2017-ல் அர்ப்பணிப்பால் அன்பை அள்ளிய தன்னலமற்ற ஆசிரியச் செல்வங்கள்!

மாணவர்களை மதிப்பெண்களால் மட்டும் அளவிடாது, அவர்களது உண்மையான ஆர்வத்தை தெரிந்து கொண்டு, அவர்களின் திறமைகளை வளர்க்க பாடுபட்ட சில ‘நல்லாசிரியர்’களைப் பற்றிய  தொகுப்பு இது...

0

மற்ற பணிகளைப் போன்றதல்ல ஆசிரியர் பணி. அதனால்தான் கல்விக் கண் திறக்கும் ஆசிரியர்களை, மாதா பிதாவிற்கு அடுத்த இடத்தில் வைத்து மரியாதை செலுத்துகிறோம்.

வெறும் சம்பளத்திற்காக மட்டும் ஆசிரியர் பணி செய்யாது, உண்மையிலேயே தங்களிடம் பயிலும் மாணவர்களின் நலனில், எதிர்காலத்தில் அக்கறைக் கொண்டு, அதற்கென சில சிறப்புப் முயற்சிகளை எடுத்து உழைக்கும் ஆசிரியர்கள் பலர்.

அந்தவகையில் இந்தாண்டு தங்களது தனித்துவமான தன்னலமற்ற செயல்களால்  மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு, சமூகத்திற்கு விளக்காக ஒளிரும் சில ஆசிரியச் செல்வங்களைப் பற்றி நாமும் பாராட்டி செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதோ அவர்களில் சிலரைப் பற்றிய செய்தித் தொகுப்பு உங்களுக்காக...

‘போடிநாயக்கன்பட்டி’ ஜெயக்குமார்:

போடிநாயக்கன்பட்டி அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயக்குமார். இவர் மாதாமாதம் தன் சம்பளத்தில் இருந்து 30 ஆயிரம் ரூபாயை மாணவர்களின் நலனுக்காக செலவழித்து வருகிறார். இதுதவிர மாணவ, மாணவிகள் தங்குவதற்கென தனது சொந்த நிலத்தில் இலவசமாக விடுதி ஒன்றையும் கட்டித் தந்துள்ளார். அதில், 10 பெண் குழந்தைகள் உட்பட 45 பேர் உள்ளனர். இதுவரை ஜெயக்குமாரின் உதவியால் 460 மாணவர்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். எழுத்தறிவித்தளின் அவசியத்தை புரிந்து கல்விப்பணி புரிந்து வரும் இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...

சூப்பர் சிங்கரை உருவாக்கிய அக்ஸிலியா சுகந்தி:

பாடப்புத்தகத்தை தாண்டியும் குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் ஆசிரியர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்களில் ஒருவர் தான் அக்ஸிலியா சுகந்தி. தியானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு ஆசிரியையாக பணி புரிந்து வரும் இவர், பள்ளியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய 3-ம் வகுப்பு மாணவி பிரித்திகாவின் குரல்வளத்தை அடையாளம் கண்டு, அவரை விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர் ஜூனியர் 5' போட்டியில் மகுடம் சூட்ட வைத்திருக்கிறார். உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுமே ஏதோ ஒரு திறமையுடனேயே பிறக்கின்றனர். அவர்களைச் சரியாக அடையாளம் கண்டறிந்து, வெளிக்கொண்டு வர வேண்டியதும் ஓர் ஆசிரியரின் கடமை. அதனை செவ்வணே செய்த அக்ஸிலியா பற்றி இந்த செய்தியை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஆங்கிலம் பேச வைத்த அன்னபூர்ணா டீச்சர்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகாவில் உள்ளது கந்தாடு எனும் சிற்றூர். இங்குள்ள ஆங்கில வழி தொடக்கப்பள்ளியில் துணை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார் அன்னபூர்ணா மோகன். சர்வதேச தரம் வாய்ந்த பள்ளிகளில் இருப்பது போல தனது பள்ளியின் வகுப்பறையை மிக அழகானதாக அமைக்கவும், மாணவர்களுக்கு மேஜை நாற்காலி என பல்வேறு பொருட்களை வாங்கவும் அன்னபூர்ணா, சுமார் 2 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். தனது சொந்த நகைகளை விற்று, தொடுதிரை ஸ்மார்ட் போர்டு, மடிக்கணினி போன்றவற்றையும் மாணவர்களுக்காக வாங்கி அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வத்தை பெருக்கியுள்ளார். இவரது தீவிர முயற்சியின் பலனாக இங்கு பயிலும் மாணவர்களின் நாக்கில் பிரிட்டிஷ் ஆங்கில உச்சரிப்பு திருத்தமாக நடனமாடுகிறது. அர்ப்பணிப்புடன் தனது கல்விப்பணியைத் தொடர்ந்து வரும் அன்னபூர்ணா டீச்சர் பற்றி மேலும் தெரிந்து கொள்ள..

பாடமெடுக்க பள்ளிக்கு நீந்தி செல்லும் ஆசிரியர் அப்துல் மாலிக்:

கல்வி என்பது பெருங்கடல். அதில் மூழ்கி மாணவர்கள் முத்தெடுக்க வேண்டும் என்பதற்காக, கடந்த 20 வருடங்களாக ஆற்றில் நீச்சலடித்துச் சென்று பாடம் கற்பித்து வருகிறார் கேரளாவைச் சேர்ந்த அப்துல் மாலிக் என்ற ஆசிரியர். 42 வயதாகும் அப்துல், மலப்புரத்தில் உள்ள படிஞ்சதுமுரு முஸ்லிம் கீழ்நிலை பள்ளியில் கணித ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். 24 கிமி தூரத்தில் உள்ள தனது பள்ளிக்கு சாலை வழியாக சென்றால் மிகவும் தூரம், மூன்று பேருந்துகள் மாறிச் சென்றால் நேரம் அதிகம் ஆகும் என்பதால், தினமும் இடையில் உள்ள ஆற்றில் நீச்சல் அடித்து பள்ளிக்கு சென்று வருகிறார். இதை இவர் 20 வருடங்களாக ஒரு நாள் கூட பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் செய்து வருகிறார் என்பது தான் கூடுதல் சிறப்பு. இதோ அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...

‘பேஸ்புக்’ கிருஷ்ணவேணி:

'நல்லம்பாக்கம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி' என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கம் தொடங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளாக அதில் தங்கள் பள்ளியில் நடக்கும் வகுப்புகள் பற்றியும், மாணவ-மாணவிகளின் திறன்களை வெளிப்படுத்தும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார் அப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் கிருஷ்ணவேணி. இதன்மூலம் படிப்பில் பின் தங்கியிருந்த தனது மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களது திறமைகளை உலகறியச் செய்துள்ளார் அவர். நல்லம்பாக்கம் பள்ளியிலேயே தனது பணியை தொடர வேண்டும் என விரும்பி, தனக்கு வந்த எச்.எம் பதவி உயர்வோடு கூடிய பணியிட மாற்றத்தையும் மறுத்திருக்கிறார். இதுவே அவர் அப்பள்ளி மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்தில் கொண்டுள்ள ஈடுபாட்டிற்கு நல்ல உதாரணம் ஆகும். மேலும் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள...

Related Stories

Stories by jayachitra