நாடகம், இசை உள்ளிட்ட கலை வடிவங்கள் வாயிலாக பயிற்சியளிக்கும் சென்னை நிறுவனம்!

0

டிரெயினிங் சைட்வேஸ் (இவாம் கார்ப்பரேட் டிரெயினிங் பிரைவேட் லிமிடெட்) என்கிற ஸ்டார்ட் அப் சுனில் விஷ்ணு கே, கார்த்திக் குமார், டிஎம் கார்த்திக் ஆகிய நிறுவனர்களால் 2012-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பெங்களூரு, மும்பை, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் அலுவலகங்களைக் கொண்ட இந்த ஸ்டார்ட் அப்பின் தலைமையகம் சென்னையில் உள்ளது. கற்றல் மற்றும் வளர்ச்சிப் பிரிவில் செயல்பட்டு கார்ப்பரேட் பயிற்சி மற்றும் நடத்தை மேலாண்மைக்காக கலை மற்றும் தியேட்டரை பயன்படுத்துகிறது. இந்த ஸ்டார்ட் அப் அறிவிக்கபடாத தொகையை ஏஞ்சல் முதலீடாக பெற்றுள்ளது.

2011-ம் ஆண்டு சுனில் விஷ்ணு மற்றும் கார்த்திக் குமார் பெங்களூருவில் நடிப்பு பயிற்சி பட்டறை நடத்தினர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த பாராட்டுகள் ஸ்டார்ட் அப்பாக உருவாகும் என அவர்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

டிரெயினிங் சைட்வேஸ் இணை நிறுவனரான சுனில் விஷ்ணு குறிப்பிடுகையில், “பட்டறை முடிந்ததும் அனைத்து பங்கேற்பாளர்களும், குறிப்பாக பகுதி நேர நடிகர்கள் மற்றும் தொழில்முறை பணிபுரிவோரும் கலை மற்றும் தியேட்டரை கார்ப்பரேட் பயிற்சிக்கு பயன்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்தனர். நிறுவனங்கள் புதுமையான சிந்தனைகளுக்கு வழிவகுக்கவும் ஒன்றிணையச் செய்யவும் தலைமைத்துவத்தைக் கற்பிக்கவும் நிறுவனங்களுக்கு இத்தகைய முறைகள் தேவை என அவர்கள் கருதினர்.”

அப்போதுதான் கார்ப்பரேட் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. இதுவே ஒரு குறிப்பிடத்தக்க தருணமாக அமைந்தது.

கார்ப்பரேட் நடத்தை பயிற்சிக்காக பட்டறைகள் மற்றும் தியேட்டர் சார்ந்த பயிற்சி முறையை பயன்படுத்தலாம் என எண்ணினோம். பின்னர் நாங்கள் இசை, நடனம், விஷுவல் ஆர்ட்ஸ், போன்றவற்றை பயிற்சிக்கு இணைத்துக்கொண்டோம்,” என்றார்.

பயணத்தின் துவக்கம்

ட்ரெயினிங் சைட்வேஸ் (இவம் கார்ப்பரேட் ட்ரெயினிங் பிரைவேட் லிமிடெட்) என்கிற கலை மற்றும் நாடகம் சார்ந்த கார்ப்பரேட் பயிற்சி நிறுவனத்துடன் பயணம் துவங்கியது. இந்த ஸ்டார்ட் அப் கலை, தியேட்டர், இசை, நடனம் மற்றும் பிற வடிவங்களில் இருந்து பெறப்பட்ட அனுபவ முறைகளைப் பயன்படுத்தி நடத்தை பயிற்சி வழங்குகிறது.

சுனில் கூறுகையில், “நடத்தை பயிற்சி அளிக்கும் நிறுவனமாக நாங்கள் ஜூனியர் நிலையில் உள்ள ஊழியர்கள், நடுத்தர நிலையில் உள்ள ஊழியர்கள் மற்றும் தலைமைப் பதவி வகிப்பவர்கள் என அனைத்து நிலைகளிலும் பயிற்சி வழங்குகிறோம். குழு உருவாக்குதல், திறமையான மேலாளர்களுக்கான தலைமைத்துவம் சார்ந்த பட்டறைகள், புதுமை பட்டறைகள் என அனைத்து பகுதிகளிலும் பணியாற்றுகிறோம். ஒன்றிணைத்தல் மற்றும் இலக்கை நிர்ணயித்தல் ஆகிய பகுதிகளிலும் பட்டறைகளை ஏற்பாடு செய்கிறோம்.

அதுமட்டுமல்லாது டிரெயினிங் சைட்வேஸ் குழு உருவாக்குதல் மற்றும் குழு இணைப்பு, குழுவினரிடையே தகவல் பரிமாற்றம் அற்ற நிலையை போக்குதல், குழு சார்ந்த பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களுக்கு தீர்வுகண்டு அதிக செயல்திறன் கொண்ட குழுக்களை உருவாக்கும் பகுதியில் செயல்படுகிறது.

கருத்தரங்குகளில் கலந்துகொள்பவர்களின் ஈடுபாட்டை மேம்படுத்தும் பகுதியிலும் பணிபுரிகின்றனர்.

”நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்களுடனும் பெரு நிறுவனங்களுடனும் பணியாற்றுகிறோம். அவர்களது கருத்தரங்குகளில் 15 நிமிட ஃப்ளாஷ் மாப் முதல் 45 நிமிட நிகழ்ச்சி வரை அதிக உற்சாகம் நிறைந்த நிகழ்வுகளை உருவாக்குகிறோம். இது கருத்தரங்கின் மையக்கருத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டு கற்றலை ஊக்குவிக்கும். அதாவது செயலில் ஈடுபட்டவாறே கற்றுக்கொள்ளலாம்,” என்றார் சுனில்.

இறுதியாக பன்முகத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய சூழல் போன்ற சமூக பிரச்சனைகள் சார்ந்தும் இந்த ஸ்டார்ட் அப் செயல்படுகிறது.

”நிறுவனங்களில் பெண் தலைமைப்பதவி வகித்தல், பாலியல் துன்புறுத்தல்களை தடுத்தல், வயது, பாலினம் மற்றும் பிற வேறுபாடுகள் இன்றி அனைவரையும் உள்ளடக்கிய சூழலை உருவாக்குதல் போன்ற பகுதிகளில் பணிபுரிகிறோம். நிறுவனங்களில் உள்ள ஊழியர்களிடையே ஒரு மையக்கருத்தை தெரிவிக்க விரும்பும்போது, அது தலைமைப்பண்பாக இருக்கலாம் அல்லது கலாச்சார நடைமுறையாக இருக்கலாம், இதனை தெரிவிக்க இமெயில், மெமோ, சுவரொட்டிகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் ஊழியர்களுடன் தொடர்பு கொள்ள ஒரு வேறுபட்ட வடிவம் பயன்படுத்தலாம். இதற்கான தீர்வை வழங்கும் பணியில் டிரெயினிங் சைட்வேஸ் ஈடுபடுகிறது,” என்றார்.


விரைவாக ஏற்றுக்கொள்ளுதல்

எம்ஐசிஏ-வில் ஒரே வகுப்பில் படித்த சுனிலும் கார்த்திக்கும் 2003-ம் ஆண்டு ’இவேம்’ நிறுவனத்தை ஒரு பொழுதுபோக்கு நிறுவனமாகவே அமைத்தனர். அதை சுமார் எட்டு ஆண்டுகள் நடத்திய பிறகே 2012-ம் ஆண்டில் டிரெயினிங் சைட்வேஸ் நிறுவனத்தை அமைத்தனர். விரைவிலேயே 20 வருட கார்ப்பரேட் அனுபவமும் நடிப்புப் பின்னணியும் கொண்ட டிஎம் கார்த்திக் இவ்விருவருடனும் இணைந்துகொண்டார்.

டிரெயினிங் சைட்வேஸ் சென்னையில் துவங்கப்பட்டு விரைவில் பெங்களூரு, மும்பை ஆகிய பகுதிகளில் விரிவடைந்து இந்தியா முழுவதும் அமர்வுகள் நடத்தி வருகின்றனர். சிங்கப்பூரிலும் சிறியளவில் செயல்படத் துவங்கியுள்ளனர். சுயநிதியில் துவங்கப்பட்டு விரைவில் ராம்சரண் அசோசியேட்டின் திவ்யேஷ் பாலிச்சா பங்குதாரர் ஆனார்.

பிற நிறுவனங்களுடன் இணையாமல் நடத்தை பயிற்சி வாயிலாக 20-30 சதவீத வளர்ச்சியடைந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது. அத்துடன் தற்சமயம் கூகுள், வோடஃபோன், ஆக்சென்சர், வெல்ஸ் ஃபார்கோ, அசோக் லேலாண்ட் உட்பட சுமார் 130 வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

டிரெயினிங் சைட்வேஸ் நிறுவனத்தில் ஒன்பது பயிற்சியாளர்களும் வடிவமைப்பிற்கு உதவ நான்கு ஆலோசகர்களும் அடங்கிய குழு செயல்படுகிறது. மேலும் பலர் பகுதி நேரமாக பணியாற்றுகின்றனர். இவர்களது அனைத்து பட்டறைகளும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைக்கேற்ப வடிவமைக்கப்படுகிறது.

ஒவ்வொரு பட்டறை நடத்துவதன் வாயிலாக வருவாய் ஈட்டப்படும். அத்துடன் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கான பயிற்சியோ/ஆலோசனையோ வழங்குவதன் மூலமாகவும் வருவாய் ஈட்டப்படும். இந்த கால அளவானது இரண்டு மணி நேரமாகவோ அல்லது நாள் கணக்கிலோ நீடிக்கலாம்.

அமைதியான மாற்றம்

2016-2020 காலகட்டத்தில் உலகளவிலான கார்ப்பரேட் பயிற்சி சந்தையின் மதிப்பு 10.55 சதவீதம் ஆண்டு வளர்ச்சி விகிதம் இருப்பதாக மதிப்பிடப்படுவதாக ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.

1980-களில் ஊழியர்கள் நிறுவனத்துடன் சிறப்பாக தொடர்பில் இருக்கவேண்டும் என்பதற்காக துவங்கப்பட்ட முறையானது 1990-களிலும் 2000-ம் ஆண்டுகளிலும் மந்தமான பவர்பாயிண்ட் விளக்கக்காட்சிகளை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டு தற்போது ஒரு வலுவான பயிற்சி முறையாக மாறியுள்ளது.

ரிஃப்ளெக்ஸ், தத்வா லீடர்ஷிப் போன்ற ஸ்டார்ட் அப்களும் தியேட்டரை பயன்படுத்தி புதுமையான பயிற்சி தீர்வுகளை வழங்கி வருகின்றனர்.

ஆனால் மற்ற பயிற்சி நிறுவனங்களைக் காட்டிலும் தங்களை வேறுபடுத்தி காட்டும் அம்சம் குறித்து சுனில் விவரிக்கையில், “இந்தப் பிரிவில் செயல்படும் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் நாங்கள் முன்னோடியாக செயல்படத் துவங்கியது எங்களுக்கு நன்மை பயத்தது. நாங்கள் ப்ராண்டை வலுவாக உருவாக்கியுள்ளோம். கிட்டத்தட்ட 130-க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் மிகப்பெரிய நிறுவனமாக செயல்படுகிறோம். 

தலைமைத்துவம், மூத்த நிர்வாகிகளுக்கு அடுத்த மட்டத்தில் இருக்கும் மேலாளர்கள், பன்முகத்தன்மை, அனைவரையும் உள்ளடக்குதல், குழு உருவாக்குதல் போன்ற பகுதிகளைச் சேர்ந்த ப்ராடக்டுகளும் மாதிரிகளும் தனித்துவமானதாகும். எங்களது வழிமுறைகள் பதிப்புரிமை பெறப்பட்டதும் அசலானதும் ஆகும். பயிற்சிகளை மட்டும் வழங்காமல் நாங்கள் முழுமையான தீர்வளிக்கிறோம். மனித வளத் துறையுடனும் கற்றல் மற்றும் வளர்ச்சிக் குழுவுடனும் ஆண்டு முழுவதும் தொடர்பில் இருந்து செயல்படுகிறோம்."


நிறுவனர்களின் நிகழ்ச்சி மேலாண்மை சார்ந்த அனுபவம் அவர்களுக்கு பெரிதும் உதவியது.

டிரெயினிங் சைட்வேஸ் வருங்காலத்தில் வாடிக்கையாளர்களுடனான உறவை மேலும் வலுப்படுத்தி அவர்களுக்கு மதிப்பு சேர்க்க விரும்புகிறது.

சுனில் கூறுகையில், “நாங்கள் ஏற்கெனவே எங்களது சில வாடிக்கையாளர்களுடன் ஆலோசனை அடிப்படையில் பணிபுரியத் துவங்கியுள்ளோம். இதில் அவர்கள் வருடம் முழுவதுக்குமான நடத்தை பயிற்சி குறித்து சிந்திக்க உதவுகிறோம். மேலும் நாங்கள் நிறுவனங்களுடன் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய சூழலுக்கான ஆலோசனை வழங்குவதிலும் பணியாற்றி வருகிறோம். அனைவரையும் உள்ளடக்கிய ஒரு கலாச்சாரத்தை உருவாக்கி வணிக ரீதியிலான மதிப்பை வழங்குவது குறித்தும் நிறுவனங்களுடன் திட்டமிட்டு வருகிறோம்.”

தற்போது சந்தை டிஜிட்டல் மயமாகி வருவதால் அதிகளவு வாடிக்கையாளர்களைச் சென்றடைய இந்த ஸ்டார்ட் அப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது. “மெய்நிகர் உண்மையின் பயன்பாடாக இருந்தாலும் அல்லது ஊடாடும் வீடியோக்களின் பயன்பாடாக இருந்தாலும் அனுபவம் சார்ந்த டிஜிட்டல் பயிற்சி மாதிரியைப் பெறவேண்டும் என்பதே நோக்கம்,” என்றார் சுனில்.

ஆங்கில கட்டுரையாளர் : நேஹா ஜெயின் | தமிழில் : ஸ்ரீவித்யா