இயற்கையோடு ஒன்றி வாழ்வதை சாத்தியப்படுத்தி இருக்கும் கேரள கிராமம்!

0

இந்தியா முழுவதும் விவசாயத்திற்கு உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் அதிகளவில் பயன்படுத்தப்படுவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் கேரளாவின் கோழிக்கோடு பகுதிக்கு அருகில் உள்ள சிறியளவிலான மக்கள் குழு ஒன்று ஆரோக்கியமான நடைமுறையான ஆர்கானிக் விவசாயத்திற்கு மாறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

”விவசாயத்தின் அடிப்படை நோக்கம் அறுவடை மட்டுமல்ல. அது நமது வாழ்க்கை சுழற்சியை முழுமையாக்கும் முயற்சியாகும். இதை ’நிறவு’ (Niravu) சமூகத்திற்கு தெரிவிக்க விரும்புகிறது,” 

என்று VillageSquare.in-க்கு தெரிவித்தார் பசுமை ஆர்வலர் மற்றும் நிறவு திட்ட இயக்குநரான பாபு பரம்பத்.

’நிறவு’ என்பது நிறைவைக் குறிக்கிறது. பழமையான வாழ்க்கைமுறையை மீட்டெடுக்கும் ஒரு குழுவினரின் வெற்றிகரமான முயற்சிக்கு இது சான்றாகும். இதில் ஆர்கானிக் விவசாயத்திலும் இயற்கைக்கு உகந்த நடவடிக்கைகளிலும் மக்கள் ஒரு குழுவாக ஈடுபட்டுள்ளனர். கோழிக்கோடு பகுதிக்கு புறநகரில் அமைந்துள்ள வெங்கரி என்கிற சிறு கிராமத்தைச் சேர்ந்த 101 குடும்பங்கங்கள் ’நிறவு’ என்கிற முயற்சியை குடியிருப்போர் சங்கமாக துவங்கினர்.

2006-ம் ஆண்டு கேரளாவின் அப்போதைய முதலமைச்சர் விஎஸ் அச்சுதானந்தன் தனது ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவின் உரையில் சமூக பணியாளர்கள் கேரளாவின் வளர்ச்சியில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார். அந்த வார்த்தைகளை மனதில் கொண்டே வெங்கரியில் உள்ள சில சமூக ஆர்வலர்கள் அருகில் இருக்கும் ப்ராவிடன்ஸ் பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த என்எஸ்எஸ் மாணவர்களின் உதவியுடன் கணக்கெடுப்பு ஒன்றை நடத்த திட்டமிட்டனர்.

அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்

இவர்கள் நூறு மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சியளித்தனர். இவர்கள் கிராமங்களில் உள்ள 1,824 வீடுகளுக்குச் சென்று தகவல்களை சேகரித்தனர். அதன் முடிவுகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. அங்கே வசிக்கும் பலருக்கு பல்வேறு நோய்கள் இருந்தது. அதில் ஏழு பேருக்கு புற்றுநோய் இருந்தது. பன்னிரண்டாண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை அபாயகரமானதாக கருதப்பட்டது. அதிலும் குறிப்பாக வெங்கரி போன்ற மக்கள் தொகை குறைவாக இருக்கும் பகுதியில் அச்சுறுத்தும் எண்ணிக்கையாகவே கருதப்பட்டது.

அதுவரை மக்களிடம் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களே புற்றுநோயை ஏற்படுத்தும் என்று விளம்பரங்கள் சுட்டிக்காட்டியது. ஆனால் இந்த ஏழு நோயாளிகளில் ஐந்து பேர் பெண்கள். இந்த முயற்சியில் ஈடுபட்ட ஆர்வலர் நிபுணர்களிடம் இது குறித்து ஆலோசனை கேட்டார். ப்ளாஸ்டிக் கழிவுகளை எரிக்கும்போது வெளியேறும் நச்சுப்பொருட்களும் அரிசி, காய்கறிகள் போன்றவற்றில் இருக்கும் ரசாயன பூச்சிக்கொல்லிகளும் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதைத் தெரிந்துகொண்டார்.

”நாங்கள் ப்ளாஸ்டிக் பொருட்களை வீட்டில் பயன்படுத்தியதே கிடையாது. எங்களது இளம் வயதில் எங்கள் உணவிற்குத் தேவையான அரிசியும் காய்கறிகளும் வீட்டின் புழக்கடையிலேயே பயிரிடப்பட்டது,” என்றார் 76 வயதான லஷ்மிகுட்டியம்மா.

“கீரை, பாகற்காய், வெள்ளரி, பூசணி, முருங்கை ஆகியவற்றை எங்கள் வீட்டிலேயே வளர்ப்போம்,” என்றார் மற்றொரு பாட்டி. வெங்கரி பகுதி அதிகம் பேர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருந்த பகுதியாக இருந்தபோதும் படிப்படியாக மக்கள் பிற தொழில்களை நோக்கி நகரத் தொடங்கினர்.

”மக்கள் உடலுழைப்பு அதிகம் தேவைப்படாத பணிகளில் இணைய முயற்சித்தனர். குழந்தைகளை மேற்படிப்பிற்கு அனுப்பினர். அவர்களுக்கு விவசாயத்தில் ஆர்வம் குறையத் துவங்கியது,” என்று லஷ்மிகுட்டியம்மா VillageSquare.in-க்கு தெரிவித்தார். வீட்டின் புழக்கடை பராமரிக்கப்படாமல் ப்ளாஸ்டிக் கழிவுகளால் நிரப்பட்டது.

முயற்சியின் துவக்கம்

ஒவ்வொரு வீட்டிற்குப் பின்னாலும் குவிந்து கிடக்கும் கழிவுகள் இந்த ஆர்வலர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. இதற்கான பரிந்துரைகள் மூத்தோர்களிடமிருந்தே கிடைத்தது.

”ஒவ்வொரு குடும்பமும் தங்களது வீட்டைச் சுற்றியுள்ள இடங்களை சுத்தப்படுத்தவேண்டும். இதற்கு அரை மணி நேரம் மட்டுமே தேவைப்படும். ப்ளாஸ்டிக், கண்ணாடி, உலோகங்கள் போன்றவற்றை சேகரித்து வகைப்படுத்துங்கள். பயோகழிவுகளை உரமாக பயன்படுத்தலாம்,” என்றனர்.

இது முயற்சியை எளிதாக்கியது. மக்காத குப்பைகள் மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பப்பட்டது. இந்தக் குழுவைச் சேர்ந்த ஆர்வலர்கள் பிரச்சாரங்களையும் விழிப்புணர்வு வகுப்புகளையும் ஏற்பாடு செய்தனர். ஒவ்வொரு குடும்பத்தையும் அணுகி ஆதரவு கோரினர். சோம்பேறித்தனமான பழக்கத்திலிருந்து அக்கறையுடன்கூடிய முயற்சிக்கு மக்களை மாற்றுவது எளிதான செயலாக இருக்கவில்லை.

இறுதியாக 101 குடும்பங்கள் ‘நிறவு’ என்கிற ப்ராண்டின் கீழ் ஒன்றிணைந்து குடியிருப்போர் சங்கத்தை அமைத்தது. பின்னர் இந்த சங்கம் 2009-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

ஒவ்வொரு குடும்பமும் காய்கறி வளர்ப்பில் ஈடுபடத் துவங்கியது. மூன்று அல்லது நான்கு சிறு தொட்டிகளில் துவங்கி ஏக்கர் கணக்கிலான நிலங்கள் வரை அவரவரிடம் இருக்கும் இடத்தைப் பொருத்து இந்தப் பணியில் ஈடுபட்டனர். நெல் சாகுபடியும் மீண்டும் துவங்கப்பட்டது. முந்தைய தலைமுறையினரும் அவர்கள் பாதுகாத்து வந்த பாரம்பரிய விதைகளை மகிழ்ச்சியாக ஒப்படைத்தனர். மாட்டு சாணத்தையும் உரமாகப் பயன்படுத்தினர்.

அதற்கு பதிலாக ஆர்கானிக் வைக்கோலை தீவனமாக வழங்கினர். அனைத்து நடவடிக்கைகளிலும் நிறவு உறுப்பினர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாணவர்கள் கைகோர்த்து செயல்பட்டனர். ப்ராவிடன்ஸ் கல்லூரியின் என்எஸ்எஸ் பிரிவினர் தாமாக முன்வந்து இந்த திட்டங்களில் பங்கேற்றனர்.

”நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்தே நிலங்களை உழுதோம், விதை விதைத்தோம், களை பறித்தோம், நீர் பாய்ச்சினோம், உரமிட்டோம், அறுவடை செய்தோம். விவசாயம் எங்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. நாங்கள் கிராமத்திலிருந்து அதிக நடைமுறை அறிவை பெற்றோம். முதியோர் எங்களை அவர்களது குடும்ப உறுப்பினர்களாகவே நடத்தினர்,” என முன்னாள் மாணவர் நினைவுகூர்ந்தார்.

பாதுகாக்கப்பட்ட கனவு

”தரமான மாற்றம் எப்போதும் விரைவாக நடக்காது. நாங்கள் வழிகாட்டலுக்காகவும் ஆதரவிற்காகவும் விவசாயத் துறையை அணுகியபோது அவர்கள் எதிர் வாதங்களையே முன்வைத்தனர். ’பிரச்சனையில் சிக்கிக்கொள்ளாதீர்கள், தொழிலாளர்கள் போதுமானதாக இல்லை, புதிய தலைமுறையினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், விதைகள் இல்லை, மிகப்பெரிய நஷ்டத்தில் முடியும் என பல்வேறு எதிர்மறை கருத்துகளையே முன்வைத்தனர். நாங்கள் அவர்களிடம் மறுத்து பேசவில்லை,” என பாபு தெரிவித்தார்.

”விவாதங்கள் தொடர்ந்தன. மூத்த விவசாயிகள் பாதுகாத்த பாரம்பரிய விதைகளை சேகரித்தோம். எங்களது பகுதியில் இருந்து திருமணமாகி வேறு பகுதிகளுக்குச் சென்ற பெண்களை அந்தந்த பகுதிகளில் இருந்து விதைகளை சேகரிக்கக் கோரினோம். எங்கள் பகுதிகளுக்கு மணமுடித்து வந்த பெண்களை அவர்களது சொந்த பகுதிகளில் இருந்தும் விதைகளைக் கொண்டு வரச் சொன்னோம். பல அரிய விதை வகைகள் அழியாமல் பாதுகாக்க இது உதவியது,” என்றார்

முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் ஒட்டுமொத்த விவசாய செயல்முறையை ஒரு மிகப்பெரிய பண்டிகையாகவே மாற்றினர். அமைச்சர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் இந்தப் புதிய முயற்சியைக் காண வெங்கரிக்கு வருகை தந்தனர். நிறவு உறுப்பினர்கள் பொதுக் குளங்களை சுத்தப்படுத்தினர். குழாய் இணைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இது நீர் பாசனத்தை எளிதாக்கியது. கழிவுகள் உற்பத்தியாகும் இடங்களிலேயே அவை வகைப்படுத்தப்படுவதால் சுற்றுப்புறம் கழிவுகளற்று காணப்பட்டது. உணவுப் பழக்கம் மெதுவாக மாறியது. ஆர்கானிக் காய்கறிகள் சுவையையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தியது. உடல் நலக் கோளாறுகள் குறைந்தன.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பிடி கத்திரிக்காய் வகைக்கு எதிராக போராட்டம் நடந்த சமயத்தில் நிறவு 1,00,000 பாரம்பரிய கத்திரிக்காய் விதைகளை விதைத்து இந்த இயக்கத்தில் பங்கேற்றது. இந்த கத்திரிக்காய் வகை பின்னர் அதிகாரிகளால் வெங்கரி கத்திரிக்காய் என்றே வகைப்படுத்தப்பட்டது.

ஆர்கானிக் வார்டு

இது கேரளாவில் முதல் ஆர்கானிக் வார்டாக அறிவிக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு முதலமைச்சர் மாநிலத்தின் ஆர்கானிக் கொள்கையை அறிவிக்க வெங்கரி பகுதியையே தேர்ந்தெடுத்தார். அடிக்கடி நிறவு முயற்சியின் சாதனைகள் தலைப்புச் செய்தியாயின. தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்தது. ஆர்கானிக் ஆதரவாளர்கள் மற்றும் ஆய்வுக் குழுக்கள் இவர்களது சாதனைகளைக் காண வந்தனர். இந்த முயற்சிக்கு பல்வேறு நன்கொடைகளும் ஆதரவும் வழங்கப்பட்டது.

நிறவு முந்தைய தலைமுறையின் அனுபவங்களுக்கும் இளம் தலைமுறையின் தொழில்நுட்ப அறிவிற்கும் சமமாக மதிப்பளிக்கிறது. ”நாங்கள் குழந்தைகளை புதிய இடங்களுக்கும் புதிய கலாச்சாரங்களுக்கும் அழைத்துச் சென்று அவர்களது அணுகுமுறையை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறோம். பயணம் அறிவைப் பெற உதவுகிறது. மக்களுடன் உரையாடி அனுபவங்களைப் பெறுவார்கள்,” என்று VillageSquare.in-க்கு தெரிவித்தார் நிறவு உறுப்பினரான பிரதீப்.

ஆர்கானிக் வாழ்க்கை முறை

நிறவு டிசம்பர் மாதம் ஆர்கானிக் வாழ்க்கை முறையில் கவனம் செலுத்தி ’மிடோரி’ (Midori) என்கிற கண்காட்சியை முதல் முறையாக அறிமுகப்படுத்தியபோது அது மீண்டும் தலைப்புச் செய்தியானது. இந்த கண்காட்சியை 101 உறுப்பினர்களும் தங்களது வீட்டில் ஏற்பாடு செய்திருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் தனித்துவமான மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டது.

பசுமை என்பதே ‘மிடோரி’ என்கிற ஜப்பானிய வார்த்தையின் அர்த்தமாகும். இந்நிகழ்வு ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அஞ்சலி இது குறித்து பகிர்ந்துகொள்கையில்,

ஒவ்வொரு வீடும் ஒரு புதிய மாதிரியுடன் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு வீட்டில் மொட்டை மாடியில் தோட்டம் போடுவது பற்றி விவரிக்கையில் மற்றொரு வீட்டில் முறையான சுகாதார அமைப்பு குறித்து காட்சிப்படுத்தப்பட்டது. மாட்டு கொட்டகைக்கான மாதிரி ஒன்று இடத்தை சுத்தமாக வைத்திருப்பது குறித்து சுட்டிக்காட்டியது. நாங்கள் ஒன்றிணைந்து மாநிலத்தில் அழியும் நிலையில் உள்ள காசர்கோட் குள்ளன் மாடு வகையைப் பாதுகாத்து வருகிறோம்,” என்று VillageSquare.in-க்கு தெரிவித்தார்.

முயற்சிகளை விரிவுபடுத்துதல்

நிறவு ஒரு குடியிருப்போர் சங்கமாக துவங்கப்பட்டு அபார வளர்ச்சியடைந்து இரண்டாண்டுகளுக்கு முன்பு ஐந்து முக்கிய பிரிவுகளைக் கொண்ட நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது.

"எங்களது மொத்த நிலப்பரப்பான 63 ஏக்கரில் பாதி அளவை திட்டமிடப்பட்ட தன்னலமற்ற முயற்சிகளால் ஆர்கானிக் விவசாய இடமாக மாற்றியுள்ளோம். NABARD உதவியுடன் நிறவு ஆர்கானிக் பொருட்களுக்கென ஒரு கடையை திறந்துள்ளோம்,” என்றார் இயற்கைக்கு உகந்த விவசாயத்திற்கு பொறுப்பேற்றுள்ள ரதிகலா.

வெற்றிகரமான ஆர்கானிக் விவசாயம் மற்றும் கழிவுகளற்ற முறையை மேற்கொண்டது மட்டுமல்லாமல் நிறவு நீர் வளங்களை நிர்வகித்தும் மழை நீரை சேகரித்தும் நீர் பாதுகாப்பில் ஈடுபடத் துவங்கியுள்ளது. சூரிய சக்தித் தகடுகள், பயோகேஸ், எல்ஈடி விளக்குகள் போன்றவற்றை பயன்படுத்த ஊக்குவித்து மின்சார பாதுகாப்பிலும் ஈடுபடத் துவங்கியுள்ளது.

நிறவு இன்று பல்வேறு கழிவு மேலாண்மை திட்டங்களுக்கு ஆதரவளிக்கிறது. காலிகட் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஐஐஎம் கோழிக்கோடு போன்றவை இவர்களது முன்னணி வாடிக்கையாளர்களாகும். பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உள்ளூர் அமைப்புகள் மற்றும் அலுவலகங்கள் போன்றவை தொழில்நுட்ப ஆதரவிற்காக இவர்களை அணுகுகின்றன.

”இயற்கையோடு ஒன்றி வாழ்வது சாத்தியமே என்பதை நிரூபித்துள்ளோம்,” என்றார் பரம்பத்.

ஆங்கில கட்டுரையாளர் : சித்ரா அஜீத் | தமிழில் : ஸ்ரீவித்யா

(பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரை VillageSquare.in முதலில் ஆங்கிலத்தில் வெளியானது.)