இன்ஸ்டாகிராமில் பிரபலமாக நீங்கள் செய்ய வேண்டியவை!

0

ஹாலிவுட் பிரபலங்கள் முதல் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லி வரை எண்ணற்ற பிரபலங்கள் புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகின்றனர். பிரபலங்கள் மட்டும் அல்ல, இணையவாசிகள் பலரும் இன்ஸ்டாகிராமை ஆர்வத்துடன் பயன்படுத்துகின்றனர். பயண அனுபவங்கள், உணவு ஆர்வம், பேஷன் ஆற்றல் என பலவித கருப்பொருள்களில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. இன்ஸ்டாகிராமில் அருமையான படங்களை பகிர்ந்து, ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்களை பெற்று பிரபலமானவர்களும் பலர் இருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராமை சரியான முறையில் பயன்படுத்தினால் நீங்களும் அதிக எண்ணிக்கையில் ஃபாலோயர்களை பெறலாம். அதற்கான சில வழிகள்:

உங்களுக்கான தீம்; நீங்கள் எடுக்கும் படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்வதில் அர்த்தமில்லை. ஏதோ ஒருவிதத்தில் பார்த்தவுடன் ஈர்க்கக் கூடிய படங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்காக எல்லா படங்களும் நேஷனல் ஜியாகிரபிக் இதழில் வெளியாகும் படத்தின் தரத்திற்கு இருக்க வேண்டும் என்றில்ல. ஆனால் மற்றவர்களை கவரக்கூடிய வித்தியாசமான படங்களாக இருந்தால் நல்லது. அதோடு, உங்கள் படங்களுக்கு என்று பொதுவாக ஒரு தீம் இருக்க வேண்டும். அப்போது தான் பார்வையாளர்களுக்கு உங்கள் பக்கத்தில் என்னவிதமான படங்களை எதிர்பார்க்கலாம் என்ற புரிதல் இருக்கும். சுவாரஸ்யம் அளிக்கக் கூடிய வண்ணமயமான படங்களை பகிர்ந்து கொள்வது பலரை கவரும்.

ஃபில்டர் வசதி; இன்ஸ்டாகிராம் செயலியில் பலவிதமான ஃபில்டர் (Filter) வசதிகள் உள்ளன. புகைப்படங்களை பகிரும் போது, ஃபில்டர்களை பயன்படுத்துவது சுவாரஸ்யமானதாகவும் தோன்றலாம். ஆனால் புகைப்படங்களின் அடிப்படை அழகு தான் முக்கியம். எனவே ஃபில்டர்களை அளவோடு பயன்படுத்த வேண்டும்.

உங்கள் பயோ: உங்கள் பக்கத்திற்காக என்று பொருத்தமான பயனர் பெயரை தேர்வு செய்யவும். அதோடு உங்களுக்கான பயோ பக்கத்தில் சரியான அறிமுகக் குறிப்புகளை இடம்பெறச்செய்யவும். உங்களைப்பற்றிய தகவல்களோடு, புகைப்படக் கலை தொடர்பான உங்கள் ஆர்வம் பற்றிய குறிப்பும் இருப்பது நல்லது. இந்த பக்கத்தில் இருந்து உங்கள் வலைப்பதிவு அல்லது இணையதளத்திற்கும் இணைப்பு கொடுக்கலாம்.

பாலபாடம்: நேர்த்தியான படங்களை எடுக்க பயிற்சி தேவை. அதோடு புகைப்படக் கலை தொடர்பான அடிப்படைகளையும் அறிந்திருப்பது அவசியம். டி.எஸ்.எல்.ஆர் காமிரா அல்லது ஸ்மார்ட்போனில் படம் எடுப்பது சுலபம் என்றாலும், கிளிக் செய்வதெல்லாம் நல்ல படங்களாகிவிடாது. போதிய வெளிச்சம் இருப்பது, பிரேம் எப்படி அமைந்துள்ளது, பின்னணி விவரங்கள் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை மனதில் கொண்டு படம் எடுக்க வேண்டும். நல்ல படங்களுக்கு இலக்கணமாக சொல்லப்படும், ரூல் ஆப் தேர்ட்ஸ் போன்ற விதிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போனில் படம் எடுப்பதற்கான வழிகாட்டுத்தல் கட்டுரைகளை இணையத்தில் தேடி வாசித்துப்பார்ப்பதும் கைகொடுக்கும்.

புகைப்பட குறிப்புகள்: புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் போது, அந்த படம் தொடர்பான சுருக்கமான குறிப்புகளை இடம்பெறச்செய்வதும் அவசியம். புகைப்படம் எடுக்கப்பட்ட இடம், அதன் பின்னணி உள்ளிட்ட தகவல்கள் பார்வையாளர்கள் படத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள உதவும். படம் தொடர்பான அனுபவத்தை எழுதலாம். கருத்துக்களை பதிவு செய்து முடிவில் கேள்வியும் எழுப்பலாம். ஆனால் எந்த குறிப்பும் இல்லாமல் வெறும் புகைப்படத்தை மட்டும் பகிர்வதால் பலனில்லை.

ஹாஷ்டேக்; புகைப்படத்திற்கான குறிப்பு போலவே, ஹாஷ்டேக் அடையாளமும் முக்கியம். புகைப்படத்தின் கருப்பொருள் சார்ந்து பொருத்தமான ஹாஷ்டேகை, படக்குறிப்புடன் இணைக்க வேண்டும். கண்ணில் படும் ஹாஷ்டேகை எல்லாம் இணைக்காமல் சரியான ஹாஷ்டேகை தேர்வு செய்ய வேண்டும். பிரபலமான ஹாஷ்டேக் பட்டியலையும் வழிகாட்டியாக கொள்ளலாம். ஆனால் ஹாஷ்டேக் பயன்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத ஹாஷ்டேகை வரிசையாக இணைப்பது எதிர்பார்த்த பலனை அளிக்க வாய்ப்பில்லை.

உரையாடங்கள்: உங்கள் ஃபாலோயர்களை எண்ணிக்கையாக மட்டும் கருத வேண்டாம். அவர்களை இணைய நண்பர்களாக கருதி உரையாடுங்கள். குறிப்பிட்ட படத்தால் கவரப்பட்டும், அவர்கள் கருத்து தெரிவித்திருந்தால் அதற்கு பதில் அளியுங்கள். கருத்து பரிமாற்றத்தை உரையாடலாக மாற்றும் போது ஃபாலோயர்கள் உங்கள் அபிமானிகளாக மாறி, தங்கள் நட்பு வட்டத்தில் உங்களை அறிமுகம் செய்யலாம்.

அதே போல நீங்கள் யாரை எல்லாம் பின் தொடர்கிறீர்கள் என்பதும் முக்கியம். மனம் போன வகையில் மற்றவர்கள் பக்கங்களை பின் தொடராமல், உண்மையிலேயே உங்களுக்கு ஆர்வம் அளிக்கக் கூடியவர்கள் பக்கங்கள் பின் தொடருங்கள். அந்த பக்கங்களில் பகிரப்படும் படங்கள் குறித்து வெளிப்படையான முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். இதன் மூலமும் உரையாடலை வளர்க்கலாம்.

சீரான தன்மை; உங்கள் விருப்பம் போல படங்களை பகிர்ந்து கொள்ளலாம், தவறில்லை. அதற்காக ஒரு சில நாட்கள் தொடர்ந்து படங்களை வெளியிட்டுவிட்டு, பின்னர் பல நாட்கள் மவுனம் காப்பது சரியல்ல. ஒரு சீரான இடைவெளியில் படங்களை தொடர்ந்து வெளியிட வேண்டும். விரல் விட்டு எண்ணக்கூடிய ஃபாலோயர்களே இருந்தாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒரு கடமையாக நினைத்து படங்களை இடைவெளி இல்லாமல் வெளியிட வேண்டும். அதிக ஃபாலோயர்களை பெற இந்த சீரான தன்மை அவசியம். பனிச்சுமை அதிகம் இருந்தால் படங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளலாம். உங்கள் படங்கள் எப்போது அதிகம் பார்க்கப்படுகின்றன என்பதை அறிந்து அந்த கால இடைவெளியில் பகிர்வதும் பலன் அளிக்கும்.

போக்குகள்; இன்ஸ்டாகிராம் உலகில் இப்போதைய பிரபலமான போக்கு என்ன என்பதையும் அறிந்து வைத்திருங்கள். அந்த போக்கு உங்களுக்கும் ஏற்றதாக இருந்தால் அது தொடர்பான படங்களை பகிர்வது பயனாளிகளை ஈர்க்கும். இதற்கு இன்ஸ்டாகிராம் தொடர்பான செய்திகள் மீது ஒரு கண் வைத்திருங்கள்.

இவைத்தவிர, நீங்கள் ரசிக்கும் பக்கங்களில் உள்ள படங்களை ஆழமாக ஆய்வு செய்யுங்கள். அவற்றில் எந்த அம்சங்கள் கவர்கின்றன என யோசியுங்கள். இந்த ஆய்வும் நீங்கள் படம் எடுக்கும் போது கைகொடுக்கும்.

வலை இன்னும் விரியும்...