19 நாடுகளை கடந்து மும்பை டு லண்டன் காரில் பயணித்த 73 வயது பத்ரி!

0

பத்ரி பல்தவா அண்மையில் லண்டனை 19 நாடுகளை கடந்து காரில் பயணித்து அடைந்துள்ளார். 72 நாட்களில் தனது BMW X5-ல் சாலைப்பயணமாக சென்று தன் கனவை நினைவாக்கிக் கொண்டுள்ளார். சாலைகளில் உள்ள ஆபத்துகளை மீறி அவர் இந்த சாதனையை செய்துள்ளார் அதுவும் தனது 73-வது வயதில்.

பத்ரி தனது மனைவி மற்றும் 10 வயது பேத்தியுடன் இந்த சாலைப் பயணத்தில் சென்றுள்ளார். அதில் இருக்கும் த்ரில்லிற்காக, உற்சாகத்துடன் பயணம் செய்துள்ளார். இந்த பயணத்திற்காக அவரின் பாஸ்போர்டில் 65 நாடுகளின் விசா முத்திரை குத்தப்பட்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறார்.

இந்த ஆசை பத்ரிக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஒருமுறை தன் மனைவியுடன் லண்டனில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்தப்போது கீழே இருந்த அழகிய நிலப்பரப்பைக் கண்டு பிரமித்துப் போனார். அதை அருகில் பார்க்க ஆசைப்பட்டு சாலைப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார்.

ஸ்டீல் ஏற்றுமதியாளரான பத்ரி ஒரு சார்டர்ட் அக்கவுண்டண்ட். அவர் இந்த சாலைப் பயணத்தை பற்றி முதலில் கூறியபோது குடும்பத்தில் யாரும் அதை நம்பவில்லை. ஆனால் பல ஆண்டுகள் திட்டமிட்டு, மும்பையில் இருந்து கடந்த மார்ச் மாதம் லண்டன் பயணிக்க ஆயத்தமானார். 

தன் மனைவி, பேத்தியுடன் கிளம்பி முதலில் இம்பால் சென்று அங்கிருந்த ஒருசிலருடன் இணைந்து லண்டன் புறப்பட்டனர். அவர்கள் 400 கிமி தூரம் தினமும் காரில் பயணித்தார்கள். ஒருமுறை 930 கிமி தூரத்தை ஒரே நாளில் கடந்தும் உள்ளனர். 

இந்திய வட-கிழக்கு எல்லையை தாண்டும் போது பத்ரி தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்தார். அதில்,

“நாங்கள் இந்திய எல்லையை கடக்கின்றோம். இது நிஜத்தில் நடக்கிறது. இந்திய எல்லையை நாங்கள் காரில் கடக்கிறோம் என்றால் நம்பமுடியவில்லை. ஐரோப்பாவை நோக்கிய எங்கள் பயணத்தின் முதல் நாள் இது.”

இது போன்ற சாலைப்பயணம் அவருக்கு பழக்கம் இல்லை என்றாலும் இதை ஒரு சவாலாக எடுத்துச் செய்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் இருந்து பத்ரினாத் வரை மட்டுமே அவர் காரில் பயணித்துள்ளார்.

தற்போது அவர் ஐஸ்லாந்து வழியாக காரில் பயணித்து 90 டிகிரி வடக்கில் காரில் பயணித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தனது அனுபவத்தை பற்றி தி ஹிந்து பேட்டியில் பேசியபோது,

“சீனா, ரஷ்யா மக்களிடம் அதிக வரவேற்பு இருக்காது என்ற எண்ணத்தில் இருந்தோம், ஆனால் நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் எங்களை நன்கு கவனித்தனர்,” என்றார். 

பொதுவாக இவர்களின் பயணம் நன்றாகவே இருந்துள்ளது. ஹோட்டல் ரூம் இல்லாமை, பாதுகாப்பு பிரச்சனைகள் என்று ஒருசில சவால்கள் மட்டுமே இருந்ததாக கூறுகிறார். அவர் சென்ற எல்லா நாடுகளிலும் சுத்தமும், பொது இட பொறுப்பும் அதிகமாக இருந்தது அவரை வெகுவாக கவர்ந்ததாக சொல்கிறார்.

இவ்வளவு தூரம் பயணம் செய்துள்ள பத்ரியின் அடுத்த இலக்கை கேட்டால் பிரமிப்பாக இருக்கும். இவருக்கு தன் மனைவியுடன் ’ஸ்பேஸ்வாக்’ செல்ல ஆசையாம். சொல்லமுடியாது இவர் அதை செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.