குழந்தை வளர்ப்பு ஒரு கலை; பெற்றோர்களுக்கான ஒரு சிறப்பு நிகழ்ச்சி!

0

இந்த காலக்கட்டத்தில் குழந்தை வளர்ப்பு மிகவும் சவாலான ஒன்றாகவே இருக்கிறது. பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போகும் இந்த சூழலில் குழந்தைகள் மீதான கவனம் சற்று குறைந்துதான் இருக்கிறது. மேலும் வயது வரம்பு இன்றி அனைவர் கையிலும் ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது, இதனால் புளு வேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளில் நம் குழந்தைகளின் உயிரை கொடுக்கிறோம்.

குழந்தை வளர்ப்பின் சிறந்த சூழலை எடுத்துரைக்கும் நிகழ்வு:

குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை அறிந்து, 'பிராண்ட் அவதார்', தைரோகேர் மற்றும் சத்யபாமா பல்கலைகழகத்துடன் இணைந்து ‘Art of Parenting’ என்கிற நிகழ்வை நடத்த இருக்கிறது. இந்நிகழ்வில் குழந்தை வளர்ப்பின் சிறந்த மற்றும் சூழலை பற்றி பேச இருக்கின்றனர்.

இதைப் பற்ரி பேசிய பிராண்ட் அவதாரின் தலைமை நிர்வாக அதிகாரி எல்.ஹேமச்சந்திரன்,

“இப்பொழுது எல்லாம் குழந்தைகள் சிறுவயதிலேயே தற்கொலை பற்றியும், மன அழுத்தத்தை பற்றியும் பேசுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இதை சமூக சீர்கேடாக பார்க்கிறோமே தவிர அதில் வீட்டில் இருந்து துவங்குகிறது என்பதை நாம் அறிவதில்லை,” என்றார்.

எனவே இந்த நிகழ்வை ஆரம்பித்துள்ளனர். இதில் பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்களுக்கு குழந்தை வளர்ப்பில் இருக்கும் எந்த வித குறைகளையும், கேள்விகளையும் கேட்கலாம். குழந்தை வளர்ப்பில் இருக்கும் தவறான கண்ணோட்டத்தை இது மாற்றும் என நம்புகின்றனர்.

குழந்தை வளர்ப்பு ஒரு கலை

‘Art of Parenting’ என்கிற இந்நிகழ்வின் முதல் பகுதி வரும் நவம்பர் 12, ஞாயிற்றுக்கிழமை அன்று நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சி மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது; முதலில் நகைச்சுவையாக பெற்றோருக்குரிய ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடியுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது, அடுத்து பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையே ஆரோக்கியமான வாக்குவாதம் சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் துணை அதிபர், மரியா ஜீனா தலமையில் நடக்கவிருக்கிறது. மேலும் சிறந்த குழந்தை வளர்ப்பில் வெற்றிகரமான பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து தங்கள் கருத்துகளை பகிர உள்ளனர்.

தெரிந்தோ தெரியாமலோ குழந்தைகள் மீது அதிக பளு செலுத்தப்படுகிறது, இதை பற்றி புரிய வைக்க பெற்றோர்களுக்கு எந்த வித தளமும் இல்லை. ஒரு குழந்தை பிறக்கும்பொழுது பெற்றோர்களும் புதிதாய் பிறக்கின்றனர். அதுமட்டுமின்றி குழந்தை வளர்ப்பு சூழலுக்கு ஏற்றவாறு மாறுபடும் என்று விளக்கினார் நிகழ்வில் பேசிய தீபா ஆத்ரேயா, நிறுவனர், சக்செஸ் ஸ்கூல். மேலும் பேசிய அவர்,

“இந்த நிகழ்ச்சியின் மூலம் பெற்றோர்களை ஒன்று சேர்த்து ஒரே மனப்பான்மை கொண்ட பெற்றோர் சமூகத்தை உருவாக்க முடியும். இது ஒருவருக்கு கற்றுத்தருவதற்கான மேடை அல்ல, ஆனால் அனுபவங்களை பகிர்வதற்கான தளம்,” என முடித்தார் தீபா ஆத்ரேயா.

தன் அனுபவத்தை பகிர்ந்த தைரோ கேரின் தலைவர் வேலுமணி தன் வாழ்க்கை அனுபவத்தை இந்நிகழ்வில் பகிர்ந்தார்,

“வெறும் 500 ரூபாயுடன் நான் மும்பைக்கு வந்தேன் ஆனால் இப்பொழுது என் நிறுவனம் 500 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டுகிறது. இதற்குக் காரணம் என் பெற்றோர்கள் எனக்காக எதுவும் செய்யவில்லை, அதை நினைத்து பெருமைப் படுகிறேன்” என்றார்.

மேலும் அவர் குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிய வேண்டும் என்றார். 

அமைப்பாளர்கள் இந்த நிகழ்வை விரிவுபடுத்த இருக்கிறார்கள், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை போன்ற மற்ற நகர்களுக்கும் இதை எடுத்துச்செல்ல உள்ளனர்.

வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் அல்லது குழந்தை வளர்ப்பில் ஏதேனும் சிரமங்கள், சிக்கல்கள் இருந்தால் இது போன்ற நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு உங்கள் குழப்பங்களை தீர்த்துகொள்ளுங்கள். குழந்தைகளின் பளுவை குறைக்க, அவர்களின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்ள இது போன்ற நிகழ்ச்சிகள் அத்தியாவசமான ஒன்றாக மாறிவிட்டது. குழந்தைகளை பல வகுப்புக்கு அனுப்புவது பதிலாக நாம் இது போன்ற சிலவற்றில் கலந்துகொண்டு அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளுவோம். குழந்தை வளர்ப்பின் கலையை அறிவோம்.