கல்லூரி படிப்புக்கு மூட்டைக்கட்டிய இவர், கோடிகளில் வருவாய் ஈட்டும் கட்டுமான நிறுவனம் கட்டமைத்தது எப்படி? 

0

இந்தியாவில் கான்கிரீட் காடுகள் அதிவேகமாக பரவி வருகின்றன. மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்கள் பெரிய அளவிலான திட்டங்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்க, 

பெங்களூரைச் சேர்ந்த ஷரத் சோமன்னா 25கோடி ரூபாய்க்கு குறைவான நடுத்தர கட்டுமான ஒப்பந்தங்களுக்காகவே ஒரு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். அதுவும் 20களின் ஆரம்பத்தில், காலேஜ் படிப்பை கைவிட்டு விட்டு... ஆனால், அவருடைய தொழில் அவரை கைவிடவில்லை.

2014ம் ஆண்டு வெறும் 46 ஆயிரம் முதலீட்டில் தொடங்கப்பட்ட ’ப்ளூ ஓக் கன்ஸ்ட்ரக்‌ஷன்’ இன்றைய ஆண்டு வருவாய் ரூ.23 கோடி. 

ப்ளூ ஓக் நிறுவனம் புதிய கட்டுமான திட்டங்கள், புதுப்பிப்புகள், மற்றும் கட்டுமான மேலாண்மை ஆகியவற்றில் பிரஸ்டீஜ் குரூப், மில்லேனியா குரூப், ஸூரி சிமெண்ட், நார்வெஸ்ட் வென்ச்சர் பார்ட்னர்ஸ் மற்றும் பல பெரும்நிறுவனங்களுடன் கைகோர்த்து பணிபுரிந்துள்ளது.

“இந்தத் துறையில் நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் என்னவென்றால் ஒருபோதும் கைவிடல் கூடாது என்பதே. 

எனக்கு தலைமைத்துவதிறன் அதிகம் உள்ளதை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்.  தேசிய தடகள வீரனாக இருந்ததே, இந்த தலைமைத்துவ திறனுக்கு அஸ்திவராமாக அமைந்துள்ளது என்று நினைக்கிறேன்,” எனும் சோமன்னா, தரம் வாய்ந்த சேவையை வழங்கக்கூடிய இடைத்தரக கட்டுமான ஒப்பந்தக்காரர்கள் குறைவு என்பதை கவனித்துள்ளார்.

நடுத்தரக் கட்டுமான ஒப்பந்தங்கள் ரூ1கோடி முதல் ரூ5கோடி வரையிருக்கும். இங்கு 50கோடி ரூபாய்க்கு மேலான கட்டுமான ஒப்பந்தகாரர்கள் அதிகம். ஆனால், 25 கோடி ரூபாய்க்கு குறைவான கட்டுமானத்திட்டங்களுக்கு முறையான புரபோஷனல் ஒப்பந்தக்காரர்கள் இல்லை. இந்த வெற்றிடத்தை நிரப்ப எண்ணியுள்ளார் சோமன்னா. அதன்படி, 

2014ம் ஆண்டு கல்லூரி மாணவராக இருந்தபோதே ’Blue Oak Construction’ என்ற கம்பெனியை தொடங்கியுள்ளார். கல்லூரிக்கும் சென்று கொண்டே சில வாடிக்கையாளர்களை அணுகியுள்ளார். தொடந்து 10 முயற்சிகளுக்கு பின், கிடைத்தது முதல் வாய்ப்பு. முதல் புரோஜெக்ட் செய்யத் தொடங்கும்முன்னே, கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டுள்ளார்.

“எங்க அப்பா ஆர்மி மேன். எந்தவித பிசினஸ் பின்புலமும் இல்லாத வீட்டில் பிறந்த முதல் தொழில்முனைவோர். அப்படியிருக்கையில், என் பயணத்தில் ஏகப்பட்ட தவறுகள் செய்துள்ளேன். ஒவ்வொரு தவறும் எனக்கு சரியானப் பாடம் புகட்டின,” என்கிறார்.

2014ம் ஆண்டு இரண்டே தொழிலாளர்களுடன் தொடங்கப்பட்ட ப்ளூ ஓக் கன்ஸ்ட்ரக்ஷனில், இன்று 18 ஊழியர்களும், 180கட்டுமான தொழிலாளர்களை கொண்டிருப்பதுடன், முதல் ஆண்டிலே ஒரு கோடி வருமானம் ஈட்டியது. இப்போது, ஆண்டுக்கு ரூ15கோடி வருமானம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. அடுத்தாண்டு, ரூ23 கோடி மதிப்புள்ள திட்டங்களை கொண்டுள்ளது இந்நிறுவனம். 

கார்ப்பரேட் நிறுவனங்கள், பிற வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் என ப்ளூ ஓக் கன்ஸ்ட்ரக்‌ஷன் வாடிக்கையாளர்கள் பட்டியலில் அனைத்து தரப்பினரும் அடங்கியுள்ளன. 

“நாங்க எல்லோரும் அப்போ 20 வயதை கடந்திருந்தோம். ஏற்கனவே, நிறைய ஏற்ற இறக்கங்களை பார்த்துள்ளோம். எங்களிடம் இழக்கவும் இல்லை. எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல், சோதனைகளை சந்தித்தாலும் நடக்கிறது நடக்கட்டும் என்று இருந்தோம். நான் கம்பெனியை தொடங்கியபோது என்னுடன் இருந்த மக்கள் இன்று நிறுவனத்தின் அடித்தளமாய் இருந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார் சோமன்னா.

ப்ளூ ஓக் அதன் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கான வீட்டு வசதிகளையும் வழங்குகிறது. அலுவலக ஊழியர்களின் குழந்தைகளின் நலனிலும் அக்கறை செலுத்தி வரும், ப்ளூ ஓக் குழந்தைகளின் பள்ளி கல்விச் செலவுகளையும் ஏற்றுகொள்கிறது. 

தடைகளை தகர்ந்து எழுந்த புளூ ஓக்...

நிறுவனம் தொடங்கிய முதல் ஆண்டில் அடி மேல் அடி. வாடிக்கையாளர்கள் சரியான நேரத்தில் பணம் கொடுக்காததால், ஊழியர்களுக்கும் குறித்த நேரத்தில் சம்பளம் வழங்க முடியாத சூழலில் சிக்கியுள்ளது. அதனால், இரண்டு, மூன்று மாதங்களுக்கு மேலாக சம்பளத் தொகை கொடுக்காமலே இருந்துள்ளது ப்ளூ ஓக். 

இத்தொழிலில் அனுபவமற்று அறிமுகமாகியதில், தொடங்கிய முதல் இரண்டு ஒப்பந்தங்களில் தொழிலாளர்கள் மற்றும் திட்ட மேலாளர்களை கையாள்வதில் சிரமத்தை அடைந்துள்ளனர்.

“இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்து, உரிய நேரத்தில் பணம் செலுத்துதல், பணப்புழக்கம் பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குவதற்கு தேவையான நிதி நம்மிடம் எப்போது இருக்கும் என்று எண்ணியுள்ளேன். இன்று நாங்கள் அத்தகைய நிலையில் இருக்கிறோம். கார்ப்பரேட் நிறுவன வாடிக்கையாளர்களுடன் பணிபுரியும் போது, சரியான நேரத்தில் தரத்தை வழங்குவது மிகப்பெரிய சவாலான விஷயம் என்பதை நாங்கள் உணர்ந்தோம்,” என்றார். 

இந்தத் தொழிலில் பொதுவாக அனுபவம் நிறைந்த நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. இந்நிலையில், துறைக்கு இளம் தொழில்முனைவோராகிய சோம்மன்னாவுக்கு தொடக்கத்தில் அனுகூலமற்றதாகவே அமைந்தது. ஆனாலும், சில வாடிக்கையாளர்கள் இளைஞர் மீது கொண்ட நம்பிக்கையால், வாய்ப்புகளை வழங்கியுள்ளனர். சில நேரங்களில், வாடிக்கையாளர்கள் எங்களை முழுவதுமாய் நம்பவிடமாட்டார்கள் என்று கூறும் சோமன்னா தொடர்ந்து கூறுகையில்,

“எவ்வாறாயினும், நாங்கள் காலப்போக்கில் எங்களை நிரூபித்துவிட்டோம், இன்று எங்களது நிறைவான புரோஜெக்ட்களை எங்கள் தரத்திற்கான ஆதாரமாக காட்ட முடியும்,” என்கிறார்.

வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய இதுவரை ப்ளூ ஓக் நிதி திரட்டியதில்லை. ரூ46 ஆயிரம் முதலீட்டைக் கொண்டு துவங்கப்பட்ட நிறுவனம், பின் ஒப்பந்தங்களில் கிடைத்த பணத்தை கொண்டு நிறுவனத்தை நிர்வகித்துள்ளார். இந்நிலையில், 2020ம் ஆண்டில் வியாபாரத்தை ஆன்லைனில் வழங்குவதற்கு நிதி திரட்ட திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவித்தார் சோமன்னா.

“ஒரு கட்டுமான ஒப்பந்தத்தை நிறைவேற்ற வாடிக்கையாளர் வெவ்வேறான பார்டிகளையும் ஏஜென்சிகளை அணுக வேண்டிய நிலையில் உள்ளனர். அச்சிரமத்தை போக்க, கட்டுமானச் சேவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரே தீர்வு தளத்தினை தொடங்கும் திட்டத்தில் உள்ளோம். “ஏற்கனவே, வாடிக்கையாளர்களிடம் நிறுவனத்துக்கு நற்பெயர் உள்ளது. எங்களது புரோஜெக்ட்களில் உடன்சேர்ந்து பணிபுரிந்தவர்களை தான் அணுகி, இணையப் போகிறோம். இது மற்ற திட்டங்களை போலில்லாமல் பிசினஸ் டூ பிசினஸ் சேவையை அளிக்க திட்டமிட்டுள்ளோம். 2020ம் ஆண்டுக்குள் ஆண்டு வருவாய் 50கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்.”என்றார். 

ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஜெயஸ்ரீ