விளையாடுவதற்கான களம் அமைத்து தரும் 'வொலானோ'

0

அத்னான் அதீப் ஒரு மென்பொருள் வல்லுனர். பட்னி, ஐகேட் போன்ற பெருநிறுவனங்களில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் மிக்கவர். கடைசியாக துபாயில் பணியாற்றிக்கொண்டிருந்த போது இவரது சம்பளம் 2,50,000 டாலர். அந்த பணியை விட்டுவிட்டு தன் சொந்த நிறுவனத்தை இந்தியாவில் துவங்கினார்.

இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இவரிடம் இது பற்றி பலர் வாதிட்டனர். எனினும் தன் முடிவில் தீர்மானமாக இருந்தார். அத்னான் அடிப்படையில் விளையாட்டு ஆர்வலர் என்பதால் விளையாட்டு சார்ந்த நிறுவனம் ஒன்றை ஏப்ரல் 2012ம் ஆண்டு தன் மனைவி ஜெபா ஜைடியுடன் இணைந்து துவங்கினார்.

"வொலானோ" (Volano) என்ற இவரது நிறுவனம் அமெச்சூர் விளையாட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது. இது டெல்லியை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். மற்ற விளையாட்டு சார்ந்த நிறுவனங்கள் போலல்லாமல் வொலானோ பொழுது போக்கு சார்ந்த புதுவிதமான விளையாட்டுக்களை உள்ளடக்கிய இடங்களை(properites) உருவாக்குகிறார்கள். டெவில்ஸ் சர்க்யூட் மற்றும் டெவில்ஸ் சர்க்யூட் ஸ்விஃப்ட் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தேசத்தின் கச்சிதமான ஆண் மற்றும் கச்சிதமான பெண்களை அடையாளம் காட்டும் போட்டிகளை நடத்துகிறார்கள். அது மட்டுமல்லாமல் தேசத்தின் கச்சிதமான பெருநிறுவனத்தை அடையாளப்படுத்தும் போட்டியையும் நடத்துகிறார்கள்.

வொலானோவின் இணை நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான அத்னான் இது பற்றி பேசும்போது “இது ஒரு தனித்துவமான ஐடியா. இதுவரை இந்தியாவில் இருக்கும் எந்த விளையாட்டு சார்ந்த நிறுவனமும் இதை முயற்சித்ததில்லை. பெரும்பாலானவர்கள் பாரம்பரியமான விளையாட்டுகளான கிரிக்கெட், ஃபுட்பால் மற்றும் டென்னிஸ் சார்ந்த போட்டிகளை நடத்துவதிலும் போட்டிகளை நிர்வகிப்பதிலுமே ஈடுபடுகிறார்கள்” என்றார்.

இந்த நிறுவனத்தின் முதல் வெளியீடு "கேம்ஆன்இந்தியா” ஆகும். இது பாரம்பரியமான விளையாட்டு சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்ட களம். விளையாடுவதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பது, விளையாடுகிறவர்களை ஒருங்கிணைப்பது என கிரிக்கெட், கால்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, வலைப்பந்து மற்றும் தடகள போட்டிகளை நடத்துவதற்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இதற்கான பிரத்யேகமான கைப்பேசி மென்பொருளை உருவாக்குவதில் முனைப்பாக ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த மென்பொருள் மூலம் தங்கள் பகுதியில் நடக்கும் விளையாட்டு போட்டிகளை பற்றிய தகவல்களை ஒருவர் பெற முடியும்.

2012ம் ஆண்டு முடிவில் வொலானோ தங்களின் இரண்டாவது இடமான (property) டெவில்ஸ் சர்க்யூட்டை உருவாக்கினார்கள். இது ஐந்து கிலோமீட்டர் நீளமுள்ள ஆட்டக்களம் ஆகும். இது 15லிருந்து 20 ராணுவ தடுப்புகளை உள்ளடக்கிய களம் ஆகும். போட்டிசார்ந்த அல்லது போட்டியற்ற என்ற எதாவது ஒரு பிரிவை பங்கேற்பாளர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். மூன்று ஆண்டுகளில் 34 நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள். இதில் பத்தாயிரம் பேர் வரை கலந்துகொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் விரிவாக்கமானது 2015ம் ஆண்டு டெவில்ஸ் சர்க்யூட் ஸ்விஃப்ட் போட்டியின் போது நடந்திருக்கிறது. இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட விளையாட்டு சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஆகும். இந்திய பெருநிறுவன பணியாளர்களின் விளையாட்டு திறமையை வெளிக்காட்டக்கூடிய ஒன்றாகும். பெருநிறுவனங்களை சார்ந்த பணியாளர்கள் குழுவாக பிரிந்து ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டு வெல்லவேண்டும். இது உடல் மற்றும் மன வலிமையை சோதிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஐந்து நகரங்களில் உள்ள 80 பெருநிறுவனங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். ஈஒய் (EY), கேபிஎம்ஜி, டாக்டர் ரெட்டிஸ், அப்பல்லோ ஹெல்த்கேர், ஐபிஎம், விப்ரோ மற்றும் சோனி போன்ற பெருநிறுவனத்தை சேர்ந்தோர் இதில் கலந்து கொண்டனர்.

நிறுவனத்தின் வளர்ச்சி

சாதாரண கட்டிடத்தில் துவங்கி இன்று டெல்லி க்ரீன்பார்க் பகுதியில் மிகப்பெரிய அலுவலகத்தில் இயங்கக்கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கும் வொலானோ கடந்து வந்த பாதை அசாதாரணமானது. "இந்த வளர்ச்சி எங்களுக்கு மகிழ்ச்சியளித்திருக்கிறது. நாங்கள் வெறும் இரண்டு பேர் சேர்ந்து துவங்கினோம். இப்போது இருபது பேர் பணியாற்றுகிறார்கள். இன்னும் 40 பேரை வேலைக்கு எடுக்கும் திட்டமிருக்கிறது. நாங்கள் கொடுத்த உழைப்பிற்கு கிடைத்த பலன் இது. இது திருப்தியளித்திருக்கிறது” என்றார் அத்னான்.

வொலானோ இரண்டு விதமான வழியில் பணம் ஈட்டுகிறது. பங்கேற்பு கட்டணம் மற்றும் விளம்பர ஆதரவு. பங்கேற்பாளர்களிடம் 1500ரூபாயிலிருந்து 3000ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இந்த ஆண்டு மாருதி சுசுகி நிறுவனத்திடம் பல மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் முடிவடைந்திருக்கிறது. இதன் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டெவில் சர்க்யூட் பந்தயங்களுக்கு தலைப்பு ஆதரவாளராக (title sponsor) சுசுகி ஸ்விப்ட் நிறுவனம் இருக்கும். இதே போன்ற ஒப்பந்தம் ரீபோக் மற்றும் ரெட் புல் நிறுவனங்களிடமிருந்தும் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்கால வளர்ச்சி

நமக்கு கிடைத்த செய்தி அடிப்படையில், அப்போலோ மருத்துவ குழுமத்தின் மூலமாக முதல் சுற்றில்(series A) 40 கோடி ரூபாய் இணைப்பு நிதியாக பெற்றிருக்கிறது. முதல் சுற்று துவங்குவதற்கு முன்பாகவே அடுத்தகட்ட இணைப்பு நிதியும் பெற்றுவிடும்.

"கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் நூறு சதவீத வளர்ச்சியை எட்டியிருக்கிறோம். இந்த ஆண்டு பத்து மடங்கு வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். புதிய இடங்களை உருவாக்குவது மற்றும் அதற்கான சிந்தனைக்காக இப்போது இயங்கிக்கொண்டிருக்கிறோம். 500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சந்தையில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் நூறு கோடி விற்று முதலை எட்ட வேண்டும் என்பது தான் எங்கள் இப்போதைய இலக்கு” என்கிறார் அத்னான்.

இணையதள முகவரி: Volano