தண்ணீர் பம்புகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் சாதனத்தை உருவாக்கிய மாணவர்!

0
”தொழில்நுட்பம் ரோபோக்களை உருவாக்கவும் ஓட்டுநரில்லா கார்களை உருவாக்கவும் உலகமயமாக்கலை ஊக்குவிக்கவும் மட்டுமே பயன்படவேண்டும் என்பது கட்டாயமல்ல. மக்களுக்கு, குறிப்பாக உணவை நமது மேஜைக்கு கொண்டு சேர்க்கும் விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கப்படவும் பயன்படவேண்டும்.”

இஷான் மல்ஹோத்ரா தனது இளம் வயதில் பள்ளிக்குச் செல்லும்போது மஹாபுரா கிராமத்தின் விவசாய நிலத்தை தினமும் கடந்து செல்வார். ஆண்கள் கீழே குனிந்து மண்ணை சீரமைப்பார்கள். பெண்கள் விதை விதைப்பார்கள். நிலத்தில் நீர் பாசனம் முறையாக இருப்பதை உறுதிசெய்ய விவசாயிகள் இரவு பகல் பாராமல் உழைப்பதைப் பார்த்துள்ளார்.

இந்த கிராமங்களில் மின்சார விநியோகம் முறையாக இருப்பதில்லை. இதனால் விவசாயிகள் ஒரு நாளைக்கு பல முறை நிலத்திற்குச் சென்று திரும்ப வேண்டிய கட்டாயம் இருந்தது. நிலங்களுக்கு நீர் பாசனம் செய்வதற்காக மோட்டார் பம்புகளை இயக்குவதற்கு மட்டுமே இரவு வேளைகளிலும் நிலத்திற்கு சென்று திரும்பினர்.

ஜெய்ப்பூரில் உள்ள ஜெயஸ்ரீ பெரிவல் சர்வதேசப் பள்ளி மாணவரான இஷான் கிராமப்புற விவசாய சமூகத்தினர் சந்திக்கும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண விரும்பினார். நிலங்களுக்கு நீர் பாசனம் செய்ய ஒரு எளிய வழியைக் கண்டறிய விரும்பினார்.

இதற்காக தொழில்நுட்பத்தை இணைத்துக்கொள்ளும் ஒரு திட்டத்தைத் துவங்கினார் இஷான். அப்போது அவருக்கு வயது 15. இதன் மூலம் விவசாயிகள் தங்களது மொபைல் ஃபோன் அல்லது தரைவழி இணைப்பு தொலைபேசி வாயிலாக மோட்டார் பம்பை கட்டுப்படுத்தலாம்.

2017-ம் ஆண்டு இஷான் ’ப்ளூட்டோ’ (Pluto) என்கிற சாதனத்தை அறிமுகப்படுத்தினார். இதில் பயனர்கள் நீர்மூழ்கி பம்ப்பை துலு பம்ப் போலவோ அல்லது மற்ற மின் சாதனங்கள் போலவோ ரிமோட் வாயிலாக தங்களது மொபைல் அல்லது தரைவழி இணைப்பு தொலைபேசியைப் பயன்படுத்தி மின் இணைப்பைக் கொடுக்கலாம். 

இந்தச் சாதனம் பயன்படுத்தப்படும் பகுதியின் மின்சார நிலை குறித்து துல்லியமான தகவல்களை பயனருக்கு வழங்கும். பயனர் தண்ணீர் பம்பை ஆன் செய்வதற்காக நேரடியாக செல்லவேண்டிய அவசியமில்லை என்பதே இந்த சாதனத்தின் முக்கிய பலன் என்று ப்ளூட்டோவின் வலைதளம் விவரிக்கிறது. மஹாபுராவில் உள்ள நெவாதா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான கிருஷ்ணா தேவி கூறுகையில்,

"ப்ளூட்டோ அதிக நேரத்தை மிச்சப்படுத்துகிறது. என் கணவர் இப்போது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுகிறார். அவர்கள் படிக்கவும் உதவுகிறார்."

ப்ளூட்டோவின் கையேடு ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் உள்ளது. மஹாபுரா, ராஜஸ்தான், சிர்சாவில் உள்ள கஜாகேரா, ஹரியானா ஆகிய பகுதிகள் முழுவதும் 400 பயனர்கள் உள்ளனர். இந்த சாதனத்தின் விலை 500 ரூபாய்.

திட்டம்

ஜெய்ப்பூரில் ஸ்டாண்ட்ஃபர்ட் ஹானர்ஸ் அகாடமியில் பங்கேற்றபோதும் ’வீடியோ கேம் டிசைன்’ பாடம் படித்துக்கொண்டிருந்தபோதும் இஷானுக்கு தொழில்நுட்பம் மீது அதீத ஈடுபாடு ஏற்பட்டது.

பள்ளிக்கு அருகில் உள்ள விவசாய சமூகத்தினருடன் பணிபுரியவேண்டும் என்கிற ஆர்வம் இந்தப் பிரச்சனைக்கு தொழில்நுட்ப ரீதியான தீர்வு காண்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவைத்தது. அவர்களது ஒரே சொத்து பயிர்கள்தான் எனப் பகிர்ந்துகொண்டார்.

2015-ம் ஆண்டு கோடையின்போது ப்ரீ காலேஜியேட் படிப்பிற்கான பயிற்யளிக்கும் ஆசிரியரான ஷெரோல் சென் அவர்களின் வழிகாட்டலின் கீழ் தனது திட்டம் குறித்து ஆராயத் துவங்கினார் இஷான். கூடைப்பந்து விளையாட்டு, இரவு நேர விருந்து அனைத்தையும் புறக்கணித்தார். மனதை ஒருமுகப்படுத்தி ஒரே குறிக்கோளோடு பணியாற்றி ஒரு முன்வடிவத்தை உருவாக்கினார். 

இந்த முன்வடிவத்தை ஆராய்வதற்காக ஷெரோல் வாயிலாக கூகுளில் ஹ்யூமன் சென்சிங் பிரிவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றும் கார்சன் மெக்நெயில் அவர்களைத் தொடர்பு கொண்டார். அவரது கருத்துக்களையும் பல்வேறு மதிப்பீடுகளையும் அடிப்படையாகக் கொண்டு இரண்டாண்டுகளில் ப்ளூட்டோவை உருவாக்கினார் இஷான். அவர் கூறுகையில்,

ஆறு மாதங்களுக்குள் ப்ளூட்டோவை உருவாக்கினேன். தொழில்நுட்பத்தில் பிழைகள் ஏற்படுத்தாது என நினைத்திருந்தேன். அது தவறு என்பதை நான் அப்போது உணரவில்லை. தயாரிப்பில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டது. தொடர்ந்து பலமுறை முயன்ற பிறகும் தோல்வியடைந்ததால் கிட்டத்தட்ட பொறுமையை இழக்கும் நிலைக்குச் சென்றுவிட்டேன். அது என்னை மிகவும் கலங்கச்செய்த தருணமாக அமைந்தது. எனினும் என் தயாரிப்பைத் தொடர்ந்து மேம்படுத்தினேன். எந்தவித தொழில்நுட்பக் கோளாறும் இல்லாத ப்ளூட்டோ சாதனத்தை உருவாக்க எனக்கு இரண்டாண்டுகள் ஆனது.

தனது திட்டத்திற்கான நிதித்தேவைக்காக கூட்டுநிதியைப் பயன்படுத்தினார். திட்டம் முழுமையாக நிறைவேறும் வரை அவரது பள்ளியும் பெற்றோர்களும் ஆதரவளித்து வழிகாட்டினர். சமூக நலனில் பங்கேற்க தனது பெற்றோர் உந்துதலளித்ததாக தெரிவிக்கிறார் இஷான். மேலும் கல்வியறிவுடைய தகுதி வாய்ந்த இளைஞர்களால் உலகை மாற்ற முடியும் என அவர்கள் நம்புவதாகவும் இஷான் தெரிவித்தார்.

நான் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னுடைய பெற்றோரும் தாத்தா பாட்டியும் குருத்வாராவில் சேவை செய்வதைப் பார்த்திருக்கிறேன். மூன்று வயது முதலே சேவையளிக்கத் துவங்கினேன். சமூக நலனில் பங்கேற்கவேண்டும் என்கிற அடிப்படைப் பொறுப்புணர்ச்சி என் மனதிலும் என் சகோதரி சிமர் மனதிலும் வேரூன்றி இருந்தது.

இஷானும் அவரது சகோதரியும் பல ஆண்டுகளாகவே ’பர்வா’ (Parvaah) என்கிற அரசு சாரா நிறுவனத்தின் பணிகளில் சம்பந்தப்பட்டிருந்தனர். இந்நிறுவனம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணியிலும் நலிந்த மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய கிராமப்புற சமூகத்தினருக்கு அதிகாரமளிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

சாதனம்

விவசாய சமூகத்தினரைப் பல முறை தொடர்பு கொண்ட பிறகு விவசாயிகள் மோட்டார் பம்புகளை இயக்க தினமும் 5 முதல் 7 கிலோமீட்டர் நடந்து செல்லவேண்டியிருப்பதை இஷான் தெரிந்துகொண்டார். இதனால் கடுமையான பருவநிலையில், குறிப்பாக பருவமழைக் காலத்தில் வயதான விவசாயிகளின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தது.

இந்த சிக்கல்களை தீர்ப்பதற்காகவே ப்ளூட்டோ வடிவமைக்கப்பட்டது.

விவசாயிகள் தங்களது நிலத்தில் பொருத்தும் இந்த சாதனம் மொபைல் போன் அல்லது தரைவழி இணைப்பு தொலைபேசி வாயிலாக மோட்டார் பம்புகளை இயக்க உதவும். ராஜஸ்தானின் கிராமப்புறங்களில் அடிக்கடி துண்டிக்கப்படும் டிஜிட்டல் இணைப்பைக் கருத்தில் கொண்டு இஷானின் சாதனம் 3ஜி அல்லது 4ஜி நெட்வொர்க் இன்றியே செயல்படுகிறது. அத்துடன் இது மொபைல் சார்ந்த செயலியும் அல்ல. இஷான் விவரிக்கையில்,

அடிப்படை 2ஜி நெட்வொர்க் இருந்தால் மட்டுமே போதுமானதாகும். ஸ்மார்ட்ஃபோனும் தேவையில்லை. ப்ளூட்டோவின் அனைத்து அம்சங்களையும் சாதாரண மொபைல் அல்லது தரைவழி இணைப்பு தொலைபேசி வாயிலாகவே அணுகலாம்.

ப்ளூட்டோ உள்ளீடு / வெளியீடு கண்ட்ரோலர் (IOC) கான்செப்டில் பணிபுரிகிறது. ஒவ்வொரு ப்ளூட்டோவிலும் ஒரு சிம் கார்டு உள்ளது. இது எலக்ட்ரானிக் ப்ராஜெக்டுகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் ஓபன் சோர்ஸ் தளமான ஆர்டினோ (Arduino) மற்றும் ஜிஎஸ்எம் மாட்யூலால் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஒரு விவசாயி சாதனத்தை இயக்க ஆக்டிவேட் செய்யப்பட்ட சிம் கார்டு ஒன்றை ப்ளூட்டோவில் பொருத்தவேண்டும். அதன் பிறகு பயனர் அந்த சாதனத்தை தண்ணீர் பம்ப்பிற்கான ஸ்விட்ச் போர்டில் இணைக்கவேண்டும். சாதனம் முழுமையாக அமைக்கப்பட்டதும் குழுவினர் சாதனத்தை ஆக்டிவேட் செய்து பயனரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு வழிகாட்டுவார்கள். 

இதில் மூன்று பல்புகள் பொருத்தப்பட்டிருக்கும். இது சாதனத்தின் செயல்பாடுகள் குறித்த நிகழ்நேரத் தகவல்களை பயனருக்கு வழங்கும். பச்சை நிறம் மின்சாரம் இயங்கிக்கொண்டிருப்பதை உணர்த்தும். மஞ்சள் நிறம் சிம் கார்டு மொபைல் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டு சாதனம் பயன்படுத்த தயார்நிலையில் இருப்பதை உணர்த்தும். சிகப்பு நிறம் மோட்டார் பம்ப் ஆன் செய்திருப்பதை உணர்த்தும்.

தாக்கம்

விவசாயிகளின் நிலம் வெவ்வேறு இடத்தில் இருப்பது, நீர்பாசன பிரச்சனைகள், விதை பிரச்சனைகள், நிலைத்தன்மை இல்லாதது, அரிசி, கோதுமை போன்ற பாரம்பரிய பயிர்களை அதிகம் சார்ந்திருத்தல் உள்ளிட்ட எண்ணற்ற சவால்கள் விவசாயத் துறையில் உள்ளது. இருப்பினும் இஷானைப் பொருத்தவரை தண்ணீர் மற்றும் மின்சாரப் பிரச்சனைகளே உடனடியாக கவனம் செலுத்தப்படவேண்டிய பிரச்சனைகளாகும்.

சோதனை முயற்சிக்காக ஆரம்பத்தில் 25 சாதனங்களை உருவாக்கினார். இவை மஹாபுரா கிராமத்தில் உள்ள விவசாயிகளிடையே விநியோகிக்கப்பட்டது. சில நாட்களிலேயே பல விவசாயிகள் இந்த சாதனத்திற்காக இஷானை அணுகினர்.

”ப்ளூட்டோ எங்களது வாழ்க்கையை மாற்றிவிட்டது,” என்றார் நெவாதா கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான விவசாயியான தரம் ராஜ்.

பின்னர் இஷான் இந்தச் சாதனத்தை அவரது அம்மாவின் சொந்த ஊரான சிர்சாவில் உள்ள விவசாயிகளுக்கு விநியோகித்தார். கிராமத்தின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்து ப்ளூட்டோவின் நன்மைகளை எடுத்துரைத்தார். இரண்டு மாதங்கள் கழித்து அவர்களைச் சந்தித்தபோது பெரும் வரவேற்பு கிடைத்தது. 40 வயதான பால்தேவ் குமார் கூறுகையில்,

”மழை நாட்களில் நாங்கள் எங்களது நிலத்திற்குச் செல்லவேண்டிய அவசியமில்லை. நாங்கள் வீட்டிலிருந்தே பம்பை கட்டுப்படுத்துகிறோம்,” என்றார்.

பொதுவாக நிலத்தில் நீர்பாய்ச்சும் பணியை பெண்களே மேற்கொள்வதால் ப்ளூட்டோ அவர்களுக்கு அதிகாரமத்துள்ளது. ப்ளூட்டோ கிராமப் பெண்களுக்கு நிறைவான உணர்வை அளித்ததாகவும் தங்களது கணவன்மார்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உணர்த்துவதாகவும் இஷான் தெரிவித்தார்.

இளைஞர்களே இந்தியாவின் உந்துசக்தியாக இருப்பதை இஷான் நிரூபித்துள்ளார். அவரது தயாரிப்பின் வணிக அம்சங்கள குறித்து அவர் கவலைப்படவில்லை. அவரது சாதனம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதே மகிழ்ச்சியளிக்கும் அம்சம் என்கிறார் இஷான்.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா