம் செலுத்துவேன். எனக்கு நண்பர்கள் இல்லை. யாருடனும் நேரம் செலவிட மாட்டேன். என்னுடைய சிறந்த நண்பன் நானேதான். மற்றவர்களை சார்ந்திராமல் தேவைகளை தாமாகவே கவனித்துக்கொள்பவர்களால் தங்களது பாதைகளில் எதிர்கொள்ள நேரிடும் எந்தவித சவால்களையும் துணிந்து எதிர்கொள்ள முடியும்.

ஆங்கில கட்டுரையாளர் : தன்வி துபே