சென்னை மக்களை மயக்கிய மயோலா இசைப் பாடல்கள்... 

சென்னைக்கு வந்த ரீயூனியன் தீவின் மேங்லூ ராக் இசைக்குழு  

0

ஆப்பிரிக்காவுக்கும் மடகாஸ்கருக்கும் அருகிலுள்ள தீவுதான் ரீயூனியன். பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்தில் இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் தமிழர்கள் கப்பலில் அகதிகளாக அழைத்துச் செல்லப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இடம் அது. தமிழில் பேசத் தெரியாத ஆனால் தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களை கைவிடாத தமிழர்கள் வாழும் தேசம்.

அந்தத் தீவில் பிரபலமான மேங்லூ என்ற ராக் இசைக்குழுவினர் சென்னைக்கு வந்திருந்தனர். சென்னை, வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் நடந்த குளோபல் இசைத் திருவிழாவில், ரசிகர்களை இசையால் கலங்கவைத்துவிட்டு திரும்பியுள்ளனர்.

அதென்ன மேங்லூ??

ராக் இசைக்குழுவின் தலைவர் பாஸ்கல்ர் மேங்லூ. அதுவே குழுவின் பெயராகவும் மாறிவிட்டது. பாஸ்கலின் தாத்தாக்கள் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர்கள். குழுவில் மிஸ்கோம்பா, லுடோபெரஸ் என ஐந்து பேர் உள்ளனர். இவர்கள் ராக், ஜாஸ், மயோலா என மூன்று வகையான இசை அனுபவங்களைத் தருபவர்களாக இருக்கிறார்கள். பாஸ்கல் மேங்லூவின் மனைவி சாரா மேங்லூ, இசைக்குழுவின் மேலாளராக காதல் கணவருக்குத் துணையாக இருக்கிறார்.

மயோலா இது என்ன புதுமையாக இருக்கிறதே?

ரீயூனியன் தீவுக்கே உரிய இசை வடிவம். அங்கு விவசாயக் கூலிகளாகச் சென்ற தமிழர்களும், கருப்பு அடிமைகளும் பாடிய மண்ணின் பாடல்களே 'மயோலா'. அவை சோகம் ததும்பும் பாடல்களாக இருக்கின்றன. பாடல் வரிகளில் மக்களின் துயரம் தோய்ந்த கண்ணீர்க்கதைகள் நிரம்பியுள்ளன.

ஒரு காலத்தில் மயோலா பாடல்கள் புரட்சிகரமான கம்யூனிச சிந்தனைகளை விதைக்கின்றன என்று பிரெஞ்சு அரசு தடை செய்துவைத்திருந்தது. தொழிலாளர்களின் விடுதலை, மானுட நேயம், மனிதர்களின் மீதான பரிவும்தான் பாடல் வரிகளில் உறைந்திருந்தன. அதனால் அரசு பயந்துவிட்டது. பிரெஞ்சு, தமிழ், ஹிந்தி மொழிகள் கலந்த க்ரயோல் மொழியில் மயோலா பாடல்கள் பாடப்படுகின்றன.

ஆரம்பகாலத்தில் மயோலா இசையில் பிரபலமான பாடகராக இருந்தவர் ஒரு தமிழர். அவர்தான் பிரெஞ்சு அரசுக்கு எதிராகப் போராடி மீண்டும் மேடைகளில் மயோலாவை ஒலிக்கவைத்திருக்கிறார். அந்தத் தமிழ்ப் பாடகனை இன்றும் நினைவில் வைத்து மேங்லூ குழுவினர் கொண்டாடுகின்றனர். இன்று தடை நீங்கி மயோலா உலகமெங்கும் மயக்கிவருகிறது.

சோகத்தையும் சந்தோஷத்தையும் கலந்துதரும் ஆப்பிரிக்க இசையான ப்ளூஸ் போன்றதே மயோலாவும், கேலி, கிண்டலாகத் தொடங்கும் இசை பின்னர் புயலென வீசத் தொடங்கிவிடுகிறது. பெருமழையாக கொட்டித் தீர்க்கிறது. ஒற்றைக் குயிலாக மாறி சோகம் இசைக்கிறது. பீனிக்ஸ் மாலில் ராக் இசைக் கலைஞர் பாஸ்கல் மேங்லூவின் கிடார் இசையும், மனதைப் பிசையும் பாடல்களும் பார்வையாளர்களை இடிபோல் தாக்கி நடனமாட வைத்தன.

“மனிதகுலத்தின் இறுதி விடுதலைதான் எங்கள் இசையின் நோக்கம்” என்கிறார் மேங்லூ குழுவின் தலைவர் பாஸ்கல் மேங்லூ. அவர் எழுதிய மின்மினி என்ற பாடலில் வரும், “நான் உணர்கிறேன்/ இன்றிரவு/ வாழ்க்கை எல்லா இடங்களிலும் நிரம்பி வழிகிறது/ இன்றிரவு காதல் எல்லா இடங்களிலும் இருக்கிறது… “ என்ற வரிகளும் அப்படித்தான் மனித வாழ்வின் விடுதலையைப் பாடுகின்றன.

”ரீயூனியன் தீவு என்பது பிரெஞ்சு, தமிழ், மடகாஸ்கரியன், ஆப்ரிக்கன் ஆகிய பண்பாடுகளின் கலவையாக இருப்பதுபோலவே மேங்லூ ராக் இசையும் இருக்கிறது. ராக் இசையில் இல்லாத மண்ணின் இசைக்கருவியும், கிடாரும் சேரும்போது ஹைபீரிட் இசையாக அது மலர்கிறது” என்கிறார் சில மாதங்களுக்கு முன்பு ரீயூனியன் சென்றுவந்த கலை விமர்சகர் இந்திரன்.

பள்ளிக்கரணையில் உள்ள ஒரு சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் தங்கியிருந்த இந்த ரீயூனியன் கலைஞர்களுக்கு ஆட்டோவில் சென்னையை சுற்றிப்பார்த்தது பெரும் அனுபவமாக இருந்தது. ஆட்டோவின் பாம்… பாம்.. சத்தமும் இரைச்சலும் சென்னைக்கு ஒரு வண்ணத்தையும், துடிப்பையும் தருவதாக அவர்கள் கூறினார்கள்.

கேஸ் சிலிண்டர்களை அனாயசமாக சைக்கிள் ரிக்சாவில் கொண்டு செல்லும் முதியவர்களும்கூட அவர்களுக்கு ஆச்சரியம். கடலூரில் நடந்த மாசி மகத்தையும், கடலோர கிராமங்களின் சுடுமண் சாமி சிலைகளையும் பார்த்து ரசித்துவிட்டு ரீயூனியனுக்கு பறந்துவிட்டார்கள்.  

ஆக்கம்: தருண் கார்த்திக்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்