ஆரோக்கிய வாழ்க்கைக்கு மண் பாண்டங்களை விற்பனை செய்யும் இரு கொச்சி பெண்கள்!

0

டெஃப்லான் கோட்டிங் செய்யப்பட்ட கடாய்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முந்தைய காலத்தில் நமது முன்னோர் மண் பானைகள் மற்றும் வார்ப்பிரும்பினாலான கடாய்களையே சமையலுக்கு பயன்படுத்தினர். அதில் உணவு சமைக்கப்படும்போது அது சுவையாக இருக்கும். டெஃப்லான் போன்ற நச்சுப்பொருட்கள் உடம்பில் சேர்ந்துவிடும் அபாயங்கள் இல்லை. ஏன் அந்த நாட்கள் மறைந்துபோனது?

கொச்சியைச் சேர்ந்த ராதிகா மேனனும் ப்ரியா தீபக்கும் இதை நினைத்து ஆச்சரியப்பட்டனர். பழைய பாரம்பரியத்தையும் சமையல் பாத்திரங்களையும் திரும்ப கொண்டு வர தீர்மானித்தனர். அதற்காக உருவாக்கப்பட்டதுதான் ’தி வில்லேஜ் ஃபேர் நேச்சுரல் குக்வேர்’ (The Village Fair Natural Cookware).

இயற்கையோடு ஒன்றிணைதல்

ஒரு முகநூல் பதிவிலிருந்தே ‘தி வில்லேஜ் ஃபேர்’ உருவானது. இந்தப் பதிவில் ஒரு புதிய கண்டுபிடிப்பு குறித்து விவரிக்கப்பட்டிருந்தது. வார்ப்பிரும்பினால் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய மீன் ஒரு வழக்கமான சமையல் பாத்திரத்தில் போடப்பட்டால் நமது உணவில் இரும்புச் சத்து பற்றாக்குறை சீர்செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பதிவைக் கண்ட பலர் நமது முன்னோர்கள் பல தலைமுறைகளாக வார்ப்பிரும்பினாலான பானைகளை பயன்படுத்தி வந்ததை நினைவுகூர்ந்து வியந்தனர்.

”பாரம்பரியமான வார்ப்பிரும்பினாலான பாத்திரம் ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கையில் நாம் ஏன் அதை தவிர்க்கவேண்டும்? எனவே என்னுடைய இரும்பு கடாயின் படத்தை முகநூலில் பதிவிட்டேன். பலர் இது குறித்து விசாரித்தனர். அது எங்கு கிடைக்கும் என்று தெரிந்துகொள்ள அனைவருமே ஆர்வம் காட்டினர்,” என்றார் ராதிகா.

வார்ப்பிரும்பு பாத்திரங்களை எங்கே வாங்குவது என்றோ அல்லது அவற்றை எவ்வாறு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பக்குவப்படுத்துவது (சீசனிங்) என்றோ பலருக்குத் தெரியாதத்தை கண்டு ஆச்சரியப்பட்டார் ராதிகா. ஆரோக்கியமான முறையில் சமையல் செய்வதற்கு உகந்த பாத்திரங்கள் தற்போது மக்களிடையே இல்லாததை உணர்ந்த ராதிகா பக்குவப்படுத்தப்பட்ட வார்ப்பிரும்பு பாத்திரங்களை விற்பனை செய்து உதவ எண்ணினார்.

பாரம்பரிய உணவு சமைத்தல் மற்றும் உண்ணும் முறையை முழுமையாக மீட்டெடுக்க முடியாவிட்டாலும் முக்கிய அம்சங்களை மக்களிடையே திரும்பக் கொண்டுவர முயல்கிறது தி வில்லேஜ் ஃபேர். இது சமையல் பாத்திரங்கள் சந்தையில் புதுமையான முயற்சியாக மாறி பல்வேறு இயற்கை சமையல் பாத்திரங்களை வழங்கி வருகிறது. இந்த பாத்திரங்கள் அதிக கவனத்துடன் வாங்கப்பட்டு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக பயன்பாட்டிற்கு ஏற்றதாக வீட்டிலேயே பக்குவப்படுத்தப்படுகிறது.

"சமையலில் எண்ணெய் பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்துடன் அறிமுகமான டெஃப்லான் மூலமாக கலக்கும் ரசாயனங்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை இன்று நாம் அறிவோம். இந்தியா உட்பட உலகம் முழுவதுமுள்ள மக்கள் டெஃப்லானை தவிர்த்துவிட விரும்பினாலும் அதற்கு சரியான மாற்றுப்பொருள் சந்தையில் மிகக்குறைவாகவே உள்ளன,” என்கிறார் ப்ரியா.

சிறியளவில் துவக்கம்

ராதிகாவின் கிராமத்தில் ’கிராம சந்தா’ என்கிற சந்தை செவ்வாய்கிழமைகளில் கூட்டப்படும். இந்தச் சந்தையில் அதிகளவு பானைகளும் கடாய்களும் வாங்கப்படும். இந்த காரணத்தை ஒட்டியே ராதிகா தனது முயற்சிக்கு ’தி வில்லேஜ் ஃபேர்’ என பெயரிட்டார். 2015-ம் ஆண்டு முகநூல் பக்கத்தைத் துவங்கினார். அதன்பிறகே பதிவுகள் இடப்பட்டது.

முதல் சில ஆர்டர்கள் பெங்களூருவிலிருந்தே வந்தது. அதை விநியோகிக்க இருவரும் பெங்களூருவிற்கு பயணித்தனர்.

“தயாரிப்புகளுக்கான தேவை குறித்து ப்ரியாவிற்கு சந்தேகம் இருந்தது. வாடிக்கையாளர்களை நேரடியாக சந்தித்ததும் அவரது கருத்து மாறி நம்பிக்கை பிறந்தது,” என்றார் ராதிகா.

சமையல் பாத்திரங்களின் முதல் சுற்று விற்பனை வாயிலாக சுமார் 25 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. அதிலிருந்து இந்த முயற்சி தொடர்ந்து வெற்றிகரமாக பயணித்தது.

தி வில்லேஜ் ஃபேர் தயாரிப்புகள் கைவினைப் பொருட்களை தயாரிப்போரிடமிருந்தோ அல்லது கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மிகச்சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்தோ மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து பெறப்படுகிறது. மக்கள் பயன்படுத்தி வரும் சமையல் பாத்திரங்களுக்கான பாதுகாப்பான ஆரோக்கியமான மாற்றுப் பொருளை வழங்குவதுடன் தி வில்லேஜ் ஃபேர் அவற்றை பக்குவப்படுத்தும் பணிக்காக அனைவரையும் உள்ளடக்கிய குழுவையும் உருவாக்குகிறது. தி விலேஜ் ஃபேர் செயல்பாடுகளுக்கு ஐந்து நபர்கள் அடங்கிய குழுவும் பாத்திரங்களை பக்குப்படுத்தும் பணிக்காக 18 சுய உதவி பெண்களும் பணியாற்றுகின்றனர். 

வார்ப்பிரும்பு மற்றும் களிமண்ணால் ஆன பாத்திரங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்தத் தயாரிப்புகளுக்கு 600 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்திற்கான கட்டணம் சேர்க்கப்படவில்லை. விரைவில் கற்களால் ஆன (ஸ்டோன்வேர்) தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளனர்.

வலுவான விநியோக சங்கிலி

“ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் இருந்துவந்த பழங்கால வாழ்க்கை முறை குறித்து உலகம் முழுவதும் பேசப்படுகிறது. இன்றைய அவசர உலகில் நேரத்தை சேமிக்க எளிதான வழிமுறைகளையே பின்பற்றுகிறோம். இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் அதிக கவனம் செலுத்தி வந்த ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை நாம் இழந்துவிட்டோம்,” என்றார் ப்ரியா.

தி வில்லேஜ் ஃபேர் ஒரு வலுவான விநியோக சங்கிலி முறையையும் சந்தை உத்திகளையும் (go-to-market strategy) உருவாக்கியுள்ளது. முதலில் முகநூல் வாயிலாக சோதனை செய்து பிறகு வலைதளத்தை அறிமுகப்படுத்தி அதன் பின்னர் மின் வர்த்தக மையத்தை (இ-ஷாப்) அறிமுகப்படுத்தினர். தயாரிப்புகளை கைகளால் தொட்டு உணர்ந்து பார்க்க விரும்புவோருக்காக ஆர்கானிக் மற்றும் ஆரோக்கிய வாழ்வை ஊக்குவிக்கும் ஸ்டோர்களுடன் இவர்கள் கைகோர்த்துள்ளனர். இக்குழுவினர் இந்த வணிக மாதிரியை படிப்படியாக உலகம் முழுவதும் பின்பற்ற திட்டமிட்டு வருகின்றனர். 

தி வில்லேஜ் ஃபேர் ஆண்டு வருவாயாக சுமார் 40 லட்ச ரூபாய் ஈட்டுகிறது. உள்ளூர் மற்றும் வெளியூர் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு சுமார் 50 பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. சுய நிதியில் செயல்படும் இந்த முயற்சியானது அதன் அனைத்து விற்பனைகளிலும் 40 முதல் 50 சதவீத லாபம் பெறுகிறது. ஒவ்வொரு விற்பனையிலிருந்து ஈட்டப்படும் லாபத்திலிருந்து ஐந்து சதவீதம் மனநலம் பாதிக்கப்பட்டோரின் மருந்து செலவுகளுக்காக ‘மெஹக் ஃபவுண்டேஷனுக்கு’ வழங்கப்படுகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : ஹேமா வைஷ்ணவி

Related Stories

Stories by YS TEAM TAMIL