கழிவுகள் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கேம் செயலி!

0

பல்வேறு நகரங்களில் மக்கள் கழிவுகளை பிரித்தெடுத்து வகைப்படுத்த வலியுறுத்தப்படுகின்றனர். ஆனால் இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் வெற்றியடையவில்லை. இதற்கு மொபைல் கேமை பயன்படுத்தினால் சிறப்பாக இருக்குமா? ஆம் என்கிறது பெங்களூருவைச் சேர்ந்த சிவிக் சென்ஸ் பிரைவேட் லிமிடெட்.

2015-ம் ஆண்டு பெங்களூருவின் தொழில்நுட்ப மையமான எலக்ட்ரானிக் சிட்டி பகுதிக்கு அருகிலுள்ள கொனப்பன அக்ரஹாரா பகுதியைச் சேர்ந்த சில நண்பர்கள் சித்தார்த் ரெட்டியை அணுகினர். பஞ்சாயத்து பகுதியில் வசிப்பவர்களுக்கு விநியோகிப்பதற்காக குப்பைத் தொட்டிகளை வழங்குவதற்காக வெண்டாரை கண்டறியவேண்டும் என்றனர். விற்பனையாளரை கண்டறிந்து வாங்குவதும் அதை விநியோகிப்பதும் ஒரு புறம் சவால் நிறைந்ததாக இருக்கையில் கழிவுகளை பிரித்தெடுத்தல் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அதைக் காட்டிலும் மிகப்பெரிய சவாலாகும். இதுதான் கழிவுகளை பிரித்தெடுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராயத் தூண்டியது. 

துண்டு பிரசுரங்கள், பேனர்கள், ஒருவர் அடுத்தவருக்கு தெரிவித்தல் போன்ற நடவடிக்கைகள் பலனளிக்காததால் கழிவுகளை பிரித்தெடுத்தல் குறித்த விழிப்புணர்வு ஏறுபடுத்தும் விதத்தில் மொபைல் கேமை உருவாக்கும் எண்ணம் உதித்தது. சித்தார்த் சுரேஷ் பீமாவரப்புவுடன் இணைந்து சிவிக் சென்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தை நிறுவினார்.

ப்ளாஸ்டிக், பேப்பர், ஆர்கானிக், மெடிக்கல், இ-கழிவுகள் போன்றவை பிரித்தெடுக்கப்பட வேண்டிய அனைத்து நாடுகளுக்கும் ’சிவிக் சென்ஸ் கேம்’ என்கிற மொபைல் கேம் பொருந்தும். இந்த திட்டம் உருவானபோது கழிவுகளை பிரித்தெடுப்பதற்கான கொள்கைகள் எதுவும் இந்தியாவில் இல்லை. இந்தக் குழுவினர் தற்போது அந்தந்த குறிப்பிட்ட பகுதி சார்ந்த கழிவுகளை பிரித்தெடுக்கும் விழிப்புணர்வு கேம்களை உருவாக்கி வருகின்றனர். இந்தியாவிற்கான உலர்ந்த / ஈரமான கழிவுகள் வகைப்படுத்தி விளையாடும் விதத்தில் விளையாட்டை உருவாக்கி வருகின்றனர். சீனா, இத்தாலி போன்ற மற்ற நாடுகளிலிருந்தும் பிரத்யேகமாக விளையாட்டுகளை உருவாக்குவது குறித்து விசாரித்து வருகின்றனர்.

விளையாட்டு துவங்குகையில் மூன்று குரங்குகள் கன்வேயர் பெல்ட்டில் கழிவுப் பொருட்களை அனுப்பும். இவை கழிவுகளுக்கான தொட்டியை நோக்கி நகரும். விளையாடுபவர் கழிவுகளை சரியான தொட்டியை நோக்கி செலுத்தி தொட்டியின் ஹெல்த்தை மேம்படுத்தவேண்டும். இது மோசமானால் விளையாடுபவர் ஆட்டத்தை இழந்துவிடுவார். அனைத்து தொட்டிகளின் ஹெல்த் மீட்டர்களும் நிறைந்திருந்தால் விளையாடுபவர் ஆட்டத்தை வென்றுவிட்டதாக கருதப்படும். டைமர் வகை மற்றும் முடிவற்ற வகைகளுக்கும் இது பொருந்தும். விளையாட்டு குறித்த தகவல்களையும் விளையாடுபவர் காணலாம். முறையாக அகற்றப்படாத கழிவுப் பொருட்களின் பட்டியலும் வழங்கப்படும். இது சிறப்பாக கற்க உதவும்.

iOS மற்றும் ஆண்டிராய்ட் ஸ்டோர்களில் கிடைக்கும் இந்த விளையாட்டில் ஆர்கேட் வகை, டைமர் வகை, முடிவற்ற வகை என மூன்று வகைகள் உள்ளன. ஆர்கேட் மோடில் 100 லெவல்கள் உள்ளது. இதில் விளையாடுபவர் முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் இணைந்துகொண்டு நண்பர்களுடன் போட்டியிட்டு முன்னணி வகிக்கலாம். டைமர் வகையில் காலகெடுவுடன் 100 விநாடிகளுக்குள் அதிகம் ஸ்கோர் செய்யவேண்டும். முடிவற்ற வகையில் கழிவுகளை சரியாக பிரித்தெடுக்கும் பட்சத்தில் முடிந்தவரை விளையாடலாம்.

”செயலி ஸ்டோர்களில் எண்ணற்ற செயலிகள் நிறைந்துள்ளது. அதில் வெகு சில செயலிகள் மட்டுமே அக்கறையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு செயலிகள் வன்முறையை தூண்டும் விதத்திலும் அதிலுள்ள விஷயங்கள் அனைத்து பிரிவினருக்கும் ஏற்றவாறு இல்லாமலும் வடிவமைக்கப்படுகிறது. கேண்டி கேமில் நீங்கள் கேண்டியை நொறுக்கலாம் அல்லது ஜோம்பீஸை கொல்லலாம். ஆனால் தனிநபருக்கோ அல்லது உலகிற்கோ இது ஏதேனும் நன்மை பயக்குமா? சிவிக் சென்சில் நாங்கள் அறிமுகப்படுத்தும் விளையாட்டுகள் மக்களுக்கு வேடிக்கையாக இருப்பதுடன் சிறப்பான மனிதராக மாறவும் இயற்கையையும் சுற்றியுள்ள சூழலையும் பராமரிக்கக் கற்றுக்கொடுக்கும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்கிறார் சித்தார்த்.

இந்த விளையாட்டு இலவசமாக விளையாடலாம் எனினும் சில சிறப்பான அம்சங்களைப் பெற செயலிக்குள் கட்டணம் செலுத்தும் வசதியும் உள்ளது. முறையான ஆதரவு கிடைத்தால் விளையாட்டை லாபமற்ற முறையில் உருவாக்க இக்குழுவினர் விரும்புகின்றனர்.

ஆங்கில கட்டுரையாளர் : வல்லப் ராவ்