வீட்டில் ஏற்படும் ரிப்பேர் மற்றும் பல்வேறு தேவைகளுக்கு சேவை அளிக்கும் கோவை நிறுவனம்!

0

இன்றைய சூழலில் சகலத்தையும் ஆன்லைனில் பெரும் வசதி வந்தால் கூட வீட்டில் ஏற்படும் சிறு தேவைகளை பூர்த்தி செய்வது பெரும் பாடாக இருக்கிறது. பிளம்பிங், மின் சேதம் போன்றவற்றை சரி பார்க்க ஆட்களை தேடுவது சற்று சிரமம் தான். இதற்குத் தீர்வு காணும் விதமாக பிளம்பர், ஓட்டுனர், வீட்டு வேலை ஆட்கள், எலெக்டிரிசியன் போன்றவர்களை ஒருங்கிணைக்க FIXODO என்னும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர்.

Fixodo குழு
Fixodo குழு

ரமா மற்றும் க்ருபா என்னும் இரு சகோதரிகளால் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.

“வெளிநாட்டில் இருந்து என் அம்மா சென்னைக்கு வந்த பொழுது சந்தித்த முதல் பிரச்சனை இது. வீட்டுக்கு ஏற்ற வேலை ஆட்கள் மற்றும் இதர தேவைகளுக்கு தொழில் வல்லுனர்களை தேடுவது. இதே சிரமம் கோவையில் வசிக்கும் தன் உறவினர்  க்ருபாவுக்கும் இருந்தது,”

என்கிறார் ரமாவின் மகன் சூரஜ், FIXODO நிறுவனத்தில் துணை நிறுவனர். இதற்கு முறையான ஒரு தீர்வுக் காண வேண்டும் என இருவரும் அதை நோக்கியே பல முயற்சிகளை எடுத்துள்ளனர். வேகமாக நகரும் இந்த காலத்தில் இணையம் மூலம் பல மாற்றங்கள் வருகிறது. எனவே அதையே தங்கள் ஆயுதம் ஆக பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்தனர்.

“வெளிநாடு போல் வீட்டில் ஏற்படும் சிறிய வேலைகளை செய்ய பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தியாவில் இல்லை. இருந்தாலும் அவர்களை அனுகமுடிவதில்லை. இதை ஒருங்கிணைக்கவே நாங்கள் நினைத்தோம்,” என்கின்றனர் இந்த சகோதரிகள்.

இந்த வேலைகளை செய்ய அரசு பயிற்சி அளிக்க சிறப்பு கல்வி நிலையம் உருவாக்கிய நிலையில் கூட நமக்கு வேண்டிய அளவு பயிற்சி இருப்பதில்லை என்கின்றனர் அவர்கள். மேலும் மின் சாதனங்கள் பழுதுப்பார்க்க அல்லது வீட்டிற்கு தேவையான மற்ற வேலைகளை செய்யும் வேலையாட்கள் ஒரு நிலையான விலையை நிர்ணயிப்பது இல்லை. ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு விலை கூறுவர்.  இதை எல்லாம் கவனித்த இவர்கள் அமெரிக்காவில் இருக்கும் டாஸ்க் ராபிட் என்ற நிறுவனத்தை மாதிரியாகக் கொண்டு இந்தியாவில் ஒரு நிறுவனம் அமைக்க முடிவு செய்தனர்.

“தொழில்நுட்பத்தில் ஈடுபாடு கொண்ட என்னிடம்  இந்தியாவில் இது போன்ற நிறுவனம் அமைக்க தொழிநுட்ப உதவியை நாடினார்கள். அதன் பின்னரே ஒரு ஆப் துவங்க முடிவு செய்தோம்,” என்கிறார் சூரஜ்

ஆனால் இதை துவங்க முடிவு செய்தபின் அவர்கள் சந்தித்த முதல் சவால் மெட்ரோ நகரங்கள் ஆன சென்னை, டெல்லி மும்பை போன்ற பெரும் நகரத்தில் ஏற்கனவே இது போன்ற நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருந்தது. இந்த சூழல் இருந்தாலும் கூட டயர் 2 மற்றும் 3-ம் கட்ட நகரங்களிலும் அதிகம் பேர் இ-காமர்ஸ் நிறுவனத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்துக்கொண்டனர். மேலும் இன்னும் சில வருடங்களில் நிச்சயம் இ-காமர்ஸ் நிறுவனம் நல்ல லாபம் ஈட்டும் என்பதை அறிந்து தங்கள் நிறுவனத்தை தொடங்க முடிவு செய்தனர்.

Fixodo செயலி
Fixodo செயலி

இதை கருத்தில் கொண்ட இவர்கள் இரண்டாம் கட்ட நகரமான கோவையில் தங்கள் நிறுவனத்தை தொடங்கினர்.

“வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் பழுது பார்த்து சரி செய்யும் நோக்கில் சிதறி கிடக்கும் தொழில்நுட்பவாதிகளை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம்.”

நியாயமான விலையில் வீட்டிற்கு வந்து பயற்சிபெற்ற தொழில்நுட்ப வல்லுனர்கள் பழுது பார்துக்கொடுக்கின்றனர். குடியிருப்பு சமூகத்திற்கு ஓராண்டு சேவை போன்றவற்றையும் இந்நிறுவனம் இயக்குகிறது. கோவையில் தொடங்கிய FIXODO, தற்பொழுது திருச்சி மற்றும் விஷாகப்பட்டனதிற்கு விரிவடைந்துள்ளது.

செப்டெம்பர் 2016 இந்நிறுவனத்தை தொடங்கினர். தொடங்கி ஓராண்டு ஆன நிலையில் 3000 வாடிக்கையாளர்கள் இவர்களின் சேவையை பெற்றுள்ளனர்.

“கோவையில் இதை தொடங்கிய நாளிலிருந்து எங்கள் நிறுவனம் இதுவரை 40 குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு மூலம் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்கின்றனர்.

2019-க்குள் 10 இரண்டாம் கட்ட நகரங்களில் தங்கள் நிறுவனத்தை விருத்தி செய்வதையே குறிக்கோளாக வைத்துள்ளனர் நிறுவனர்கள்.