ஆயிரக்கணக்கான சிறு தொழில் முனைவர்களின் வளர்ச்சிக்குக் உதவிடும் முகநூல் பக்கம்!

6

இன்றைய தொழில்நுட்பத்தையும், இணைய சேவையையும் இளைஞர்கள் தான் அதிக பயனுடையதாய் ஆக்க முடியும் என்கின்ற பிம்பத்தை உடைத்து, முகநூலில் ’பிசினஸ் பண்ணலாம்’ என்னும் பக்கம் வழியாக பலரின் தொழிலை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளர் சென்னையைச் சேர்ந்த ப்யாரிலால் குட்துவ.

இந்த ஃபேஸ்புக் குழுவில் குழுவினர்கள் தங்கள் தொழிலை விளம்பரம் செய்யலாம், மேலும் தொழிலை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் இப்பக்கம் வழிகாட்டியாக இருக்கிறது.

ப்யாரிலால் குட்துவ
ப்யாரிலால் குட்துவ

மதுரையில் பிறந்து படித்த பியாரிலால், 1992-ல் பிபிஏ பட்டப்படிப்பை முடித்துவிட்டு தன் குடும்ப வணிகத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் சென்னை வந்த அவர் கணினிக்கும் இணயதளத்திற்கும் அறிமுகமானார்.

“2000-ல் இணையதளம் தொடங்கிய காலத்தில் ப்ரௌசிங் மையத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி நானே சுயமாக இணையதளம் பற்றி தெரிந்துக்கொள்ள முயன்றேன்,”

என இணையதளமே தன் தொழிலின் தொடக்கம் ஆன கதையை பகிர்கிறார் ப்யாரிலால்.  கணினி பற்றியும் வெப்சைட் பற்றியும் அவர் அதிகம் படிக்க அந்த ஆர்வம் அவரை வலை வடிவமைப்பாளராக மாற்றியது. வலை வடிவமைப்பை சுயமாகக் கற்று தன் தொழில் பயணத்தை அங்கிருந்து துவங்கினார் ப்யாரிலால். அப்பொழுது தனக்கு அறிமுகமான ஓர் இசையமைப்பாளருக்கு முதன் முதலில் இணையதளம் வடிவமைத்துக் கொடுத்தார். அங்கு துவங்கி இன்று வரை 200-க்கும் மேற்பட்ட வளைதளத்தை வடிவமைத்துள்ளார்.

இணையதளத்தில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர் அடுத்தக்கட்டமாக முகநூலின் ஆரம்பக்காலத்திலே அவரின் சமூகத்திற்கு என்று பிரத்தியேகமான பக்கம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார்.

“என் முக நூல் பக்கம் போலவே பலர் எங்கள் சமூகத்திற்கான ஓர் பக்கத்தை நடத்தி வந்தனர். இருப்பினும் அப்பொழுதே 25,000-க்கும் மேலான ஃபாலோயர்ஸ் என் பக்கத்திற்கு இருந்தனர். இதுவே ’பிசினஸ் பண்ணலாம்’ என்னும் பக்கத்திற்கு அடித்தளம்.”

பிசினஸ் பண்ணலாம் பக்கத்தின் தொடக்கம்

முகநூலை தீவரமாக பின்பற்றிய ப்யாரிலால் ஓர் தொழில் ரீதியான முகநூல் பக்கத்தில் இணைந்தார். அங்கு தனக்கு ’வலை வடிவமைப்பு’ செய்ய வாய்ப்பு கிடைக்குமா என தேடி கொண்டிருந்த போதே வியாபாரத்திற்கான பிரத்தியேக பக்கத்தை துவங்கலாம் என யோசனை புலப்பட்டது.

மார்ச் 10, 2016 ஆண்டு ’பிசினஸ் பண்ணலாம்’ என்னும் ஃபேஸ்புக் குழுவை துவங்கினார். இரண்டு ஆண்டு முடிந்த நிலையில் தற்பொழுது இரண்டு லட்சத்திற்கும் மேலான உறுப்பினர்கள் உள்ளனர். இன்று பலர் முகநூல் பக்கத்தை துவங்குகின்றனர் தங்கள் குழுவை நேர்த்தியாக நடத்த வேண்டும் என்பதற்காக சில விதிகளையும், ஒழுங்கு முறைகளையும் பட்டியல் இட்டுள்ளனர். இதை பின்பற்றினால் மட்டுமே குழுவில் பதிவு செய்ய முடியும். இதன் மூலம் குழுவினர்கள் அவர்கள் பொருட்களை விற்க மற்றும் விளம்பரம் செய்யலாம். 

“இந்த பக்கத்தில் இணைந்த பலருக்கு தொழில் ரீதியாக வளர்ச்சி இருந்தாலும் இந்த கால கட்டத்திற்கு ஏற்ப சமூக ஊடகத்தில் பதிவிட தெரியவில்லை. அவர்களுக்கும், புதிய வணிகம் துவங்குவதற்கும் வழிகாட்ட வேண்டிய தேவை இருந்தது,” என்கிறார்.

தன் சுய விருப்பத்தில் இந்த பக்கத்தை நிறுவி பலருக்கு தொழில் விளம்பரம் செய்யவும் புது வியாபாரம் துவங்கவும் பெரும் வழிகாட்டியாக ஒரு சேவை போல் செய்து வருகிறார் ப்யாரிலால். வீட்டிலிருந்து சிறுதொழில் பெண்கள் பலர் தங்கள் வியாபாரத்தை பெருக்கவும், நம்பிக்கையான ஒரு இடமாக இந்த ஃபேஸ்புக் பக்கம் திகழ்கிறது. 

ஒரு வருடம் முகநூல் வழியாக மட்டும் வழிகாட்டி, ஒரு லட்சத்திற்கும் மேலான குழுவினர்களை சம்பாதித்து விட்டார். இதை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல குழுவினர்களுக்கு ஓர் சந்திப்பை ஏற்படுத்தலாம் என முடிவு செய்தார்.

“நேருக்கு நேர் சந்திப்பு இல்லாமல் நம்பிக்கை இருக்காது, ஓர் இடைவெளி ஏற்படும்.இந்த இடைவெளியை நீக்குவதற்காக ஓர் சந்திப்பை ஏற்பாடு செய்தேன். அதில் தொழில் புரிபவர்களை பேச வைத்து அந்த வீடியோவை யூடியுபிலும் முகநூலிலும் பகிர்ந்தேன்.”

இப்படி பல வழிகளில் தங்கள் தொழிலை விளம்பரம் செய்ய ஓர் தளத்தை ஏற்படுத்தித் தருகிறார் ப்யாரிலால். இந்த வீடியோக்களை பார்த்து பல சிறு தொழில்முனைவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐந்து வருடத்திற்கு மேல் தொழில் நடத்தி வந்த பல வியாபாரங்கள் இந்த பக்கத்தின் மூலம் பிரபலம் அடைந்ததை கூறி பெருமிதம் கொள்கிறார் இவர்.

இது போன்று இது வரை நான்கு சந்திப்புகளை நடத்தியுள்ளார் இவர். சந்திப்பிற்குத் தேவையான இடத்திற்கும் உணவுக்கும் மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கிறார். சில சமயங்களில் தன் கையில் இருந்தும் செலவுகளை பார்த்துக்கொள்கிறார். இதுவரை சென்னை மற்றும் மதுரையில் சந்திப்புகளை நடத்தியுள்ளார். கூடிய விரைவில் கோவையில் ஐந்தாம் சந்திப்பை நடத்த உள்ளார்.

இதில் இருந்து பெரியதாக அவர் சம்பாதிப்பதில்லை; ப்ரீலான்ஸ் வடிவமைப்பு மூலமாகவே இவர் வருவாய் ஈட்டுகிறார். மேலும் இந்த பக்கத்தில் சில தொழில்முனைவர்களுக்கு விளம்பரங்களை அவர்கள் விருப்பத்தின் பேரில் வடிவமைத்தும் தருகிறார்.

“இதை எனக்கான வியாபாரமாகவோ பணம் சம்பாதிக்கவோ நான் செய்யவில்லை, சமூக சேவைப்போல் தெரியாதவர்களுக்கு என் அனுபவத்தின் மூலம் வழிகாட்டுகிறேன். இதில் இருந்து லோகோ வடிவமைப்பு மற்றும் வலைதள வடிவைப்பு மூலம் நான் ஓரளவு சம்பாதிக்கிறேன்,” என முடிக்கிறார் இந்த தொழில் வழிகாட்டி. 

முகநூல் பக்கம்: Business Pannalam

Related Stories

Stories by Mahmoodha Nowshin