ரியோ ஒலிம்பிக்ஸ்'16 போட்டிகளை உலகமே கண்டு மகிழ்ந்து வரும் வேளையில், இந்தியாவைச் சேர்ந்த திபா கர்மாகர் இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு சாதனை படைத்துள்ளார். திபா, ஜிம்னாஸ்டிக்சில், 'வால்ட்' பிரிவில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள முதல் இந்திய பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
திருப்புரா மாநிலத்தைச் சேர்ந்த திபா கர்மாகர், ஒலிம்பிக் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் கலந்துகொள்ள தகுதிப் பெற்ற முதல் இந்தியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது கடின உழைப்பு, விடாமுயற்சியின் பலனாக இந்த இடத்தை அவர் அடைந்திருந்தாலும், மிக ஆபத்து வாய்ந்த 'ப்ரோடுனோவா' வால்ட் சாகசத்தை வெற்றிகரமாக முடித்ததே இவரது இந்த முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணம்.
தற்போது 22 வயதாகும் திபா, 6 வயது முதலே ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளை தொடங்கிவிட்டார். நடுத்தர குடும்பம், போதிய விளையாட்டு வசதிகள் அல்லாத மாநிலம் போன்ற பிரச்சனைகளோடு, தட்டையான பாதங்கள் கொண்ட திபா, விளையாட்டில் கலந்துகொள்ள தகுதியில்லாதவராக பார்க்கப்பட்டார். இருப்பினும் தன்னுடைய விடாமுயற்சி, மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில், மற்றவர்களைவிட இருமடங்கு கடின உழைப்பையும், பயிற்சியையும் மேற்கொண்டு மெல்ல மெல்ல சிறக்கத்தொடங்கினார். பெற்றோர் மற்றும் அவரது கோச்சின் முழு ஊக்கத்துடன் பயிற்சியை தொடர்ந்த திபா, 2007 இல் தேசிய ஜூனியர் போட்டியில் வென்று அனைவரின் கவனத்தையும் பெற்றார். அப்போது அவருக்கு வயது 14. 2011 வரையில் , வால்ட், பீம் பாலன்ஸ், ஃப்ளோர் மற்றும் பார் போன்ற பிரிவுகளில், திபா 5 தங்க பதக்கங்களை வென்றார்.
ஜிம்னாஸ்டிக்கில் பல பிரிவுகள் இருந்தாலும், 'ப்ரோடுனோவா' வால்ட் என்று அழைக்கப்படும் அபாயகரமான சாகசத்தை லாவகமாக முடித்துள்ளார் திபா. இதில், வேகமாக ஓடிவந்து பாரை தாண்டி இரண்டு, மூன்று முறை பல்டி அடித்து கீழே விழாமல் நிற்கவேண்டும். சற்று நேரம் தப்பினாலும் தலை அல்லது கழுத்துப்பகுதி கீழே மோதி அடிபடும் வாய்ப்புள்ள இதை உலகின் பல ஜிம்னாஸ்டிகுகள் கூட முயற்சி செய்வதில்லை. இதுவரை உலகில் 5 பெண்கள் மட்டுமே வெற்றிகரமாக இதை முடித்துள்ளனர். இதில் திபா கர்மாகரும் ஒருவர் என்பது கூடுதல் சிறப்பு. ரஷ்ய பெண் யெலெனா ப்ரோடுனோவா என்பவர் முதன்முதலில் இந்த சாகசத்தை பிழையில்லாமல் முழு மதிப்பெண்களையும் பெற்று வெற்றி பெற்றார். அதன் பின்னர் அவரது பெயரயே இந்த பிரிவுக்கு வைத்துவிட்டனர். ரஷ்யா, சீனா போன்ற நாடுகளைப் போல, இந்தியாவில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டிற்கு கட்டமைப்பு வசதிகள் இல்லாதபோதும் திபா இத்தனை தூரம் வந்துள்ளதை மனமார பாராட்டவேண்டும்.
நேற்று ரியோ ஒலிம்பிக்கில் நடைப்பெற்ற வால்ட் பிரிவில், பின்னடைவில் இருந்த திபா, 'ப்ரோடுனோவா' வால்ட் சாகசத்தை வெற்றிகரமாக முடித்ததால் 14.850 புள்ளிகள் பெற்று பட்டியலில் முன்னேறி இறுதிச்சுற்றுக்கு தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stories by Induja Ragunathan