புற்றுநோயை எதிர்த்து தன்னம்பிக்கையுடன் போராடி வெளிவந்த புஷ்பா ஆண்டனி 

புற்றுநோயை எதிர்த்துப் போராடத் தேவையான அனைத்து பலத்தையும் கடவுளிடமிருந்து பெற்று தற்போது புற்றுநோய் தொடர்பான பயத்தையும் தவறான நம்பிக்கைகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார் புஷ்பா.

0

இது ஒரு HCG ஸ்பான்சர் செய்யப்பட்ட கட்டுரை

பொழுது விடியும் நேரம். அன்று வியாழக்கிழமை. கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் கெலக்கம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்கெனவே தங்களைத் தயார்படுத்திக் கொண்டு தேவாலயத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்களுள் புஷ்பா அந்தோனியும் ஒருவர். அவரது வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் சுறுசுறுப்பாக நடந்து தேவாலயத்தை வந்தடைகிறார். மேடையில் காலை மாஸ் படிக்கும்போது அவரது கண்கள் பிரகாசிக்கிறது. 51 வயதான இவர் இந்த சடங்கை மிகவும் முக்கியமானதாக கருதுகிறார். அவரது வாழ்க்கையில் தொடர்ந்து பல துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் அரங்கேறியது. அதன் உச்சகட்டமாக அவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டது. இவை அனைத்தையும் எதிர்கொள்ள கடவுள் மீதான அவரது திடமான நம்பிக்கை உதவியது.

அவரது சமூகத்தினரைப் போலவே அவரும் தனது குடும்பத்தினருடன் ஒரு சிறிய ரப்பர் எஸ்டேட்டில் வசித்து வந்தனர். குடும்பத்தின் வருமானத்திற்கு இதுவே முக்கிய மூலதனமாக இருந்தது. 2007-ல் கடும் மழை மற்றும் காற்று காரணமாக அவர்களது வீடு கடும் சேதத்திற்கு ஆளானது. பழுது பார்க்கப்பட்ட பின்பும் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர்களால் அங்கே வசிக்க முடியாமல் போனதால் அதிர்ச்சிக்குள்ளானார்கள். வீட்டை புதிதாக கட்டும் வரை அருகிலிருந்த கிராமத்தில் வசித்து வந்த அவரது சகோதரி வீட்டில் தங்கவேண்டிய சூழல் புஷ்பாவிற்கு ஏற்பட்டது.

எப்போதும் பிரச்சனை தனியாக வராது. ஒன்றைத் தொடர்ந்து அடுத்து நீண்டு கொண்டே இருக்கும் என்கிற வரிகளுக்கேற்ப ஓரளவு நிலைமை சீராகிக்கொண்டே வந்த நிலையில் புஷ்பா தனது மார்பகத்தில் ஒரு கட்டி இருப்பதைப் பார்த்தார். வேறு ஒரு சந்தர்ப்பமாக இருந்திருந்தால் இது குறித்து அதிகம் சிந்தித்திருக்கமாட்டார். ஆனால் அப்போதுதான் அவரது தோழி ஒருவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது குறித்து அவரிடம் கூறியிருந்தார். அந்த சம்பவம் நினைவிற்கு வந்தவுடன் தன்னுடைய சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள மருத்துவமனைக்குச் சென்றார். அது ஹார்மோன் கட்டி என்று முதலில் மருத்துவர் தெரிவித்தார். ஒரு மாத காலத்திற்கு மருந்துகள் பரிந்துரைத்தார். இருந்தும் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை. பதற்றத்துடன் மறுபடி மருத்துவரிடம் சென்றார். இந்த முறை மருத்துவர் தலசேரி என்கிற அருகிலுள்ள நகரத்திலுள்ள புற்றுநோய் மருத்துவரிடம் ஆலோசனை கேட்குமாறு அறிவுறுத்தினார். அவர் பயந்ததுபோலவே ஆரம்ப நிலை புற்றுநோய் என்று முடிவுகள் உறுதிசெய்தன.

குடும்பம் குறித்த கவலை

உடனடியாக அவரது குடும்பம் குறித்த எண்ணங்களே அவருக்கு தோன்றியது. அவரது மகன் அப்போதுதான் பத்தாம் வகுப்பு முடித்திருந்தார். இளைய மகள் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். பல்வேறு துரதிர்ஷ்ட்டவசமான சூழல்கள். அதன் தொடர்ச்சியாக ஒரு புதிய சோகம். தனது கணவர் எப்படி இதைத் தாங்குவார் என்று நினைக்கும்போதே புஷ்பாவின் நெஞ்சம் வெடித்துவிடும் போல இருந்தது. எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று குழம்பினார். ஒட்டுமொத்த திறனையும் ஒன்று திரட்டி புற்றுநோயை தோற்கடிக்கத் தீர்மானித்தார்.

”நாம் அனைவரும் ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். அதற்கு புற்றுநோய் மட்டுமே காரணமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. கடவுளின் ஆணைப்படி எது நடக்கவேண்டுமோ அது நிச்சயம் நடந்தே தீரும். அதைப் புன்னகையுடன் ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தேன்.” 

“உங்களது வழியில் நீங்கள் சந்திக்கும் அனைத்து சவால்களையும் குறை சொல்லாமல் எதிர்கொள்ளவேண்டும். நமது தவத்திற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். எனவே பயப்படுவதற்கு பதிலாக கடவுள் மற்றும் என்னுடைய மருத்துவர் மீது நம்பிக்கை வைத்து சூழ்நிலையை தைரியமாக துணிந்து எதிர்கொள்ளத் தீர்மானித்தேன்.” என்றார்.

புற்றுநோய் இருப்பதை உறுதிசெய்த பிறகு முதல் வேலையாக நோய் குறித்தும் சிகிச்சை குறித்தும் அனைத்து விவரங்களையும் படித்துத் தெரிந்துகொண்டார். தலசேரியிலுள்ள புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவர்கள் அறுவைசிகிச்சை, கீமோதெரபி, ரேடியேஷன் ஆகியவற்றைப் பரிந்துரைத்தனர். விருப்பப்பட்டால் ஏதாவது பெரிய மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறலாம் என்றும் அறிவுறுத்தினர். மற்ற மருத்துவர்களை ஆலோசித்தார். சிறப்பான சிகிச்சை கிடைக்கும் என்று உறுதிசெய்துகொண்ட பிறகு உடனடியாக சிகிச்சையைத் தொடங்க முடிவெடுத்தார்.

தன்னம்பிக்கையை குறையவிடாமல் எதிர்த்துப்போராடினார்

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலகட்டம் குறித்து நினைவுகூறுகையில் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த மற்ற பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி மற்றவர்களுடன் வெளிப்படையாக ஒருங்கிணையாமல் தனிமைப்படுத்திக் கொண்டிருந்ததை கவனித்ததாக தெரிவித்தார். அவர்கள் தங்களை அமைதிப்படுத்திக் கொள்ள தன்னால் இயன்றவரை உதவினார். அவர்களை குறுகிய வட்டத்திலிருந்து வெளியே கொண்டு வந்து ஒருவரோடொருவர் பேசி ஒருங்கிணைந்து கொள்ள உதவினார் புஷ்பா.

அவர்களில் ஒருவருக்கு முற்றிய நிலையில் புற்றுநோய் இருந்தது. நோய் இருப்பது விரைவாக கண்டறியப்பட்டாலும் பயம் மற்றும் அறியாமை காரணமாக உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார். இறுதியாக தாமதமாகவே மருத்துவமனையை வந்தடைந்தார். உடல்நிலையில் ஏதாவது சிறிய மாற்றத்தை உணர்ந்தாலும் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள இந்த உதாரணத்தையே அனைவருக்கும் சுட்டிக்காட்டி ஊக்கமளித்தார்.

”மருத்துவர் அறிவுறுத்திய ஒவ்வொரு விஷயத்தையும் தவறாமல் பின்பற்றினேன். உறவினர்களிடமும் ஆலோசனை கேட்டேன்.” என்றார்.

ஒன்பது வருடங்கள் கடந்தன. புஷ்பா ஆரோக்கியமானவராகவே காட்சியளித்தார். மூன்று மணிக்கு எழுந்தார். சமையலை முடித்தார். ஆன்மீக உணர்வுடன் தவறாமல் சர்ச்க்கு சென்றார். கடுமையாக உழைத்தார். ரப்பர் எஸ்டேட் பணிகளில் கவனம் செலுத்தினார். ரப்பர் ஷீட்கள் தயாரித்தார். ஆடுகளை பராமரித்தார். காய்கறி தோட்டத்தைக் கவனித்துக் கொண்டார். பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்களுடன் சகோதரி போல பழகினார். மார்பக புற்றுநோய் குறித்தும் குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

உற்சாகம்

புற்றுநோயிலிருந்து மீண்டெழுந்ததிலிருந்து அவரது சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அயராது உழைக்கிறார். புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ஆதரவளிக்கும் குழுவிற்கு தலைவரானார். விழிப்புணர்வு முகாம்களில் அவரது அனுபவங்களை பகிர்ந்துகொண்டு மக்களுக்கு உற்சாகமூட்டும் விதத்தில் பேசினார். அதன் பிறகு ரப்பர் எஸ்டேட் பணிகளில் அதிக நேரம் செலவிட நேர்ந்ததால் விழிப்புணர்வு முகாம்களுக்கு அவரால் முறையாக செல்ல இயலவில்லை.

நோய் குறித்தும் பல்வேறு சிகிச்சை முறைகள் குறித்தும் விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பல தவறான நம்பிக்கைகள் மக்களிடையே இருப்பதை உணர்ந்தார். கீமோதெரபியினால் முடியை இழக்க நேரிடுமா என்பதுதான் மக்கள் கேட்கும் முதல் கேள்வி. இந்தக் கவலை நியாயமானதுதான். ஏனெனில் கேரள பெண்கள் அழகான நீளமான முடி கொண்டவர்கள். இது குறித்து அதிகம் பெருமைப்பட்டுக்கொள்பவர்கள். புற்றுநோய் சிகிச்சை குறித்தும் சிகிச்சைக்குப் பிறகு செய்யவேண்டியவை குறித்தும் நோயாளியிடம் விரிவாக எடுத்துரைத்தார். இவ்வாறு செய்வதால் பல பெண்களுக்கு அவர்களது குடும்பத்திற்கும் உதவமுடிந்தது குறித்து மகிழ்ச்சியடைந்தார்.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு

புற்றுநோய் குறித்த முழுமையான விழிப்புணர்வை சமூகம் பெறுவதற்கு மேலும் நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் என்கிறார் புஷ்பா. புற்றுநோய் குறித்த தவறான கருத்துகளால் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களை சமூகம் ஒதுக்கிவைப்பது ஆத்திரமூட்டுவதாக தெரிவிக்கிறார். குறிப்பாக மார்பக புற்றுநோய் பரம்பரை வியாதியாகவும் இருக்கலாம் என்பதால் அதுகுறித்த பயம் அதிகமாக காணப்படுகிறது.

இப்படிப்பட்ட மனநிலையை அவரது வீட்டிலேயே சந்தித்தார். அவரது உறவினரின் மகனுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. குடும்பத்தினருக்கு பெண்ணை பிடித்திருந்தாலும் பெண்ணின் அம்மாவிற்கு மார்ப்க புற்றுநோய் இருந்ததால் அவர்கள் தயக்கம் காட்டினர். அந்த நோய் பெண்ணையும் பாதிக்கக்கூடும் என்று பயந்தனர்.

”அப்படியானால் என்னுடைய மகளுக்கு திருமணமே நடக்காதா?” என்று வியந்தார் புஷ்பா.

கேரளா படிப்பறிவு அதிகமுள்ள பகுதி என்பதால் நோய் என்பது யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தாக்கக்கூடும் என்பதை எடுத்துக்கூறி உறவினரின் மகன் தனது குடும்பத்தினரை சம்மதிக்கவைத்தார். அவர்களது திருமணம் நடைபெற்று தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

புற்றுநோய் சம்பந்தப்பட்ட கதைகள் அனைத்தும் இப்படிப்பட்ட மகிழ்ச்சி நிறைந்த முடிவைக் காணவேண்டும் என்று புஷ்பா விரும்புகிறார். இதற்காகவே அவர் அயராது உழைக்கிறார்.