மத்திய பட்ஜெட் மூலம் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு கிடைத்துள்ள மறைமுக பலன்கள்!

0

பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கான டிஜிட்டல் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ச்சிக்கான வர்த்தகத்தை பெற உதவும்.

மத்திய பட்ஜெட்; சிகரெட் மற்றும் சிறிய பொருள்கள் பற்றி பேசாமல் கச்சிதமாக அமைந்துள்ளது. அநேகமாக முதல் முறையாக அரசு, மானியங்களை விட உற்பத்தி செயல்திறனை மேம்படுத்துவது பற்றி பேசியுள்ளது.

மேலும், அரசு டிஜிட்டல் இந்தியாவுக்கு ஆதரவு அளித்து, நிதி ஒதுக்கீட்டை ரூ.3,000 கோடியாக உயர்த்தியுள்ளது. பட்ஜெட்டை நுணுக்கமாக கவனித்தால் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவக்கூடிய பல விஷயங்கள் மறைந்திருப்பது புரியும்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவக்கூடிய அம்சங்கள்:

• பாரத் நெட்: இந்த பிராட்பேண்ட் இணைய வசதி அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதை பயன்படுத்தி ஸ்டார்ட் அப்கள் கிராமப்புற மற்றும் வேளாண் வர்த்தகத்திற்கான சேவைகளை உருவாக்கலாம். இந்த மேடை மூலம் அரசு சேவைகளை வழங்க உள்ளூர் மொழியில் டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்கலாம். மேலும் கிராமப்புற இந்தியாவை சென்றடைய தொலை தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து சேவைகளை உருவாக்கலாம்.

• உள்கட்டமைப்பு: அடிப்படை கட்டமைப்பிற்கு ரூ.6 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டோல் மையங்களும் ரொக்கமில்லா சேவைக்கு மாறுகின்றன. ரொக்கமில்லா கட்டண வசதிக்காக கார்கள் அல்லது வர்த்தக வாகனங்கள் ஆர்.எப்.ஐ.டி டேக் பெற்றிருக்க வேண்டும். இதற்கு அடிப்படையான பணம் செலுத்தும் வசதியை அளிக்கும் வகையில் தொழில்நுட்ப மற்றும் நிதி நுட்ப நிறுவனங்கள் சேவைகளை உருவாக்கலாம்.

• 5 ஜி நுட்பம்: 5 ஜி நுட்பம் சார்ந்த வசதியை இந்தியாவில் உருவாக்க அரசு ஆதரவு அளிக்க உள்ளது. இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்த அலைவரிசையில் கவனம் செலுத்துவதற்கு பதில் ஸ்டார்ட் அப்கள் மேம்பட்ட அலைவரிசையில் கவனம் செலுத்தலாம். டேட்டா சயின்ஸ், உள்ளடக்கம் மற்றும் வீடியோ சேவைகளை அடிப்படையாகக் கொண்ட ஸ்டார்ட் அப்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

• ரெயில்களில் வை-பை/ சிசிடிவி: ரெயில் வலைப்பின்னலில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஸ்டார்ட் அப்கள் சேவையை உருவாக்கலாம். அரசு 10,000 வை-ஃபை மையங்களை அமைக்க திட்டமிட்டு இதற்காக ரூ.10,000 கோடி செலவிட உள்ளது.

• சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வசதி குறித்து அரசு குறிப்பிட்டுள்ளது. டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற அனுமதித்துள்ளது.

” நிதி அமைச்சகம் தொலைநோக்கு பார்வையை வெளிப்படுத்தியுள்ளது. எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் வளர்ச்சிக்கு உதவ கேபிடல் பிளோட் போன்ற டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்களை அங்கீகரித்திருப்பதை வரவேற்கிறோம்,”என்கிறார் கேபிடல் பிளோட் இணை நிறுவனர் ஷசாங்க் ரிஷியசிருங்கா.

யுவர்ஸ்டோரியிடம் பட்ஜெட் பற்றி பேசிய, ஐ.டி துறை வல்லுனர் மற்றும் முதலீட்டாளரான மோகன்தாஸ் பை, கார்ப்பரேட் டாக்ஸ் குறைப்பு நல்ல விஷயம், ஆனால் இது ரு.250 கோடி அல்லது அதற்கும் குறைவாக உள்ள நடுத்தர நிறுவனங்களையும் கடந்து விரிவாக்கியிருக்கலாம் என்று கூறினார்.

”மொதத்தில் பட்ஜெட் சமூகத்தின் அதிகம் பாதிக்கப்படும் பகுதியான வாக்களிக்கும் மக்கள் மீது அதிக கவனம் செலுத்தியுள்ளது. ஒருசில சலுகைகள் தவிர வர்த்தக துறைக்கு அதிக பலன்கள் இல்லை. கார்ப்பரேட் வரியை அமெரிக்கா போன்ற நாடுகள் 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைக்கும் காலத்தில் இந்தியா சர்வதேச அளவில் போட்டியிடக்கூடியதாக இருக்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் ஏற்கனவே முதலீடு திரட்டுவது செலவு மிக்கதாக உள்ள சூழலில் அரசின் ஆதரவு இல்லாமல் இருப்பது இத்துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மட்டும் அல்ல, வேலைவாய்ப்பு வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பாதகமானது என்கிறார் அவர். எனினும் சாமானிய மக்கள் மீது கவனம் செலுத்தப்பட்டிருப்பதாலும், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பிற்கான ஒதுக்கீடு உயர்ந்திருப்பதாலும் இந்த பட்ஜெட்டிற்கு 10 க்கு 9 மதிப்பெண் அளிப்பேன் என்று அவர் கூறுகிறார்.

ஆங்கில கட்டுரையாளர்: விஷால் கிருஷ்ணா | தமிழில்: சைபர்சிம்மன்