'தகவல் திங்கள்'- நாளை முதல் புதிய தொடர்!

0

இது இணையம் பற்றியத் தொடர். இணையம் என்பது தகவல் நெடுஞ்சாலை தானே. அந்த நெடுஞ்சாலை பயணத்தில் கிடைக்கும் தகவல்களை மையமாகக் கொண்ட விஷயங்களை பேசும் வகையில் இந்த தொடர் அமையும்.

தகவல் என்றால் எந்த வகையான தகவல்கள்?

அப்படி எந்த வரையறையும் இல்லை; அது இணையதளமாக இருக்கலாம். இணைய போக்காக இருக்கலாம். பயன்பாட்டு நோக்கிலான குறிப்பாக இருக்கும். புதிய சேவையாக இருக்கலாம். இணையத்தில் கவனத்தை ஈர்க்கும் அல்லது கவனிக்க வேண்டிய ஒன்றாக அந்தத் தகவல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே அளவுகோள்.

இந்த தகவல்களை துவக்கப் புள்ளியாக அல்லது மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு இணையம் தரும் அனுபவம், அது சாத்தியமாக்கும் புரிதல், திறந்து விடும் புதிய வாசல்கள் போன்றவற்றையும் அடையாளம் காட்டும் வகையில் இந்த தொடர் அமையும். இணையம் மூலம் அறிமுகம் செய்து கொள்ளக்கூடிய புதிய ஆளுமைகளையும் இந்தத் தொடரில் தெரிந்து கொள்ளலாம். அதைவிட முக்கியமாக இணையம் நவீன வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தையும், தாக்கத்தையும் பதிவு செய்து மேற்கொள்ளப்படும் இணைய கலாச்சாரம் தொடர்பான ஆய்வுகளையும் கருத்தில் கொள்ளும்.

இணையம் அப்டேட்டாகிக் கொண்டே இருக்கிறது. அதன் வேகத்திற்கு நாமும் ஈடுகொடுத்து அப்டேட்டாக்கி கொள்ளவும் இந்த தொடர் உதவும் நோக்கில் இணையத்தில் மேற்கொள்ளப்படும் புதுமைகளையும் கண்டறிந்து விளக்க முற்படும்.

இணையம் இப்போது நமக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டது. தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இணையத்தை பயன்படுத்திக்கொள்வதும் சகஜமாகிவிட்டது. இந்த இயல்புத் தன்மை காரணமாகவே, இணையம் ஒரு அற்புதம் எனும் எண்ணத்தை இழந்துவிட்டோம் என்று கூட சொல்லலாம். ஆனால், இணையம் தனது அற்புதத் தன்மையை உணர்த்தும் ஆற்றலை இழந்துவிடவில்லை. நம்மை வியப்பில் ஆழ்த்தவும், பிரமிக்க வைக்கவும் இணையத்தில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

ஒரு காலத்தில் யாஹூ தான் இணையத்தின் வலைவாசலாக இருந்து வசீகரித்தது. அதன் பிறகு கூகுள் தேடியந்திரம் வழிகாட்டத்துவங்கியது. இப்போது இணைய முகப்பு பக்கமான ரெட்டிட், கண்டறிதல் தளமான பிராடக்ட் ஹண்ட் போன்ற தளங்கள் இணைய பயணத்திற்கான வழிகாட்டியாக விளங்குகின்றன. இந்த இரண்டு தளங்களுமே அடிப்படையில் செல்வாக்கு மிக்க இணைய சமூகமாக அமைந்திருக்கின்றன. அவை வழங்கும் பங்கேற்பு வாய்ப்பும், அதன் மூலம் நடைபெறும் துடிப்பான விவாதமும் இணையத்தின் நாடித்துடிப்பை படம் பிடித்துக்காட்டுகின்றன.

வைரலாக பரவும் தகவல்களை திரட்டித்தரும் பஸ்பீட், ஊக்கம் எனும் அளவுகோள் மூலம் வைரல் வீடியோக்களை முன்னிறுத்தும் அப்வொர்த்தி என புது யுக இணையசேவைகளின் பட்டியல் நீள்கிறது.

இவற்றுக்கு நடுவே குவோரா கேள்வி பதில் தளத்தில் ஆர்வத்தை தூண்டக்கூடிய வகையில் அர்த்தமுள்ள ஒரு விவாதம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இணைய நெடுஞ்சாலை பயணத்தில் இந்த தளங்களும், இன்னும் பிற புதிய சேவைகளும் இளைபாறலுக்கான இடமாக மட்டும் அல்லாமல், புதிய புரிதலுக்கான மையமாகவும் இருக்கின்றன.

ஒரு பயணியாக இணைய நெடுஞ்சாலையில் உலா வந்து, அது தரும் அனுபவங்களையும், சிந்தனைகளையும், கேள்விகளையும் இந்தத் தொடரின் மூலம் சக பயணிகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இணைய செய்தியாளனாகவும், தொழில்நுட்ப வலைப்பதிவாளனாகவும் இணையம் பற்றி தொடர்ந்து எழுது வருபவன் என்ற முறையில் இந்த தொடர் மூலம் தமிழ் யுவர்ஸ்டோரி வாசகர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்கிறேன்.

இனி திங்கள் தோறும் சந்திப்போம்...

சைபர்சிம்மன் – (பத்திரிகையாளர்,தொழில்நுட்ப வலைப்பதிவாளர், இணையம் தொடர்பான புத்தகங்களின் ஆசிரியர்)

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்