Inclov: மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்க்கைத் துணையை தேடி இணைக்கும் உலகின் முதல் தளம்!

0

இன்று வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க டிண்டர், ட்ரூலி மேட்லி போன்ற பல செயலிகள் பயன்பாட்டிற்கு உள்ளன. ஆனால் மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழ்க்கைத்துணையை எப்படித் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்மில் யாராவது யோசித்ததுண்டா? நம் நாட்டில் கிட்டத்தட்ட 8 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 5 சதவீதத்தினர்தான் திருமணம் செய்துகொள்கின்றனர். இவர்கள் குறித்து ஏன் யாரும் யோசிக்கவில்லை என்று நினைக்கும்போது ஆச்சரியமாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு யோசனையுடன் தொழில்முனைவோரானவர் 23 வயதான கல்யாணி கோனா.

தான் தற்செயலாகத்தான் ஒரு தொழில்முனைவோராக மாறினேன் என்கிறார் கல்யாணி. அது உண்மைதான். மும்பையின் HR வணிகம் மற்றும் பொருளாதாரக் கல்லூரியின் பட்டதாரியான கல்யாணி, 17 வயதில் கல்லூரியில் வகுப்புகளுக்கு செல்வதை புறக்கணித்துவிட்டு தேர்வு நேரத்தில் மட்டும் கல்லூரிக்குச் சென்றார். ஒரு மாதகால அவகாசத்திலான 20 ப்ராஜெக்ட்களுக்கு மற்ற நேரத்தை பயன்படுத்தினார். ப்ரேசிலில் ஆங்கிலம் கற்பிப்பது, HSBC ம்யூச்சுவல் ஃபண்டை இளைஞர்களுக்கு விற்பது, ஷாப்சென்ஸ் எனும் ஒரு ஸ்டார்ட் அப்பின் வணிக வளர்ச்சிக்கு உதவுவது, மும்பையின் AIESEC சேப்டரில் துணைத் தலைவர் என்று மாற்றுத்திறனாளிகளுக்கான தேவையை பூர்த்தி செய்ய முனையும் வரை பலவிதமான அவதாரமெடுத்தார்.

”இமயமலைக்கு ட்ரெக்கிங் செல்லும்போது சந்தர்கனி பாஸ் ட்ரெக்கிங்கிற்கு அறிமுகமற்ற ஒரு குழுவினருடன் சென்றேன். திடீரென்று மாற்றுத்திறனாளிகள் இப்படிப்பட்ட சந்தோஷத்தை எப்படி அனுபவிப்பார்கள் என்று வியந்தேன்.”

அவ்வாறான எண்ணங்களுக்காகவும் முடிவிற்காகவும் அவர் வருத்தப்படவில்லை. கல்யாணி மும்பை திரும்பியதும் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக மேட்ரிமோனியல் சேவை ஏதும் இல்லாததை அறிந்தார். இந்த யோசனைக்குப் பின் தொடங்கியதுதான் ’வான்டட் அம்ப்ரெல்லா’. இது மாற்றுத்திறனாளிகள் தங்கள் துணையை தேர்ந்தெடுக்க உருவான மேட்ரிமோனியல் சேவை நிறுவனம். எனினும் இந்த நிறுவனத்தை ஆஃப்லைன் சேவையாக செய்யத்தொடங்கியது திருப்திகரமாக இல்லை.

ஏனெனில் ஒரே நேரத்தில் 150 விண்ணப்பங்களை கையாள வேண்டியிருந்தது. தேவை அதிகமாக இருப்பது தெரிந்ததும் கல்யாணியின் நோக்கம் இன்னும் தெளிவானது. அதாவது, அவர்களாக விரும்பும்வரை யாரும் தனியாக இருக்கக்கூடாது தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டார். எண்ணத்தை நிறைவேற்றமுடியும் என்கிற திடமான நம்பிக்கை மட்டுமே இருந்ததே தவிர செயல்படுத்த தேவையான பணம் கல்யாணியிடன் இல்லை. 

Wishberry.in -ல் தான் உருவாக்க நினைத்த ’லவ்வபிளிட்டி’ எனும் செயலிக்காக ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படும் என்று பிரச்சாரம் செய்தார். இதற்கு 143 பேர் ஆதரித்ததை பார்த்தபோது அவருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. 60 நாட்களுக்குள் 6.15 லட்சம் சேகரிப்பதற்கு உதவினார்கள். பணம் அவசியம்தான். ஆனால் அதைவிட எங்களுக்கு மக்கள் தெரிவித்த கருத்துக்களும் ஆலோசனைகளும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

உதாரணமாக ‘லவ்வபிளிட்டி’ என்ற பெயரில் ’எபிளிட்டி’ என்ற வார்த்தை கேட்பதற்கு சற்று அசௌகரியாக இருப்பதாக பலர் தெரிவித்தனர். அதனால் நாங்கள் ’இன்க்லவ்’ என்று பெயரை மாற்றினோன். ’இன்க்லவ்’ என்றால் ‘இன்க்ளூசிவ் லவ்’ என்று பொருள்படும். இணை நிறுவனர் ஷங்கர் ஸ்ரீநிவாசனுடன் இணைந்து ‘இன்க்லவ்’ நிறுவனத்தை தொடங்கினார் கல்யாணி. 

இடது: இன்க்லவ் மூலம் சேர்ந்த ஜோடி, வலது: நிறுவனர் கல்யாணி கோனா
இடது: இன்க்லவ் மூலம் சேர்ந்த ஜோடி, வலது: நிறுவனர் கல்யாணி கோனா

இன்க்லவ் எவ்வாறு வித்தியாசப்படுகிறது?

உலகில் இதுதான் அனைத்து விதமான மாற்றுத்திறனாளிகளும் துணை தேடுவதற்காக உருவான முதல் செயலியாகும். இதைத் தவிர இது குறித்து மகிழ்ச்சியடைய வேறு பல காரணங்களும் உள்ளன.

1. பார்வையற்றோர் பயன்படுத்துவதற்கு ஏதுவாக ஸ்க்ரீன் ரீடர் மற்றும் டாக்பேக் வசதி செய்யப்பட்டுள்ளது.

2. இந்த செயலியில் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் வசதி நீக்கப்பட்டதால் இது முற்றிலும் பாதுகாப்பானதாகும்.

3. ஆரோக்கிய குறைபாடு உள்ளிட்ட அனைத்து விதமான குறைபாடுள்ளவர்கள் மற்றும் சிறப்பு தேவையுள்ளவர்கள் குறித்த சரிபார்க்கப்பட்ட தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

4. மற்ற மேட்ரிமோனியல் சேவையளிக்கும் செயலிகளைப் போலவே ’இன்க்லவ்’ செயலியிலும் வயது, இடம், குறைபாட்டின் வகை, மருத்துவம் மற்றும் குணமடைந்தவர்கள் போன்ற பல்வேறு தகவல்களை, பயன்படுத்துவோர் தங்களுக்கேற்ற வகையில் தேர்வு செய்துகொள்ளலாம்.

5. இரண்டு வருடங்களுக்குள் உலகளவில் அன்பிற்காக ஏங்கி காத்திருக்கும் 600 மில்லியனுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு உதவ திட்டமிட்டுள்ளது இன்க்லவ். 

”வரும் நாட்களில் வீடியோ காலிங் வசதி செய்ய திட்டமிட்டுள்ளோம். இதனால் காது கேளாதவர்கள் மற்றும் பேச்சுத் திறனற்றவர்கள் சைகை மொழி மூலமாக உரையாட உதவும்.”

என்றார் கல்யாணி. மேலும் “தொழில்நுட்பத்தால் சாத்தியமாகக்கூடிய விஷயங்கள் பல உள்ளன. அதன் வாயிலாக அதிகபட்ச நன்மைகளை உருவாக்க மனிதர்களான நாம்தான் முயன்றுகொண்டே இருக்கிறோம்” என்கிறார்.

இந்த செயலி தற்போது ஆண்ட்ராய்டில் உள்ளது. கல்யாணியின் குழுவினர் iOS-லும் வெளியிடும் பணியில் உள்ளனர். இந்த முயற்சியின் பலன் எப்படி இருந்தது? ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் அபாரமாக இருந்தது. இன்க்லவ் 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ம் தேதி தொடங்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட நகரங்களிலிருந்து 2,300 பேர் பதிவு செய்திருக்கின்றனர். இதில் 87 சதவீததினர் நாள் முழுவதும் ஆக்டிவாக இருக்கின்றனர். 

இன்க்லவ் துவங்கப்பட்ட 10 நாட்களுக்குள்ளாகவே அனிஷா மற்றும் இம்ரான் இருவரும் இதில் அறிமுகமாகி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். 30 வயதான அனிஷா பானு முல்தானி ஆறு வருடமாக ஒரு துணையை தேடிக்கொண்டிருந்தார். போலியோவால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த வருடத்தின் மிஸ் வீல்சேர் இந்தியா அழகி பட்டத்தை வென்றவர். சூரத்தைச் சேர்ந்த இவர் திருமணம் செய்துகொள்வதற்காக பல தியாகங்களை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார். அனைத்தையும் கடந்து இறுதியில் குஜராத்தின் ஜுனாகத் பகுதியைச் சேர்ந்த கரானா இம்ரான் எனும் அக்கவுண்டண்டுடன் அறிமுகமானார். இவரும் போலியோவால் பாதிக்கப்பட்டவர். மே மாதம் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது.

அதே போல பார்வையற்றவரான சாகர் மற்றும் எந்தவித குறைபாடும் இல்லாத நதியா இருவரும் அறிமுகமாக உதவியது இன்க்லவ். நாடெங்கும் பல கிளைகளைக் கொண்ட ’மமகோடோ’ எனும் பிரசித்திபெற்ற ரெஸ்டாரென்டில் இருவரும் சந்தித்தனர். தொடர்ந்து தொடர்பில் இருக்க இருவரும் முடிவெடுத்துள்ளனர்.

இன்க்லவ்வின் பிரகாசமான எதிர்காலம்

கல்யாணி இன்க்லவ்வை வணிகமாக மட்டுமல்லாமல் சமூகத்திற்கான முயற்சியாகவும் பார்க்கிறார். உலகளவில் விரிவாக்க திட்டமிட்டுள்ளார். உலகெங்கும் 600 மில்லியன் துணையில்லாத தனிநபர்களை சென்றடைவதை இலக்காக கொண்டுள்ளார்.

Inclov APP பதிவிறக்கம் செய்ய