அமைதிக்காக 1,000 கொக்குகள்: ஆனைமலை அரசுப் பள்ளிக் குழந்தைகள் 'ஓரிகாமி'யில் அசத்தல்

சடாகோ நினைவுதினத்தில் 1,000 வண்ணக் காகிதக் கொக்குகளில் தோரணம் அமைத்து அசத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்.

4

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டபோது சடாகோ சசாகிக்கு வயது இரண்டு. அப்போது அந்தக் குழந்தைக்கு பெரிதாக எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், அவளது 12-வயதில் கழுத்திலும் காதுகளிலும் வீக்கங்கள் ஏற்பட்டன. அணுகுண்டு கதிர்வீச்சு காரணமாக அவளுக்கு ரத்தப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது அப்போதுதான் தெரிந்தது.

'ஆயிரம் கொக்குகளை ஒரிகாமி முறையில் செய்து முடித்தால் கடவுள் நினைப்பதை தருவார்' என்கிற ஜப்பானிய நம்பிக்கையை சடாகோவுக்குப் பகிர்ந்தாள் சிஜுகோ. மருத்துவ சிகிச்சை பெற்று வந்த சடாகோ நம்பிக்கையுடன் கிடைக்கின்ற காகிதங்களில் கொக்குகள் செய்யத் தொடங்கினாள். 644 கொக்குகளைச் செய்து முடித்தபோது கண்மூடினாள். எஞ்சிய 356 கொக்குகளை அவளது நண்பர்கள் செய்து அவளுக்குப் பிரியா விடை கொடுத்தனர்.

சடாகோவின் நினைவாக, அவளைப் போலவே இறந்த எண்ணற்ற குழந்தைகளின் நினைவாக 1958-ல் ஹிரோஷிமா அமைதிப் பூங்காவில் கொக்கைப் பறக்கவிடும் சடோகாவின் சிலை நிறுவப்பட்டது. அணு ஆயுதப் போருக்கு எதிராக அமைதியின் சின்னமாகத் திகழும் அந்தச் சிலைக்கு ஆண்டுதோறும் காகிதக் கொக்கு மாலைகளை அமைதி நாள் அன்று ஜப்பான் நாட்டுக் குழந்தைகள் சூட்டுவது இன்றளவும் தொடர்கிறது.

சடாகோவின் சிலையின் கீழ் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகம்:

'இதுதான் எங்கள் அழுகுரல்
இதுதான் எங்கள் பிரார்த்தனை
உலக அமைதி!'

இனி யாரும் தன்னைப் போல் உயிரிழக்கக் கூடாது என்ற சடாகோவின் விருப்பத்தை, அவளது நினைவுதினமான அக்டோபர் 25-ல் ஆயிரம் ஓரிகாமி கொக்குகள் செய்து தங்களது விருப்பமாக நிறுவியிருக்கிறார்கள் ஆனைமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக் குழந்தைகள்.

அணு ஆயுதத்துக்கு எதிராகவும், உலக அமைதிக்காகவும் சடாகோவை நினைவுகூர்ந்து இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அரசுப் பள்ளி வளாகத்தில் தோரணமாக வசீகரித்த 1,000 வண்ணக் காகிதக் கொக்குகளை ரசித்த அப்பகுதி மக்கள் தங்கள் பிள்ளைகளின் குழந்தைகளின் முயற்சியைக் கண்டு வியந்தனர்.

இந்த நிகழ்வு குறித்து அப்பள்ளியின் ஆசிரியர் விஸ்வநாதன் கூறும்போது, 

"சடாகோ சாசாகி நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப்படத்துக்கு 1,000 ஓரிகாமி கொக்குகளால் எங்கள் மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தது நெகிழ்ச்சிக்குரிய நிகழ்வு. எங்கள் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் சுமார் 200 மாணவர்களின் ஒட்டுமொத்தமான பங்களிப்பில் இது சாத்தியமானது.”

ஆழியாறில் குழந்தைகளுக்காக இயங்கி வரும் 'ஸ்பேஸ்' அமைப்பில் ஓரிகாமி பயிற்சி முகாம் நடந்தது. ஓரிகாமி கலைஞரும் பயிற்சியாலருமான தியாக சேகர் நடத்திய அந்த முகாமில் எங்கள் பள்ளி மாணவர்கள் சிலர் பங்கேற்றனர். காகிதத்தில் கலைத்திறனை வெளிப்படுத்தும் வித்தையைக் கற்ற அந்த மாணவர்கள், பள்ளியின் மற்ற மாணவர்களுக்கும் தாங்களாகவே சொல்லித் தந்தனர். அதன் தொடர்ச்சியாகவே சடாகோ நினைவுதினத்தில் 1,000 ஓரிகாமி கொக்குகள் செய்து அனுசரிக்க முடிவு செய்தோம்.

தியாக சேகரின் 'கொக்குகளுக்காகவே வானம்' புத்தகத்தை வாசித்தபிறகு இப்படி ஒரு யோசனை வந்தது. ஆறாம் வகுப்பில் சடாகோ குறித்த பாடமும் இருக்கிறது. எல்லா மாணவர்களுக்குமே ஓரிகாமியில் ஈடுபாடு இருந்ததால் 1,000 காகித கொக்குகளை விரைந்து செய்து முடித்தனர். இந்த நிகழ்வில் தியாக சேகரையும் சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவித்தோம்.

எங்களின் இந்த முயற்சி மூலம் மாணவர்களுக்கு அணு ஆயுதங்களின் விளைவுகள், அணுக் கதிர்வீச்சு பாதிப்புகள் குறித்து முழுமையாகத் தெரிய வழிவகுத்தோம். சுடாகோவுக்கு 1,000 ஓரிகாமி கொக்குகளை மாலையாக அணிவித்த மாணவர்கள் உலக அமைதிக்கான தங்களது பங்களிப்பையும் விதைத்தனர். 

“ஆனைமலைப் பகுதியில் பெரும்பாலான மக்கள் கூலித் தொழிலாளர்கள். தங்கள் பிள்ளைகள் நடத்திய இந்த நிகழ்வை நேரில் பார்த்துவிட்டு, பெற்றோர்கள் சிலர் தங்கள் கைகளில் இருந்த ரூ.50, ரூ.100 தொகையை பள்ளிக்காக பயன்படுத்துங்கள் என்று சொல்லிக் கொடுத்ததே இந்நிகழ்வின் மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கிறேன்," என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
ஆசிரியர்கள் உடன் ஓரிகாமி கலைஞர் தியாக சேகர் (வலது)
ஆசிரியர்கள் உடன் ஓரிகாமி கலைஞர் தியாக சேகர் (வலது)

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, பயிற்சிகளையும் அளித்த ஓரிகாமி கலைஞர் தியாக சேகர், "ஓரிகாமி காகித மடிப்புக்கலையில் நம் மாணவர்களின் ஈடுபாட்டையும் திறமையையும் பறைசாற்றும் வகையில் ஆனைமலை அரசுப் பள்ளி மாணவர்கள் நடத்திய இந்த நிகழ்வு அமைந்தது. படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும் ஓரிகாமி கலை மூலம் மருத்துவம் தொடங்கி விண்வெளி வரை வேலைவாய்ப்புகளும் உள்ளன. ஒரு பள்ளியில் அனைத்து மாணவர்களும் இணைந்து ஆயிரம் ஓரிகாமி கொக்குகளை உருவாக்கி சடாகோவுக்கு மாலையாக அணிவித்து நினைவுகூர்ந்தது, தமிழகத்திலேயே இதுதான் முதல் நிகழ்வாக இருக்கும்," என்றார் பூரிப்புடன்.

ஆனைமலை ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப்பள்ளி - பொங்காளியூர் மாணவர்கள் கைவண்ணத்தில் 1,000 ஓரிகாமி கொக்குகளை மொத்தமாக கண்காட்சி போல் பார்த்தபோது நினைவுக்கு வந்த சடாகோவின் கடைசி வார்த்தைகள்:

"நான் உங்கள் சிறகுகளில் அமைதியை எழுதுகிறேன். நீங்கள் இந்த பூமி முழுவதும் பறந்து செல்லுங்கள்!"
இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Related Stories

Stories by கீட்சவன்