தமிழ் பாரம்பரிய உணவுவகைகளை வளர்க்க சாதனை படைத்த செஃப் ராம் பிரகாஷ்!

2

ஒரு சமூகத்தின் பாரம்பரியம் அதிகம் அறியப்படுவது உணவின் மூலம் தான். ஒவ்வொரு நாட்டிற்கும் மண்ணுக்கும் அதன் பாரம்பரிய உணவே அழகு சேர்க்கும். அதை காப்பது அனைவரின் கடமையாகும். இங்கு சமையல் நிபுணர் ராம் பிரகாஷ் தமிழ் நாட்டின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்க்க முயன்று வருகிறார்.

மதுரையைச் சேர்ந்த ராம் பிரகாஷ் கடந்த வருடம் 50 மணி நேரத்திற்கும் மேல் தூங்காமல் 2000-க்கும் மேலான உணவுகளை சமைத்து சாதனைப் படைத்துள்ளார். மேலும் அவர் ஆரோக்கியமாக சமைக்கும் நோக்கில் அதில் மைதா, ரிபைண்ட் ஆயில், சர்க்கரை என எதையும் சேர்க்கவில்லை. 

“இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் நம் பாரம்பரிய உணவை எடுத்துரைக்கவே கீரை, தானிய வகைகள், ராகி உள்ளிட்ட நமது கலாச்சார உணவு வகைகளை தயாரித்தேன்,” என்கிறார் ராம்.

ராம் பிரகாஷ், ஆர்வமில்லாமல் சமையற் கலை படிப்பில் சேர்ந்து, அதன் பின்னரே சமையல் மீது ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். மிக எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர் இவர். அதன் பின் பெரிய உணவகங்களில் பணிபுரிந்து பல புதுமையான உணவுகளை தயாரித்து சமையல் உலகில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

பல சாதனைகள் புரிந்த பிரபல சமையல் வல்லுனரான மறைந்த ஜேக்கப்புடன் இணைந்தார் ராம் ப்ரகாஷ். அதன் மூலம் இவருக்கு வெளி உலகில் வெளிச்சம் கிடைத்து. சமையல் நிபுணர் ஜேக்கப்பின் மறைவுக்கு பின் அவர் வழியே தன் சமையல் பயணத்தை இவர் தொடர்கிறார்.

மறைந்த செஃப் ஜேக்கப் உடன் ராம் ப்ரகாஷ்
மறைந்த செஃப் ஜேக்கப் உடன் ராம் ப்ரகாஷ்

தன் தொழிலில் முன்னேற்றம் கண்ட ராம், அதை தமிழ் உணவை வளர்க்க சாதகமாக பயன் படுத்திக் கொண்டார்.

“எனக்கு தமிழ் உணவுவகைகள் மீது அதிக ஆர்வம் உண்டு. தமிழ் உணவே சிறந்தது என்று உலக மக்களை புகழ வைப்பதே எனது நோக்கம். வரலாறு சிறப்புமிக்க தமிழர்களின் உணவே ஆரோக்கியமானது என்று இந்த கால சந்ததியனர் அறியவேண்டும்.”

தமிழ் உணவை மக்களிடம் கொண்டு சேர்க்கவே சாதனை செய்ய முன்வந்தார் ராம் பிரகாஷ். ஜேக்கப்புடன் இணைந்து வேலை செய்தது சாதனையை மேற்கொள்ள உதவியாக இருந்தது என்று தன் வழிகாட்டியை நினைவு கூர்கிறார் அவர்.

“நான் மைதா, வண்ணம், சர்க்கரை என்று ஏதும் சேர்க்காமல் தமிழ் உணவிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து என் சாதனையை செய்ய நினைத்தேன். அதனால் என் சமையல் சாதனை நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் கிடைக்க சிரமமாக இருந்தது," என்றார்.

மிகவும் குறைந்த ஸ்பான்சர்களுடன் இணைந்து பெரிய போராட்டத்திற்கு பிறகு கடன் பட்டு இந்த சாதனை நிகழ்ச்சியை நடத்தி முடித்தார் ராம் பிரகாஷ். இதற்கு முன் இருந்த தேசிய சாதனை, 48 மணி நேரத்தில் 1200 உணவுகள் சமைத்தல் என்ற சாதனையை முறியடிக்க, 50 மணி நேரம் சமைக்க முடிவு செய்தார். தூங்காமல் 50 மணி நேரம் முழுவதும் நின்று 2089 தமிழ் பாரம்பரிய இயற்கை உணவுகளை தயாரித்தார்.

“இந்த சாதனைக்குப் பிறகே எனக்கு ஊடகங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அங்கீகாரம் கிடைத்தது. சிங்கப்பூர் தமிழ் சங்க அமைப்பில் இருந்து அழைப்பு விடுத்து என்னை வாழ்த்தினார்கள். இதுவே என் வெற்றியாக நான் நினைக்கிறேன்.”

ராம் பிரகாஷ் எல்லா வகையான உணவிலும் கைத்தேர்ந்தவர் ஆனால் தமிழ் உணவை முன்னிலை படுத்துவதே அவரது முக்கிய நோக்கமாக இருக்கிறது. தனக்குக் கிடைத்த எல்லா வாய்ப்பிலும், அதாவது தற்போது, தான் பங்குபெறும் தனியார் நிகழ்ச்சிகளிலும் தமிழ் பாரம்பரிய உணவுக்கே முக்கியத்துவம் அளிக்கிறார்.

“இப்பொழுதுள்ள ஃபாஸ்ட் பூட் காலத்தில் சுவைக்காக ஆரோக்கியமான உணவை நாம் மறக்கிறோம், அதனால் குழந்தைகளுக்கு பிடித்த சுவையில் திணை, ராகி போன்ற பாரம்பரிய பொருட்களைப் பயன்படுத்தி புதிய உணவுகளை இப்பொழுது உள்ள சூழலுக்கு ஏற்றவாறு தாயரிக்க முயன்று வருகிறேன்.” 

தற்பொழுது ராம் பிரகாஷ் தனியார் தொலைகாட்சியில் சமையல் நிகழ்ச்சி நடத்தி வருகிறார் மற்றும் சமையல் வகுப்பும் எடுத்து வருகிறார். அதிலும் பேக்கிங் போன்ற அயல்நாட்டு உணவில் அதிக கவனம் செலுத்தாமல் இந்திய பாரம்பரிய உணவை கற்றுக் கொடுத்து வருகிறார். வருங்காலத்தினருக்கு நம் பாரம்பரிய உணவைப் பற்றி புரிய வைக்க பல கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆர்வமாக உள்ளார்.

தற்பொழுது ஆர்கானிக் ஸ்டோர் என்று வைத்து நம் உணவு பொருட்களை அதிக விலையில் விற்கின்றனர் அது மேல் வர்கத்தினருக்கு மட்டுமே போய் சேர்கிறது. அதாவது கம்பு அரிசி 150 ரூபாய்க்கு விற்கப்படுவதால் நடுத்தரவர்கத்தினருக்கு சென்றடைவதில்லை. அதில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று தன் விருப்பத்தை தெரிவித்தார்.

தற்போது இவரின் சாதனைக்காக ’Unique World Records’ இல் இடம் பிடித்த அவர், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.