சுயநிதியுடன் துவங்கப்பட்ட முதல் நாளில் இருந்தே லாபகரமாக செயல்படும் ’சுபாரி ஸ்டூடியோஸ்’

1

மும்பையைச் சேர்ந்த ’சுபாரி ஸ்டூடியோஸ்’ (Supari Studios) அத்வைத் குப்த் மற்றும் அக்‌ஷத் குப்த் ஆகிய நிறுவனர்களால் 2012-ம் ஆண்டு துவங்கப்பட்டது. சுயநிதியில் இயங்கும் இந்நிறுவனம் டிஜிட்டல் உள்ளடக்கம்/தயாரிப்புப் பிரிவில் செயல்பட்டு உள்ளடக்கம் தொடர்பான தீர்வுகளை உருவாக்குகிறது.

அன்றாட பணியை சிறப்பாக செய்து வருபவர்களுக்கும் என்றோ ஒரு நாள் சலித்துப்போன உணர்வு ஏற்படும். அப்போது அலுவலக அறையின் ஜன்னல் கதவுகளுக்கு வெளியே வெளியுலகைப் பார்க்கையில் ஏதேனும் சவால் நிறைந்த அதே சமயம் திருப்தியளிக்ககூடிய விஷயத்தில் ஈடுபடலாம் என தோன்றுவது இயற்கையே.

31 வயதான அத்வைத் குப்திற்கு அத்தகைய உணர்வு ஏற்பட்டதன் காரணமாக உருவானதே அவரது தொழில்முனைவுப் பயணம். வென்சர் கேப்பிடல் நிறுவனம் ஒன்றில் முதலீட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். 26 வயதில் அந்தப் பணியைத் துறந்து சுபாரி ஸ்டூடியோஸ் துவங்கினார். வெளிநாட்டில் எம்பிஏ படிக்கலாமா அல்லது தொழில் துவங்கலாமா என்கிற விவாதம் மனதில் ஏற்பட்டபோது நிறுவனம் துவங்குவது என தீர்மானித்தார்.

”முதலீட்டு மேலாண்மை பகுதியில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக செலவிட்ட பிறகு இந்த வணிகத்தை ஆரம்பப்புள்ளியில் இருந்து உயர்த்துவதற்கான நுணுக்கங்களை புரிந்துகொள்ள நான் நேரடியாக இந்தப் பிரிவில் செயல்படவேண்டும் என்பதை உணர்ந்தேன்.”

”ஸ்டார்ட் அப் துவங்குவதில் உள்ள சவால்கள் மற்றும் வளர்ச்சி குறித்து ஆராய்கையில் ஸ்டார்ட் அப்பிற்கான முதலீடு குறைவாகவும் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவும் இருப்பதால் அது சிறந்த தேர்வாக தோன்றியது,” என்றார். அவரது தம்பியான அக்‌ஷத் குப்திடம் இருந்த திறனை உணர்ந்து அவரை இணை நிறுவனராக இணைத்துக்கொண்டார். அக்‌ஷத்திற்கு அப்போது 22 வயது ஆகியிருந்தது. அப்போதுதான் படப்பிடிப்பு பயிற்சியளிக்கும் பள்ளியில் பட்டப்படிப்பு முடித்திருத்தார்.

”அக்‌ஷத் விளம்பர ஏஜென்சிக்களுடனும் தயாரிப்பு நிறுவனங்களுடனும் பகுதி நேரமாக பணியாற்றினார். எனினும் அவர் இளம் வயதினர் என்பதால் அவரது திறமை முறையாக அங்கீகரிக்கப்படவில்லை,” என்று தனது சகோதரர் குறித்து விவரித்தார் அத்வைத்.

சுபாரி ஸ்டூடியோஸ் என்றால் என்ன?

டிஜிட்டல் உள்ளடக்கம் சந்தையில் நிலவும் இடைவெளியை உணர்ந்த சகோதரர்கள் இருவரும் தங்களது திறன்களை இணைத்துக்கொண்டு சுபாரி ஸ்டூடியோஸ் அமைத்தனர். இந்த ஸ்டூடியோ வளர்ந்து வரும் டிஜிட்டல் ஊடக சந்தையில் ஆன்லைனில் வீடியோ உள்ளடக்கம் உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. 

”2012-ம் ஆண்டு ஆர்வம் காரணமாக துவங்கப்பட்ட திட்டமானது விரைவிலேயே வளர்ச்சியடைந்து டிஜிட்டல் வாயிலாக உள்ளடக்கத்தை உருவாக்கும் ஒருங்கிணைந்த ஸ்டூடியோவாக மாறியது,” 

என விவரித்தார் அத்வைத். சுபாரி ஸ்டூடியோஸ் படப்பிடிப்பு, வடிவமைப்பு, தொழில்நுட்பம் ஆகிய ஒருங்கிணைந்த செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு டிஜிட்டல் உள்ளடக்க ஸ்டூடியோவாகும். மையக்கருத்து, திட்டங்களை உருவாக்குதல், படப்பிடிப்பு, படப்பிற்குப் பிறகான பணிகளை கையாளுதல், நிறுவனங்களுக்கு உள்ளடக்கம் சார்ந்த ஆன்லைன் வீடியோவை உருவாக்கி அறிவுசார் சொத்து வழங்குதல் உள்ளிட்ட சேவைகளை வழங்குகின்றனர். ரெட்புல், கூகுள், யூட்யூப், டால்பி போன்ற ப்ராண்டுகள் இவர்களது வாடிக்கையாளர்கள் ஆவார்கள்.

”தற்போது உள்ளடகத்திற்கான அறிவுசார் சொத்துக்களின் தொகுப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். சமூக மற்றும் அரசியல் சார்ந்த நையாண்டி அனிமேடட் தொடரான Shakaharis, இந்தியாவின் சமகால இளம் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் கண்ணோட்டத்தில் கவனம் செலுத்தும் தளமான Vitamin Stree போன்றவை இந்த தொகுப்புகளில் அடங்கும்,” என்றார் அத்வைத். இவைகளுக்கான உரிமம் வழங்குதல், விநியோகம் மற்றும் விற்பனை வாயிலாக வருவாய் ஈட்டப்படுகிறது. 

நவீன ஊடக தொகுப்பு

சுபாரி ஸ்டூடியோஸ் ’நவீன ஊடக தொகுப்பு’ (New Media Collective) என அழைக்கப்படவேண்டும் என்று அத்வைத் விரும்புகிறார். இது மூன்று முக்கிய விதங்களில் செயல்படுகிறது.

இதன் முக்கிய தளம் ப்ராண்டுகளுக்கு ஆன்லைன் வீடியோ உருவாக்குதல் மற்றும் படைப்பாற்றல் சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. ’போஸ்ட் ஆபீஸ்’ பிரிவு அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், தயாரிப்பிற்கு பிறகான பணிகள், நவீன ஊடக தொழில்நுட்ப லேப் ஆகியவற்றைக் கொண்டதாகும். கீடா (Keeda) பிரிவு இளம் சமூகத்தினரின் ஆர்வம் சார்ந்த உள்ளடக்கத்திற்கான அறிவுசார் சொத்துக்களின் தொகுப்பாகும்.

மும்பையில் தலைமையகத்தைக் கொண்டுள்ள சுபாரி ஸ்டூடியோஸ் ஆரம்பத்தில் சாதனங்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு செயல்பட்டது. 

“எங்களது சேவையை அறிமுகப்படுத்திய ஆரம்பகட்டத்திலேயே வளர்ச்சி விரைவாக இருந்தது. இது எங்களது முதல் கேமிராவை வாங்க உதவியது,” என்றார் அத்வைத். 

ஸ்டூடியோவின் குழுவில் எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், கோடர்கள், நிதி ஆய்வாளர்கள், படத்தயாரிப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள், அனிமேட்டர்கள் என 27 பேர் உள்ளனர்.

சுபாரி ஸ்டீடுடியோஸ் – பெயர் காரணம்

’சுபாரி’ என்றால் ஹிந்தியில் ஒருவரை சுட்டுக் கொல்வதற்காக அளிக்கப்படும் தொகை என பொருள்படும். 

“எனினும் இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நாங்கள் கேமிராவைக் கொண்டு ஷூட் செய்வதற்காக மக்கள் எங்களுக்கு கட்டணம் செலுத்துகிறார்கள். எனவே தான் ’நீங்கள் கட்டணம் செலுத்துங்கள், நாங்கள் ஷூட் செய்கிறோம்’ என்கிற வாக்கியத்தை இணைத்துள்ளோம்,” என்றார் அத்வைத்.

அக்‌ஷத்தின் நெருங்கிய நண்பர்களான மனோதி ஜெயின், மிதால் ஷர்மா, மோஹித் பாஷின் ஆகிய மூவரையும் முதலில் பணியிலர்த்தினோம். மனோதி ஜெயின் மற்றும் மிதாலி ஷர்மா இருவரும் சுபாரி ஸ்டூடியோஸ் நிறுவனத்தை தலைமையேற்று நடத்துகின்றனர். கல்லூரி படிப்பை முடித்த புதிதில் மோஹித் பாஷின் குழு உத்திகளுக்கு தலைமையேற்றார். எங்களுடைய நோக்கத்துடன் இவர்களைய ஒன்றிணைய வைப்பதில் அதிக சிரமத்தை சந்திக்கவில்லை. ஏனெனில் அந்த சமயத்தில் நாங்கள் மேற்கொண்ட பணி ஆர்வம் காரணமாக திட்டமிடப்பட்டதே தவிர முறையான வணிக வாய்ப்பாக அதைப் பார்க்கவில்லை,” என்றார் அத்வைத்.

கடந்த மூன்றாண்டுகளில் ஸ்டூடியோ அதன் வருவாயை ஐந்து மடங்கு உயர்த்தியுள்ளது. 70 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது.

சுயநிதியுடன் துவங்கப்பட்டு முதல் நாளில் இருந்தே லாபகரமாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கிறார் அத்வைத். டால்பி, யூட்யூப், கூகுள், ரெட்புல், வார்னர் பிரதர்ஸ் ரெக்கார்ட்ஸ், நைக்கி, ட்விட்டர் போன்ற உலகளவில் மிகப்பெரிய ப்ராண்டுகளுடன் பணியாற்றி வருகின்றனர். 70-க்கும் அதிகமான பார்ட்னர்கள் / வாடிக்கையாளர்களுடன் 350-க்கும் அதிகமான ப்ராஜெக்டுகளை சுபாரி ஸ்டூடியோஸ் வெற்றிகரமாக முடித்துள்ளது.

இதன் வருவாய் மாதிரி ப்ராண்ட் தீர்வுகள் மற்றும் பார்ட்னர்ஷிப், உரிமம் வழங்குதல், உள்ளடக்க விநியோகம் மற்றும் ஊடக ப்ராண்டுகளை சந்தைப்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. 

வணிக மாதிரிகள்

இந்திய ஆன்லைன் வீடியோ துறையின் மதிப்பு 2017-ல் 340 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டதில் இருந்து 2022-ம் ஆண்டில் ஆண்டு வளர்ச்சி விகிதம் 35 சதவீதத்துடன் 1.6 பில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக உலகளாவிய ஊடக ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனமான ’மீடியா பார்ட்னர்ஸ் ஏசியா’ அறிக்கை தெரிவிக்கிறது.

பல்வேறு விளம்பர ஏஜென்சிக்கள், டிஜிட்டல் உள்ளடக்க நிறுவனங்கள், திரைப்படம் மற்றும் வீடியோ தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றுடன் சுபாரி ஸ்டூடியோஸ் வேறுபட்ட வணிக மாதிரிகளைக் கொண்டு போட்டியிடுகிறது. ஸ்டூடியோவின் தனித்துவம் குறித்து அத்வைத் விவரிக்கையில், 

“நாங்கள் ஆன்லைன் வீடியோ உள்ளடகத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள். படைப்பாற்றல் தொடர்பான சேவைகள் (டிஜிட்டல் உள்ளடக்க ப்ராண்ட் தீர்வுகள் மற்றும் தயாரிப்பிற்கு பிறகான சேவைகள்), சொந்த உள்ளடக்கம் (ஆன்லைன் வீடியோ சார்ந்த உள்ளடக்க ஐபி), தொழில்நுட்பம் (மெய்நிகர் உண்மை மற்றும் ஆன்லைன் வீடியோ பகுப்பாய்வு போன்ற நவீன ஊடக உள்ளடக்க தொழில்நுட்பங்கள்) போன்ற சேவைகளை வழங்குகிறோம். ஊடகம் தொடர்பான எங்களது புரிதலுடன் ஆன்லைன் வீடியோக்களை உருவாக்குவது மற்றும் உள்ளடக்க அறிவுசார் சொத்துக்களை உருவாக்குவது போன்றவற்றில் இருக்கும் நிபுணத்துவமே எங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.”

சுபாரி ஸ்டூடியோஸ் தற்சமயம் தயாரிப்பில் வளர்ச்சியடையவும் தொழில்நுட்பம் மற்றும் ப்ராடக்டை உருவாக்குவதற்கான முதலீட்டிற்கும் முதல் சுற்று நிதி உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

வருங்காலத்தைப் பொருத்தவரை, “வருங்காலத்தில் பொழுதுபோக்கு மற்றும் பத்திரிக்கை பிரிவின் வளர்ச்சி நவீன ஊடக நிறுவனங்களை சார்ந்திருக்கும். எனவே மொழி மற்றும் ப்ளாட்ஃபார்ம் அக்னோஸ்டிக் சார்ந்த நவீன ஊடக நிறுவனத்தை உருவாக்கி சந்தையில் கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம். படப்பிடிப்பு, வடிவமைப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் எங்களுக்குள்ள திறமையைக் கொண்டு உள்ளடக்க அறிவுசார் சொத்துக்களை உருவாக்குகிறோம். மேலும் இதைக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் நவீன ஊடக சந்தையில் ஊடக ப்ராண்டுகள் வளர்ச்சியடைய உதவுகிறோம்,” என்றார் அத்வைத்.

ஆங்கில கட்டுரையாளர் : நேஹா ஜெயின் | தமிழில் : ஸ்ரீவித்யா