89 வயதிலும் கைப்பைகளைத் தைத்து ஆன்லைனில் விற்பனை செய்யும் பாட்டி!

0

உங்களுக்கு ஒரு செயலின் மீது ஈடுபாடும் ஆர்வமும் அதிகம் இருக்குமானால் அதில் ஈடுபட வயது ஒரு தடையல்ல. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் லதிகா சக்கரவர்த்தி. இவருக்குக் கைப்பைகளை (potli bags) தைப்பதில் ஆர்வம் அதிகம். 89 வயதான இவர் வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே என்பதை நிரூபித்து வருகிறார்.

டிஜிட்டல் உலகிற்கு புதிதாக அறிமுகமாகியிருக்கும் இவருக்கு கடந்த மூன்று மாதங்களாக ’லதிகாஸ் பேக்ஸ்’ என்கிற சொந்த வலைதளம் உள்ளது. ஜெர்மனி, நியூசிலாந்து மற்றும் ஓமன் நாடுகளில் இருந்து ஏற்கெனவே ஆர்டர்கள் வந்துள்ளது. சில சமயம் அவருக்கு வரும் ஆர்டர்களின் அளவு அதிகமானதாக இருக்கும். அப்போது அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யமுடியுமா என்கிற கேள்வியும் அவர் மனதில் எழும். 

அதிகளவிலான வாடிக்கையாளர்கள் லதிகாவின் பைகளை வாங்குவதற்குக் காரணம் அதன் தனித்துவமான வடிவமைப்பாகும். ஆன்லைனில் கிடைக்கும் இந்தப் பைகளின் விலை 500 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை ஆகும்.

லதிகா அசாமின் துர்பி பகுதியில் பிறந்தார். நகரத்திற்குச் சென்று பள்ளிப்படிப்பை முடித்தார். படிப்பு முடிந்த பிறகு சர்வே ஆஃப் இண்டியா அதிகாரியான கிருஷ்ணா லால் சக்கரவர்த்தி உடன் திருமணம் நடந்தது. இவரது கணவரின் பணி நிமித்தமாக வெவ்வேறு மாநிலங்களுக்குப் பயணம் செய்தனர். இதனால் அவ்வப்போது புதிய இடங்களில் புதிய மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு லதிகாவிற்குக் கிடைத்தது. வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த துணி வகைகளைக் கண்டதால் லதிகாவிற்கு தையலில் ஆர்வம் ஏற்பட்டது. லதிகா தனது குழந்தைக்கு ஆடைகள் தைத்து வந்தார். அவருக்கு ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட தையல் அவருக்குப் பெரிதும் உதவியது. அவரது குழந்தை வளர்ந்ததும் பொம்மைகள் தயாரிக்கத் துவங்கினார். அப்போதுதான் தையலில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்ததை உணர்ந்தார்.

அவரது கணவர் இறந்த பிறகு லதிகா இந்திய கடற்படையில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த தனது மகனுடன் சென்று தங்கினார். மகன் பணிக்குச் செல்லும்போது வீட்டில் இருந்ததால் தையலுக்கு அதிக நேரம் ஒதுக்கினார் என ’டெய்லி ஹண்ட்’ தெரிவிக்கிறது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு லதிகா சிறிய கைப்பைகளை உற்பத்தி செய்யத் துவங்கினார். அப்புறப்படுத்தப்பட்ட பழைய புடவைகளும் குர்திகளும் பயன்படுத்தப்படுவதே இவரது பைகளின் தனித்துவமான அம்சமாகும். இந்தப் பைகள் பாரம்பரிய உடைகளுக்கு ஏற்றதாக அமைகிறது. அவர் உற்பத்தி செய்யும் பைகளை நண்பர்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் கொடுத்துவிடுவார். இதுவரை சுமார் 300 பைகள் உருவாக்கியுள்ளார். 

ஆன்லைன் முயற்சி அவரது பேரன் ஜாய் சக்கரவர்த்தியின் திட்டமாகும். இவர் தனது பாட்டி உற்பத்தி செய்யும் பைகளில் இருக்கும் தனித்துவத்தையும் வடிவமைப்பில் இருக்கும் படைப்பாற்றலையும் கண்டு இந்த முயற்சியைத் துவங்கினார். 

அவர் ஜெர்மனியில் வசிக்கிறார். அடிக்கடி தனது பெற்றோரைச் சென்று சந்தித்து வருகிறார். அதிக நேரம் கடத்தாமல் ’லத்திகாஸ் பேக்ஸ்’ என்கிற வலைதளத்தை உருவாக்கினார்.

லதிகா எவ்வாறு சுயமாக ஊக்கமளித்துக் கொள்கிறார் என்பது குறித்தும் தொடர்ந்து பணியில் ஆர்வமாக இருந்து வருவது குறித்தும் ’ஸ்கூப்வூப்’ உடனான நேர்காணலில் அவர் குறிப்பிடுகையில், 

“நான் கட்டுப்பாடு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தேன். அதுவே நான் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க உதவியது. சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுந்துவிடும் பழக்கத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL