புதிய ஐடியாக்களுடன் செயல்படும் சிந்தனையாளர்களை கெளரவித்த ‘சின்னிகிருஷ்னன்’ விருதுகள்!

0

கவின்கேர் மற்றும் எம்.எம்.ஏ (மெட்ராஸ் மேலாண்மை சங்கம்) இணைந்து வழங்கும் ‘சின்னிகிருஷ்னன்’ விருதுகளின் 7 வது ஆண்டு விருதுகள் வழங்கும் விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக டி.வி.எஸ் நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் கிருஷ்ணா பங்கேற்றார்.

மறைந்த சின்னிகிருஷ்ணன் அவர்கள் சாசே (Sachet) பாக்கெட்டுக்களை அறிமுகப்படுத்தி வியாபார தளத்தில் ஒரு புரட்சியை செய்தவராவார். அவர்பெயரால் வழங்கப்பட்ட இவ்விருதுகளின் நோக்கம் புதிய எண்ணங்களுடன் வளர்ந்து வரும் சிறிய அளவிலான நிறுவனங்களை அடையாளப்படுத்துவது, அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து அவர்களுக்கு அதைச் சந்தைப் படுத்துதல், காப்புரிமை மற்றும் அந்த நிறுவனத்தை அடுத்தகட்டம்  எடுத்து செல்லுதல் போன்ற பல வகையில் உதவும் நோக்கத்தோடே நடத்தப்படுகிறது.  

சின்னிகிருஷ்ணனின் மகனும், பிரபல நிறுவனம் கவின் கேரின் தலைவருமான சி.கே.ரங்கநாதன் இந்நிகழ்ச்சியை முன்னெடுத்து வருடாவருடம் நடத்தி வருகிறது. விழாவில் பேசிய அவர்,

"இந்த ஆண்டு விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது ஊக்கமளிக்கிறது. மேலும்  புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட - கிரேட் ஐடியாஸ் (GREAT IDEAS), பெறுநர்கள் பல மைல்கற்களை அடைவார்கள், மற்றவர்களையும் ஊக்குவிப்பார்கள் என நம்பிக்கை உள்ளது,” என்றார்.

மெட்ராஸ் மேலாண்மை சங்க தலைவர் கூறுகையில்

'திறமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும், சிறியதாக இருந்தாலும் சமூகத்திற்கு உதவும் வகையில் இருப்பது முக்கியம். ஒரு நிறுவனம் பல லட்ச வேலைகளை தரும் என்று எதிர்பார்ப்பதை விட பல லட்சம் மக்கள் அவர்களுக்கான தொழில்களை அவர்களே உருவாக்கிக் கொள்ளலாம், அதனால் சிறிதாக தொடங்குங்கள் பெரிதாக சிந்தியுங்கள். மூவ் ஃபார்வார்ட்!" என்றார்.

இரண்டு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. மூன்று சிறிய அளவிலான - தொழில் முனைவோர்களது கண்டுபிடிப்புகள் (innovation) , தொழில் முனைவோர்களது சிந்தனைகள் (ideas) என இரண்டு பிரிவுகளில் தலா மூன்று நபர்களுக்கு என்று மொத்தம் ஆறு பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது .

சிறந்த சிந்தனைகளுக்கான விருது வாங்கியவர்கள் மற்றும் அவர்களின் சிந்தனைகள்:

தொழிற்நுட்பத்தால் 'மாசை' கட்டுப்படுத்த முடியுமா? தொழிற்சாலைகள் பெருகிவரும் சமயத்தில் இது சாத்தியமா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு சென்னை ஐ.ஐ.டியில் படித்த சரண்யா, மற்றும் அவரது குழுவின் கண்டுபிடிப்பு பதில் சொல்ல முன்வந்துள்ளது. 

'Electro Chemical Desalination cell' என்பது தான் இவர் முன்மொழிந்த தீர்வு. நச்சு கலந்த கழிவுகளை சுத்தம் செய்ய இதனால் இயலும் என்கிறார். வெறும் மனித, விலங்குகளின் சிறுநீரையும் எவ்வித ஆற்றலையும் பயன்படுத்தாமல் இவற்றைச் செய்யவும் இதன் துணைப்பொருட்களாக 'குரோமியம் சால்ட்', சுத்தமான தண்ணீர்' ஆகியன கொண்டு இயங்கும். இதன் தயாரிப்பு சிறியது, செலவு குறைந்தது, எந்த ஆற்றல் சக்தியும் தேவையில்லை, நீரைச் சுத்தப்படுத்தி சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் என்பது சரண்யா ஸ்ரீராமின் முன்வைக்கிற வாதம்.

சரண்யாவிற்கு பதில் விருதை பெற்றுக்கொண்ட அவரது ஆசிரியர் 'இது சரண்யாவின் நான்கரை ஆண்டு உழைப்புக்கு கிடைத்த வெற்றி,"என்று கூறி பெருமிதம் அடைந்தார்.

மின்சார உதவியுடன் கையால் இயக்கப்படும் சலவை (Electric Manually Operated Washing Machine) இயந்திரத்தை வடிவமைத்தவர் டாக்டர் எஸ் ரமணி. நவீனமாக இயங்கும் துணி துவைக்கும் இயந்திரத்தின் அறிவியலை மையமாக வைத்து இயங்கும் முறையில் வடிவமைக்கப்பட்ட ஒன்று இது. பெண்கள் கைகளில் துணி துவைக்கும் சிரமத்தை குறைக்க வேண்டும் என்ற சமூக அக்கரையில் இருந்து உதித்த சிந்தனையே இந்தக் கருவி .

”சிறந்த ஐடியாகளுக்கு விருது கொடுக்கும் ஐடியா, நல்ல ஒரு ஊக்கம் தரும் முன்னெடுப்பு," என்றார் அவர்.

அடுத்த கண்டுபிடிப்புக்கான சிந்தனை இ-சுவார்டு (E-Sword) . 'சுய பாதுகாப்பு காட்ஜெட்' என்பது ஆபத்தான சூழலில் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்ட இந்தக் கருவியில் விரல் ரேகையை பதித்தால் அடுத்த கணமே அவர்கள் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல்கள் பெற்றோருக்கும், காவல்துறைக்கும் சென்றுவிடும். இக்கருவி சக்தி வாய்ந்த ஆயுதமாகவும் உள்ளது, காரணம் இதில் இருந்து மின்சாரத்தைப் பாய்ச்சி எதிரியை நிலைகுலைய வைத்துவிடலாம்.

ஏற்கனவே தொழில் முனைவோராக உள்ளவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் என்ற பிரிவின் கீழ் விருது வாங்கியவர்கள்:

'சைபோ லிம்ப்' (cybo lymb) என்பது தான் வீரபாகுவின் கண்டுபிடிப்பு. 'சைபோ லிம்ப்' ஒரு ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம். முதுகெலும்பு நோய், போலியோ பாதிப்பு, நரம்பியல் மண்டல பாதிப்பு ஆகியவற்றால் நடக்க முடியாதவர்களை நடக்க வைக்கும் ஒரு கருவி இது. மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையில் இவரது கண்டுபிடிப்பு மாற்றத்தை ஏற்படுத்தும், விலை குறைவாகவும் எளிதில் பயன்படுத்தும் விதத்தில் உள்ளதனால் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் சைபர்நாய்ட் சுகாதாரமையத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார்.

அடுத்தது 'மினியான்''மினி' என்றால் சிறியது, 'ஆன்' என்பது ஆனில் இருக்கக் கூடிய மின் பொருட்களை கவனித்தே மின்சாரத்தை மிச்சப்படுத்தும் கருவி. இந்தச் ஆற்றலை உணரும் சிறிய கருவி மின்சாரத்தை சேமித்து நாட்டின் மின்சார சக்தியை சேமிக்கும் வல்லமை கொண்டது என்பது விருது பெற்ற 'மினியன்ஸ் லேப்ஸ்' யின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் கோகுல் ஸ்ரீநிவாசன் கூறியது.

புதிய முறையில் விவசாயக் கழிவுகளை பயன்படுத்தி ஆக்கப்பூர்வமாகவும், வீட்டுக்கு உபயோகப்படும் வகையில் வித்தியாசமாகவும் பல பொருட்களை உருவாக்குவது ம.முருகேசனின் கண்டுபிடிப்பு. கிராமத்தில் பலருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கவும், மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவும் இது பயன்படும் என்கிறார் இவர். 

முருகேசன் கயிறு உற்பத்தி மையத்தின் நிறுவனர் ஆவர். ஏற்கனவே கிராமப்புற மக்களின் வாழ்வில், குறிப்பாக பெண்களின் வேலைவாய்ப்பை உயர்த்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நிகழ்த்தி வருகிறார்

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய சிறப்பு விருந்தினரான டி.வி.எஸ் நிறுவனத்தின் தலைவர் திரு.சுரேஷ் கிருஷ்னா சிறப்புரையில்,

'வெற்றி பெறுவதற்கான வழி முறைகள் ஒன்று. வாழ்க்கையில் வெற்றி பெறுவது சாதாரணம் அல்ல அதுவும் ஒரு தொழில்முனைவோருக்கு வெற்றியை நோக்கிச் செல்லும் பணி என்பது கடும் உழைப்பினால் மட்டுமே சாத்தியமாகும். ஒரு சிறு நிறுவனத்தை பெரு நிறுவனமாகவும் அதை உலகளாவிய நிறுவனமாக்குவது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும். பெரும் ஐடியாக்களை காப்புரிமை வாக்கும் அளவிற்கு சிந்தனை இருக்க வேண்டும்,” என்றார்.

இதனை அடைவதற்கு தலைமை பண்பு மிக முக்கியம், ஒரு நல்ல ஆற்றல் மிக்க தலைவனால் தான் ஒரு சிந்தனையை செயலுக்கு கொண்டு வர முடியும், ஒரு பிரம்மாண்டமான கனவுகளோடு சிந்தித்தால் சாம்ராஜ்யத்தையே உருவாக்கலாம் .

அதை எப்படிச் செய்வது? நல்ல தொடர்புத் திறன் இருப்பது முக்கியம், நீங்கள் உணர்வதை தெளிவாக பிறருக்கு சொன்னால்தான் அது அவர்களை ஈர்க்கும். அதன் மூலம் நம்பிக்கையை சம்பாதிக்கலாம். நம்மை நம்பி வருபவர்களுக்காக நாம் உழைத்தால் அவர்கள் நமக்காக உழைப்பார்கள் என்பதே சூத்திரம். உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துங்கள், உங்களை நிரூபியுங்கள். எப்போதும் கற்றுக்கொள்ள தயாராகுங்கள் தவறைத் திருத்தி மறுபடியும் முயற்சியுங்கள், என்றார்.