சென்னையை சேர்ந்த 'konotor' செயலியை வாங்கியது 'FreshDesk' நிறுவனம்!

0

சென்னையை சேர்ந்த "ஃப்ரெஷ்டெஸ்க்" (FreshDesk) நிறுவனம் கைப்பேசியில் விளம்பரம் செய்யும் நிறுவனமான 'கோனோடர்' (Konotor) நிறுவனத்தை வாங்கியுள்ளது. இதன்மூலம் ஃப்ரெஷ்டெஸ்க் நிறுவனம் 2015ம் ஆண்டில் தனது மூன்றாவது நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 2015ல் 1CLICK.io எனும் லைவ் வீடியோ சேட் செய்ய உதவும் நிறுவனத்தை கையகபடுத்தியது. இரண்டாவதாக அக்டோபர் 2015ல் ஃப்ரில்ப் Frilip எனப்படும் சமூகவலைதள பரிந்துரை நிறுவனத்தை கைப்பற்றியது.

“கைப்பேசி சார்ந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை சேர்ப்பதிலும் அவர்களை தக்கவைப்பதிலும் சில தனித்துவமான சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. கோனோடர் தனது ஆரம்பகாலம் தொட்டே வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்துகொண்டு அவர்களுக்கான மார்க்யூ செயலிகளை உருவாக்கி அதில் பயனர்களை தக்கவைத்துக் கொண்டுள்ளது” என்கிறார் ஃப்ரெஷ்டெஸ்கின் தலைமை செயல் அதிகாரியான கிரிஷ் மாத்ருபூதம்.

கோனோடர் நிறுவனம் ஸ்ரீகிருஷ்ணன் கணேசன், விக்னேஷ் கிரிசங்கர் மற்றும் தீபக் ஆகியோரால் 2012ம் ஆண்டு நிறுவப்பட்டது. கோனோடர் நிறுவனம் இரண்டு வழி தொடர்பு அடிப்பையில் இயங்கக்கூடிய செயலி ஆகும். செயலியை பயன்படுத்துபவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களோடு தொடர்பு கொள்ளவும், வாடிக்கையாளர்கள் பதிலளிக்கவும் இது உதவுகிறது. வாட்ஸப் போன்றே தோற்றம் கொண்டது.

பயனர்கள் இதன்மூலம் சேவை குறித்த விசாரணைகள், கேள்விகள் போன்றவற்றை மொபைல் டெவலப்பரிடம் எழுப்ப முடியும். இந்நிறுவனம் ஜொமாடோ, டைம்ஸ் இண்டர்நெட், ஃபசோஸ் மற்றும் பேங்க்பஜார்.காம் போன்ற நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது. இதுவரை 40மில்லியன் பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தியிருக்கிறார்கள். டார்கெட், குவல்காம் வென்ச்சர்ஸ் மற்றும் ஆச்செல் பார்ட்னர்ஸ் போன்ற நிறுவனம் இந்த புதுநிறுவனத்திற்கு ஆதரவளித்திருக்கிறார்கள்.

“நாங்கள் ஃப்ரெஷ்டெஸ்க் குழுவோடு இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். இதன்மூலம் எங்களின் பார்வையை பகிர்வதோடு பயனர்களின் அனுபவத்தை சிறப்பானதாக்க உதவுகிறோம். ஃப்ரெஷ்டெஸ்கோடு இணைவதன் மூலம் தொழில்நுட்பத்தில் மேற்கொண்டு முதலீடு செய்ய முடிகிறது, ஃப்ரெஷ்டெஸ்கின் நிபுணத்துவத்தையும் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. இருவரும் இணைந்து தொழில் மேம்பாடு மற்றும் பயனர்களுக்கு உதவும் வகையில் செயல்படுவோம்” என்றார் கோனோடரின் இணை இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணன் கணேசன்.

கோனோடரை இணைத்துக்கொண்டதன் மூலம் ஃப்ரஷ்டெஸ்கின் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2010ம் ஆண்டு துவங்கப்பட்ட ஃப்ரெஷ்டெஸ்க் நிறுவனம் உலகம் முழுவதும் 50,000 வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. 3எம், ஹோண்டா, ஹுகோ பாஸ், பெனிசில்வேனியா பல்கலைக்கழகம், தி அட்லாண்டிக் மற்றும் பெட்ரோனஸ் போன்றோர் இவர்களின் வாடிக்கையாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களோடு ஈமெயில், கைபேசி, இணையதளம், ஃபோரம் மற்றும் சமூகவலைதளங்களில் உரையாட உதவுகிறது.

ஃப்ரெஷ்டெஸ்க் நிறுவனம் டைகர் க்ளோபல், கூகிள் கேபிடல் மற்றும் ஆச்செல் பார்ட்னர்ஸ் ஆகிய முதலீட்டாளர்கள் மூலம் கடந்த ஆறு மாதங்களில் 94 மில்லியன் டாலர் வரை திரட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் ஏப்ரல் மாதம் 2015ல் 50 மில்லியன் டாலரை திரட்டியதன் மூலம் 500 மில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்திருக்கிறது.

ஆங்கிலத்தில் : APARAJITA CHOUDHURY | தமிழில் : Swara Vaithee