சிறு நகர மாணவர்கள் அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற பயிற்சி அளிக்கும் நிறுவனம்! 

0

குருகிராமைச்சேர்ந்த கல்வி ஸ்டார்ட் அப்பான நியோ ஸ்டென்சில், தனது நேரடி கற்றல் மேடை மூலம் ஐ.ஏ.எஸ், ஐ.இ.எஸ், கேட் மற்றும் மாநில தேர்வுகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிடம் இருந்து ஆன்லைன் வகுப்புகளை அளிக்கிறது. 

ஸ்டார்ட் அப் : நியோ ஸ்டென்சில் , நிறுவனர்: லவ் பீஜால், குஷ் பிஜால்

நிறுவப்பட்ட ஆண்டு: 2014, துறை: கல்வி நுட்பம்

தீர்வளிக்கும் பிரச்சனை: அரசுத்தேர்வுகளுக்கு தயாராக லைவ் ஸ்டிரீமிங் வகுப்புகள்

நிதி: டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம், ஹிரோ மஷிதா ( எம்.அண்ட் எஸ் பாட்னர்ஸ்), பாரகன் டிரஸ்ட், ஜபாங் மற்றும் யூனிகாமர்ஸ் நிறுவனர்களிடம் இருந்து ஒரு மில்லியன் டாலர் சீட் நிதி.

சகோதரர்கள் லவ் பிஜால் (33) மற்றும் குஷ் பிஜால் (34) பல்வேறு போட்டித்தேர்வுகளுக்காக தங்களை பெற்றோர் கோட்டா மற்றும் புதுதில்லிக்கு அனுப்பி வைக்க முடிந்தது அதிர்ஷ்டம் என்கின்றனர். லவ் பிஜால் எய்ம்சில் மருத்துவம் பயின்று பின்னர் ஐஐஎம் அகமதாபாத்தில் நிர்வாகம் பயின்றார் என்றால், குஷ் பிஜால் ஐஐடிபி மற்றும் ஐஐடிஎம்-கொல்கத்தாவில் பயின்றார். ஜிஏடிஎக்ஸ், என்சிடிஇஎக்ஸ்மற்றும் ஜேபி கேபிடலில் பணியாற்றியிருக்கிறார்..

நியோ ஸ்டென்சில் நிறுவனர்கள் லவ்-குஷ் 
நியோ ஸ்டென்சில் நிறுவனர்கள் லவ்-குஷ் 
“எல்லோராலும் முன்னணி பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற முடியாது. பலரது லட்சியம் போதிய வசதி இல்லாத காரணத்தால் பாதிக்கப்படுகிறது. இதுவே, தங்களால் இயன்றதை விட அதிக அளவில் செலவிடாமல் எங்கிருந்தாலும், எவராலும் அணுகக் கூடிய மேடையை உருவாக்க தூண்டுதலாக அமைந்தது. எந்த காரணத்தினாலும் கற்றல் நின்று விடக்கூடாது என்பதே முக்கியம்,” என்கிறார் குஷ்.

சகோதரர்கள் லவ் மற்றும் குஷ் 2014 ல் ’நியோ ஸ்டென்சிலை’ துவக்கினர். இந்த கல்விநுட்ப ஸ்டார்ட் அப் தனது நேரடி கற்றல் மேடை வாயிலாக ஐ.ஏ.எஸ், ஐ.இ.எஸ், கேட் மற்றும் மாநில சிவில் சர்வீஸ் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கான ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆன்லைன் வகுப்புகளை வழங்குகிறது.

“நாங்கள் லைவ் ஸ்டிரீமிங் வகுப்புகள் மூலம், மாணவர்கள், வகுப்பறைக்குச்சென்றால் பெறக்கூடியதற்கு நிகரான தரமான, இப்போதைய கற்றல் அனுபவம் பெறச்செய்கிறோம். மேலும் மாணவர்கள் தங்கள் பணியிலோ அல்லது வீட்டின் வசதியில் இருந்தோ சமரசம் செய்து கொள்ள வேண்டியதில்லை. மேலும் புதுதில்லி அல்லது வேறு நகரங்களுக்கு பயிற்சிக்காக செல்ல அதிக தொகை செலவிட வேண்டியதில்லை,” என்கிறார் குஷ்.

மாணவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் இணைய இணைப்பு மற்றும் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்போன். மற்ற எல்லாவற்றையும் நியோ ஸ்டென்சில் கவனித்துக்கொள்கிறது.

இந்த மேடை என்பது அடிப்படையில் பல்வேறு ஆசிரியர்கள் அளிக்கும் பாடத்திட்டங்களின் பட்டியலை பார்த்து தங்களுக்கு வசதியான நேரத்தில் பாடத்திட்டத்தை தேர்வு செய்து கொள்வதற்கான சந்தையாக இருக்கிறது. இந்த மேடை முழுமையானதாக இருக்கும் வகையில், மாதிரி தேர்வுகள், வலைப்பதிவுகள், பாடங்கள் ஆகியவற்றை மற்ற அம்சங்களுடன் நியோ ஸ்டென்சில் வழங்குகிறது. இவை அனைத்தும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆலோசனை அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை. மேலும் கட்டணம் செலுத்திய பயணர்களுக்கு ஆசிரியர்கள் மாதிரி தேர்வுகளையும் நடத்துகின்றனர்.

இதுவரை இந்த மேடையில் 4,5000 மாணவர்கள் கட்டணம் செலுத்தி சேர்ந்திருப்பதாக நிறுவனம் தெரிவிக்கிறது. 

“50% பயணர்களுக்கு மேல், 3 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள பெற்றோர்களை கொண்டிருக்கின்றனர். மேலும் இந்தியாவின் மூன்றாம் மற்றும் நான்காம் அடுக்கு நகரங்களைச்சேர்ந்தவர்கள். எங்கள் மாணவர்களில் ஒருவரான, நம்ரதா ஜெயின், ஐ.ஏ.எஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 99 வது இடம் பெற்றவர், நக்ஸல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட டாண்டவடா பகுதியைச்சேர்ந்தவர். நம்ரதா போன்ற 100க்கும் மேற்பட்ட வெற்றிகரமான மாணவர்கள் எங்கள் ஆன்லைன் வகுப்பில் பயின்றுள்ளனர்,” என்கிறார் குஷ்.

மாணவர்கள் பலன் பெறுவதோடு, இந்த மேடை ஆசிரியர்களுக்கும் பலனுள்ளதாக இருக்கிறது. வகுப்பில் சிலநூறு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு பதிலாக, எந்தவித கூடுதல் முயற்சியும் இல்லாமல் ஆதிக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்கலாம். நியோ ஸ்டென்சில் 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

செயல்திட்டத்தில் மாற்றம்

“கற்றல் நிர்வாக அமைப்பில் துவங்கி, கல்லூரிகளுக்கு எடுத்துச்சென்றோம். ஆனால் பி2பி மாதிரிக்கு நீண்ட காலம் தேவை என்றும், குறுகிய காலத்தில் மதிப்பு அளிக்க முடியாது என்றும் தெரிந்து கொண்டோம். மேலும் மாணவர்கள் நல்ல ஆசிரியரை அணுக முடியாத பிரச்சனையும் நீடித்தது. எனவே பி2சி மாதிரிக்கு மாறினோம். அதன் பிறகு பிரச்சனையில்லை,”

என்று ஆரம்ப கால சவால்கள் பற்றி குஷ் விவரிக்கிறார். எனினும் இந்த மாதிரியிலும் அதற்குறிய சவால்கள் இருந்தன. கல்வி நிறுவனங்களை ஒப்புக்கொள்ள வைப்பது கடினமாக இருந்தது. மேலும் நாட்டில் இணைய வசதி பரவலாக்கம், ஸ்மார்ட் சாதனங்கள் பயன்பாடு, இணைய கட்டணம் ஆகிய அம்சங்கள் சவால்களாக இருந்தன.

இருப்பினும் விழிப்புணர்வு அதிகரிப்பு, குறைவான இணைய கட்டணம் மற்றும் இணைய வசதி காரணமாக அதிக மாணவர்கள் சேர்ந்தனர். இப்போது நிறுவனம் குருகிராம், ஜெய்பூர் மற்றும் ஐதராபாத்தில் அலுவலகம் கொண்டுள்ளது.

நியோ ஸ்டென்சில் மாணவர்களிடம் இருந்து குறிப்பிட்ட பாடத்திட்டத்திற்காக கட்டணம் வசூலிக்கிறது. பங்குபெறும் கல்வி நிறுவனங்களுடன் வருவாயை பகிர்ந்து கொள்கிறது. 2015 ஜூலையில் சேவை அளிக்கத்துவங்கிய பிறகு 2016 நிதியாண்டில் ரூ. 80 லட்சம் மற்றும் 2017 நிதியாண்டில் ரூ.2.4 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

நியோ ஸ்டென்சில் குழுவினர் 
நியோ ஸ்டென்சில் குழுவினர் 
“2018 நிதியாண்டில் ரூ. 6 கோடி அளவில் வருவாய் ஈட்டியுள்ளோம். ஆண்டு அடிப்படையில் வளர்ச்சி பெற்று லாபம் ஈட்டி வருகிறோம். பயணர்கள் நோக்கில் ஆண்டு அடிப்படையிலான வளர்ச்சி விகிதம் கடந்த ஆறு மாதங்களில் அதிகரித்துள்ளது. ஒரு மாத போக்குவரத்து இப்போது 50 லட்சமாக இருக்கிறது. இதை மாதம் 100 லட்சமாக அடுத்த நான்கு மாதங்களில் உயர்த்த திட்டமிட்டுள்ளோம்,”என்கிறார் குஷ்.

டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம், ஹிரோ மஷிதா ( எம்.அண்ட் எஸ் பாட்னர்ஸ்), பாரகன் டிரஸ்ட், ஜபாங் மற்றும் யூனிகாமர்ஸ் நிறுவனர்களிடம் இருந்து ஒரு மில்லியன் டாலர் சீட் நிதி திரட்டியுள்ளது. ரொக்கம் மற்றும் விளம்பர உதவி உள்ளிட்ட வழிகளில் இது அமைந்துள்ளது.

சந்தை நிலவரம்

டிஜிட்டல் கற்றல் விரிவாக்கம் காரணமாக இந்திய கல்வி சந்தை 2020 ல் 180 பில்லியன் டாலராக இருக்கும் என வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்த அலையை பயன்படுத்திக்கொள்ள நியோ ஸ்டென்சில் திட்டமிட்டுள்ளது.

“மேலும் உள்ளடக்கத்தை உருவாக்குவதில் ஈடுபடாமல் இந்தியாவின் முன்னணி ஆசியர்களை பயன்படுத்திக்கொண்டு, அதிக தரமில்லா உள்ளூர் ஆசிரியர்கள் மற்றும் நகல் உள்ளடக்கத்தை திறம்பட எதிர்கொள்வது தங்கள் தனித்தன்மை,” என்கிறார் குஷ்.

பொதுவாக கல்வி நுட்ப நிறுவனங்கள் இரண்டு வகையாக இருக்கின்றன. முதல் வகை நிறுவனங்கள் சொந்த உள்ளடக்கம் மூலம் தங்களே சிறந்தவர்கள் என நிருபிக்க முயல்கின்றன. மற்றொன்று சந்தை வகையாகும். இதில் இருந்து மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

இருப்பினும் நியோ ஸ்டென்சில் நிர்வகிக்கப்பட்ட சந்தை மாதிரியை கொண்டுள்ளது. தங்கள் துறையில் வல்லுனர்களாக உள்ள ஆசிரியர்கள் லைவ் ஸ்டீரிமிங் மூலம் வகுப்புகள் அளிப்பது வேறு யாரும் அளிக்காதது என்கிறார் குஷ்.

“இப்போது நாங்கள் இலக்காக கொண்டுள்ள அரசுத்தேர்வு சந்தை 6 பில்லியன் டாலராக இருக்கிறது. ஆன்லைன் மற்றும் பயிற்சி நிலையங்கள் இதில் அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் 11 மில்லியன் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். ஐ.ஏ.எஸ் தேர்வு தயாரிப்பு மற்றும் ஐ.இ.எஸ், கேட், மாநிலதேர்வுகள், வங்கித்தேர்வு, யுஜிசி உள்ளிட்ட தேர்வுகளில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில் ஆன்லைன் தேர்வு பிரிவில் 20 சதவீத சந்தையை பிடிக்க விரும்புகிறோம் என்கிறார் குஷ்.

ஆங்கிலத்தில்: நேஹா ஜெயின்/ தமிழில்; சைபர்சிம்மன்