எண்ணம், புதுமை மற்றும் கண்டுபிடிப்பு: டெக்ஸ்பார்க்ஸ் 2018'ல், ’உன்னதி’ திட்டத்தை அறிமுகம் செய்தார் அமைச்சர்!

0

கர்நாடக அரசின் உன்னதி திட்டம், தொழில்முனைவோர்கள் நிஜ வாழ்க்கை பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு, சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எண்ணங்களை உருவாக்கி, புதுமையாக்கத்தில் ஈடுபட ஊக்குவிக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் மாநாடு மற்றும் யுவர் ஸ்டோரியின் முன்னணி ஆண்டு நிகழ்வான டெக்ஸ்பார்க்ஸ் 2018, வெள்ளிக்கிழமை அன்று உற்சாகமாக துவங்கியது.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் பிரியங் கார்கே, எண்ணங்களை உருவாக்கி, புதுமையாக்கம் செய்து, சமூக தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசுத் திட்டத்தை அறிவித்தார்.

நிஜ வாழ்க்கை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில், அரசின் பங்குதாரர் மற்றும் மாற்றத்திற்கான தூதுவர்களாக தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் திகழ்வதை ஊக்குவிக்கும் உன்னதி திட்டத்தை அமைச்சர் அறிவித்தார். ரூ.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள இந்த திட்டம் மிகவும் பொருத்தமாக டெக்ஸ்பார்க்ஸ் 9ம் பதிப்பில் அறிவிக்கப்பட்டது.

“நிஜ வாழ்க்கை பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய, செயற்கை நுண்ணறிவு, ரோபோவியல் மற்றும் இதர வளரும் தொழில்நுட்பங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். புதுமையாக்கம் மூலம் சமூக மாற்றத்தை உண்டாக்குவதில் கர்நாடகம் முன்னிலையில் இருக்க விரும்புகிறோம். புதுமையாக்கத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும், “என கார்கே கூறினார்.

மகாத்மா காந்தியை மேற்கோள் காட்டிய கார்கே, மாற்றத்தை தங்களிடம் வெளிப்படுத்துவதன் மூலம் மாற்றத்தை உருவாக்குமாறு தொழில்முனைவோரை கேட்டுக்கொண்டார். உன்னதி மூலம், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமூக பிரமிட்டில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களை வளர்ச்சி சென்றடைய உதவுமாறு கேட்டுக்கொண்டார். கழிவு நீர் அடைப்பை கண்டறிய செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோவியலை கண்டறியும் ஸ்டார்ட் அப்பை உதாரணமாக சுட்டிக்காட்டிய கார்கே, அடிமட்ட அளவில் மாற்றத்தை உருவாக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த விரும்பும் ஸ்டார்ட் அப்களுடன் துறை இணைந்து பணியாற்ற விரும்புவதாக கூறினார்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு அமைச்சரகம், வழிகாட்டி, ஊக்குவித்து, நிதி அளிக்கும் என்றார். 

“இந்த ஸ்டார்ட் அப்களில் ரூ.50 லட்சம் வரை முதலீடு செய்வோம். இந்த திட்டத்திற்காக ரூ.20 கோடி ஒதுக்கியுள்ளோம். பொருத்தமான புதிய எண்ணங்கள் வந்தால் இதை மார்ச் மாதத்திற்குள் ரூ.100 கோடி இதை உயர்த்துவோம்,” என்று கார்கே கூறினார்.

ரூ.50 லட்சம் முதலீடு செய்வதோடு, அரசுத் துறைகளுக்குள் இந்த ஐடியாக்களை முன்னோட்டம் பார்க்கவும் கர்நாடக அரசு உதவு செய்யும்.

“டேட்டா சயின்ஸ், அனிமேஷன், கேமிங், ஐ.ஓ.டி, செயற்கை நுண்ணறிவு, ரோபோவியல் உள்ளிட்ட துறைகளுக்கான சிறப்பு மையங்கள் கர்நாடக அரசு அமைத்துள்ளது. அறிவுசார் சமூகத்தை உருவாக்க விரும்புகிறோம். வளரும் தொழில்நுட்பங்களில் திறனாக்கத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். இதன் மூலம் பல்வேறு தொழில்நுட்பங்களுக்கு தயாரான திறன்வாய்ந்த தொழிலாளர் வளத்தை உருவாக்க முடியும்,” என்றும் கார்கே குறிப்பிட்டார்.

மாநில அரசின், புதுமையான சட்டரீதியான திட்டம் பற்றியும் அவர் குறிப்பிட்டார். குறிப்பிட்ட கொள்கை முடிவு எடுக்கும் முன் பங்குதாரர்களுடன் இணைந்து செயல்பட்டு அவர்கள் கருத்துக்களை அறிய இது வழிவகுக்கிறது.

“மாநில அரசின் மற்றொரு புதுமையான முயற்சியாக கர்நாடக புதுமையாக்க ஆணையம் அமைகிறது. கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் நிர்வாகத்திற்கு உதவும் புதுமையாக்கத்தை பரிசோதிப்பதை இது சாத்தியமாக்குகிறது,” என கார்கே கூறினார்.

ஸ்டார்ட் அப் சூழலை ஊக்குவிக்கும் மாநில அரசின் முயற்சிகள் பற்றியும் அவர் விவரித்தார். 

“கடந்த ஆண்டு மட்டும் 400 ஸ்டார்ட் அப்கள் தங்களை நிறுவிக்கொள்ள உதவியுள்ளோம். 250 ஸ்டார்ட் அப்களுக்கு மேல் நிதி அளித்துள்ளோம். 5 முதல் 8 சதவீதம் வரை ஸ்டார்ட் அப்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் வகையில் கொள்முதல் மற்றும் சேவைகள் கொள்கையை உருவாக்க முயன்று வருகிறோம்,” என்றும் கார்கே கூறினார்.

நிகழ்ச்சியில், இஸ்ரேல் தூதர் டானா குர்ஷ், இந்தியாவில் செழிக்கும் ஸ்டார்ட் அப் சூழலை புகழ்ந்ததோடு, “இஸ்ரேல் மற்றும் இந்தியா இடையே டெக்ஸ்பார்க்ஸ் இருக்கிறது. ஜுக்கட் பின்னே உள்ள எண்ணத்தை நேர்மறையாக மேம்படுத்தல் என எடுத்துக்கொண்டால் அதன் மையாக இந்தியா உருவாகும்,” என்றார்.

கார்கே, தனது சிறப்புரையின் போது சாமர்த்தியமாக பதில் அளித்து கைத்தட்டல் பெற்றார். பெங்களூரு உள்கட்டமைப்பு பிரச்சனை அதற்குறிய கவனத்தை பெறுமா? என பேடிஎம் நிறுவனர் விஜய்சேகர் சர்மாவிடம் இருந்து வந்த கேள்விக்கு, இதற்கு பதில் அளிக்க தான் முதல்வராக இருக்க வேண்டும் என பதில் அளித்தார்.

இருப்பினும், கடந்த இருபது ஆண்டுகளில் நகரின் வளர்ச்சி பிரச்சனைகளில் உருவாக்கியிருப்பதாகவும், மாநில அரசு இதில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

நாடுதழுவிய அளவில் பகிரப்பட்ட ஸ்டார்ட் அப் சூழல் சாத்தியமா எனும் கேள்விக்கு, பிரதமராக இருந்தால் இதற்கு பதில் அளிக்கலாம் என தெரிவித்தார். அவரது உடனடி பதில் சிரிப்பலைகளை உண்டாக்கியது.

உன்னதி திட்டத்தில் பலன்பெற விரும்பும் ஸ்டார்ட் அப்கள் அக்டோபர் 10ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட துறையிடம் சமர்பிக்க வேண்டும்.

யுவர்ஸ்டோரியின் ஆண்டு நிகழ்வான டெக்ஸ்பார்க்ஸ், ஸ்டார்ட் அப் சூழலில் சிறந்த மற்றும் பிரகாசமான நிறுவனங்களை, வர்த்தக உலகை, அதிகாரிகள், மற்றும் முதலீட்டு சமூகத்தை ஒன்றாகக் கொண்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் இந்த நிகழ்வு, அறிவு பகிர்வு மற்றும் வலைப்பின்னலாக்கத்திற்கான இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட் அப் மேடையாகி இருக்கிறது. 

டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியின் 9 வது பதிப்பு யுவர்ஸ்டோரியின் பத்தாவது ஆண்டாகவும் அமைகிறது. இத்தனை ஆண்டுகளாக உங்களின் ஆதரவு மற்றும் யுவர்ஸ்டோரியை தொடர்ந்து வாசித்து வருவதற்கு மனமார்ந்த நன்றி.

ஆங்கில கட்டுரையாளர்: சமீர் ரஞ்சன் | தமிழில்: சைபர்சிம்மன்