'ஓடாத' சினிமாவுக்கும் உண்டு உலக மார்க்கெட்: வெற்றிமாறன் சொல்லும் வெற்றி மந்திரம்!

0

13-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில், இளம் சினிமா ஆர்வலர்களுடன் இயக்குநர் வெற்றிமாறன் பகிர்ந்துகொண்ட அனுபவங்களும் கருத்துகளும் கவனத்துக்குரியவை. 'ஆடுகளம்' மூலம் தேசிய விருது பெற்று கவனத்தை ஈர்த்த இவரது சமீபத்திய படைப்பு 'விசாரணை'. எழுத்தாளரும், ஆட்டோ ஓட்டுநருமான மு.சந்திரகுமார் எழுதிய 'லாக்கப்' நாவல் எனும் நாவல்தான் 'விசாரணை'யாக திரைப்படமாகி பல்வேறு சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.

இந்தியாவின் முக்கிய திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் வெளியிட்ட 2015-ன் சிறந்த சினிமா பட்டியலில் 'விசாரணை'யும் இடம்பெற்றுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. உட்லண்ஸ் திரையங்கில் ஒரு சினிமா மதியப் பொழுதில் வெற்றிமாறன் உடனான ரசிகர்களின் கலந்துரையாடல், உள்ளூரில் குறிப்பிடத்தக்க வசூலை ஈட்டாத நல்ல படங்களுக்கு, திரைப்பட விழாக்கள் மூலம் சர்வதேச அளவில் மார்க்கெட் இருப்பதற்கான சூழலை புரியவைத்தது. அந்த உரையாடலின் முக்கிய அம்சங்கள் இதோ...

சென்னை சர்வதேச திரைப்பட விழா குறித்து...

வெற்றிமாறன்: "சென்னை சர்வதேச திரைப்பட விழாவைப் பொறுத்தவரையில், நல்ல திரைப்படங்களுக்கான அடித்தளம் அமைப்பது என்பதைத் தாண்டி, இளம் தலைமுறையினர் நல்ல சினிமாவைப் பார்ப்பதற்கான அற்புதமான சூழல் ஏற்பட்டுள்ளது. சினிமா பார்ப்பதே ஒரு நல்ல பழக்கமாக வளர வழிவகுக்கப்படுகிறது. சமீபத்தில் ஒரு பெரிய இயக்குநர் சொன்னதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 'உலகில் நிறைய பிரச்சினைகள் இருப்பதற்குக் காரணம், மக்கள் நிறைய சினிமா பார்க்காததுதான்' என்றார். உண்மையில், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சினிமாவில் தீர்வு இருக்கிறது. எனவே, சினிமா பார்க்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்."

உலக சினிமாவின் தாக்கம் எத்தகையது?

வெற்றிமாறன்: "2002-க்குப் பிறகுதான் எங்களுக்கு உலகின் பல நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களை சென்னையில் பார்க்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அதற்கு முன்பு வரை, ஒரு நாயகியிடம் ஒரு நாயகன் எப்படி வித்தியாசமாக காதலைச் சொல்வான் என்பது பற்றி மட்டும்தான் நாங்கள் யோசித்துக்கொண்டு இருந்தோம். உலக சினிமா பார்க்கும் வாய்ப்பு கிடைத்த பிறகுதான் வேறு மாதிரியான சிந்தனைக்கு வித்திட்டது. இப்போது, எல்லா வகையான படங்களையும் உடனுக்குடன் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதும் நல்ல விஷயம்தான். இதனால் ஏற்படும் தாக்கங்கள், நம் சினிமாவில் நிறைய மாற்றங்களை நிச்சயம் ஏற்படுத்தும்."

ஒரு படத்தைத் தழுவி படம் எடுப்பது குறித்த உங்களது பார்வை..?

வெற்றிமாறன்: "தனிப்பட்ட முறையில் நீங்கள் கேட்டீர்கள் என்றால், அடாப்டேஷன், இன்ஸ்பிரேஷன் எல்லாம் எனக்கு கெட்டவார்த்தையாக தோன்றுகிறது. அப்படி இருந்தாலும்கூட, அதற்கு உரிய கிரெடிட்களைத் தர வேண்டியது தார்மிகக் கடமை. எனக்கு 'அமரூஸ் பெரோஸ் (Amores perros) தான் 'ஆடுகளம்' படத்துக்கான இன்ஸ்பிரேஷன். அதில் நாய் சண்டை.. இதில் சேவல் சண்டை. நான் சின்ன வயதில் ஊரில் சேவல் வளர்த்திருக்கிறேன். அப்புறம், அலெக்ஸ் ஹலேயின் 'ரூட்ஸ்' எனும் நாவலும் இன்ஸ்பிரேஷனாக இருந்தது."

கலைப் படங்கள், அவார்டு படங்கள் எல்லாம் வர்த்தக அளவில் லாபம் கிடைக்காதவை என்ற எண்ணம் இருக்கிறதே..?

வெற்றிமாறன்: "பொதுவாகவே கலைப் படங்கள், அவார்டு படங்கள் எல்லாமே ஓடாத படங்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், ஒரு படத்தை திரைப்பட விழாக்களுக்கு எடுத்துக்கொண்டு போவதே ஒரு வியாபார யுக்திதான். இதை தயாரிப்பாளர்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக 'காக்கா முட்டை' படத்தையே எடுத்துக்கொள்ளுங்களேன். சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பத்துக்கு தயாரிப்பாளர் தனுஷ் உறுதுணையாக இருந்தார். அதன் பலன் இப்போதும் எங்களுக்குக் கிடைத்து வருகிறது. ஹாங்காங்கில் இன்னும் மிகச் சிறப்பாக ஓடி வருகிறது. நல்ல வசூலும் கூட. இதேபோல், சீனாவில் பெரிய அளவில் வெளியாகவுள்ளது. இங்கிலாந்தில் ஒரு சேனல் ஒளிபரப்பு உரிமைக்காக பேசி வருகிறது. இதுபோன்ற வெற்றிகளுக்கு நம்பிக்கை எங்கிருந்து கிடைத்தது என்பதை யோசிக்க வேண்டும்.

விசாரணை படத்தில் தமிழும் தெலுங்கும் பேசப்படுகிறது. இந்தப் படத்தை மேற்கத்திய நாடுகளுக்குக் கொண்டு செல்லும்போது, இது எந்த நாட்டு சினிமா என்று கேட்கிறார்கள். இந்திய சினிமா என்று சொன்னால் ஆச்சரியப்படுகிறார்கள். அவர்களைப் பொருத்தவரை இந்தியா என்றால் இந்தி சினிமா என்று நினைத்திருக்கிறார்கள். 'லஞ்ச்பாக்ஸ்' போன்ற படங்களில் பார்ப்பதைத்தான் அவர்கள் இந்தியா என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையான இந்தியாவைக் காட்டுவது என்பதே சவால்தான்.

விசாரணையை வெனீஸ் திரைப்பட விழாவில் திரையிட்டபோது, அங்கிருந்த முக்கியமான நபர் எனக்கு இரண்டு யோசனைகளைச் சொன்னார். ஒன்று, படத்தின் நீளத்தைக் கொஞ்சம் குறைக்க வேண்டும். இரண்டாவது, அந்த மொட்டை தலை நடிகரை தூக்கிவிடுங்கள் என்றார். எனக்கு வியப்பாக இருந்தது. அந்தக் கேரக்டரில் ஓவர் ஆக்டிங் போன்ற நடிப்பு அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. ஆனால், நாம் இங்கு கொஞ்சம் ஓவர் ஆக்டிங்கை இன்டென்சிவ் என்று கொண்டாடுவோம். இதுதான் வேறுபாடுகள். இதுபோன்ற வேறுபாடுகளைச் சரியாக உணர்ந்தால், சர்வதேச மார்க்கெட்டை எளிதில் வசப்படுத்தலாம். எனக்குத் தெரிந்து இரண்டு உதாரணப் படங்கள் என்றால், 'லஞ்ச் பாக்ஸ்', 'காக்கா முட்டை' ஆகிய படங்களுக்குக் கிடைத்த சர்வதேச மார்க்கெட்டைச் சொல்வேன்.

சென்னை திரைப்பட விழாவில் 'விசாரணை' பங்கேற்காதது ஏன்?

வெற்றிமாறன்: "பிரம்மாண்ட படங்களுக்கே பெரிய அளவில் விளம்பரம் தேவைப்படுகிறது. பெரிய படங்களே மூன்று வாரங்களுக்கு மேல் ஓட முடிவதில்லை. இப்போது சமூக ஊடகங்களே சிறந்த விளம்பரக் கருவிகளாகச் செயல்படுகின்றன. வெளிநாடுகளில் நடக்கும் சர்வதேச பட விழாக்களுக்கு படத்தை அனுப்புவது நல்ல மார்க்கெட்டிங்கை உருவாக்கும். எனவே, இங்கு படத்தை வெளியிட சரியான தருணத்துக்காகக் காத்திருக்கிறோம்.

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்