விவசாய சமூகத்திற்கு பல வகையில் நன்மை சேர்க்கும் கோவை ’சூப்பர் ஹீரோஸ்’!

1

தற்பொழுது சுயதொழில் எவ்வாறு பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறதோ அதேப் போல் விவசாயமும் பல இளைஞர்களை தன் பக்கம் இழுத்திருக்கிறது. கிராமங்களில் விவசாய மக்கள் விவசாயம் செய்த காலம் மாறி தற்பொழுது பல பட்டம் பெற்ற இளைஞர்கள் தங்கள் சொகுசு வேலையை துறந்து விவசாயம் செய்ய கிளம்பிவிட்டனர். அதிலும் ஒரு படி மேலே சென்று ஆர்கானிக் விவசயாத்தை பிரபலப் படுத்துகின்றனர். 

கோவையைச் சேர்ந்த விஷ்ணு வரதன் மற்றும் திவ்யா ஷெட்டி இன்னும் பல புதுமைகளை புகுத்தி விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

“2014-ல் நான் ஒரு பெருநிருவனத்தில் பணிபுரிந்த பொழுது விவசாயிகள் தற்கொலை மிக அதிகமாக இருந்தது. அதனால் விவசாய சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என எண்ணி ஆரம்பிக்கப்பட்டதே இந்த  அமைப்பு,” என்கிறார்  நிறுவனர் விஷ்ணு வரதன்.

விஷ்ணு வரதன் மற்றும் அவரது தோழி திவ்யா ஷெட்டி இருவரும் தங்கள் வேலையை விட்டுவிட்டு, விவசாயிகளுக்கு உதவும் நோக்கில், விவசாயிகள் தங்கள் இயற்கைமுறை விளைச்சல்களை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்க "இந்தியன் சூப்பர் ஹீரோஸ்" என்னும் சமூக நிறுவனத்தைத் துவங்கினர்.

ஆர்கானிக் விவசாயம் செய்யும் இரண்டு விவசாயிகளுடன் தங்கள் பயணத்தை தொடங்கிய இவர்களுடன், தற்பொழுது 843 விவசாயிகளும், 12 அரசு சாரா அமைப்பு என பலர் இணைந்துள்ளனர். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக மக்களிடம் பொருட்களை விற்று விவசாய சமூகத்திற்கு தங்களால் முடிந்ததை செய்கின்றனர்.

“முகநூல் ஃபார்ம்வில் விளையாட்டை போல, வாடிக்கையாளர்கள் ஒரு பகுதி விவசாய நிலத்தை வாடகைக்கு பெற்று எங்கள் விவசாயிகளின் உதவியோடு இயற்கை விவசாயம் செய்யவும் நாங்கள் வழி செய்கிறோம்...”

இதன் மூலம் இயற்கை விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வு நிச்சயம் அனைவருக்கும் கிடைக்கும் என நம்புகின்றனர் இந்த இளைஞர்கள். 2015-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு ஆஃப்லைன் வணிகத்தில் செயல்பட துவங்கி அதன் பின் நல்ல வரவேற்பை கண்டு 2017-ல் இ-காமர்ஸ் தளத்தைத் துவங்கி ஆன்லைன் விற்பனையிலும் தங்கள் காலை பதித்துவிட்டது.

“சமூக அமைப்பை துவக்குவதே இங்கு சவாலான ஒன்று தான். இருப்பினும் குறைந்தது ஒரு லட்ச இயற்கை விவசாயிகளுக்கு உதவுவதே எங்கள் இலக்கு, பணம் சம்பாதிப்பது அல்ல,” என்கிறார்கள்.

இதோடு இவர்கள் நின்று விடாமல், சமூக அக்கறையுடன் ’பிளான்ட்சில்’ என்னும் துணை நிறுவனத்தையும் இதனுடன் இணைத்துள்ளனர் இந்த இளைஞர்கள். அதாவது மறுசுழற்சி செய்யும் தாளை கொண்டு பென்சிலை உருவாகுகின்றனர்.

“மரங்களை வெட்டுவதுதான் தற்போதைய தண்ணீர் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம் என்று விவசாயிகளுடன் நாங்க வேலை செய்தபோது எங்களுக்கு புலப்பட்டத. அதில் 36% மரங்கள் பேப்பர் மற்றும் மர பென்சில்களுக்காக வெட்டப்படுகிறது.”

இந்த சமூக பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் ’பிளான்ட்சில்’ என்னும் மறுசுழற்சி பென்சிலை தயாரித்து விற்கின்றனர். கோவையை சுற்றியுள்ள பல பள்ளிகளில் இருந்து செய்தித்தாள்களை பெற்று இந்த பென்சிலை தயாரிக்கின்றனர். செய்தித்தாள்களுக்கு பதிலாக மாதம் இந்த பென்சிலை பள்ளிகளுக்கு வழங்குகின்றனர். ஏதோ ஒரு பென்சில் என சாதாரணமாக தயாரிக்காமல் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் வானவில் நிற பென்சில், வெல்வெட் பென்சில், பழம் சார்ந்த பென்சில் அதாவது அன்னாசி, ஆரெஞ்சு, ஆப்பிள் என பல பழ வாசனைகளைக் கொண்ட பென்சில் என பல வகையில் தயாரிக்கின்றனர்.

அது மட்டும் இன்றி விதை பென்சிலையும் தயாரிக்கின்றனர்; மிளகாய், கீரை, பீன்ஸ், தக்காளி மற்றும் கத்தரிக்காய் போன்ற விதைகளை பென்சிலில் பொருத்தி தயாரிக்கின்றனர். பென்சில் சிறியதாய் ஆன பிறகு குழந்தைகள் அதை விதைத்து செடி வளர்க்கலாம்.

“முற்றிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தாத எழுதுகோலை உருவாக்கவும் முயற்சி செய்கிறோம். தற்பொழுது வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பேனா பென்சில்களை வடிவமைத்துத் தருகிறோம். பிறந்தநாள், கல்யாணம் என பல நிகழ்வுகளுக்கு வழங்கியுள்ளோம்.”

பிளாட்சில் என பிரேத்தியேக இனயதளத்தை இதற்காக உருவாக்கியுள்ளனர். மேலும் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் இணையத்திலும் இந்த பென்சில்களை பெறலாம்.

இதோடு அடுத்த தலைமுறையினருக்கு விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த குழந்தைகளுடனும் செயல்படுகின்றனர். சூப்பர் ஹீரோஸ் பசுமைக் குழு என ஒன்றை துவங்கி குழந்தைகளுக்கு மரம் நடுதல், பள்ளி அல்லது வீட்டு பின்புறத்தில் செடி வளர்த்தல், தாள்களை மறுசுழற்சி செய்தல் என பலவற்றை எடுத்துரைக்கின்றனர். ஆனால் இது துவக்கம் மட்டுமே என முடிக்கின்றனர் கோவையைச் சேர்ந்த இந்த ரியல் சூப்பர் ஹீரோஸ். 

வலைதள முகவரி: www.indianorganic.store www.plantcil.com

Related Stories

Stories by Mahmoodha Nowshin