சிஏ முடிக்க கஷ்டப்படுகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு உதவக்கூடியவர்கள் பற்றி இதோ...

தொழில்நுட்பத்தின் சக்தியைக் கொண்டு ’IndigoLearn’ நூற்றுக்கணக்கான மாணவர்கள் பட்டயக் கணக்காளர் தேர்விற்குத் தயாராக உதவுகிறது.

1

கற்றுக்கொடுப்பது கடினமான பணி. அதேபோல் கற்றுக்கொள்வது சலிப்பூட்டுவதாக இருக்கும். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை படிப்பதற்கு சுவாரஸ்யமாக மாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் மற்ற பாடங்களுக்கு அப்படிப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால் ஒரு வலைதளம் கற்றலை உற்சாகமான செயல்முறையாக மாற்றுவதுடன் நிதி மற்றும் கணக்கியல் பிரிவின் பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொள்ள உதவும் முயற்சியில் உள்ளது. கருத்தியல் தெளிவைக் கொண்டுவரவேண்டும் என்கிற முக்கிய கொள்கையால் உந்தப்பட்டு செயல்படும் இண்டிகோலேர்ன் (IndigoLearn) நிதி மற்றும் கணக்கியலில் கவனம் செலுத்தும் இந்தியாவின் முதல் கல்வி ஸ்டார்ட் அப்பாகும்.

சத்யா ரகு வி மொக்கபடி, ஸ்ரீராம் சோமயாஜுலா இணைந்து இண்டிகோலேர்ன் உருவாக்கினர். இது பட்டையக் கணக்காளர் பாடத்தைப் படிப்பதை வேடிக்கையாக மாற்றுவதற்காக கல்வி தொடர்பான வீடியோக்களை உருவாக்குகிறது. சத்யா ரகு; பட்டையக் கணக்காளர். பத்தாண்டுகளுக்கும் மேலாக சிஏ தேர்வெழுதும் மாணவர்களுக்கு பயிற்சியளித்து வருகிறார். தனது பயிற்சியை மேம்படுத்திக்கொள்வது குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுவதில் அதிக நேரம் செலவிட்டார். இதன் அடிப்படையில் சத்யா ஸ்ரீராமுடன் இணைந்து ஊடாடும் வகையிலும் மாணவர்கள் முழுமையாக ஈடுபடும் விதத்திலும் கல்வி தொகுப்பை உருவாக்கவேண்டும் என தீர்மானித்தனர். 

சத்யாவும் ஸ்ரீராமும் 2013-ம் ஆண்டு சந்தித்துக்கொண்டனர். ஸ்ரீராம் சிஏ மற்றும் சிஎஃப்ஏ முடித்துள்ளார். இண்டியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ முடித்துள்ளார். விரைவில் சிஏ-வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த சூரஜ் லகோடியா மற்றும் தொழில்நுட்ப நிபுணரான சரத் வேலுமுரி இவர்களுடன் இணைந்துகொண்டனர். இவர்களது முன்னாள் சக பணியாளர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து ’இண்டிகோலேர்ன்’ நிறுவினார்கள்.

இண்டிகோலேர்ன் பணிகள் மூன்றாண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்டாலும் 2016-ம் ஆண்டு கடைசியில்தான் இறுதி வடிவம் பெற்றது. முதல் தொகுப்பு இண்டிகோலேர்ன் வலைதளம் மற்றும் செயலியில் 2017-ம் ஆண்டு ஏப்ரம் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. தரமான கல்வி மற்றும் சிறந்த ஆசிரியர்கள் கிடைக்காதவர்களுக்கு உதவுவதே இதன் நோக்கம்.

கடந்த பத்தாண்டுகளாக 1,00,000-க்கும் அதிகமான மாணர்களுக்கு பயிற்சியளித்துள்ள அனுபவம் குழுவிற்கு இருக்கும்போதும் இண்டிகோலேர்ன் குழுவினர் ஆறு மாதங்கள் செலவிட்டு மாணவர்களுடன் உரையாடி கற்றலில் உள்ள இடைவெளிகளைப் புரிந்து கொண்டனர். 

இந்த ஆன்லைன் கல்வித் தளம் நுழைவுத் தேர்விற்குத் தயாராகிவரும் மாணவர்களுக்கு சிஏ பாடங்களை வழங்குகிறது. மாணவர்களை அதிகளவில் ஈடுபட வைக்கவும் அவர்களுக்கு தனிப்பட்ட கற்றலை வழங்கவும் சிஏ விரிவுரையாளர்கள் மற்றும் சிஏ முதல் ரேங்க் எடுத்தவர்கள் ஆகியோரை இணைக்கிறது.

வீடியோக்கள், குறிப்புகள், மதிப்பீட்டிற்கான தேர்வுகள் ஆகியவற்றை ஆறு மாதங்கள் செலவிட்டு தயாரித்தனர். இதை 600-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பார்வைக்கு எடுத்துச்சென்று தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கான கருத்துக்களை அவர்களிடமிருந்து பெற்றனர். பட்டயக் கணக்கியல் குறித்த பல்வேறு அம்சங்களை புரிந்துகொள்வதற்காக இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வீடியோ பாடங்களைப் பயன்படுத்தியுள்ளனர். மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ள ஏதுவாக வீடியோக்களில் பயிற்றுவிப்பவர் கருத்துக்களை வரைவியலுடன் விவரிக்கிறார்.

வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றி பெற போராடுபவர்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாடு கருத்தியல் தெளிவுதான். இதை தன்னுடைய அனுபவம் கற்றுக்கொடுத்ததாக தெரிவிக்கிறார் ஸ்ரீராம். 

”மாணவர்களுக்குக் கற்றல் என்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக எப்போதும் இருந்ததில்லை. பல்வேறு பயிற்சி நிலையங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வகுப்பறையில் பல மணி நேரம் படிப்பார்கள். இங்கு கருத்தியல்களை புரிந்து கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தப்படுவதில்லை. மாறாக குறுக்குவழியில் கற்கவும் மனப்பாடம் செய்யவுமே கற்றுக்கொடுக்கப்படுகிறது.”

ஒவ்வொரு வீடியோவிற்கும் படப்பிடிப்பு மற்றும் அதற்குப் பிந்தைய பணிகளுக்காக ப்ரொஃபஷனல் திரைப்பட தயாரிப்பாளர்களை இணைத்துக்கொள்கின்றனர். கற்றல் வழிமுறை சலிப்பூட்டும் விதத்தில் இருக்கக்கூடாது என்பதில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு வீடியோவிற்குப் பிறகும் மாணவர்கள் சிறப்பாக கற்றுக்கொண்டார்கள் என்பதை உறுதிசெய்வதற்காக மதிப்பீடு செய்யப்படுகிறது.

ஒருங்கிணைக்கப்பட்ட கற்றல் தொகுப்புகள் பொதுவாக 8-12 நிமிட வீடியோவாக இருக்கும். விளையாட்டு வாயிலான மதிப்பீடுகளுக்குப் பிறகு தேர்வுகளில் பரிசோதிக்கப்படும் வெவ்வேறு சூழ்நிலைகளை முழுமையாக விளக்குவதற்கு இந்த வீடியோக்கள் உதவும். குறுக்கெழுத்து, புதிர், விடுகதை போன்ற சுவாரஸ்யமான வழிகளில் மாணவர்கள் மதிப்பிடப்படுவார்கள். அவர்களது செயல்திறன் அடிப்படையில் மாணவர்களுக்குத் தனிப்பட்ட மதிப்பீடு வழங்கப்படும். 

”மற்ற பயிற்சி நிலையங்களுடன் ஒப்பிடுகையில் எங்களது மாணவர்களின் வெற்றி விகிதம் எப்போதும் 40 சதவீதம் அதிகமாகவே இருக்கும்,” என்றார் ஸ்ரீராம்.

ஆனால் மற்ற ஆன்லைன் கல்வி வலைதளங்களிலிருந்து இண்டிகோலேர்ன் எவ்வாறு வேறுபட்டுள்ளது? இண்டிகோலேர்ன் பொருளடக்கம் எளிதாக பார்க்கும் விதத்தில் இருக்கும் என்றும் செய்முறை விளக்கங்களுடன் இருக்கும் என்றும் ஸ்ரீராம் விவரித்தார். ”மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்து அவர்களது புரிதல் மேம்படுத்துவதை உறுதிசெய்வதற்காக உயர்தர அனிமேஷனைப் பயன்படுத்தி மதிப்பீடு தேர்வுகளை வழங்குகிறோம். சிறப்பான கற்றல் மற்றும் தேர்வு அனுபவங்களை வழங்க தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவதே எங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. தற்போது செயல்படும் மற்ற தளங்கள் மாணவர்களின் தேவைகளில் கவனம் செலுத்தாமல் அவர்களின் திறன்களை அடிப்படையாகக் கொண்ட பொருளடக்கத்தை வழங்குவதிலேயே கவனம் செலுத்துகிறது.”

மேலும் பெரும்பாலான ஆன்லைன் தளங்கள் ஒரு வகுப்பறை விரிவுரையை படம்பிடித்து அந்த வீடியோவை ஆன்லைன் பாடத்தொகுப்பாக விற்பனை செய்கின்றனர். உண்மையான வகுப்பறைச் சூழலை வழங்கும் திறமையின்மை காரணமாக வீடியோக்களை பார்வையிடும் நேரத்தில் 30 சதவீத நேரம் வீணாகிறது என்று விவரித்தார் ஸ்ரீராம்.

கதைகள் வாயிலாக மிகவும் சிக்கலான தலைப்புகளையும் எளிதாக புரியவைக்கலாம் என்கிறார் ஸ்ரீராம். 

”ஒரு மாணவர் கதைகளை அடிப்படையாகக் கொண்டு கருத்துக்களை புரிந்துகொண்டால் அதன் பல்வேறு அம்சங்கள் அவருக்கு சுவாரஸ்யமானதாக அமையும். இதில் கருத்துக்கள் ஆழமாக மனதில் பதியவைக்கப்படும்,” என்றார் ஸ்ரீராம்.

அனிமேஷன், பைட் அளவே இருக்கும் தொகுப்புகள், விளையாட்டு சார்ந்த மதிப்பீடு, சிறப்பான பகுப்பாய்வு ஆகியவற்றுடன்கூடிய கதைகள் கற்றல் அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும்.

ஒவ்வொரு தொகுப்புகளையும் கற்பிக்க நிறுவனர்களான சத்யா, ஸ்ரீராம், சூரஜ் உட்பட இண்டிகோலேர்ன் தளத்தில் 10 ஆசிரியர்கள் உள்ளனர். மாணவர்கள் சிஏ இடைநிலை தேர்வு மற்றும் சிஏ இறுதிநிலை தேர்விற்கான கணக்கியல் மற்றும் தணிக்கை தரநிலைகள் பாடங்களுக்கான தொகுப்புகளைப் பெறலாம். சிஏ அடிப்படைத் தேர்விற்கான தொகுப்புகள் தயாராகி வருகிறது.

மாணவர்களுக்கு சில செயல்முறை விளக்க வகுப்புகளும் பாடங்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதைத் தாண்டி பாடங்களின் தொகுப்புகளைப் பெற மாணவர்கள் கட்டணம் செலுத்தவேண்டும். சிஏ இடைநிலை தேர்விற்கான தணிக்கையின் தரநிலைகள் (Standards on Auditing) வகுப்பிற்கு இண்டிகோலேர்ன் கட்டணம் 999 ரூபாய். சிஏ இடைநிலை தேர்விற்கான கணக்கியல் தரநிலைகள் (Accounting Standards) கட்டணம் 1,199 ரூபாய். சிஏ இறுதிநிலை தேர்விற்கான தணிக்கையின் தரநிலைகள் (Standards on Auditing) வகுப்பிற்கு 1,200 ரூபாய். சிஏ இறுதிநிலை தேர்விற்கான கணக்கியல் தரநிலைகள் (Accounting Standards) கட்டணம் 2,999 ரூபாய்.

சாதனைகள் குறித்து ஸ்ரீராம் குறிப்பிடுகையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்புதான் இதுவரை கிடைத்த மிகப்பெரிய சாதனை என்கிறார். 

”ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முயற்சியை மேற்கொண்டதற்காக பல பெற்றோர்கள் எங்களை தொடர்பு கொண்டு பாராட்டினர்,” என்றார்.

இண்டிகோலேர்ன் தளத்தை அணுகும் 50 சதவீத மாணவர்கள் தரமான கல்வி கிடைக்கப்பெறாத மெட்ரோக்கள் அல்லாத பகுதியைச் சேர்ந்தவர்கள் என்கிறார். கடந்த மாதம் பெங்களூருவில் USF TiE-ஆல் நடத்தப்பட்ட போட்டியில் இண்டிகோலேர்ன் முதலிடத்தைப் பிடித்தது. இந்தப் போட்டியில் 210-க்கும் அதிகமான கல்வி சார்ந்த ஸ்டார்ட் அப்கள் கலந்துகொண்டன.

முழுமையான சிஏ பாடத்தொகுப்பு, பதினோறாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கானத் தொகுப்பு மற்றும் ஒரு சில ப்ரொஃபஷனல் பாடங்களுக்கான தொகுப்பையும் அடுத்த ஓராண்டில் அறிமுகப்படுத்த இக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஒரு மில்லியன் மாணவர்களைக் கருத்து ரீதியில் தேர்ந்த ப்ரொஃபஷல்களாக மாற்ற பயிற்சியளிப்பதே இவர்களது நோக்கமாகும்.

ஆங்கில கட்டுரையாளர் : ஜஸ்லீன் கவுர்