'உங்களாலும் சாதிக்க முடியும்'

வெற்றி கண்ட தொழில்முனைவர்களின் கதைகளை தொகுப்பாக்கி பிரகாஷ் ஐயர் வெளியிட்டுள்ள புத்தகம்!

4

சாரல் வீசிய அழகிய மாலைப் பொழுதில் சென்னையின் பிரதான ஹோட்டலில் தொழில்முனைவர்கள் மற்றும் சாதிக்கத் துடிப்பவர்கள் ஒன்று கூடி இருந்தனர். பிரகாஷ் ஐயர் எழுதிய ‘யூ டூ கேன்’ (You Too Can) அதாவது ’உங்களாலும் முடியும்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தேறியது. 

விழாவில்  நேச்சுரல்ஸ் நிறுவனர் சி.கே.குமாரவேல் புத்தகத்தின் சாராம்சத்தையும், அனுபவங்களையும் எழுத்தாளருடன் பங்கேற்பாளர்கள் முன்னிலையில் அலசினார். 

You Too Can புத்தகம் பற்றி

தொழில்முனைவர்களின் வெற்றியை அவர்கள் கடந்து வந்த பாதையை எளிய நடையில் சொல்லியிருக்கிறார் பிரகாஷ். இருபது தொழில்முனைவர்களின் வெற்றியின் ரகசியம், அவர்களை உந்திய சக்தி ஆகியவற்றிலிருந்து நாம் அனைவரும் நிச்சயம் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் உள்ளது. அவர்கள் கடந்து வந்த தோல்விகள், சோதனையை சாதனையாக மாற்றியவை என ஒவ்வொரு கதையிலும் வெற்றி என்பது இலக்காகக் கொண்டு, அதன் பின்னால் இருந்த உழைப்பு, ஏற்ற தாழ்வு என ஆழமாக விவரித்துள்ளார்.  வணிகத்துக்கு மட்டுமின்றி வாழ்கையிலும் நாம் பின்பற்ற வேண்டியதை கொண்டதாக அமைந்துள்ளது இப்புத்தகம்.

ஐ டி ஃப்ரெஷ், தைரோகேர், லோதா பில்டர்ஸ், பிக் பாஸ்கட், ஃப்ரான்சைஸ் இந்தியா, யே சைனா, யாத்ரா.காம், காஃபே காஃபீ டே, லைஃப்ஸ்பான், நேச்சுரல்ஸ், மார்ஷல்ஸ் வால் கவரிங், நிதேஷ் எஸ்டேட்ஸ், போர்டியா மெடிக்கல், ராவ் ஐ ஐ டி அகாடமி, மொபைல் ஸ்டோர், ரிச்ஃபீல், ஐசெஃப், கொக்கோபெர்ரி, எஜ் சீ ஜீ என்டெர்ப்ரைஸ் மற்றும் ப்ரெஸ்டீஜ் கன்ஸ்ரக்ஷன்ஸ் ஆகிய நிறுவனர்களின் வெற்றியை இந்தப் புத்தகம் பகிர்கிறது.

எழுத்தாளர் பற்றி

சோப் முதல் கோலா வரை, விளம்பரம் முதல் டயப்பர் வரை அனைத்து விதமான பொருட்களையும் விற்ற அனுபவம், முப்பது வருட கார்பரேட் வாழ்கையை விட்டு 2014 ஆம் ஆண்டு தனக்கு பிடித்தமான எழுத்துப்பணி மற்றும் பேச்சாளராக பயணிக்க தீர்மானித்தார். தலைமை பண்பு, ஒருங்கிணைந்து பணியாற்றுதல், செயல் நோக்கம் ஆகியவற்றில் எழுதியும், பேசியும் வருகிறார். 

தி ஹாபிட் ஒஃப் வின்னிங், தி சீக்ரட் ஒஃப் லீடெர்ஷிப் என்று இரண்டு புத்தககங்களை இதற்கு முன் வெளியுட்டுள்ளார்.

சி.கே.குமாரவேல்-ப்ரகாஷ் ஐயர் உரையாடல்

இந்தியா முழுதுமுள்ள பல தொழில்முனைவர்களின் கதைகளை அலசிவிட்டு, குறிப்பிட்ட 20 நிறுவனர்களின் கதைகளை மட்டும் புத்தகத்தில் எழுதியது பற்றி விளக்கிய ப்ரகாஷ் ஐயர்,

”என் புத்தகத்திற்காக நான் சந்தித்த தொழில்முனைவர்களிடம் இருந்து நான் பல பாடங்களை கற்றேன். எத்தனை உயரத்துக்கு சென்றாலும் அவர்களிடம் புதிதாக ஒன்றை கற்கும் ஆர்வமும், பிறரை மனமார பாராட்டும் பழக்கமும் இருந்தது என்னை பிரமிக்கவைத்தது,” என்றார். 

அவரோடு உரையாடிய சி.கே.குமாரவேல், தான் தொழில்முனைவராக பல தோல்விகளை தழுவினாலும், மனதளவில் என்றுமே சளைத்துப்போனதில்லை என்றார். 

“நான் தொழில் தொடங்கியபோது 55 முறை என் முயற்சியில் தோல்வியடைந்திருக்கிறேன். இருப்பினும் வேறு ஒரு புதிய வழியை தேடுவேனே தவிர, முயற்சியை கைவிட நினைத்ததே இல்லை. நாம் அடைவது வெற்றியோ, தோல்வியோ மனதில் தோன்றும் எண்ணத்தை முயற்சிப்பதே முக்கியம்,” என்றார்.

You Too Can புத்தகம் பற்றி அறிய, இங்கு க்ளிக் செய்யவும்

விழாவிற்கு வந்திருந்தவர்களின் கேள்விகளுக்கு பிரகாஷ் மற்றும் குமராவேல் பதில் அளித்தனர். அடுத்தவர்களின் அனுபவத்திலிருந்து சில பாடங்களை நாம் எடுத்துச் செல்லும் போது, நம் பயணத்தின் தவறுகளை சரி செய்துக்கொள்வதோடு, நேரமும் பணமும் விரயமாவதையும் தவிர்க்கலாம்.

a passionate communication professional, loves writing , networking, travelling, strongly believes that every brand has a compelling untold story to share. follow me @sandhyatwits

Related Stories

Stories by Sandhya Raju