பிரபல ப்ராண்டின் ப்ரான்சைஸ் கடையை தொடங்கிய முதல் பெண் தொழில்முனைவர் சந்தியா!

1

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவியைப்போல தோன்றும் சந்தியா, படித்தது இதழியல், அடுத்து எம்ஏ. மனித உரிமைகள். ஆனால் அவரோ ஆயத்த ஆடை விற்பனை உலகில் புதிய தொழில்முனைவோராக கால் வைத்திருக்கிறார்.

பெண்களுக்கான பிரத்யேக ஆடைகளைத் தயாரிக்கும் 'கோ கலர்ஸ்' என்ற பிராண்ட்டின் உரிமையைப் பெற்று கோடம்பாக்கத்தில் புதிய கடையைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவருகிறார். அந்த நிறுவனத்தில் தென்னிந்தியாவின் முதல் பெண் ப்ரான்சைசி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

தொழில் செய்து நஷ்டம் கண்ட அப்பா, குடும்பமே உயிர் என நினைக்கும் அம்மா,  தங்கைகளின் வாழ்வில் கவனம் கொண்ட அண்ணன் தனசேகர், இரட்டையராக பிறந்த சகோதரி சூர்யா என குடும்பமே சந்தியாவின் வளர்ச்சிக்கு நீருற்றியிருக்கிறது.

“என் தந்தை எல்லாவிதமான பணிகளையும் செய்து கடுமையாக உழைத்துதான் எங்களைக் காப்பாற்றினார். சிறு வயதிலேயே அவர்களுடைய சிரமங்களை நான் அறிந்திருந்தேன். அந்த பொறுப்புடன்தான் வளர்ந்தேன். எனவே எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் அதிகமாக இருந்தன. கல்லூரியில் படிக்கும் காலத்தில் டிவி தொகுப்பாளராக அல்லது பத்திரிகையாளராக வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன்,”

என்று பேசத் தொடங்கும் சந்தியாவுக்கு பிளஸ் டூவுக்கு என்ன படிப்பது என்பதில் குழப்பம் இருந்தது. வழிகாட்டியவர் அண்ணன். ஹோட்டல் மேனேஜமெண்ட் படித்துவிட்டு சிங்கப்பூர் கேஎப்சியில் மேலாளராகப் பணியாற்றுகிறார். “கணிதம், இயற்பியல், வேதியியல் இல்லாத படிப்பாக வேண்டும் என்று அண்ணனிடம் கூறினேன். வித்தியாசமான படிப்பாக இருந்தால் சேர்கிறேன் என்று சொன்னேன். அவரும் பலரிடம் விசாரித்து ஜர்னலிசம், விஸ்காம் பற்றிச் சொல்லி என்னிடம் கேட்டார். நான் ஜர்னலிசத்தைத் தேர்ந்தெடுத்தேன். எம்ஓபி வைஷ்ணவா கல்லூரியில் படித்தேன்,” என்கிறார் சந்தியா.

வீட்டில் பெற்றோர். அண்ணன் சிங்கப்பூரில். குடும்பச் சுமைகளை தாங்கவேண்டிய கடமை சந்தியாவுக்கு. அப்பா, அம்மா வெளியே சென்று வேலைகளை கவனிக்கவமுடியாத நிலை. படித்துக்கொண்டே குடும்ப வேலைகளை முகம் சுழிக்காமல் செய்தார். 

“கல்லூரி நாட்களில் ஜாலியாக இருக்கணும் என்ற தோன்றும். ஆனால் எல்லாவற்றையும் நான்தான் செய்யவேண்டும் என்ற கட்டாயம். எல்லோரையும் நேராக சென்று சந்திக்கவேண்டியிருந்தது. அதுவே பெரிய அனுபவமாக எனக்குக் கிடைத்தது. யார் உதவியுமின்றி என்னால் எதையும் செய்யமுடியும் என்ற நம்பிக்கை வந்தது” 

என்று கடந்தவந்த பாதையை நினைவுகூர்கிறார். கல்லூரிப் படிப்பை முடித்ததும் ஸ்பை குளோபல் எனப்படும் இணைய வழி பதிப்பகம் ஒன்றில் சந்தியாவுக்கு 25 ஆயிரம் ஊதியத்தில் வேலை கிடைத்தது. சுயநலமாக படிக்கக்கூடாது என்ற அண்ணன் கூறிய வார்த்தை நினைவுக்கு வந்தது. சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது.

அப்பாவுக்கு இதய அறுவைச்சிகிச்சை. அவரை கவனித்துக்கொள்வதற்காக வேலையை விடும்படியானது. ஆனால் சோர்ந்துவிடவில்லை. வேறு வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்தார். அப்போது வங்கிப் பணிகளுக்கான போட்டித் தேர்வு பற்றி அறிந்தார். அதற்காக கடுமையாக உழைத்துப் படித்தார். அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் ஏமாற்றத்தையே சந்திக்கவேண்டியிருந்தது. 

“நான் தேர்வில் வெற்றியடைந்தும் பயனில்லை. வேலை தருவதற்கு 20 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டார்கள். நான் எதற்கு பணம் தரவேண்டும். வெறுப்பாக இருந்தது. வேலையே வேண்டாம் என்று விட்டுவிட்டேன். ஆனாலும் மனம் ஓய்ந்திருக்கவில்லை” என்று அனுபவம் பகிரும் சந்தியா, வீட்டுக்குப் பக்கத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு டியுசன் வகுப்புகள் நடத்தியிருக்கிறார். சில மாதங்கள் கடந்தன. ஆனாலும் அவரது மனம் எதையோ தேடிக்கொண்டிருந்தது.

என்ன செய்வதென்று புரியாத காலத்தில் சந்தியாவுக்கு இருளடர்ந்த வானத்தில் தெரிந்த நட்சத்திரமாக ஒரு அனுபவம் உதவியது. அதுதான் அவர் தொடர்ந்து போய்வந்த ’கோ கலர்ஸ்’ ஸ்டோர். வாடிக்கையாளராக இருந்தார் சந்தியா. அதுவே அவருக்கு புதிய தொழில் பற்றிய விதையாக இருந்தது. அதற்கு உற்சாகம் அளித்தவர் நண்பர் கெளதம். “அவர்தான் நீ ப்ரான்சைஸ் எடுத்து செய்யலாமே” என்று எதேச்சையாக கேட்டார். அதை அப்படியே கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன்.

இரவும் பகலும் அதே நினைப்பாக இருந்தேன். வீட்டில் என்ன சொல்வார்களோ என்ற பயமும் இருந்தது. அண்ணனிடம் கேட்டேன். உனக்குப் பிடித்தது என்றால் செய் என்றார். அப்பாவும் ஓகே சொல்லிவிட்டார். பிறகு பிரான்சைஸ் வாங்குவது தொடர்பான அடிப்படை வேலைகளைத் தொடங்கினேன்” என்று உற்சாகமாகப் பேசுகிறார் சந்தியா. அடுத்து அவர் ஆடிட்டர் ஒருவரை சந்தித்து விவரம் கேட்டுக்கொண்டார்.

சென்னையில் கோ கலர்ஸ் நிறுவன அதிகாரிகளை சந்தித்துப் பேசியது பெரும் உற்சாகத்தை அளித்தது. ஒரு பெண்ணாக வந்து கேட்கிறீர்கள். நீங்கள்தான் தென்னிந்தியாவின் முதல் பெண் பிரான்சைஸி என்று பெருமையுடன் குறிப்பிட்டு புதிய ஸ்டோர் தொடங்க சம்மதம் தந்தார்கள்.

“இளம் வயதில் துணிச்சலாக தொழிலைச் செய்ய முன்வந்திருப்பது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறோம். கவலைப்படாதீர்கள். நீங்கள் சாதித்துக்காட்டவேண்டும் என்றார்கள்,”

என்றும் கூறும் சந்தியாவுக்கு வாடகைக்கு கடைகள் தேடி அலைந்தது கசப்பான அனுபவம். 300 கடைகள் பாத்திருப்பார். நீ எப்படி நடத்தப்போற, வாடகை கரெக்டா கொடுப்பியா, உன்னை நம்பமுடியாதும்மா என்ற நெகட்டிவ் பதில்கள். ஆனால் அசரவில்லை சந்தியா. முத்ரா திட்டத்தில் கிடைத்த 10 லட்சம் ரூபாய் முதலீடு ப்ளஸ் சொந்தப் பணம் ஆகியவற்றுடன் கோடம்பாக்கம் அம்பேத்கர் சாலையில் அழகான பகுதியில் ஒரு கோ கலர்ஸ் ஸ்டோர் தொடங்கினார். கனவு நனவாகிவிட்டது.

கடையைத் தொடங்கிய பிறகுதான் ஒரு பெண்ணாக அவர் நிறைய சோதனைகளை சந்திக்கவேண்டியிருந்தது. ஒரு நாள் இரவில் கடையை மூடிவிட்டு டுவீலரில் செல்லும்போது அருகிலேயே பின்தொடர்ந்தனர் சில இளைஞர்கள். கையை உரசிக்கொண்டு நண்பர்களுக்குள் கிண்டலாகப் பேசிச் சிரித்தபடி வந்தனர். என்ன செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. மனதில் பதற்றமும் இருந்தது. கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு போலீஸ் ஸ்டேசன் வாசலில் போய் நின்றார். அடுத்த நொடியில் அவர்களைக் காணவில்லை. இப்படி தினமும் பல தொந்தரவுகளைத் தாண்டித்தான் சந்தியா, ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக இருக்கமுடிகிறது. 

இவரது விற்பனையில் மகிழ்ந்துபோன கோ கலர்ஸ் நிர்வாகம், பெரிய ஸ்டோராக மாற்ற இவருக்கு ஊக்கம் தந்திருக்கிறது.

“இதெல்லாம் நடக்கும். இதற்காக பயந்தால் வீட்டில்தான் உட்கார்ந்திருக்கமுடியும். வாடிக்கையாளர்கள் சொல்வதை காதுகொடுத்து பொறுமையாக கேட்கவேண்டும். அதில் நிறைய அனுபவங்கள் கிடைக்கிறது,”

என்று பேசும் சந்தியாவுக்கு பிரான்சைஸி இல்லாமல் சொந்தமாக கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைளுக்குத் தொடர்பான பொருள்களை விற்கும் பிரத்யேக ஸ்டோர் ஒன்றைத் தொடங்கும் கனவு இருக்கிறது.

தொழில்முனைவோராக விரும்பும் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறார்?

நீங்கள்தான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும். வேறு யாராவது செய்வார்கள் என்ற எண்ணம் தேவையில்லை. அனைத்தையும் கற்றுக்கொள்ளவேண்டும். துணிச்சலாக இருக்கவேண்டும். என்னமாதிரியான தொழில், எவ்வளவு ரிட்டர்ன்ஸ் வரும் என்று தெரிந்துகொள்ளவேண்டும். எல்லோரும் சொல்கிறார்கள் என்று எதையும் செய்யக்கூடாது. முதலில் ஆர்வம் இருக்கவேண்டும். யாரையும் நம்பக்கூடாது. தீர விசாரித்து நீங்களே செய்யவேண்டும். 

ஒரு பெண்ணாக இருப்பதே முதல் தடைதான். அவளால் முடியுமா என்பார்கள். இவ்வளவு சிரமம் எதற்கு. ஒரு வேலைக்குப் போய்விடலாமே என்று உறவினர்கள் பேசுவார்கள். அதற்கெல்லாம் கவலைப்பட்டால் ஒனறைக்கூட செய்யமுடியாது. சமூகத்திற்குப் பயப்படாமல் வாழப் பழகவேண்டும். சாதிக்கலாம்!

தகவல்கள் உதவி: தருண் கார்த்தி