கோபி ஷங்கர்: மதுரை வடக்கு தேர்தல் களத்தில் இடையலிங்க இளைஞர்!  

0

2016 தமிழக சட்டப்பேரவை தேர்தல் மிகவும் சுவாரஸ்யமானது என்று வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெறுவது உறுதி. இந்தத் தேர்தலில்தான் தமிழகத்தில் இத்தனை முனை போட்டி, இந்தத் தேர்தலில் தான் முதன்முதலாக வருமான வரிப் பிரிவு குழுக்கள் பணப் பட்டுவாடாவை தடுப்பதற்கான சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலாக வேட்புமனு தாக்கல் செய்தவுடன் வேட்பாளர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர். இந்தத் தேர்தலில்தான் முதன்முதலாக தகவல் தொழில்நுட்பம் பெரிதளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலாக தமிழகத்தில் இத்தனை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்படி இத்தேர்தலில் முதன்முதலாக பட்டியலில் சேர நிறைய விஷயங்கள் இருந்தாலும் முத்திரை பதிக்கும் விஷயங்களுள் ஒன்று, இந்தத் தேர்தலில் இடையிலிங்க இளைஞர் ஒருவர் முதன்முறையாக போட்டியிடும் செய்தி. கோபி ஷங்கர் எனும் அந்த இளைஞர் மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட உள்ளார். மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் இவர் போட்டியிடுகிறார். இடையலிங்க இளைஞர் என்றால் ஏதோ சாதி - சமூக அல்லது வேறு அடையாளம் என்று நீங்கள் நினைத்தால், அதற்கு நான் பொறுப்பில்லை. இது குறித்து தெளிவான புரிதல் ஏற்படவே இக்கட்டுரை.

யார் இந்த இடையலிங்கதவர்கள்?

ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் என்றே வேட்பாளர்களை நாம் இதுவரை அறிந்திருக்கிறோம். அதையும் தாண்டி ஒரு பாலினம் இருக்கிறது. அவர்கள் தான் இடையலிங்கத்தவர்கள். இடையலிங்க இளைஞர்கள் என்பற்கான பதிலை மதுரை தபால்தந்தி நகரைச் சேர்ந்தவர் கோபி ஷங்கர் (25) கூறுகிறார்.

"நான் ஒரு இடையலிங்க (இன்டெர்செக்ஸ்) இளைஞர். திருநங்கை என்பது வேறு. இடையிலிங்கத்தவர்கள் என்பது வேறு. பிறக்கும்போது வேறு பாலினத்தவராக இருந்து பருவ வயதில் வேறு பாலினமாக மாறுபவர்கள்தான் திருநங்கைகள் அல்லது மாற்று பாலினத்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். பிறக்கும்போதே இருபால் உறுப்புகளுடன் பிறக்கும் சிலர் இன்டர்செக்ஸ் என்று அழைக்கப்படுவார்கள்" எனக் கூறுகிறார்.

இடையலிங்கத்தவர்கள் அறியாதோர்கூட இப்போது அறிந்திருப்பீர்கள். சரி, கோபி ஷங்கர் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

கோபி ஷங்கர்... சில தகவல்கள்:

மதுரை மாவட்டம் செல்லூரில் 1991-ல் பிறந்தார் கோபி ஷங்கர். பட்டதாரியான இவர் யோகா பயிற்றுனரும்கூட. அவ்வப்போது பத்திரிகைகளுக்காக எழுதுகிறார். அது பெரும்பாலும் மாற்று பாலினத்தவர் விழிப்புணர்வு சார்ந்ததாகவே இருக்கின்றன. 'சிருஷ்டி மதுரை' என்ற பாலின விழிப்புணர்வு அமைப்பை நடத்தி வருகிறார். யுஜிசி, ஐசிஎஸ்எஸ்ஆர் போன்ற குழுக்களாக நடத்தப்படும் தேசிய கருத்தரங்குகளில் கலந்து கொண்ட இளைஞர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நல்ல பேச்சாளரும்கூட.

தவிர, மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு மாற்று பாலினத்தவருக்கான தமிழகத்தின் முதல் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி வட்டமாக இருக்கிறது. மதுரை மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாலினம் தொடர்பான வகுப்புகளை மிகுந்த போராட்டத்துடன் நடத்தி வருகிறது இந்த அமைப்பு.

உரிமைக்கான குரல்

தன்னை ஒரு பாலின சமத்துவத்துக்கான போராளி என அடையாளப்படுத்தவே விரும்புகிறார் கோபி ஷங்கர். அவரது குரல் மாற்று பாலினத்தவரின் உரிமைகளுக்காகவே ஓங்கி ஒலிக்கிறது. இடையலிங்கத்தவர் குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் போதிய அளவு இல்லை எனக் கூறும் கோபி, அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தவே நான் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறுகிறார்.

இடையலிங்க வாலிபராக இருந்தாலும் ஷங்கர். ஆண் என்றே தன் பாலின அடையாளம் குறித்து வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக, தனது பாலின பிரச்சினை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகோனி ஒரு பத்திரிகைப் பேட்டியில், மூன்றாம் பாலினத்தவர் அல்லாத கோபி போட்டியிட தடையில்லை என்று கூறியதன் அடிப்படையில் ஆண் என்ற அடையாளத்துடன் ஷங்கர் இத்தேர்தலை எதிர்கொள்கிறார். அதையும் தாண்டி கோபி தமிழ்நாட்டுத் தேர்தலில் போட்டியிடும் இளம் வேட்பாளர் என்பது கூடுதல் தகவல்.

புரிதல் தேவை

பாலினம் சார்ந்த புரிதல் இந்திய சமூகத்தில் சாதாரண மக்களிடம் மட்டுமல்ல அரசியல்வாதிகள், ஏன் மருத்துவர்கள் சிலரிடம்கூட தெளிவாக இல்லை எனக் கூறுகிறார் கோபி ஷங்கர். ஆஸ்திரேலியாவில் டோனி ப்ரிஃப்பா என்ற இடையிலிங்கத்தவர் மேயராக இருப்பதை சுட்டிக் காட்டும் கோபி, இந்தியாவிலும் மாற்று பாலினத்தவர் குறித்த புரிதல் தேவை என்கிறார்.

முதன் முதலாய் இடையலிங்கத்தவர் ஒருவர் தேர்தல் களம் காண்கிறார். எதற்காக தங்கள் அடையாளம் குறித்து புரிதல் ஏற்படுத்துவதற்காக. தங்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதற்காக.

மூன்றாம் பாலினத்தவரை மெல்ல மெல்ல அங்கீகரிக்கத் தொடங்கியிருக்கும் இச்சமூகம் மாற்றுபாலினத்தவரையும் முறையே அங்கீகரிக்க வேண்டும்.

> இது கோபி ஷங்கரின் ஃபேஸ்புக் பக்கம்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

'என் அடையாளத்துக்கு முதல் அங்கீகாரம்'- ஜெ-வை எதிர்த்து களமிறங்கிய திருநங்கை தேவி பெருமிதம்! 

Stories by gangotree nathan