பத்து விநாடிகளில் உங்களது மூளையை கூர்மையாக்குவது எப்படி?

4

உங்களது நாளில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எத்தனை விஷயங்கள் குறித்து சிந்திக்கிறீர்கள்? எத்தனை விஷயங்களை செய்ய முயற்சிக்கிறீர்கள்? நீங்கள் ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு மாறும்போது உங்களது மூளையும் அடுத்தடுத்த சிந்தனைகளும் சட்டென்று மாறினால் உண்மையிலேயே நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நான் சொல்வேன்.

பல்வேறு வேலைகளை ஒரே நேரத்தில் செய்வது திறமையான செயல் என்றே நாம் கருதுகிறோம். ஆனால் இச்செயலால் எதிர்மறை விளைவுகளே இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்குக் காரணம் என்னவெனில் உங்களது மூளையால் ஒரே நேரத்தில் இரண்டு நடவடிக்கைகளை திறம்பட செய்யமுடியாது. உங்களது மூளைக்கு அதிக சுமை அளிக்கும் போது அந்தத் தருணத்தில் செய்துகொண்டிருக்கும் வேலையில் செலுத்தப்பட்ட ஆற்றல் திசைமாறிவிடும். நீங்கள் அதை உணரும் முன்பே அதிவேகமாக இது நடந்துவிடும். ஆனால் ஒன்று மட்டும் நமக்குத் தெளிவாகிறது. உங்களது மூளை பல்வேறு விஷயங்களால் நிரப்பப்படும்போது உங்களது மூளை அதன் அதிகபட்ச திறனுடன் செயல்படாமல் போகும்.

பரவாயில்லை! அதனாலென்ன என்று நீங்கள் கேட்கலாம்? ஒரு நாளில் எவ்வளவோ விஷயங்களை நாம் செய்யவேண்டும். சமாளிக்கவேண்டும். சிந்திக்கவேண்டும். நீங்கள் கவனம் செலுத்தவேண்டிய பல சின்னச்சின்ன விஷயங்கள் உங்கள் நினைவிற்கு வரும். ஒருவேளை அறிவியல்பூர்வமான இது நிரூபிக்கப்பட்டு நீங்கள் அதை நம்பினாலும் இதுகுறித்து உங்களால் ஏதாவது செய்யமுடியுமா?

பரபரப்பான நாளில் உங்களது சுமையை குறைத்துக்கொள்ளவும் உங்களது புத்தியை கூர்மைப்படுத்திக்கொள்ளவும் சில எளிய உத்திகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இதை நீங்கள் பழகிக்கொள்ளலாம். இதைச் செய்ய சில நொடிகளே ஆகும்.

நீங்கள் துவங்குவதற்கு முன்னால்...

ஒரு நிமிடத்திற்கு முன்னால் எதை சிந்தித்துக்கொண்டிருந்தீர்கள்? ஒருவரது மனதை படிக்கும் ஆற்றல் என்னிடம் இல்லை. இருந்தும் நீங்கள் சிந்தித்தது கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு விஷயங்களில் ஒன்றாகத்தான் இருக்கும் என்பது எனக்குத் தெரியும்.

1. ஏற்கனவே நடந்த ஒரு விஷயத்தைப் பற்றிய சிந்தனை – பணியிடத்தில் நடந்த ஒரு சம்பவம், உங்களது கணவன் / மனைவியுடன் நடந்த உரையாடல், நேற்று மாலை செய்ய மறந்த ஏதோ ஒரு விஷயம், உங்கள் உடன்பணிபுரிபவருக்கு வேறு விதமாக பதிலத்திருக்கலாம் என்பது போன்ற சிந்தனைகள்.

அல்லது

2. எதிர்காலம் குறித்த சிந்தனை – நாளை செய்யப்போகும் பிரசென்டேஷன், அடுத்தமாதம் செலுத்தவேண்டிய மாதத்தவணை அல்லது பணி குறித்த கனவு போன்றவை.

இதுதான் பிரச்சனையின் ஆணிவேர். ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு வேலையில் ஈடுபடுகிறோம். அந்த வேலைக்கு ஒரு குறிப்பிட்ட திறனுடன் நமது மூளை செயல்படவேண்டும். ஆனால் கடந்த காலம் அல்லது எதிர்காலம் குறித்து நமது சிந்தனைகளால் மூளை நிரம்பியிருந்தால் நாம் ஈடுபடும் வேலைக்கு தேவையான திறனுடன் நம்மால் செயல்பட முடியாது. நமது மூளை சிறப்பாக செயல்படக்கூடியது. ஆனால் அதில் ஒரு சிறிய சதவீதத்தையே நாம் பயன்படுத்துகிறோம்.

இந்த எளிய வழிகள் மூலம் உங்களால் இதை மாற்றமுடியும்.

1. உங்களது பார்வை படும் இடத்தில் 1 முதல் 10 வரை எண்களை எழுதிவைக்கவும். ஒரு நோட்புக்கிலோ அல்லது மொபைலிலோ கூட எழுதிவைத்துக்கொள்ளலாம்.

2. ஒரு நாளில் ஏதாவது ஒரு நேரத்தில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் வேலையை சற்றே நிறுத்திவிட்டு நீங்கள் அந்தத் தருணத்தில் உணரக்கூடிய ஒரு விஷயத்தில் மனதைச் செலுத்துங்கள்

• நீங்கள் லேப்டாப்பில் டைப் செய்துகொண்டிருக்கிறீர்களா? நிறுத்திவிட்டு கீபோர்டை தொடுங்கள். வெதுவெதுப்பாக உள்ளதா அல்லது குளிர்ச்சியாக உள்ளதா?

• மொபைலில் முகநூலை பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா? உங்களது ஃபோனின் பின்புறத்தை உங்களது விரல்கள் எவ்வாறு உணர்கிறது?

• காபி குடித்துக்கொண்டிருக்கிறீர்களா? கப்பை தொட்டு அந்த வெதுவெதுப்பை உணருங்கள்.

• வெறுமனே நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்களா? கால்கள் மூலம் கிடைக்கும் தொடு உணர்வை உணருங்கள். அல்லது உங்களது சட்டை உங்களது கைகளை உரசும் அந்த உணர்வைக்கூட உணரலாம்.

எந்தவித உணர்வாகவும் இருக்கலாம். அதை சில நொடிகள் உங்களது மனதிற்கு கொண்டுவந்து உணரவேண்டும். அவ்வளவுதான். அந்த சில நொடிகள் நீங்கள் முழுமையாக அந்தத் தருணத்தில் இருக்கிறீர்கள். உங்களது மூளையின் அனைத்து திறன்களும் ஒற்றை புள்ளியில் கவனம் செலுத்தப்படுகிறது. அதாவது நீங்கள் உணரும் அந்த உணர்வில் கவனம் செலுத்தப்படுகிறது.

3. உங்களது மனம் அலைபாயத் துவங்கியதும் நோட்டை எடுத்து முதல் கட்டத்தை குறித்துக்கொள்ளுங்கள்.

4. இதேபோல் உங்களால் எத்தனை முறை செய்ய இயலுமோ அத்தனை முறை திரும்பச் செய்யவும். அந்த எண்ணிக்கையை குறித்து வைத்துக்கொள்ளவும். மெதுவாக எண்ணிக்கையை அதிகரிக்கவும். இதை உங்களது நாளில் தொடர்ந்து இணைத்துக் கொள்ளும்போது நீங்கள் எண்ணிக்கையை நிறுத்திவிடலாம்.

இம்முறையை தொடர்ந்து பழகும்போது உங்களது மூளை சோர்வடைவது குறைந்துவிடும். கவனம் செலுத்தும் திறன் அதிகரிக்கும். உங்களது மனோதிடத்தில் நிச்சயம் உங்களால் மாற்றங்களை உணரமுடியும்.

நீங்களும் இந்த எளிய முறையை முயற்சித்து எப்படிப்பட்ட மாற்றத்தை உணர்கிறீர்கள் என்று எனக்கு தெரியப்படுத்துங்கள். வாழ்த்துக்கள்!

ஆங்கில கட்டுரையாளர் : மீடா மல்ஹோத்ரா