பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு பார்க்கும் அனுபவத்தை வழங்கும் புதிய கருவி வடிவமைத்துள்ள 16 வயது சிறுவன்!

குருக்ராம் பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவரான 16 வயது குர்சிம்ரன் சிங் பார்வையற்றோர் காட்சிப்படுத்திப் பார்க்க உதவியுள்ளார்...

0

பார்வை - இந்த ஒற்றை வார்த்தைதான் ஒட்டுமொத்த பதிவுகளில் 80 சதவீதத்தினை விளக்கும் உணர்வாகும்.

இந்த உலகம், அதன் அழகு, அதிலிருக்கும் ஆபத்து என அனைத்தையும் நம் கண்களே நமக்கு விளக்குகிறது. அதை மூடிவிட்டால் முற்றிலும் இருள் சூழ்ந்த ஒரு உலகில் நாம் காணப்படுவோம்.

பார்வையற்றோர் தங்களிடம் இதுவரை இல்லாத ஒன்றை ஒரு இழப்பாக நினைப்பதில்லை என்பது உண்மைதான். இருப்பினும் அதற்காக அவர்களது நிலையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதோ அல்லது அவர்களுக்கு உதவ இயலாத நிலையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதோ பொருள் அல்ல. ஒருவரிடம் இதுவரை இல்லாத ஒன்றை அவருக்கு அளிக்கும்போது அதன் மூலம் அளவில்லா மகிழ்ச்சியும் மனநிறைவும் கிடைக்கும்.

துவக்கம்

’ஐஸ்க்ரைப்’ (EyeScribe) கண்டுபிடித்தவர் 16 வயதான குர்சிம்ரன் சிங். இந்தச் சாதனம் பார்வை குறைபாடுள்ளவர்கள் படிக்கும் அனுபவத்தைப் பெற உதவுகிறது. 

”என்னுடைய உறவினர் ஒருவருக்கு பார்வை குறைபாடு இருந்தது. ஒவ்வொரு நாளும் அவர் போராடியதை கவனித்த எனக்கு. ‘நம்மால் முடியும் என்றால் அவர்களால் ஏன் முடியாது?’ என்றும், ‘நம்மால் முடியும் என்றால் நாம் என்ன செய்யவேண்டும்?’ போன்ற கேள்விகள் என்னுள் எழுந்தது,” என்கிறார் குர்சிம்ரன்.

2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த சாதனத்தை உருவாக்குவதற்கான பணியைத் துவங்கினார். அதை காட்சிப்படுத்த கிட்டத்தட்ட மூன்று மாதங்களானது. முதன் முதலில் FICCI ஆடிடோரியத்தில் NITI Ayog-ன் அடல் டிங்கரிங் லேப் இன்னோவேஷன் சேலஞ்ச் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.  

ஐஸ்க்ரைப் என்கிற சாதனம் எதற்குப் பயன்படும்?

அணியக்கூடிய தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தது ஐஸ்க்ரைப். காட்சிகளை படம் பிடிக்க இதன் ஃப்ரேமில் எட்டு மெகாபிக்சல் கேமிரா பொருத்தப்பட்டிருக்கும். படம் பிடித்ததும் இதன் செய்முறைக்குப் பிறகு ஒலியாக வெளிப்படுத்தும். 

”இந்தச் செய்முறையில் முதலில் எழுத்துக்கள் அடையாளம் கண்டுகொள்ளப்படும். அதன் பிறகு மெஷின் கற்றல் வழிமுறைகளால் திருத்தம் செய்யப்பட்டு இறுதியில் எழுத்துக்களை பேச்சாக மாற்றும் என்ஜின் செயல்படும்.” என்று விவரித்தார் குர்சிம்ரன்.

பார்வையற்றோர் புத்தகம் படிக்கும்போது மனதில் காட்சிப்படுத்திப் பார்க்க உதவும் வகையில் செவிப்புலனால் உணரக்கூடிய 3D சூழலை இந்தச் சாதனம் உருவாக்கிக் கொடுக்கும்.

சந்தையில் இன்று அதிகளவில் பிரெய்ல் சாதனங்கள் கிடைக்கின்றன. எனினும் இந்த பிரெயிலின் பயன்பாடே தேவையற்ற அளவிற்கு தனித்துவமிக்கது ஐஸ்க்ரைப்.

பொதுவாக பார்வையற்றோருக்கு கேட்கும் திறன் அதிகமாக இருக்கும். இந்த நன்மையைப் பயன்படுத்தி ஒரு எளிமையான மாற்றை கண்டறிந்துள்ளார் குர்சிம்ரன்.

”ஐஸ்க்ரைப் எழுத்துக்களைப் படிக்கும் என்பதால் எழுத்துக்கள் பிரெயிலில் இருக்கவேண்டிய அவசியமில்லை. எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம். மேலும் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு தற்போது குறைவான புத்தகங்களே உள்ளது. இவை பிரெயிலில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் என்பதால் பெரிதாக இருக்கும். ஐஸ்க்ரைப் ப்ரெயில் அல்லது எந்த ஒரு எழுத்து வடிவத்திற்கும் உகந்த ஒரு மெய்நிகர் தீர்வாகும்.”

இதை விளக்குகையில், ‘பிரெயிலில் அச்சிடப்பட்ட பெரும்பாலான செய்தித்தாள்கள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வெளியாகிறது. ஆனால் ஐஸ்க்ரைப்பில் பார்வையற்ற ஒருவர் செய்தித்தாளை தினமும் படிக்கமுடியும் என்பதால் தொடர்ந்து தங்களை புதுப்பித்துக்கொண்டே இருக்கமுடியும்.’

கடினமான நேரங்களில் உறுதியாக இருத்தல் 

முதலில் ஐஸ்க்ரைப் சோதனை செய்யப்பட்டபோது வேகம் குறைவாக இருந்தது. இது குர்சிம்ரனின் மன உறுதியை சற்றும் தளர்த்தவில்லை. 

”இன்புட் மற்றும் அவுட்புட்டிற்கான நேரத்தை குறைப்பதற்காக செயல்முறை சார்ந்த மறுதிட்டமிடலில் ஈடுபட்டேன். பல்வேறு ஆய்வுகள் மற்றும் துறை சார்ந்தவர்களுடனான ஆலோசனைகளுக்குப் பிறகு குறைவான வேகம் என்கிற பிரச்சனையை வெற்றிகரமாக நீக்கினேன்.”

அவரது புதுமையை சோதிப்பதற்காக பார்வையற்றோர் பள்ளிக்குச் செல்கையில் மற்றொரு இடையூறு ஏற்பட்டது. ”அதிகாரிகளுக்கு சாதனத்தின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகம் எழுந்தது. அதனால் எனக்கு அனுமதியை மறுத்தனர். அதன் பின் மருத்துவர் மற்றும் உளவியலாளர்களுடன் பணிபுரிந்து என்னுடைய சாதனம் பயன்பாட்டிற்கு உகந்தது என்பதைத் தெளிவுபடுத்தினேன்.” என்றார்.

தடைகளைத் தாண்டி வெற்றியடைதல்

ஐஸ்க்ரைப்பின் முதல் ப்ரோட்டோடைப்பை உருவாக்குவதற்கான முதல்கட்ட நிதி குர்சிம்ரனின் பெற்றோரிடமிருந்து கிடைத்தது. அதன் பின்னர் ATL நிதியாக 20 லட்ச ரூபாய் கிடைத்தது. மேலும் நாடு முழுவதும் விநியோகிப்பதற்காக வணிக ரீதீயில் ஒரு சாதனத்தை உருவாக்க NITI ஆயோக் இடமளித்தது.

இளம் திறமைகளுக்கு வாய்ப்பளிக்கும் 2017 ப்ரமேரிக்கா ஸ்பிரிட் ஆஃப் கம்யூனிட்டி அவார்ட்ஸில் குருசிம்ரன் தேசிய வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். சர்வதேச PSCA-விற்காக வாஷிங்டன் டிசியில் ஒரு வாரம் தங்கியிருந்தது அவரது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறார் குர்சிமரன். 

“எட்டு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் இணையும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சமூகத்தினருக்கான என்னுடைய சேவையை ஒலிம்பிக் சாம்பியனான மைக்கேல் ஃபெல்ப்ஸ் பாராட்டினார். என்னுடைய புதுமை தேசிய அளவில் கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு பார்வையற்றோரிடம் சென்றடையவேண்டும் என்கிற கனவு நிறைவேறத் துவங்கியது. மேலும் அவரது பணி விரிவடைய 50,000 ரூபாய் பரிசுத்தொகையும் கிடைத்தது.”

இன்றுவரை 5 முதல் 10 வயதுக்குட்ட 120 பார்வையற்ற குழந்தைகளிடம் குர்சிம்ரம் தனது சாதனத்தை சோதனை செய்துள்ளார். வெற்றி விகிதம் 98 சதவீதம். “படிப்படியாக என்னுடைய பணிகளில் விரிவடைந்து வருகிறேன். ஒவ்வொரு முறை சோதனை செய்யும்போதும் எதை மேம்படுத்தவேண்டும் என்றும் அதை எவ்வாறு செயல்படுத்தவேண்டும் என்றும் தெரிந்துகொண்டுள்ளேன்.”

மேலும் சிறப்பான இலக்கை நோக்கி பயணித்தல்

அவரது பயணத்தில் கற்றுக்கொண்ட படிப்பினைகள் குறித்து குர்சிமரன் குறிப்பிடுகையில், 

“ஒரு மிகச்சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. விஷயங்களை எவ்வாறு நிர்வகிப்பது, எவ்வாறு மக்களுடன் ஒன்றிணைவது, எவ்வாறு சவால்களை எதிர்கொள்வது என பலவற்றை கற்றறிந்தேன். நான் இணைந்து பணிபுரிந்தவர்களில் பலர் பார்வையற்றோர். இவர்கள் அனைவரும் எனக்கு மிகப்பெரிய அளவில் உத்வேகம் அளித்தனர்.”

தற்போது தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டு முழுமையாக தயார் நிலையில் இருக்கும் சாதனத்திற்காக பணிபுரிந்து வருகிறார் குர்சிம்ரன். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை செயல்படுத்தும் ADIP திட்டத்தின் வாயிலாக ஐஸ்க்ரைப்பை வழங்க விரும்புகிறார்.

துணை தொழில்நுட்பம் மற்றும் பயோமெடிக்கல் பொறியியல் துறைகளில் பணிபுரிய நம்பிக்கை கொண்டுள்ளார் குர்சிம்ரன்.

”ஏற்கெனவே அடுத்த சாதனத்தில் பணிபுரியத் துவங்கிவிட்டேன். அதே நோக்கத்துடன் ஒரு லாபநோக்கமற்ற முயற்சியாக ‘தி கோட் இனிஷியேடிவ்’ என்பதைத் துவங்கியுள்ளேன். ’தொழில்நுட்பத்துடன் இணைந்து குணப்படுத்துதல்’ என்கிற சமூக பிரச்சாரத்தையும் துவங்கியுள்ளேன். தேவையானோருக்கு அப்படிப்பட்ட சேவைகளை வழங்குவது தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இதன் நோக்கமாகும்.”

’தி கோட் இனிஷியேடிவ்’வின் கீழ் இருக்கும் முதல் சாதனம் ஐஸ்க்ரைப். அடுத்த பத்தாண்டுகளில் தேவையான ஒவ்வொருவரையும் சென்றடைந்து இந்தியா முழுவதும் செயல்பட விரும்புகிறார்.

ஒரு சிறந்த நோக்கத்துடன் செயல்படும் மனிதரான குர்சிம்ரன், 

“ஆர்வத்துடன் செயல்படுங்கள். பணிவுடன் இருங்கள். உங்களது வாழ்க்கை உங்கள் மனதிலும் மற்றவர்கள் மனதிலும் நீங்காமல் நிலைத்திருக்க முயற்சி செய்யுங்கள்,” என்கிறார்.

ஆங்கில் கட்டுரையாளர் : சானியா ரசா

Related Stories

Stories by YS TEAM TAMIL