10 ஆயிரம் ரூபாயில் துவங்கி 2 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ள ஸ்டார்ட் அப்!

பிரத்யேக தேவைக்கேற்ப ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இரு நண்பர்களின் கடின உழைப்பால் தொழில் தொடங்கிய 2 மாதங்களில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நான்கு மடங்கானது.

0

வணிக உலகின் சிறந்த தலைவர்களைக் கண்டு உந்துதல் பெற்ற 27 வயதான பரத் ஹெட்ஜ் மற்றும் 26 வயதான தர்ஷன் தேசாய் பிரத்யேக தேவைக்கேற்றவாறான ஆடை வழங்கும் நிறுவனத்தை தர்ஷனின் கேரேஜில் இருந்து துவங்கினார்கள். டெலிவரி செய்யும் பணிக்காக ஒரு நபர், ஒரே ஒரு அச்சிடும் பிரிவு இவற்றுடன் இவ்விருவரும் துவங்கிய முயற்சியானது ஒரு நம்பகமான வாடிக்கையாளர் தொகுப்பை உருவாக்கியது.

ஆரம்பக்கட்ட சீட் நிதி 10,000 ரூபாயாகும். இதில் 6,000 ரூபாய் டி-ஷர்ட் மாதிரிகளுக்காக பயன்படுத்தப்பட்டது. மிச்சமிருந்த தொகை அச்சு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டது.

இவர்களது கடின உழைப்பு பலனளித்தது. இரண்டு மாதங்களில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நான்கு மடங்கானது. இதை வெற்றிகான முதல் அடியாகக் கருதி ஐந்து நபர்களை பணியிலர்த்தினர். புதிய தொழிற்சாலையை உருவாக்கினர். புதிய இயந்திரங்களில் முதலீடு செய்தனர். எனினும் இவர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்கள், அருகாமையில் வசிப்போர் ஆகியோரிடமிருந்து முதலீட்டை பெற்றுக்கொண்டு எப்போதும் சுயநிதியில் இயங்கவே விரும்புகின்றனர்.

இனர்ஷியாகார்ட் (InertiaCart) 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி பதிவு செய்யப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு இரண்டு நிறுவனர்களும் தனியான பணியிடங்கள், கேபின், காட்சிப்படுத்தும் ஸ்டோர் போன்றவற்றை அமைத்தனர். அதுமட்டுமின்றி சரியான நேரத்தில் விநியோகம் செய்கின்றனர். இவர்களது வாடிக்கையாளர்கள் திருப்தியடைந்துள்ளனர். இதுவே இவர்களது மற்ற சாதனைகளாகும்.

அனைத்தும் எளிதாக இருக்கவில்லை

ஹார்லே டேவிட்சன் மோட்டார்பைக் மோசமான சாலையில் செல்வது போன்று தனது தொழில்முனைவுப் பயணம் இருந்ததாக பரத் தெரிவித்தார். இந்தப் பயணம் ஆர்வம் நிறைந்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

ஆர்டர் அளவு அதிகரித்தபோது பல்வேறு தடைகள் ஏற்படத் துவங்கியது. விற்பனையாளர்களால் சரியான நேரத்தில் டெலிவர் செய்யமுடியவில்லை. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதே சமயம் இதன் காரணமாக ஒரு புதிய தையல் பிரிவு துவங்கப்பட்டு அதிக ஊழியர்கள் பணியிலமர்த்தப்பட்டனர். பரத் கூறுகையில்,

”நீங்கள் சிறப்பாக செயல்பட முதலில் சிறியளவிலேயே துவங்கவேண்டும். ஆரம்பத்தில் இனர்ஷியாகார்ட் நிறுவனத்தில் ஒரே ஒரு ஊழியர் மட்டுமே இருந்தார். 45 டி-ஷர்ட்களுக்கான ஆர்டர் இருந்தது. நம்பகமான வாடிக்கையாளர்கள் சிலர் இருந்தனர். இன்று 29 பேர் அடங்கிய குழுவுடன் செயல்படுகிறோம். மார்கெட்டிங், உற்பத்தி, வடிவமைப்பு, மனிதவளம் என நான்கு பகுதிகளில் பயிற்சிபெற்ற ஊழியர்கள் உள்ளனர்,” என்றார்.

தர்ஷன், பரத் இருவரும் சில நேரங்களில் சேல்ஸ்மேன் பணியையும் டெலிவரி பணியையும் மேற்கொண்டுள்ளனர். அச்சிடும் பணி, பேக் செய்யும் பணி போன்றவற்றிலும்கூட ஈடுபட்டனர். இரவு வெகு நேரம் கழித்து டெலிவர் செய்தல், குறிப்பிட்ட ப்ராடக்ட் வகைக்காக இவர்களுக்கு விற்பனை செய்வோரிடம் கோரிக்கை விடுத்தல், இறுதி நேர அச்சு பிழைகள், வாடிக்கையாளர்கள் சரியான நேரத்தில் பணம் செலுத்தாமல் இருத்தல், தயாரிப்பில் திருத்தம் இருக்கும் காரணத்தால் தயாரிப்பை நிராகரித்தல் போன்றவை இவர்கள் சந்தித்த சவால்கள் என பரத் குறிப்பிடுகிறார்.

பரத் 2011-ம் ஆண்டு ரேவா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தார். அதன் பிறகு நண்பருடன் இணைந்து ஃபோர்க்யூப்ஸ் என்கிற விளம்பர நிறுவனத்தைத் துவங்கினார். இது நோட்டுபுத்தகங்களின் அட்டைகளில் விளம்பரங்களை வெளியிடும் நோக்கத்துடன் துவங்கப்பட்டது. 2012-ம் ஆண்டு பரத் நண்பர்களுடன் இணைந்து கார்ப்பரேட் நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களுக்கான அச்சுப் பகுதியில் ஓராண்டு பணிபுரிந்தார்.

தர்ஷன் 2012-ம் ஆண்டு ஜெயின் பல்கலைக்கழகத்தில் பி.காம் முடித்தார். கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போதே நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தைத் துவங்கினார். 2013-ம் ஆண்டு ’ப்ரிண்ட் ப்ரோ’ என்கிற தனிப்பட்ட தேவைக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் ஆடை ப்ராண்டைத் துவங்கி இரண்டாண்டுகளுக்குள்ளாகவே 75 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டினார். எனினும் இந்த இரு நிறுவனர்களும் தங்களது முந்தைய முயற்சியை கைவிட்டனர். பரத் கூறுகையில்,

”நாங்கள் சுமார் இரண்டாண்டுகள் போட்டியாளர்களாகவே இருந்தோம். இருவருக்கும் பொதுவான ஒரு விற்பனையாளரின் இடத்தில் நாங்கள் வழக்கமாக சந்திப்போம். இரண்டாண்டுகளாக நாங்கள் ஒருவரை ஒருவர் அறிவோம்,” என்றார்.

ஆடைகளை தனித்தேவைக்காக பிரத்யேகமாக தயாரித்தல்

ஆர்டர்களைப் பெற்றுக்கொண்ட பிறகு இனெர்ஷியாகார்ட் குழு வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்கின்றனர். அவர்களது தேவைகளைப் புரிந்துகொண்டு மாதிரிகளை அனுப்பி வைக்கின்றனர். வடிவமைப்பும் தயாரிப்பும் அங்கீகரிக்கப்பட்ட பிறகு அச்சிடப்பட்ட மாதிரிகளைத் தயாரித்து வாடிக்கையாளர்களிடம் காட்டுவார்கள். ஒப்புதல் பெற்ற பிறகு ஆடைகள் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களின் இடத்திலேயே டெலிவர் செய்யப்படும். 

இந்நிறுவனம் மூன்று வெவ்வேறு தரத்திலான மூலப்பொருட்களால் ஆன 15 வகையான ஆடைகளை பன்னிரண்டிற்கும் அதிகமான நிறங்களில் வழங்குகிறது. இதன் விலை 80 ரூபாய் முதல் 750 ரூபாய் வரையாகும். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்றவாறான தயாரிப்பைப் பொருத்தவரை அச்சு தொடர்பான பணிகள் மட்டுமல்லாது தையலுக்கான பட்டன்கள், நிறங்கள் போன்றவற்றை தேர்வு செய்வதற்கும் விரிவுப்படுத்தப்படுகிறது. இனெர்ஷியாகார்ட் ஒரு மாதத்திற்கு 300 முதல் 500 ஆர்டர்களைப் பெறுகிறது.

இனெர்ஷியாகார்ட் ஆன்லைன், ஆஃப்லைன் இரண்டிலுமே விற்பனை செய்து வரும் நிலையில் 90 சதவீத ஆர்டர்கள் ஆஃப்லைனிலேயே செய்யப்படுவதாக பரத் தெரிவிக்கிறார். இதுவரை இரண்டு லட்ச தயாரிப்புகள் விற்பனை செய்துள்ளனர். ஐந்து பேர் அடங்கிய இவர்களது குழு கார்ப்பரேட்களிடம் இருந்து ஆர்டர்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் பள்ளிகளில் இருந்து பெறப்படும் ஆர்டர்களையும் கவனித்துக்கொள்கின்றனர். இவர்களது குழு உறுப்பினர்களில் ஒருவரான அருண்குமாருக்கு கர்நாடகா முழுவதும் 100 கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு உள்ளது.

அடுத்த இரண்டாண்டுகளில் இனெர்ஷியாகார்ட் டெல்லி, ஹைதராபாத் மற்றும் பிற நகரங்களிலும் விரிவடைய திட்டமிட்டுள்ளது. மேலும் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்த தார்வாட் / ஹூப்ளியில் உள்ள உற்பத்திப் பிரிவை விரிவுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். 

 InertiaCart 2015-ம் ஆண்டு (மூன்று மாதங்கள்) 14,10,582 ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. 2015-2016-ம் ஆண்டு 1,01,27,060 ரூபாயும் 2016-17-ம் ஆண்டு 1,23,39,500 ரூபாயும் வருவாய் ஈட்டியுள்ளது.

உலகின் மொத்த நூல், இழை உற்பத்தியில் இந்தியா 14 சதவீதம் பங்களிப்பதாக இண்டியா ப்ராண்ட் ஈக்விட்டி ஃபவுண்டேஷன் தெரிவிக்கிறது. உள்ளூர் துணி மற்றும் ஆடை துறை 2021-ம் ஆண்டில் 141 பில்லியன் டாலராக மதிப்பிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒழுங்குபடுத்தப்பட்ட சில்லறை வணிகம், சாதகமான சூழல், அதிகரித்துவரும் வருவாய் அளவுகள் போன்றவைகளே இதற்கான காரணங்களாகும். இந்தியாவில் இருந்து செய்யப்படும் துணி மற்றும் ஆடை ஏற்றுமதி 2021-ம் ஆண்டு 82 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட்களிடையே நிலவும் தேவை காரணமாக கடந்த சில ஆண்டுகளில் தேவைக்கேற்றவாறு பிரத்யேகமாக தயாரிக்கப்படும் ஆடைகளானது ஆடைகள் சந்தையை வேறொரு நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. ஸ்டார்ட் அப்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளத் தவறவில்லை. த்ரெட்ஸ் & ஷர்ட்ஸ், இன்க்மோன்க், மை ட்ரீம் ஸ்டோர், iLogo, 99டிஷர்ட்ஸ் ஆகியவை சந்தையில் முத்திரை பதித்த சில நிறுவனங்களாகும்.

ஆங்கில கட்டுரையாளர் : அபராஜிதா சௌத்ரி | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL