குறைபாடு இவரை தடுக்கவில்லை, பல நிறுவனங்களை நிறுவியுள்ள அஜீத் பாபு!

0

அஜித் பாபு பெருமூளை வாதத்தால் (cerebral palsy) பாதிக்கப்பட்டவர். மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில் இவருக்கு கிடைத்த வேலையை தேர்ந்தெடுக்க சொல்லி இவரது அப்பா சொன்னபோது தீர்மானமாக மறுத்துவிட்டார். விளைவு இன்று பெங்களூரில் மூன்று நிறுவனங்களின் நிறுவனராக இருக்கிறார்.

இவரின் கதை

இருபத்தி ஆறு வருடங்களுக்கு முன்பு, ஜூலை மாதம் ஒரு குழந்தை பிறந்தது. உலகத்தை பார்க்கவேண்டிய பேராவலில் மிக விரைவாக பிறந்துவிட்டது குழந்தை குறைபிரசவத்தில். விளைவு 1.4 கிலோ எடை மட்டுமே இருந்த காரணத்தால் இரண்டு மாதம் இன்குபேட்டரில் வைத்து அக்குழந்தையை பாதுகாத்தார்கள். இவரது வயதை ஒத்த மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்ட போது இவர் வளர்ச்சியில் குறைபாடு இருந்தது. எனவே டாக்டர்கள் இவருக்கு செரிபரல் ஃபால்சி அதாவது பெருமூளை வாதம் இருப்பதை உறுதி செய்தனர்.

இன்று வெறும் ஐந்தடி உயரமே இருக்கும் அஜித், கொஞ்சம் நொண்டி நடக்கக்கூடியவர். எனினும் கர்நாடகாவின் மிகச்சிறப்பான பள்ளி ஒன்றில் படித்தார். கர்நாடக வலிப்புநோயுள்ளோர் சங்கம் இதற்காக உதவியதே காரணம். வளர்ந்த பிறகு இதழியல், உளவியல் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவராக காணப்பட்டார். எனவே தான் கிருஸ்து ஜெயந்தி கல்லூரியில் இவைகளையே ஒரு பாடமாக தேர்ந்தெடுத்து படித்தார்.

கல்லூரியில் ஆய்வக வேலைகளை சமாளிக்க முடியாத காரணத்தால், 2008ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். ஆனால் இவரின் ஆர்வம் எதனாலும் தடைபடவில்லை.

ஊடகத்தில் இரு நிறுவனங்கள் துவங்கினார்

”இதழியல் மீதும் ஊடகம் மீதும் இருந்த காதலால் என் முதல் நிறுவனத்தை துவங்கினேன். என்னால் எழுத முடியும், என்னால் பேச முடியும் எனும்போது உள்சினிமா விளம்பரத்தில்(in-film advertising) ஈடுபட்டால் என்ன என்று தோன்றியது. அப்போது ஒட்டுமொத்த தென்னிந்தியாவும் அந்த துறையிலேயே ஈடுபட்டிருந்தது” என்கிறார் அஜீத்.

தன் ஆத்மார்த்த சினேகிதரான ஹரிஷ் நாராயணனோடு சேர்ந்து "ட்ரீம் க்ளிக் கான்சப்ட்ஸ்" (Dream Click Concepts) என்ற நிறுவனத்தை 2009ஆம் ஆண்டு துவங்கினார். அதேநேரம் "ஸ்ட்ரீட் லைட் மீடியா" (Steet Light Media) என்ற நிறுவனத்தையும் பகுதிநேரமாக துவங்கினார்கள். இது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை வீடியோக்கள் மற்றும் விளம்பரங்களை செய்து தரக்கூடிய நிறுவனம் ஆகும்.

”எங்களுக்கு அந்த இரு நிறுவனங்களை வளர்ப்பதிலும் தீராத ஆர்வம் இருந்தது. எங்கள் இருவருக்குமே சினிமா எடுப்பதிலும், போட்டோ மற்றும் படம் பிடிப்பதிலும் ஆர்வம் இருந்தது” என்கிறார் அஜீத். அடுத்த மூன்றாண்டுகளில் சுயதொழில்வாய்ப்புகளை நோக்கி நகர தீர்மானித்தார்.

“2002ல் புதிதாக தொழில் துவங்குவோர், நிறுவனத்தை எப்படி நடத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கினேன். அவர்களுக்கான விளம்பரப்படுத்துதலிலும் ஈடுபட்டேன், தன்னிம்பிக்கை பேச்சாளரானேன். அதன்மூலம் வருமானம் வந்தது. பிறகு இதுவே "லைஃப் ஹேக் இன்னொவேஷன்" (Life Hack Innovation) என்ற நிறுவனம் உருவாக காரணமானது” என்கிறார்.

யுரேக்கா தருணம்

இந்த வருட துவக்கத்தில் நேபாலில் பூகம்பம் ஏற்பட்டது. ஒரு தேசம் இடிபாடுகளிலிருந்து மீள்வதென்பது எவ்வளவு சிரமம் என்பதை அஜீத் அப்போது தான் உணர்ந்துகொண்டார். எனவே பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோலார் பேனல்களை வாங்கியளிக்க முடிவெடுத்தார்.

”எனக்கு பிடித்தமாக கஃபேவுக்கு வெளியே உட்கார்ந்திருந்தேன். அங்கு தான் எல்லோரும் புகைபிடித்துக்கொண்டிருந்தார்கள். அங்கே மொபைலுக்கு சார்ஜ் ஏற்ற தேவையான மின் இணைப்பே இல்லை. எல்லோரும் மற்றவர்களிடம் பவர் பேங்க் வாங்கி பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். அப்போது தான் ஒன்றை கவனித்தேன். என்கையில் இருந்த சோலார் விளக்கு, பவர் பேங்க் போலவே இருந்தது. ஏன் சோலார் பவர் பேங்கை உருவாக்கக்கூடாது என யோசித்தேன்” என்றார் அஜீத்.

புதிய நிறுவனத்தின் துவக்கம்

அடுத்த ஆறுமாதத்தில் இவரின் சிந்தனை மீதான நம்பிக்கை உறுதிபடத்துவங்கியது. ஆனால் இவருக்கு நிறுவனத்தை உருவாக்க பணம் தேவைப்பட்டது, ஏழு லட்ச ரூபாய் தேவைப்பட்டது.

“பணம் தான் பிரச்சினை என்று நினைத்திருந்தேன். ஆனால் இல்லை. நான் செய்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான் ஃபேஸ்புக்கில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் ஒன்றை துவங்க பணம் தேவைப்படுகிறது என ஒரு பதிவிட்டேன். சிலர் என் நம்பரை கேட்டார்கள், எனக்கு கால் செய்து பேசினார்கள், பணம் கொடுத்தார்கள்” என்றார். 15-20 நண்பர்கள் மொத்தமாக சேர்ந்து தேவையான பணத்தை கொடுத்திருக்கிறார்கள்.

உடனடியாக ஐந்து பேர் அடங்கிய குழு உருவானது, லைஃப்ஹேக் இன்னொவேஷன் என்ற நிறுவனம் இந்த ஆண்டு ஜூலையில் உதயமானது.

லைஃப்ஹேக் இன்னொவேஷன் செய்வது என்ன?

நிலையான ஆற்றல் சார்ந்த துறை வேகமாக வளர்வதை கவனித்தார். ஆனால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த பொருட்களை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய வகையிலான பொருட்களை உருவாக்குவதில் இருக்கும் சிரமத்தை கவனிக்க தவறவில்லை.

லைஃப் ஹேக்கின் முதல் தயாரிப்பு கையில் எடுத்து செல்லக்கூடிய சோலார் பவர் பேங்க்தான். இதை மின்சாரத்தை கொண்டும் பயன்படுத்த முடியும். இது அக்டோபர் மாதம் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிறுவனம் சென்னையிலுள்ள வேல்டெக் டெக்னாலஜியோடு இணைந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் 45 தயாரிப்புகளை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மூன்றாவது நிறுவன உருவாக்கம் காட்டுவது என்ன?

தொடர் தொழில்முனைவர் என காட்டுகிறதா? என்றால் ஆம் என்கிறார். ஆனால் தொழில் நடத்துவதை பற்றிய ஆழ்ந்த புரிதல் வந்திருப்பதாக தெரிவிக்கிறார்.

”என்னை தொடர் தொழில்முனைவர் என்று அழைப்பது கொஞ்சம் கூடுதல் வார்த்தை பிரயோகம். புதிய தொழிலில் ஈடுபடுபவர்கள் பொதுவாகவே தங்கள் எல்லா திறமைகளையும் அதில் சோதித்துபார்ப்பார்கள், சில சமயம் அது வேலைக்கு ஆகாது. எனவே அடுத்த ஒன்றை முயற்சிப்பார்கள், அடுத்தது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுவார்கள், பிறகு இன்னொன்றை துவங்குவார்கள். சரியான ஒன்று கிடைக்கும் வரை இது தொடரும்” என்கிறார் அஜீத்.

எதிர்காலதிட்டம்

“நான் நிறைய படிக்க வேண்டி இருக்கிறது. இதழியல் படிப்பை முடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மேற்படிப்பு படிக்க வேண்டும். கொலம்பியா செல்ல வேண்டும். இந்த துறையில் மட்டும் தான் சுதந்திரமாக எண்ணங்களை வெளிப்படுத்துவதோடு அல்லாமல் பணம் சம்பாதிக்கவும் முடியும்” என்கிறார்,

"வாழ்வா சாவா என்ற வாய்ப்பு உங்களுக்கு தரப்படும்போது சாவை தேர்ந்தெடுப்பது எளிதானது. ஆனால் காலை கண் விழித்துவிட்டால் உங்கள் முன் உள்ள ஒரே வாய்ப்பு வாழ்வதே..." என்கிறார் தன்னம்பிக்கையாக