எனது மகள் விளையாட உரிய பொருட்களைத் தேடி நிறுவனர் ஆனேன் - மாம்ப்ரூனர் ரூபாலி

0

ரூபாலி ஸ்ரீவஸ்தவா டெல்லி நிஃப்ட்டின் முன்னாள் மாணவி, ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் ரீடெய்ல் துறையைச் சேர்ந்த இவர் குழந்தைகளுக்கான தனது மின் வணிகத்தளம் ‘க்ரீன்கின்ஸ்’ மூலமாக புதிய உயரத்தை எட்டியுள்ளார். பொதுவாக பல தொழில்முனைவோருக்கும் தடையாக இருக்கும் தாய்மையும் இவர் முன்னேற தடைக்கல்லாக இல்லை. ‘மாம்ப்ரூனர்’(தாய்மையடைந்த பின் நிறுவனர்) என இவர் தன்னை அடையாளம் காணப்படுவதைத்தான் ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை.

ரூபாலிக்கு சிறு வயது முதல் ஏற்பட்ட அனுபவங்கள்தான் அவரை தனித்துவமான நிறுவனராக உயர்த்தியுள்ளது எனலாம்.


இதில் ரூபாலியின் சிறு வயது அனுபவத்துக்கு பெரும் பங்கு உண்டு. அவரது தாயார் மனநிலை பாதிப்படைந்த குழந்தைகளுக்காக பள்ளி நடத்திவந்தார். தனது தாயார் அந்த குழந்தைகளிடம் காண்பித்த அன்பு, அக்கறை மற்றும் அர்ப்பணிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தப் பள்ளியைப் பொறுத்தவரை மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு மட்டுமின்றி இதனைச் சூழ்ந்துள்ள அனைவருக்கும் இது ஒரு புத்துணர்ச்சியாதாக இந்த அனுபவம் விளங்கியது எனவும் பெருமிதமாக குறிப்பிட்டார்.

அடுத்த சிறப்பான அனுபவம் அவர் பணியாற்றிய ‘மார்க் அண்டு ஸ்பென்சர்’ நிறுவனத்தில் கிடைத்தது. பிரிட்டனைத்தாண்டி இந்தியாவில் முதன்முறையாக தொடங்கப்பட்ட இந்நிறுவம் வெற்றிகரமாக விளங்க அதன் பொது மேலாராக இருந்த ரூபாலிக்கு முக்கியப்பங்கு உண்டு. இந்தப்பணி ஆடை உற்பத்தி மற்றும் துணி வகைகள், அதை உருவாக்க உழைப்பவர்கள் மற்றும் அதை விரும்பி அணிபவர்கள் என பல்வேறு பாடங்களைக் கற்றுத்தந்தது. இயற்கையான துணி வகைகள், தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டித் தரும், இயற்கைக்கும் கேடு விளைவிக்காது, அதை அணிபவருக்கும் பாதிப்பு வராது. ஆனால், சின்தெடிக் துணி வகைகள் இதற்கு நேர்மாறானது.

மூன்றாவது காதல். சில ஆண்டுகளுக்கு முன்னர் ரூபாலி ஒரு பெண் குழந்தைக்கு தாயானார். குழந்தைகளின் உடைகள், விளையாட்டு பொம்மைகள் என இந்தப் பொருட்களின் மீது பெரும் ஈர்ப்பு ஏற்பட்டது. இந்தத் தேடலில் இயற்கையான பஞ்சு, நச்சுப் பொருட்கள் இல்லாத நிறமி, மர பொம்மைகள் மற்றும் நீர் சார்ந்த வண்ணங்கள் போன்றவை கண்ணில்பட்டன. ‘ஒரு குழந்தையின் பெற்றோராகும்போதுதான், உலகில் நமது குழந்தைக்கு ஆபத்து விளைவிக்காத பொருட்களைத் தேடத் தொடங்குகின்றோம். இந்த பாதையை நோக்கிப் பயணிக்கும் சிறு முயற்சியின் தொடக்கம்தான் ‘க்ரீன்கின்ஸ்’. மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றோம்.’

க்ரீன்கின்ஸ்

‘ஆரோக்கியமான, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பொருட்கள் முக்கிய கடைகளிலும், சில வெளிநாட்டு விற்பனை இணையதளங்களிலும் கிடைக்கும். நம் நாட்டில் ஏற்கனவே கிடைக்கும் சில பொருட்கள் குழந்தைகளின் பார்வையில் அழகானவையாக இருப்பதில்லை. இதை மாற்றும் முயற்சிதான் 'க்ரீன்கின்ஸ்' என விளக்கினார் ரூபாலி.  

தமது குழந்தைகளுக்கு பாதுகாப்பான, புதுமையான மற்றும் தீங்கு விளைவிக்காத விளையாட்டுப் பொருட்களைப் பெற உகந்த இடமாக ‘க்ரீன்கின்ஸ்’ இருப்பதே அவரது நோக்கம். ஆரம்பத்தில் இணையதளம் மூலமாக மட்டுமே வணிகம் செய்துவந்த இவர் தற்போது, வாடிக்கையாளர்கள் பெருக பெருக முக்கிய கடைகள் மூலமாகவும் தமது தயாரிப்புகளை விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.


க்ரீன்கின்ஸ் தனது தயாரிப்புகளை தனித்தன்மையானது  என கீழ்கண்டவற்றைக் கொண்டு கூறுகின்றனர். உள்ளூரில் உற்பத்தியான, இயற்கையான, சுற்றுச்சூழலுக்கு தீமை விளைவிக்காத, நச்சு இல்லாத அல்லது மறுசுழற்சியான மூலக்கூறுகளைக் கொண்டு பொருட்களை தயாரிக்கின்றனர்.

இந்நிறுவனம் தற்போது மும்பையைச் சேர்ந்த சமூக பொறுப்புணர்வு அமைப்பான ‘சம்ஹித்தா சோஷியல் வென்சர்ஸ்’ உடன் இணைந்து சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத தமது தயாரிப்புகளின் முக்கியத்துவத்தை ‘மேக்கிங் அ டிஃபரன்ஸ்’ (வித்தியாசமானதை செய்யும்) கோட்பாட்டுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. மேலும், கல்வித்துறையில் பணியாற்றும் அரசு சாரா அமைப்புகள் சிலவற்றுடன் இணைந்து ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி, பெண்குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மரம் நடுதல் போன்றவற்றில் தமது வாடிக்கையாளர்களையும் இணைத்து உதவி வருகின்றனர். ‘குறிப்பிட்ட பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்கும்போது, அதன் மதிப்பிலான தொகை நன்கொடையாக வழங்கப்படும். சில சமயங்களில் நன்கொடைகளை வாடிக்கையாளர்களிடம் வசூலிப்பதும் உண்டு.

யார் மாம்ப்ரூனர்?

தான் ஒரு அம்மா ஆனதுதான் இந்த முயற்சிகளுக்கெல்லாம் முதல் காரணம். தனது மகள்தான் இந்த நிறுவனத்துக்கு ஆலோசகர். தனது குழந்தைக்கு தரமான பொருட்களைத் தர எண்ணும் தாயாக, ஒவ்வொரு புதிய இயற்கையான பொம்மைகளை மகளுக்கு அளிக்கத் தொடங்கியதே க்ரீன்கின்ஸ் உருவாக காரணம். இந்த பொம்மைகளின் நிறங்கள் தனக்கு பிடிக்கவில்லை என செல்ல மகள் சொன்னதும் க்ரீன்கின்ஸ் குழுவுடன் அமர்ந்து என்ன மாற்றம் செய்யலாம் என யோசித்துள்ளார் ரூபாலி.

ஆகவே, தாய்மை ரூபாலிக்கு தடையாக அமையவில்லை. தனது நிறுவன வேலைகளில் ரூபாலி மூழ்கிப்போனபோது அவரது குடும்பத்தினர் மகளைக் கவனமாக பார்த்துக்கொண்டனர்.

‘பொதுவாக தொழில் நிறுவன தலைவர்கள் பலரும் பெண் நிறுவனகளின் திட்டங்களுக்கு நிதியுதவி செய்ய அவர்கள் தாய்மையடைவதை முக்கியக் காரணமாகக் கூறி மறுப்பதுண்டு. ஆயினும், இது தவறான சொல்லியலால் தோன்றிய மாயபிம்பம் என ரூபாலி கூறுகின்றார். 

‘பெண்கள் மட்டும்தான் மாம்ப்ரூனர் என அழைக்கப்படுகின்றனர். ஆண்கள் டேட்ப்ரூனர்ஸ் என  அழைக்கப்படுவதில்லை. இதிலிருந்தே தெரிகின்றது பெண்கள் தமது தொழிலை விருப்பத்துடன் செய்கின்றனர். ஆண்களைப்போல வேலையாக செய்வதில்லை’ என்று பெருமையுடன் கூறுகின்றார்.

குழந்தைகள் நமது பாதைக்கு தடைக்கற்கள் இல்லை. பல இந்தியப் பெண்கள் இதை ஒருகாரணமாகக் கூறி நிறுவனம் நடத்தும் முயற்சியைக் கைவிட்டுவிடுகின்றனர். ‘சிறியதோ, பெரியதோ ஒவ்வொரு சாதனையும் கடுமையான உழைப்பையும் போராட்டத்தையும் ஆரம்ப கட்டமாகக் கொண்டுள்ளது. அதன்பின்னர்தான் எதிர்பார்க்கின்ற வெற்றி கிடைக்கின்றது’ என்ற மகாத்மா காந்தியின் கூற்றை எடுத்துரைக்கின்றார் ரூபாலி. வீட்டிலிருக்கும் பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித்தரும் ‘ஷீரோஸ்’ அமைப்பில் ஒருவர் ​என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்கம்: ஃபிரான்சிஸ்கோ ஃபெராரியோ | தமிழில்: மூகாம்பிகை தேவி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்: 

வீட்டிலிருந்தே இணையத்தில் கலக்கும் ‘ஹோம்ப்ரூனர்’

கர்ப்ப கால பெண்களுக்கு ஆடைகள் தயாரிக்கும் ஷ்ரத்தாவின் ‘Mamacouture'